எதிரொலி

எதிரொலி

11 mins read
382aaa13-b5b5-4188-95e3-9313f4479cc6
-

சிறுகதை

மணிமாலா மதியழகன்

'அவர் கொண்டு வர்ற டுரி­யா­னில் மட்­டும் அவ்­வ­ளவு சுவை எப்­ப­டித்­தான் வருமோ? இதோ இந்த மரம்­கூட அவர் நட்­ட­து­தானே', நினை­வு­கள் மனத்தை ஆக்­கி­ர­மித்­த­தில் பமே­லா­வின் பார்வை கலங்­க­லா­னது. காலை நேரத்து மென்­ப­ழுப்பு நிற வெயி­லில் கொத்­துக் கொத்­தாய் இள மஞ்­சள் வண்­ணப் பூக்­கள் பூத்­தி­ருந்த டுரி­யான் மரத்­தைச் சுற்­றிப் பட்­டாம்­பூச்­சி­கள் பறந்­தன. கால­டிச் சத்­தம் கேட்க, சட்­டெ­னக் கண்­க­ளைத் துடைத்­துக்­கொண்­டார் பமேலா.

"அவ­ருக்கு... சிங்­கப்­பூ­ருல ஒரு குடும்­பம் இருக்­குன்னு நினைக்­கி­றேம்மா..." மைலோ குவ­ளை­யைக் கழு­விக்­கொண்டே சொன்­னாள் சேரா.

"வெட்­டிப் பேச்­சுப் பேசாம போய்ப் படிக்­கிற வேலை­யைப் பாரு."

"ம்மா... என்ன சொல்­லிட்­டேன்னு இப்­ப­டிக் கோபப்­ப­ட­றீங்க?"

"இந்­த கொவிட் தொற்­று­நோய்க் காலத்­துல தன்­னந்­தனியா எப்­ப­டில்­லாம் அவ­திப்­ப­டு­றா­ரோன்னு நொந்­து­போய்க் கிடக்­கேன். நீ என்­னன்னா...?"

"நம்ம மேல அக்­க­றை­யில்­லாத ஒருத்­த­ருக்­காக நாம ஏன் வருத்­தப்­ப­ட­ணும்­கி­றேன்?"

"அவர் அக்­க­றை­யில்­லா­த­வர்னு உனக்­குத் தெரி­யுமா?"

"எல்­லாம் தெரி­யும். உங்க கல்­யா­ணத்­துக்கு முன்­னவே அவ­ருக்கு சிங்­கப்­பூ­ருல வேற ஒரு குடும்­பம் இருந்­தி­ருக்­கு­தானே?"

"வரவர உனக்கு வாய்த்­துடுக்கு கூடித்­தான் போச்சு. உங்க அப்­பாவை இப்­ப­டிப் பேச உனக்கு எப்­படி மனசு வருது?" காய்­க­றி­க­ளைக் கொண்டு வந்து உணவு மேசை­யில் வைத்த பமே­லா­வின் கண்­களில் கனல் தகித்­தது.

"கொவிட் வந்த பிற­கு­தான் அவர் தனியா இருக்­காரா? உண்­மை­யச் சொல்­லுங்­கம்மா..."

"உனக்கு என்­ன­தான் பிரச்­சினை? அவ­ரோட சம்­பாத்­தி­யத்­து­ல­தான் நாம நல்லா உண்­ண­வும் உடுத்­த­வும் முடி­யு­துங்­கி­றதை புரிஞ்­சிக்கோ."

"இதை மட்­டும் செஞ்­சிட்­டாப் போதும். அப்­ப­டித்­தானே?"

"..." பற்­களை நெரித்­த­வர், மகளை முறைத்­துப் பார்த்­த­வாறு காய்­க­றி­களை நறுக்­கி­னார்.

"சொல்­லும்மா போதுமா?"

"சேரா... உனக்கே நல்­லாத் தெரி­யும். நம்ம மேல அவர் எவ்­வ­ளவு பாசமா இருப்­பா­ருன்னு. இந்­த கொவிட் பிரச்­சினை வர்­ற­வரைக்­கும் வீட்­டுக்­குத் தேவை­யான காய்­க­றி­க­ளைக்­கூட அங்­கி­ருந்­து­தான் தூக்­கிட்டு வரு­வார். அப்­ப­டிப்­பட்­ட­வ­ரைப் போய்ச் சந்­தே­கப்­ப­ட­லாமா?"

"அதெல்­லாம் ஏமாத்து வேலைம்மா. எனக்­குச் சந்­தே­கம்­லாம் இல்லை. உறு­தி­யாவே சொல்­றேன். அவ­ருக்கு சிங்­கப்­பூ­ருல ஒரு குடும்­பம் இருக்கு... இருக்கு...!" கத்­தி­னாள்.

"...." மகளை எரிப்­ப­தைப்­போலப் பார்த்த பமேலா, வெட்டி வைத்த காய்­க­றி­க­ளு­டன் குசினியை நோக்கி வேக­மாக நகர்ந்­தார்.

"ம்மா... நீங்க வேணா அவரை நம்­பிக்­கிட்­டி­ருங்க. நான் உங்­க­ளைப்­போ­லக் கண்­மூ­டித்­த­னமா இருக்­கப் போற­தில்ல. அவர்­கிட்­ட­யி­ருந்து போன் வரட்­டும் அப்­பப் பாத்­துக்­கி­றேன்," சோபா­வில் அமர்ந்­தி­ருந்­த­வ­ளது குரல் அடுப்­பங்­க­ரையை நோக்­கிச் சீறி­யது.

"சேரா... உனக்கு என்­னைப்­பத்­தி­யும் தெரி­யும். நீ மட்­டும் அவர் மனசு கோண ஏதும் பேசினே... அவ்­வ­ள­வு­தான்...!"

"இப்­ப­டிச் சொல்­லிச் சொல்­லியே வாயை அடைச்­சு­டுங்க. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா ஒரே ஒரு தட­வை­யா­வது நம்மை சிங்­கப்­பூ­ருக்­குக் கூட்­டிக்­கொண்டு போயி­ருக்­காரா?"

"ஒரு வாரம்­வி­டாம நமக்­கா­கத்­தானே இங்கே ஓடி வந்­தார்?"

"ஏன் அவர் நம்மை அங்கே அழைச்­சிக்­கிட்­டுப் போகல. இதான் என்­னோட கேள்வி?"

"சமைச்­சிட்­டேன், சாப்­பிட்­டுட்­டுப் போய்ப் படி," என்று பமேலா மீயை வேக வேக­மா­கக் கிண்­டி­ய­படி சொன்­னார்.

"இதுக்­கெல்­லாம் பதில் சொல்ல­மாட்­டீங்­களே...?" சட்­டென அறைக்­குள் நுழைந்த சேரா கதவை அறைந்­தாள்.

'அவர் என்­னன்னா மக ஏன் பேச­மாட்­டேங்­கி­றான்னு கேக்­கு­றார். இவ என்­னன்னா அவ­ரி­டம் இப்­படி ஏடா­கூ­ட­மாக் கேட்டே தீரு­வேன்னு நிக்­கு­றாளே. இதெல்­லாம் எங்க போய் முடி­யப் போகுதோ?' பமே­லா­வின் கண்­கள் கலங்­கின.

இரு­பத்­தைந்­தாண்­டு­க­ளுக்கு முன் இந்­தோ­னீசி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­குப் பணிப்­பெண் வேலைக்­காக வந்­த­வர்­தான் பமேலா. அவ­ரை­யும் சிங்­கப்­பூ­ரில் லாரி ஓட்­டு­ந­ரா­கப் பணி­பு­ரிந்த யூ செங்-ஐ­யும் காதல் சேர்த்­தது. யூ அப்­போது 'சுங்கை தெங்­கா­வி­லுள்ள' கம்­பத்­தில் வசித்து வந்­தார். மனத்­தால் இணைந்­த­வர்­கள் விரை­வி­லேயே மண வாழ்க்­கை­யி­லும் ஒன்­றி­ணைந்­த­னர்.

"இந்த முறை­யும் மூணு மாசம்­தான் நான் சிங்­கப்­பூ­ருல இருக்க முடி­யுமா?" எனக் கேட்­கும் பமே­லா­வின் விழி­களில் ஏக்­கம் குடி­கொண்­டி­ருக்­கும்.

"என்­னம்மா செய்­வது? அதற்கு­மேல் விசா கிடைக்­க­மாட்­டேங்­குதே" பரி­தா­ப­மாய்ச் சொல்­வார் யூ.

விசா கிடைக்­கும் காலம் மட்­டும் சிங்­கப்­பூ­ரி­லி­ருக்­கும் பமேலா, காலக்­கெடு முடி­கை­யில் இந்­தோ­னீ­சி­யா­விற்­குச் செல்­வது வாடிக்­கை­யா­னது. உழைப்­ப­தற்கு கால நேரம் பார்க்­காத யூ, வாக­னம் ஓட்­டு­வ­து­டன் கிடைக்­கும் வேலை எது­வா­க­யி­ருந்­தா­லும் செய்­யத் தயங்­க­மாட்­டார். நிரந்­த­ர­மாக ஒரே இடத்­தில் இணைந்து வாழ முடி­ய­வில்லை என்­ப­தைத் தவிர தம்­ப­தி­யி­னர் மகிழ்ச்­சிக்கு குறை­வின்­றியே வாழ்ந்­த­னர்.

மக­ளைப் பள்­ளி­யில் சேர்க்­கும்­வரை பமேலா சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தோ­னீ­சி­யா­விற்­கு­மாக அல்­லா­டிக்­கொண்­டி­ருந்­தார். அதன் பிறகு அந்த வேலையை யூ செய்ய வேண்டி வந்­தது. கைநி­றைய பொருள்­க­ளோடு வெள்­ளிக்­கிழமை இரவு பாத்­தா­முக்­குச் செல்­ப­வர், வாடிய மனத்­தோ­டு­தான் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்­பு­வார்.

"எங்­களை எப்போ சிங்­கப்­பூ­ருக்­குக் கூட்­டிக்­கொண்டு போவீங்­கப்பா?" சேரா கேட்­பாள். மனை­வி­யு­ட­னும் மக­ளு­ட­னும் ஓயா­மல் பேசு­ப­வர், மகள் இதைக் கேட்­கும்­போது மட்­டும் மௌன­மா­கி­வி­டு­வார். மகள் அவரை இதைக் கேட்­ப­தற்­குள் பமேலா எப்­ப­டி­யா­வது பேச்சை மாற்ற முயற்சி செய்­வார். கடந்த சில ஆண்­டு­க­ளாக சேரா தந்­தை­யி­டம் பேசு­வ­தையே தவிர்த்து வந்­தாள்.

கொவிட் பெருந்­தொற்­றி­னால் ஏற்­பட்ட முடக்­க­நிலை கார­ண­மாக யூவி­னால் சிங்­கப்­பூ­ரை­விட்டு நகர முடி­யாத சூழ்­நிலை உரு­வா­னது.

'பாவம்... முடிந்­தால் இவ்­வ­ளவு நாளா வரா­ம­லி­ருப்­பார்? இரண்டு சீனப் பெரு­நாள் அவர் இல்­லா­மலே கழிந்­ததே!' பமே­லா­வின் தளும்­பிய கண்­கள் கடி­கா­ரத்தை நோக்­கின. மணி எட்டை நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்­தது.

'என்ன இது? தின­மும் ஏழு மணிக்­கெல்­லாம் பேசு­வார். இரண்டு மூணு நாளாய்ப் பேச­வே­யில்­லையே. ஒரு­வேளை, அந்­தப் பொல்­லாத நோய் அவ­ரை­யும் தொற்­றி­யி­ருக்­குமோ?' உடல் நடுங்­கி­யது.

"ம்மா... இங்க பாருங்­க­ளேன்...!" சேரா­வின் குரல் பதற்­றத்­து­டன் கேட்­டது.

'அவ்ளோ வேக­மாய்ப் போய்க் கத­வைச் சாத்­தி­னவ எதுக்கு இப்­ப­டிப் பத­றி­ய­டிச்­சிக்­கிட்டு வர்றா?'

"ம்மா... அ... அப்பா...!"

"எ... என்­னாச்சு...?" பமே­லா­வின் மனத்­தில் பிர­ள­யம் உண்­டா­னது.

"அ... அப்பா...!"

"அப்­பா­வுக்கு என்ன?"

"இங்க பாருங்க" கைப்பேசியை நீட்­டி­னாள்.

"முப்­பத்து மூன்று ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர் காட்­டில் வாழும் மனி­தர்" என்று ஒரு குரல் மட்­டும் ஒலிக்க, கேள்­வி­யாக மகளை நோக்­கி­னார்.

"போனைப் பாருங்­கம்மா!"

காட்­டைச் சுற்றி வரும் காணொ­ளிக் காட்சி கைபே­சி­யில் ஓடி­யது. வேலி அமைத்து போட்­டி­ருந்த காய்­க­றித் தோட்­ட­மும் அத­ன­ரு­கில் ஒரு குள­மும் இருந்­தது. சாய்ந்த வாக்­கில் மூங்­கில் கழி­களை நட்டு அதன் மேல் 'பிளாஸ்­டிக் ஷீட்­டால்' மூடிய ஒரு சிறு குடிசை பெரி­தா­கக் காட்­டப்­பட்­டது. 'இதை ஏன் பார்க்­கச் சொல்றா?' யோச­னை­யோடு மக­ளைப் பார்க்க "இப்­பப் பாருங்­கம்மா" என்­ற­வ­ளது முக­மெங்­கும் வியர்வை, முத்­து­க­ளாய்ப் பூத்து நின்­றது.

குடி­சைக்­குள்­ளி­ருந்து கிழிந்த ஆடை­யு­டுத்­தி­யி­ருந்த முதி­ய­வர் ஒரு­வர் தலை­யைக் குனிந்­து­கொண்டே வெளியே வந்­தார். பமே­லா­வின் இடுங்­கிய கண்­கள் மேலும் சுருங்­கின. "இ... இது.... உங்­கப்­பா­தான...?" மயக்­கமே வரு­வ­து­போ­லி­ருந்­தது.

'கட­வுளே... என்ன இது...? இப்­படி ஆளே மாறிட்­டாரே...! இவர் அத்­தனை ஆண்­டு­க­ளா­கக் காட்­டில் வாழ்ந்­தாரா?'

பமே­லா­வுக்கு கண்­கள் இருட்­டிக்­கொண்டு வந்­தன. சேரா அவ­ரைக் கைத்­தாங்­க­லாக அழைத்து வந்து இருக்­கை­யில் அமர வைத்து காற்­றா­டி­யைச் சுழ­ல­விட்­டாள்.

"இப்ப எங்­கி­ருக்­கார்? நல்லா இருக்­காரா? நான் உடனே அவ­ரைப் பாக்­க­ணுமே!"

"ம்மா... 'ஃபேஸ் புக்­ல­தான்' இதைப் பார்த்­தேன்....!"

"வேற என்ன போட்­டி­ருக்கு? அவர் ஏன் ரெண்டு மூணு நாளா பேச­வே­யில்லை?"

"முதல்ல இந்­தத் தண்­ணிய குடிங்­கம்மா சொல்­றேன்."

"நீ முதல்ல சொல்லு."

"அப்பா நல்­லாத்­தான் இருக்­கார். இங்க பாருங்­கம்மா" எனச் செய்­தித்­தா­ளில் வந்த தக­வலை கைப்பே­சி­யில் காட்­டி­னாள்.

சிறு குடி­சை­யில் தட்­டு­முட்­டுச் சாமான்­களும் கண­வ­ரு­மாக இருந்த காட்­சி­யைக் கண்­ட­வ­ரது கண்­கள் நனைந்­தன. "என்­னன்னு போட்­டி­ருக்­காங்க?" மூக்கை உறிஞ்­சிக்­கொண்டே கேட்­டார்.

"ம்மா... சிங்­கப்­பூ­ருல 1980களில் அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­க­ளைக் கட்­டு­வ­தற்­காக அர­சாங்­கம் கம்­பத்­தில் வசித்­த­வர்­களை இடம் மாற்­றி­யி­ருக்கு. ஆனா, அப்­பா­வுக்கு அங்க வீடு கிடைக்­கல. அத­னால சிங்­கப்­பூ­ரின் 'சுங்கை தெங்கா' காட்­டி­லேயே இவ்ளோ நாளா வாழ்ந்­தி­ருக்­கார்."

"கட­வுளே... அப்­பு­றம்...?"

"முன்­னல்­லாம் பகல்ல வண்டி ஓட்­டிட்டு ராத்­தி­ரி­யி­லும் 'பாசார் மாலம்' போடுற இடங்­களில் வேலை செய்­வதை வாடிக்­கையா வைத்­தி­ருந்­தி­ருக்­கார். கொவிட் கார­ணமா அவ­ருக்கு வண்டி ஓட்­டுற வேலை­யும் போன­தோட சிங்­கப்­பூ­ருல இர­வுச் சந்­தை­யும் இல்­லா­மலே போயி­ருக்கு."

"அடப் பாவமே... இவ்ளோ சிர­மத்­தி­லும் எப்­படி நமக்கு மாசா­மா­சம் பணம் அனுப்­பி­னா­ருன்னு தெரி­ய­லையே!"

"அவர் தங்­கி­யி­ருந்த பகு­தி­யி­லேயே தோட்­டம் போட்டு, அந்­தக் காய்­க­றி­களை விற்­று­தான் நமக்­குப் பணம் அனுப்­பி­யி­ருந்­தி­ருக்­கார்" சேரா­வின் குரல் தழு­த­ழுத்­தது.

'முப்­பத்து மூணு வரு­சமா தன்­னந்­த­னியா காட்­டுல வாழ்ந்­தாரா?' நம்­பவே முடி­ய­வில்லை. "அவ­ரோட கஷ்­டத்தை ஒரு­வாட்­டிக்­கூட நம்­ம­கிட்­டச் சொல்­லா­மலே இருந்­தி­ருக்­காரே...!" எரி­மலை அதிர்­வு­க­ளைச் சந்­தித்­த­தைப்­போல உள்­ளம் துடித்­தது.

"ம்மா... இதெல்­லாம் தெரி­யாம வெயில் தாங்க முடி­யல, வீட்­டுக்கு 'ஏர்­கோன்' போடுங்­கன்னு கேட்­டேனே. அது மட்­டுமா? உடனே புது போன் வாங்­கிக் கொடுங்­கன்­னும் தொல்லை கொடுத்­தேனே" சேரா­வின் சிவந்­தி­ருந்த கண்­க­ளி­லி­ருந்து பொங்­கிய கண்­ணீர்க் கன்­னங்­களில் கோல­மிட்­டோ­டி­யது.

"இத்­தனை வரு­ஷமா நம்­ம­கிட்­டக்­கூட எதை­யுமே சொல்­லாம இருந்­தி­ருக்­காரே?"

"இரண்டு நாளுக்கு முன், 'சுவா சூ காங்­கில்' உள்ள 'டெக் வை லேனில்' ஒரு­வர் கீரை­களை விற்­கி­றார் என்ற செய்தி சமூக ஊட­கத்­துல வந்­த­தால்­தான் விஷ­யம் வெளியே வந்­தி­ருக்கு."

"நான் இப்­பவே அவ­ரைப் பாக்­க­ணுமே" கண்­ணீ­ரு­டன் சொன்­னார் பமேலா.

"எனக்­கும் அப்­ப­டித்­தாம்மா இருக்கு. ஆனா, முடக்­க­நிலை நடப்­பில் இருப்­ப­தால் இப்­போ­தைக்கு யாரும் யாரை­யும் பார்த்­துக்­கொள்ள முடி­யாதே!" தாயின் கண்­ணீரை மகள் துடைத்­தாள்.

"ஆமா... அவர் ஏன் ரெண்டு மூணு நாளா பேச­வே­யில்ல?"

"அப்­பா­வோட போன் தொலைஞ்­சி­டுச்­சாம். அத­னா­ல­தான் பேசா­ம­லி­ருந்­தி­ருக்­கார். நம்ம எண்ணை, இந்­தச் செய்­தியை வெளி­யிட்­ட­வங்­க­ளுக்கு அனுப்­பி­யி­ருக்­கேன். எப்­ப­டி­யும் பேசு­வார்மா" நம்­பிக்­கை­யோடு சொன்­னாள்.

தாயும் மக­ளு­மா­கக் கைப்பே­சி­யையே கண்­ணெ­டுக்­கா­மல் பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­னர்.

இரண்டு, மூன்று முகக் கவ­சங்­களை ஒன்­றா­கச் சேர்த்து மாட்­டிக்­கொண்­டி­ருப்­ப­தைப்­போல பமே­லா­வுக்கு மூச்சு முட்­டி­யது. இயக்­கி­வி­டப்­பட்ட வானொ­லி­போல ஓயா­மல் குரல் கொடுக்­கும் சேரா பேச்­சையே மறந்­தி­ருந்­தாள். காலை­யில் சமைத்து வைத்த 'ஹொக்­கி­யன் மீ' அடுப்­பை­விட்டு இறங்­க­வே­யில்லை. இருண்­டி­ருந்த வீட்­டில் விளக்­கைப் போட வேண்டு­மென்ற எண்­ணம்­கூட இல்­லா­மல் திசைக்­கொ­ரு­வ­ராய்க் கூடத்­தில் சுருண்­டி­ருந்­த­னர்.

கைப்பேசி அழைப்­பு­வி­டுக்க, இரு­வ­ரும் பர­ப­ரப்­பு­டன் எழுந்­த­னர். 'யார் வீடியோ கால் செய்­வது?' முன­கிக்­கொண்டே சேரா கைப்பேசியை எடுத்­தாள்.

கைப்பே­சி­யின் திரை­யில் யூ தோன்­றி­னார். வசந்த விளக்­குத் திரு­விழா கால நில­வைப்­போல அவர் முகம் மகிழ்ச்­சி­யில் சொலித்­தது.

"ப்பா..." விம்­மல் வெடித்­துக் கிளம்­பி­யது. மக­ளி­ட­மி­ருந்த கைப்பே­சி­யைப் பறித்த பமேலா, "இப்­ப­டிச் செய்­தி­ருக்­கீங்­களே?" கண்­ணீ­ரு­டன் கேட்­டார்.

"உங்­க­ளுக்கு விஷ­யம் தெரிஞ்­சி­டுச்சா? சரி... சரி... அழா­தீங்க."

"ப்பா... என்னை மன்­னிச்­சி­டுங்­கப்பா...!"

"என்­னோட செல்­லம் இப்­படி அழ­லாமா?"

"நான் உங்­க­ளைத் தப்பா நினைச்­சிட்­டேம்பா."

"அதெல்­லாம் ஒண்­ணு­மில்ல விடும்மா."

"இங்க எங்­க­ளுக்கு நல்ல வாழ்க்­கையை அமைச்சி கொடுத்­துட்டு, அங்க காட்­டுல வெயில்­ல­யும் மழை­யி­லும் கிடந்து கஷ்­டப்­பட்­டி­ருக்­கீங்­க­ளேப்பா."

"உங்­க­ளைப் பார்க்க முடி­யா­த­து­தான் வருத்­த­மா­யி­ருக்கே தவிர வேற ஒரு கஷ்­ட­மும் இல்­லம்மா. நீ அழாதே. முதல்ல கண்­ணைத் துடை."

சேரா முகத்­தைத் துடைத்­துக்­கொண்­டாள்.

"உனக்கு வேற தனியா சொல்­ல­ணுமா?" இமைக்­கா­மல் தன்­னையே பார்த்­துக்­கொண்­டி­ருந்த மனை­வி­யி­டம் கேட்­டார்.

"இப்­படி எலும்­பும் தோலுமா ஆகிட்­டீங்­களே?"

"நீ மட்­டு­மென்ன? மேண்­ட­ரின் ஆரஞ்சு மாதிரி கண்­ணுக்­குக் குளிர்ச்­சியா தெரி­யுற உன்­னோட கன்­னம் வீணாய்ப்­போன ஆரஞ்­சு­போல ஆகி­யி­ருக்கே?"

தாய், மகள் இரு­வ­ரது இதழ்­க­ளி­லும் சிறு புன்­னகை அரும்­பி­யது.

"அந்­நா­ளில், குடிக்­க­வும் குளிக்­க­வும் குளத்­துத் தண்­ணிய பாவித்து, அன்­னன்­னிக்கு கிடைக்­கி­றதை சமைச்சு சாப்­பிட்டு கம்­பத்­துல வாழ்ந்த எனக்கு எது­வுமே சிர­ம­மாய்த் தெரி­யல. இங்க பாருங்க... புதுச் சட்டை போட்­டி­ருக்­கேன். முன்­னல்­லாம் குடி­சைக்கு வெளியே பொங்­கிச் சாப்­பி­டு­வேன். ராத்­தி­ரி­யில எலிங்­க­ளுக்கு என்­னோட துணிங்க உண­வா­கும். இப்ப வீட்­டுக்­குள்­ளவே சமைச்சு சாப்­பி­டு­ற­தும் கிழி­சல் இல்­லாத சட்­டை­யைப் போட்­டி­ருக்­கி­ற­தும் ஒரு மாதி­ரியா இருக்கு. காட்­டோட வாச­மில்­லாம தூங்­க­வும் முடி­யல. அது­வு­மில்­லாம என்­னோட நண்­பர்­கள் வேற இல்­லையா?" சத்­த­மா­கச் சிரித்­தார்.

"என்­னப்பா சொல்­றீங்க? அங்க உங்­க­ளுக்கு நண்­பர்­கள் இருந்­தாங்­களா?"

"ஆமாம்மா."

"நீங்க மட்­டும் காட்­டில் வசித்­த­தா­கத்­தானே செய்­தி­யில வந்­தது?"

"எப்­ப­வும் உட­னி­ருக்­கும் கொசுக்­க­ளைச் சொன்­னேம்மா. மழைக்­கா­லம்னா அவற்­றுக்­கும் எனக்­கும் உள்ள நெருக்­கம் இன்­னும் அதி­க­மா­யி­டும்" வெடிச் சிரிப்­பு­டன் சொல்ல, தாயும் மகளும் கண்­ணீ­ரைத் துடைக்க மன­மின்றி நின்­ற­னர்.

"அழா­தீங்க... நீங்க ரெண்டு பேரும் இப்­ப­டிக் கலங்­கி­னால் என்­னால் தாங்க முடி­யுமா?"

"உங்­களை உடனே பார்க்­க­ணுமே. எப்போ வரு­வீங்க?" பமேலா சிறு­மி­யைப்­போ­லக் கேட்­டார்.

"கொவிட் கட்­டுப்­பாடு நீக்­குன அன்றே அங்கே வந்­து­டு­வேன்."

"அந்த நோய் போவ­து­போ­லத் தெரி­ய­லையே!"

"போயி­டும்... போயி­டும்... இந்த எழு­பத்­தொன்­பது வரு­சத்­துல நான் பார்க்­காத வியா­தியா? கவ­லைப்­ப­டாதே... சிங்­கப்­பூ­ருல எல்­லாத்­தை­யும் சீக்­கி­ரமா சரிப்­படுத்­தி­டு­வாங்க."

"ப்பா... நான் வேலைக்­குப் போய் உங்க ரெண்டு பேரை­யும் பார்த்­துக்­கி­றேன். இங்­கேயே வந்­து­டுங்­கப்பா" சேரா­வின் குரல் பிசி­றி­யது.

"உழைப்­ப­தற்கு அப்பா ஒடம்­புல வைரம்­போ­லத் தெம்பு இருக்கு. நீ நல்­லாப் படிம்மா."

"இத்­தனை வரு­ஷம் நீங்க தனியா வாழ்ந்­த­தெல்­லாம் போதும். வரு­மா­னம் குறை­வா­யி­ருந்­தா­லும் சேர்ந்து வாழுற நிம்­மதி ஒண்ணே போதுங்க" என்­றார் பமேலா.

"ஏம்பா எங்­க­கிட்ட எதை­யுமே சொல்­லல?"

"நாலு வய­சுல அனா­தையா ஆன­வ­னோட கதைய எப்­ப­டிம்மா சொல்ல முடி­யும்?"

"அப்பா...!"

"பட்ட வேதனை அப்­ப­டிம்மா... வயித்­துப்­பாட்­டுக்­காக அங்கே இங்­கேன்னு எடு­பிடி வேலை செய்­ததை நினைக்­க­வும் விரும்­பல. என் வயசு பிள்­ளைங்­கல்­லாம் பள்­ளிக்­கூ­டம் போனப்ப ஏக்­கத்­தோட பார்ப்­பேன். பசி­யில்­லாத் தூக்­கம் பத்து வய­சுக்கு மேல­தான் கிடைச்­சது. வண்­டி­யோட்ட ஆரம்­பித்த பிறகு மூணு வேளை சாப்­பிட முடிந்­தது. வாழ்க்கை மேலி­ருந்த வெறுப்­பில், அர­சாங்­கத்­துல வீடு தர்­றாங்­கன்னு சொன்­னப்­ப­வும் எனக்­கெ­துக்கு வீடுன்னு விட்­டேத்­தியா இருந்­துட்­டேன். உங்­கம்­மா­வைப் பார்த்த பிற­கு­தான் வாழ்க்கை மேல பிடி­மா­னமே வந்­தது. தனி­மை­யி­லேயே காலம் முடிஞ்­சி­டு­மோன்னு இருந்­த­வ­னுக்கு மனை­வி­யும் அமைந்து, மகளும் பிறந்­து­விட்­டால் மகிழ்ச்­சிக்­குச் சொல்­ல­ணுமா? நான் பட்ட சிர­மம் எதை­யும் என்­னோட மகள் படக்­கூ­டா­துன்­னு­தான் ஓயாம உழைத்­தேன். என்­னோட ஏக்­கம், உன்னை நல்­லாப் படிக்க வைக்­க­ணும்­கிற வெறியா மாறி­யது. இங்­கும் அங்­குமா அலைஞ்சி­கிட்­டி­ருந்தா அது நடக்­கா­மப் போயி­டுமோ என்­கிற பயம்­தான் நீங்க அங்­கேயே இருக்­கட்­டும்னு நினைக்க வைத்­தது."

"ப்பா... உங்­க­ளைப் போய்த் தப்பா நினைச்­சிட்­டேனே...!"

"அழா­தடா... இந்­தக் கொவிட் நம்மை நிரந்­த­ரமா பிரிச்­சி­டு­மோன்னு ரொம்­ப­வும் கலங்­கிட்­டேன்..." பேசிக்­கொண்­டி­ருந்­த­வ­ரது குரல் கம்­மி­யது.

"அப்பா..."

"சட்­ட­வி­ரோ­தமா காய்­க­றி­களை விக்­கி­றேன்னு ஒருத்­தங்க என்­னைப் படம் பிடிச்­சப்ப, இருந்த ஒரே பிழைப்­பி­லும் மண்­ணான்னு ஆடிப்­போ­யிட்­டேன். ஆனா அடுத்­த­டுத்த நாளி­லி­ருந்து எதிர்­பார்க்­கா­த­தெல்­லாம் நடக்­குது. எனக்­குத் தனியா ஓரறை வீடு கிடைச்சிருக்கு. பத்­தி­ரி­கை­யில வந்த செய்­தி­யைப் பார்த்­துட்டு நிறைய பேர் உதவி செய்­துட்டு வர்­றாங்க. இனி எனக்கு எந்­தப் பொரு­ளும் வேண்­டாம்னு சொல்­லி­யி­ருக்­கேன்.

"இப்ப நான் பேசிட்­டி­ருக்­குற இந்­தப் போன்­கூட யாரோ ஒரு­வர் கொடுத்­த­து­தான். போனை கொடுத்­த­தும் இல்­லாம அதில் எப்­ப­டிப் பேச­ணும்னு சொல்­லி­யும் கொடுத்­துட்­டுப் போனார்" ஒடுங்­கிய கன்­னங்­கள் இன்­னும் உள்­வாங்­கிக்­கொள்ள மேற்­பற்­கள் இரண்­டும் பளீ­ரிட்­டன.

"குடும்­பத்­தோட சிங்­கப்­பூ­ரில வாழ­ணும்­கி­ற­து­தான் என்­னோட ஒரே ஆசைன்னு சொல்­லி­யி­ருக்­கேன். அதற்­கான ஏற்­பா­டு­க­ள் நடந்துட்டுருக்கும்மா" குரல் நெகிழ்ச்­சி­யு­டன் வந்­தது.

"கொவிட் நமக்கு நல்­ல­து­தான் செஞ்­சி­ருக்­குப்பா" மெல்­லிய சிரிப்­பு­டன் சொன்­னாள் சேரா.

"அப்­ப­டிச் சொல்­லா­தம்மா... இந்த வியா­தி­யால மக்­கள் கும்­பல் கும்­பலா சாவதை சாப்­பாட்­டுக்­கடை­யில இருக்­குற டிவி­யில காட்­டி­னாங்க. அன்­னிக்கு நான்­பட்ட வேத­னை­யி­ருக்கே..." தலை­யைக் குனிந்­து­கொண்­டார்.

"அப்பா...!"

"1948ஆம் ஆண்டு காச­நோயில் அம்மா, அப்பா, இரண்டு அண்­ணன், ஒரு அக்கா, ஒரு தம்பி எனக் குடும்­பத்­துல உள்­ள­வங்க அத்­தனை பேரை­யும் பறி­கொ­டுத்­தேன்...!"

பேசிக்­கொண்­டி­ருந்த யூவின் பார்வை வேறு திசையை நாட, தாயும் மகளும் பேச்­சி­ழந்­த­னர். கனத்­துக்கிடந்த அமை­தியை, சீறிக்­கொண்டு சென்ற ஆம்­பு­லன்­சின் சத்­தம் துரத்­தி­யது.

- முற்றும் -

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

tmlifestyle@sph.com.sg