நிழலின் மிச்சம்...

நிழலின் மிச்சம்...

13 mins read
bc4b23ec-debb-4423-85f9-24bc9531cc0b
-

திடீ­ரென கண்­கா­ணிப்­புக் கரு­வி­யில் கோடு­கள் வேக­மாக நகர்­வதைப் பார்த்­த­வ­ளுக்­குத் திகைப்பு. கட்­டி­லின் தலை­மாட்­டிற்கு ஓடோடி வந்­தாள்.

"அம்மா, நான் பேசு­றது கேக்­குதா? நர்ஸ், இங்கே பாருங்க, அம்­மா­வோட இத­யத் துடிப்­பில் மாற்­றம் தெரி­யுது," பதற்­றத்­தோடு தாதியை அழைத்து வந்­தாள்.

"மேடம் அஞ்­சலை, உங்­க­ளால் என் குர­லைக் கேட்க முடி­யுதா?" தாதி­யின் இனி­மை­யான குர­லை­விட அவள் உச்­ச­ரித்த அஞ்­சலை என்­னும் பெயரே அஞ்­ச­லை­யின் இதய மடிப்­பு­க­ளுக்­குள் உருண்­டோ­டி­யது.

கடற்­கரை மண­லில் உலர்ந்த பாதங்­களை இத­மாக நனைத்­து­விட்­டுச் செல்­லும் கட­லலை­கள் போல அவ­ளுக்­குள் மென்­மை­யாக அலை­யா­டி­யது.

"மேடம் நிர்­மலா, டாக்­டர் வரார், கொஞ்­சம் வெளியே காத்­தி­ருங்க" முதன்­மைத் தாதி ஒரு வண்­டி­யில் மருத்­துவ சாத­னங்­க­ளைத் தள்­ளிக்­கொண்டு வந்­தாள்.

அஞ்­ச­லை­யின் மேல் போர்த்­தி­யி­ருந்த போர்­வையை விலக்­கு­வ­தற்­கும் கையு­றை­க­ளோடு மருத்­து­வர் உள்ளே நுழை­வதற்கும் சரி­யாக இருந்­தது.

சிறிது நேரத்­திற்­கெல்­லாம் கனம் பொருந்­திய ஒன்று அஞ்­ச­லை­யின் நெஞ்சை அழுத்­தி­யது. இத­யம் இறு­கு­வ­தும் பின் தளர்­வது­மாக இயங்­கிக்­கொண்­டி­ருந்­தது.

கூண்­டை­விட்டு வெளி­யேறி சுதந்­தி­ர­மாக பறக்­க­வேண்­டும் என்ற எண்­ணம் விருட்­ச­மாக எழ, தன் இருப்­பி­டம் பறந்து செல்­லும் வல­சைப் பற­வை­யைப்­போல அவ­ளது நினை­வு­கள் நக­ரத்­தைக் கடந்து சதுப்பு நிலத்­தைத் தேடி ஓடின.

கம்­பத்து வீடு­களும் செம்­மண் சாலை­களும் ஓவி­ய­மாக அவ­ளது மனத்­தி­ரை­யில் விரிந்­தன.

"ஓர் இல, ரெண்டு இல, மூணு இல, நாலு இல, அஞ்­சல! கண்ணாமூச்சி ரே...ரே..." பழக்­கப்­பட்ட குரல் மூளை­யின் ஒரு மூலை­யி­லி­ருந்து மேலெ­ழுந்து வந்­தது.

"ரகு... ரகு.. ஹமிதா... கௌரி..! எங்கே இருக்­கீங்க? எனக்­குப் பயமா இருக்கு..." சிறுமி­யின் அழு­கு­ர­லுக்­குச் செவி­சாய்க்­கா­மல் மரங்­களும் செடி­களும் அசைந்­தா­டிக்­கொண்­டி­ருந்­தன. தூரத்­தில், மரங்­க­ளைக் கடந்து ஓடும் சிறு­வ­னின் நிழல்.

"ரகு... ஓடாதே, நில்லு?" செருப்­பில்­லாத கால்­க­ளோடு சிறு­மி­யும் பின்­னால் ஓடு­கி­றாள்.

செம்­மண் பாதை­யில் புத்­த­கப் பைக­ளோடு செல்­லும் சிறு­வர்­ களு­டன் இவர்­களும் சேர்ந்­து­கொள்ள புத்­து­யி­ரு­டன் அன்­றைய நாள் குதூ­க­ல­மா­கத் துவங்­கி­யது.

பள்ளி வளா­கத்­தில் பெரிய மாம­ரத்து நிழ­லில் 6ஆம் வகுப்பு மாண­வர்­கள் தமி­ழா­சி­ரி­ய­ரைச் சுற்றி அரை வட்­டத்­தில் உட்­கார்ந்­தி­ருந்­தார்­கள்.

ஆத­வன் தன் வெள்­ளிக் கரங்­களை இணைத்து சிறு­வர்­க­ளு­டன் விளை­யாட்­டில் சேர்ந்­து­கொண்­டது.

மாண­வர்­கள் கதை சொல்­லி­யும் நட­னம் ஆடி­யும் தங்­கள் திற­மை­க­ளைக் காண்­பிப்­ப­தில் முனைப்­பு­டன் இருந்­த­னர்.

"அடுத்து, யாரு பாட்­டுப் பாடப் போறா?" ஆசி­ரி­ய­ரின் பார்வை அஞ்­ச­லை­யின் முன் நின்­றது.

இறு­கப் பின்­னிய இரட்டைச் சடை­யின் நுனி­யில் சிவப்பு வண்ண ரிப்­ப­னோடு அஞ்­சலை ஓடோடி வந்­தாள்.

சந்­த­னத்­தில் இரண்டு சிட்­டிகை மஞ்­சள் கலந்த நிறம். கறுப்­புப் பொட்­டுக்­குக் கீழ் மெல்­லிய திரு­நீற்­றுக் கீற்று. பய­மின்றி முன்னே வந்து, தொண்­டை­யைச் சரி செய்­து­கொண்டு பாடத் தொடங்­கி­னாள்.

"சிட்­டுக் குருவி முத்­தம் கொடுத்து, சேர்ந்­தி­டக் கண்­டேனே..." வலது, இடது விரல்­களைக் குவித்­தும், இரண்டு கைக­ளை­யும் ஒன்­றோடு ஒன்று சேர்த்­தும், பிரித்­தும் அபி­ந­யத்­தோடு பாடி­னாள்.

"பொறு, பொறு. நேத்­தும் இதே பாட்­டுத்­தான் பாடினே. போன வார­மும் இதே பாட்­டுத்­தான்... வேற பாட்டு தெரி­யாதா?" ஆசி­ரி­ய­ரின் கேள்­வி­யை­யும் முந்­திக்­கொண்டு வந்­தது சக மாண­வர்­களின் கேலிச் சிரிப்பு.

"வேற பாட்டு தெரி­யாதே" கால் விரல்­க­ளால் தரை­யில் கோல­மிட்­டுக்­கொண்டே ஆசி­ரி­ய­ரின் முகத்தை நிமிர்ந்து பார்க்­கா­மல் கூறி­னாள்.

"சரி, அடுத்த முறை வேற பாட்­டுப் பாடணும்... சரியா?" உதடு­க­ளைக் குவித்து மலங்க மலங்க விழிக்­கும் அஞ்­ச­லை­யின் கன்­னத்­தைச் செல்­ல­மா­கக் கிள்ளி, அவளை உட்­கா­ரச் சொன்­னார்.

அடுத்­த­டுத்த வாரங்­களில் அஞ்­சலை, சிட்­டுக்­கு­ரு­வி­களை விடு­வ­தாக இல்லை. ஆனா­லும் சில மாதங்­க­ளுக்­குப் பிறகு மரத்­த­டி­யில் கூடிய மழ­லைக் கூட்­டங்­களில் அஞ்­சலை என்­னும் சிட்­டுக்­கு­ருவி மாய­மாய் மறைந்­தது.

பாவா­டை சட்­டை­யி­லி­ருந்து தாவ­ணிக்கு மாறி­யி­ருந்­தா­லும் நூற்­கப்­ப­டாத பருத்­தி­யென அஞ்­சலை குழந்­தை­ ம­னம் மாறா­மலே வலம் வந்­தாள்.

மாம­ரக் கிளை­களில் பற­வை­கள் இளைப்­பா­று­வ­தும், கிளைக்­குக் கிளை மாறு­வ­து­மாக இருந்­தன.

பங்­குனி வெயி­லுக்கு இத­மாக சாலை­யோ­ரத்துக் கடை­யி­லி­ருந்து வாங்கி வந்த 'ஐஸ் போலாவை' சுவைத்­துக்­கொண்­டி­ருந்­தாள் அஞ்­சலை.

இயந்­தி­ரத்­தில் அரைத்­தெ­டுத்த பனிக்­கட்­டித் துகள்­களை பந்­து­போல் கெட்­டி­யாக உருட்டி, அதன் மேல் பச்சை, சிகப்பு, ஆரஞ்சு, வண்ண சீனிப் பாகை ஊற்றிக் கொடுத்­தி­ருந்­தார் மைதீன் அண்ணா.

ஐந்து காசுக்கு அஞ்­ச­லைக்கு மட்­டும் சிறப்­பாக டின் பாலை­யும் அதன் மேல் ஊற்­றிக் கொடுத்­தி­ருந்­தார்.

பனிக்­கட்­டி­யின் குளிர்ச்­சி­யால் 'ஐஸ் போலாவை' வலது கைக்­கும் இடது கைக்­கு­மாக மாற்­றிக்­கொண்­டி­ருந்­த­வளைச் சீண்­டி­னான் ரகு.

"அஞ்­சல, ஏன் போன மாசம் பள்­ளிக்கு வரல?" உரு­கும் சீனிப்­பா­குவை ருசித்­துக்­கொண்­டி­ருந்­த­வ­ளின் பார்வை சிறிது நேரம் ரகுவை விட்டு அக­ல­வில்லை

"சீ போ! தெரி­யாத மாதிரி கேக்­குறே?" பனிக்­கட்­டி­கள் நாவில் ஏற்­ப­டுத்­திய குளிர்ச்­சி­யில் வார்த்­தை­கள் குள­ற­லாக வந்­தன. ரச­னை­யு­டன் ரகு அவ­ள­ரு­கில் நெருங்­கி­னான்.

"அப்போ, நீ சீக்­கி­ரமா கல்­யா­ணம் பண்­ணிக்­கிட்டு போய்­டு­வியா?" மீசை முளைக்­காத வாலி­ப­னின் குறும்­புப் பார்வை அவ­ளுக்­குள் மெட்­டி­சைத்­தது

"ஐயே! கல்­யா­ணமா? நான் படிக்­க­ணும், நிறைய படிக்­க­ணும்..." அவ­ளின் சிணுங்­களில் மரத்­தின் கிளை­களும் அசைந்­தா­டின.

"இங்கே பாரு, உனக்கு என்ன கொண்டு வந்­தி­ருக்­கி­றேன்னு!" குவித்­தி­ருந்த கைகளை மெல்ல அவள் முகத்­துக்கு அருகே திறந்­தான். அவன் கைக்­குள் அடை­பட்­டி­ருந்த மஞ்­சள் வண்ண பட்­டாம்­பூச்சி, தன் சிற­கு­களை ஓவி­ய­மாக திறந்து, மூடி, திகைத்­துப்­போய் பார்த்­துக்­கொண்­டி­ருந்த அஞ்­ச­லை­யின் இடது தோள்­பட்­டை­யில் உர­சிச் சென்­றது. அஞ்­ச­லை­யும் உற்­சா­கத்­தோடு தன் கையில் கரைந்­து­கொண்­டி­ருந்த பனிக்­கட்­டி­க­ளைக் கீழே போட்­டு­விட்டு, பட்­டாம்­பூச்­சி­யின் பின்­னால் ஓடி­னாள். மண்­மீது விழுந்த பனிக்­கட்­டி­கள் உருகி, மண்­ணுக்­குள் கலந்­து­விட்­டி­ருந்­தன.

அஞ்­சலை வீட்டை நெருங்­கும்­போது அப்­பத்­தா­வும் அம்­மா­வும் பேசிக்­கொண்­டி­ருந்­தது காதில் விழுந்­தது.

"அஞ்­சல பெரிய பொண்ணா ஆயிட்டா, இனிமே அவள வெளியே அனுப்ப வேண்டாம், பொம்­பள பிள்­ளைக்­குப் படிப்பு எதுக்கு? ரெண்டு வீட்டு வேலை கத்­துக்­கிட்­டாத்­தான் போற எடத்­துல பொங்­கிப்­போட முடி­யும்"

"அவ படிக்க ஆசைப்­ப­டுறா அத்தை... படிக்­கட்­டுமே.." கம­லம் குசி­னி­யி­லி­ருந்து வந்­தாள். ஈரக் கையைச் சேலை முந்­தா­னை­யில் துடைத்­துக்­கொண்டே வெத்­த­லைப் பெட்­டியை எடுத்­தாள்.

கடை­சி­யா­கப் பிறந்த கடைக்­குட்டி சிலு­வா­ரில்­லா­மல் தரை­யில் ஊர்ந்­து­கொண்­டி­ருந்­தது. குழந்­தையை மடி­யில் கிடத்­திக்­கொண்டு, மாமி­யா­ரின் பக்­கத்­தில் அமர்ந்­தாள்.

வெற்­றி­லை­யின் இரண்­டு பக்­கங்­க­ளையும் நன்­றா­கத் துடைத்­து­ விட்டு, சிறி­தாக அதன் காம்பைக் கிள்­ளி­னாள். பழைய நாளி­த­ழில் மடித்து வைக்­கப்­பட்ட சுண்­ணாம்பை வலது கைச் சுட்­டு­வி­ர­லால் எடுத்து, லேசாக வெத்­த­லை­யில் தட­வி­னாள்.

அண்­ணாச்சி கடை­யில் வாங்கி வந்த சீவல் பாக்கை வெத்­த­லைக்­குள் வைத்து, முக்­கோண வடி­வில் மடித்து மாமி­யா­ரி­டம் நீட்­டி­னாள்.

பால் டின் குவ­ளையை அவள் பக்­க­மாக நகர்த்தி வைத்­தாள். குழந்தை அவள் மடி­யி­லி­ருந்து இறங்கி, கிள்­ளி­யெ­றி­யப்­பட்ட வெத்­த­லைக் காம்பை நோக்­கித் தவழ்ந்­தது. கம­லம் ஓடிச் சென்று குழந்­தையை இடுப்­பில் தூக்கிக்­கொண்­டாள். அவள் எதேச்­சை­யா­கத் திரும்­பும்­போது அஞ்­சலை நின்­று­கொண்­டி­ருப்­ப­தைக் கவ­னித்­தாள்.

"அஞ்­சல, தம்­பி­யைக் கொல்­லைப்­பக்­கம் கூட்­டிட்­டுப் போ, எனக்­குத் தலைக்­கு­மேலே வேலை இருக்கு," என்று விரட்­டி­னாள். அஞ்­ச­லைக்கு அடுத்­த­தா­கப் பிறந்த ஒரு தங்­கை­யையும் கடை­சி­யா­கப் பிறந்த கடைக்­குட்டி தம்பி­யையும் சேர்த்து அறு­வ­ருக்கு அந்த குவாட்­டர்ஸ் வீடு கச்­சி­த­மாக இருந்­தது.

வாச­லைக் கடந்து சிறு கூடம், அதனை அடுத்து படுக்கை அறை. அதை­யும் கடந்­தால் பின்­புறக் கத­வு­டன் சிறு சமை­யற்­கட்டு. சன்­னல்­கள் அதி­கம் இல்­லாத குடி­யி­ருப்பு.

சமை­ய­ல­றைக் கத­வைத் திறந்து சென்­றால் கொல்­லைப்­புறம் வந்­து­வி­டும். துணி­க­ளைக் கொடி­யில் காய­வைப்­ப­தற்­கும் மசாலா பொருள்­க­ளைத் தரை­யில் காய­வைப்­ப­தற்­கும் மாலை­யில் குழந்­தை­கள் விளை­யா­டு­வ­தற்­கும் ஏற்ற இட­வ­சதி இருந்­தது.

கொல்­லைப்­பு­றத்­தில் கௌரி­யும் ஹமி­தா­வும் 'ஃபைவ் ஸ்டோன்ஸ்' விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­தார்­கள்.

அஞ்­சலை ஓடிச் சென்று தம்பி பாப்­பா­வைத் தன் மடி­யில் உட்­கார வைத்­துக்­கொண்டு தோழி­க­ளு­டன் விளை­யாட்­டில் இணைந்­து­கொண்­டாள். அவர்­க­ளின் வாழ்க்­கை­யில் ஏற்­ப­டப்­போ­கும் திருப்­பங்­களை உண­ரா­மல் தோழி­கள் முக்­கோ­ணக் கற்­க­ளைத்­ தூக்­கிப்­போட்டு பிடிக்­கும் விளை­யாட்­டில் மூழ்­கிப்­போ­னார்­கள்.

சில மாதங்­க­ளுக்­குப் பிறகு ஹமி­தா­வின் பெற்­றோர்­ சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து குடும்­பத்­து­டன் மீண்­டும் அவர்­க­ளது சொந்த நாட்டுக்குத் திரும்ப ஏற்­பா­டா­னது.

தொப்­புள் கொடி தொடர்­பில்­லாத ஊரில் கூலி­யாக இருப்­ப­தை­விட தாய்நாட்­டில் விவ­சா­யம் செய்து பிழைத்­துக்­கொள்­ள­லாம் என்று அவ­ளது தந்தை நம்­பி­னார்.

"மறக்­காம எனக்­குக் கடு­தாசி போடு," என்று தனது வீட்டு விலா­சத்­தைக் கொடுத்­தாள். தோழி­கள் ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் கைக­ளைக் கெட்­டி­யா­கப் பிடித்­துக்­கொண்டு கண்­ணீ­ரில் கரைந்­த­னர்.

ரகு­வின் அப்­பா­வும் அஞ்­ச­லை­யின் அப்­பா­வும் மற்­றும் கம்­பத்­தில் குடி­யி­ருந்த சில­ரும் ஹமி­தா­வின் குடும்­பத்தை ராஜூலா கப்­ப­லில் ஏற்­றி­விட்டு வந்­தார்­கள்.

கப்­பல், கோடா­லிச் சின்­னத் தைலம், சிங்­கப்­பூர்ப் பேனா, இந்­தோ­னீ­சிய கைலி, ஜப்­பான் சேலை­க­ளோ­டும், எண்­ணங்­க­ளைச் சலித்­தெ­டுத்த கடி­தங்­க­ளோ­டும் ஊர் போய்ச் சேரு­வ­தற்கு ஒரு திங்­க­ளுக்கு மேல் ஆகும்.

பிரி­வு­களும் துய­ரங்­களும் வாழ்க்­கை­யில் நிரந்­த­ர­மா­னவை என்­பதை உணர்ந்­த­போது அஞ்­ச­லைக்கு வயது பதி­னைந்து.

ஹமி­தா­வின் பிரி­வால் துவண்­டி­ருந்த அஞ்­ச­லைக்கு, ரகு­வின் அரு­காமை ஊக்க மருந்­தாக இருந்­தது. ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் மனம் விட்­டுப் பேச­வும், மெல்ல தங்­க­ளது அன்­பைப் பரி­மா­றிக்­கொள்­ள­வும் காலம் அவர்­க­ளு­டன் ஒத்­தி­சைத்­தது.

கத்­தக்­காம்பு, வெந்த சோறு, எலு­மிச்சை சாறும் சேர்த்து அரைத்­துப் பூசிய மரு­தா­ணி­யின் நிறம்­போல் ஒரு­வ­ரின் மேல் ஒரு­வர் வைத்­தி­ருந்த அன்­பும் அழுத்­த­மாகப் பிடித்­துக்­கொண்­டது.

"அம்மா, நான் மன்­ம­தன் கோவி­லுக்­குப் போயிட்டு வரேன்" கொல்­லைப்­பு­றத்­தில் பூத்­தி­ருக்­கும் மல்­லிகை மலர்­க­ளைச் சர­மா­கத் தொடுத்து, சாமிக்­குச் சாத்­தி­விட்டு வரு­வ­தா­கச் செல்­வாள்.

கண்­டோன்­மெண்ட் சாலை­யில் அமைந்­துள்ள மன்­ம­தன் கோவில் இவர்­க­ளை­யும் அர­வ­ணைத்­துக் கொண்­டது. சில சம­யங்­களில் அவ­ளுக்கு அடுத்­த­தாய்ப் பிறந்த சிவ­கா­மி­யை­யும் உடன் அழைத்­துச் செல்­வாள். வாரம் ஒரு­முறை மகள்­கள் இரு­வ­ரும் சண்­மு­கம் ஐயா­வி­டம் தேவா­ரம் கற்­றுக்­கொள்­வ­தைப் பார்த்து கௌரி பெரு­மி­தத்­தில் பூரிப்­பாள்.

ரகு, தேவார வகுப்­பு­களில் இணைந்­து­கொள்­ளா­விட்­டா­லும் தூரத்­தில் அமர்ந்து அஞ்­சலை பாடு­வதை ரசிப்­பான்.

"அஞ்­ச­லைக்­குத் திரு­ம­ண­மாம். பெரிய இடத்து மாப்­பிள்­ளை­யாம். சொந்­த­மா­கத் தொழில் செய்­றா­ராம். தலை­முறை, தலை­மு­றையா உக்­காந்தே சாப்­பி­ட­லா­மாம், அஞ்­சலை கொடுத்­து­வச்­சவ" கம்­பமே இதே பேச்­சா­கத்­தான் இருந்­தது.

அஞ்­ச­லை­யின் கல்­யா­ணப் பேச்சு தொடங்­கி­ய­தி­லி­ருந்து அவள் கோவி­லுக்­குச் செல்­வது நிறுத்­தப்­பட்­டது.

எப்­ப­டி­யா­வது ரகு­வைப் பார்த்து, அடுத்து என்ன செய்­வது என்று முடி­வெ­டுப்­ப­தற்­குக்­கூட காலம் அவ­ளுக்கு அவ­கா­சம் கொடுக்­க­வில்லை.

"ஏ புள்ள கௌரி, உன் அண்­ணாக்­கிட்ட சொல்லி எப்­ப­டி­யா­வது இந்­தக் கல்­யா­ணத்தை நிறுத்­தச் சொல்­லேன்," கௌரி­யின் கைக­ளைப் பிடித்­துக்­கொண்டு கெஞ்­சி­னாள்.

"பொறு­மையா இரு புள்ள, எங்க அப்­பா­கிட்டே சொல்லி, பேசச் சொல்­றேன்," என்று நம்­பிக்கை அளித்து விடை­பெற்­றாள் கௌரி.

ரகு­வின் அப்­பா­வும் வந்­தார். ஆனால் அவர் பேசி­யது களி­மண்­ணின் மேல் விழுந்த மழை­து­ளி­யா­னது. அஞ்­சலை, அம்­மா­வி­டம் மன்­றா­டி­னாள். கம­லத்­திற்கு என்ன செய்­வ­தென்று தெரி­யா­மல் மாமி­யா­ரி­டம் சர­ண­டைந்­தாள். மாமி­யாரோ, பாக்கு உடைக்­கும் உரற்­கல்­லில் களிப்­பாக்­கோடு வார்த்­தை­க­ளை­யும் சேர்த்தே இடித்­தார்.

"நான் வாக்­கப்­பட்டு வரும்­போது, எனக்கு பதி­மூணு வய­சு­தான். உம் புரு­ஷன், அதான் என் மூத்த பிள்ளை பொறக்­கும்­போது பதி­னாலு வயசு! அவ­னுக்கு அப்­பு­றம், ஒம்­போது பிள்­ளைங்க. நான் நல்­லா­தானே இருக்­கேன். அது, அது காலா­கா­லத்­தில நடக்­க­ணும்" இடித்த பாக்கு துகள்­களை அள்ளி வாயில் போட்­டுக்­கொண்­டார். மீத­மி­ருந்த துகள்­க­ளைப் ஒரு தாளில் மடித்து வைத்­தார். அஞ்­சலை செய்­வ­த­றி­யாது தவித்­தாள்.

கெப்பல் துறைமுத்தில் வேலைசெய்யும் ஊழியர்கள், கம்போங் பாரு குடியிருப்பில் வசித்த மக்களின் வருகையால் மன்மதன் கோவில் வளாகம் கோலாகலமாக காட்சியளித்தது. மணமக்களைப் பல்லாண்டு வாழ வாழ்த்தியவர்கள், அஞ்சலையின் கணவனை வித்தியாசமாகப் பார்த்துச் சென்றனர்.

"என்ன இருந்தாலும் காளிமுத்து இப்படி செஞ்சிருக்கக்கூடாது, காசு, பணம் இருக்குன்னு வயசான ஆளுக்கா நம்ம அஞ்சலையைக் கொடுக்கிறது?" என்ற ஊராரின் ஏளன வார்த்தைகள் அஞ்சலையின் அப்பாவின் காதுகளில் எட்டாமல் இல்லை. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும் ஏற்பாட்டில் கவனம் செலுத்தலானார்.

விடைபெறும்போது, கௌரியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறி அழுதாள் அஞ்சலை. ரகு, மேற்படிப்பிற்காக வெளியூர் செல்கிறான் என்று அஞ்சலையின் காதில் ரகசியமாகச் சொன்ன செய்தியால்தான் என்பதை அறியாமல் ஊர்மக்கள் தோழிகளைப் பரிதாபமாகப் பார்த்தனர்.

நீர் தேங்கிய கண்களுடன் ரிக்க்ஷாவில் ஏறி அமரும்போதுதான் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள மாமரத்தின் நிழலில் ரகு நிற்பதைக் கவனித்தாள் அஞ்சலை. கிளைகள் அசையாதிருந்த மாமரத்தின் நிழல் ரகுவின் நிழலையும் தனக்குள் அணைத்துக்கொண்டது. அஞ்சலை தன் விழிகளை மூடிக்கொண்டாள். ரிக்க்ஷா வண்டியின் சக்கரங்கள் நகரவும் மாமரத்தின் நிழல் மெல்ல மறையத் தொடங்கியது.

****

"மேடம் நிர்மலா, நிலைமை மோசமா இருக்கு. எதுக்கும் உங்க முக்கியமான உறவினர்களிடம் தெரிவிச்சிருங்க..." ஒத்திகையற்ற முகபாவனையோடு தன் கடமையில் கண்ணாயிருந்தார் மருத்துவர்.

"ப்ளீஸ் டாக்டர், எங்க அம்மாவை எப்படியாவது காப்பாத்துங்க...". நிர்மலா மருத்துவரைக் கையெடுத்துக் கும்பிட்டாள். மருத்துவர் அவளது தோளை ஆதரவாகத் தட்டிக்கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

அஞ்சலையைத் தாங்கியிருந்த கட்டிலருகே வந்தாள் நிர்மலா. அஞ்சலையின் வாய்க்குள் பெரிய குழாய் பொருத்தப்பட்டிருந்தது. அவளின் உடலில் பொருத்தப்பட்டிருந்த வெவ்வேறு கருவிகளும் அவை எழுப்பும் ஒலிகளும் நிர்மலாவை பயமுறுத்தின. முப்பது வயதிற்குடைய முதிர்ச்சி இருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக கம்பீரத்துடன் வளம் வந்த அம்மா இன்று வாடிய மலராய் படுத்திருக்கும் காட்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சென்ற வாரம் வரை இயல்பாக நடமாடியவள். "நான் கண்ண மூடுறதுக்குள்ளே ஒனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப்பாக்கணும் நிம்மி" அஞ்சலை சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த கணவரின் படத்துக்கு ஒரு டம்ளர் தண்ணீரும், அகர்பத்திகளையும் வைத்துக்கொண்டே கூறினாள்.

"கல்யாணம்...? நோ மம்மி!" கணினித் திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவளின் பார்வை அம்மாவின் மேல் விழுந்தது. அஞ்சலை அன்றைய நாளிதழை எடுத்துக்கொண்டு நிதானமாக சோபாவில் அமர்ந்தாள்.

"மம்மி, நான் இன்னும் செட்டில் ஆகணும், 'பி.ஹெச்.டி' எடுக்கணும்கிறது என்னோட கனவு...எத்தனவாட்டி உன்கிட்டே சொல்லியிருக்கேன்" நிர்மலா, 'செட் ஜி.பி,டி யில் தரவிறக்கம் செய்திருந்த ஆய்வுக்கட்டுரைகளைச் சரிபார்த்தபடியே பதிலளித்தாள்.

"நானெல்லாம் உன் வயசிலே ஒரு பிள்ளைக்கு அம்மாவாயிட்டேன்" அன்றைய நாளிதழில் வந்த செய்திகளை ஆராய்ந்துகொண்டிருந்தாலும் அஞ்சலையின் மனம் நிர்மலாவைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

"பழைய பாட்டை ஆரம்பிச்சாச்சா?" சமகாலத்து தகவல்கள் சில விட்டுப்போயிருப்பதைக் கவனித்து, குறிப்பெடுத்துக்கொண்டிருந்ததால் தாயின் வாடிய முகத்தைக் கவனிக்கத் தவறினாள்.

"நீ யாரையாவது காதல் பன்னுன்னா கூட எனக்கு ஓகேதான். உன்னோட விருப்பம்தான் என்னோட விருப்பம்" நிர்மலாவின் நீண்ட மௌனம், அவள் கணினிக்குள் ஒன்றிணைந்துவிட்டாள் என்பதைப் புலப்படுத்தியது. பெருமூச்சுடன் செய்தித்தாளின் அடுத்தப் பக்கத்தைத் திருப்பியவளுக்கு அதிர்ச்சி. அறை பக்கத்தில் வந்திருந்த அறிவிப்பில் கௌரியின் பெயரைப் பார்த்ததும் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது. புகைப்படத்தை உற்று நோக்கினாள். ஆம் கௌரிதான். தன் ஆருயிர் தோழி. கண்களில் குபுக்கென்று நீர் முட்டியது. உடனே கைபேசியை எடுத்து நாளிதழில் தொடர்புகொள்ளச் சொல்லியிருக்கும் எண்களை அழுத்தினாள்.

அதன்பிறகுதான் அம்மா அதிகமாகப் பேசவில்லை என்பது நிர்மலாவுக்கு நினைவு வந்தது. நாளிதழில் வந்த செய்தியால்தான் என்பதை ஒருவழியாக யூகித்திருந்தாள். அஞ்சலை, கோமாவுக்கு சென்ற முதல் நாளில் அவளின் கைப்பைக்குள் பத்திரப்படுத்தப்பட்டிருந்த செய்தியைக் கண்டுபிடித்து அவள் கோடிட்டு வைத்திருந்த தொடர்பு எண்ணுக்கு அழைத்தாள். அம்மாவின் நிலைப் பறறி தகவல் கொடுத்துவிட்டு பிறகு அதைப்பற்றி மறந்தே போனாள்.

அறைக்குள் யாரோ நுழைவதைப் பார்த்ததும் நினைவுகளைக் கலைத்து, எழுந்தாள் நிர்மலா.

"வாங்க, நீங்க....நேற்று நான் பேசியது உங்களிடம் தானே?" நிர்மலா சந்தேகத்துடன் வினவினாள்

"ஆமா, அஞ்சலைக்கு எப்படி இருக்கு, டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க?"

"இனிமே எங்க கையில ஒண்ணுமில்லன்னுட்டாங்க... இந்தச் செயற்கைச் சுவாசக்குழாய் வழியாகத்தான் அம்மாவோட ஆயுசு நீட்டிக்கப்பட்டிருக்குதாம்..." நங்கூரமிட்டிருந்த நிர்மலாவின் தேம்பல்கள் மீண்டும் மேலெழுந்து வந்தன. அவளின் அழுகைக்கு அணை கட்டுவதைப்போல உள்ளே நுழைந்தாள் தலைமைத் தாதி. மருத்துவர் அவளைப் பார்க்க விரும்புவதாகக் கூறி அழைத்துச் சென்றாள்

வந்தவர் அஞ்சலையின் தலையருகே சென்றார். கண்காணிப்பு கருவிகளில் மேலும், கீழும் ஓடிக்கொண்டிருக்கும் பச்சை நிறக் கோடுகள் நம்பிக்கையின் நீட்சிகளாக அவரின் கண்களுக்குக் காட்சியளித்தன.

"அஞ்சும்மா ...." அதற்குமேல் பேச முடியாமல் நாக்கு வாய்க்குள் அழுத்தமாக ஒட்டிக்கொண்டது. என்ன பேசுவது? எங்கேயிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை.

"அஞ்சும்மா, நா..நா...ரகு வந்திருக்கேம்மா. அன்னைக்கு மட்டும் நீ விளம்பரத்தைப் பார்த்து, அழைக்காம இருந்திருந்தா... கடைசி வரைக்கும் உன்ன பாக்க முடியாம போயிருக்கும். நாம சந்திக்கும் நாளுக்காக எவ்வளவு ஆவலோடு காத்திருந்தேன். அதுக்குள்ளே உனக்கு இப்படி ஆகும்னு நினைக்கலியே அஞ்சும்மா..." அஞ்சலையின் முதுமை போர்த்திய கையைத் தனது கைக்குள் வைத்துக்கொண்டு வாஞ்சையுடன் அழுத்தினார். நினைவுகளின் கிளரலில் அவரின் கண்கள் குளமாகின. கட்டிலில் படுத்திருந்தவளின் சிறு அசைவைக்கூட உணரமுடியாத தூரத்திற்குச் சென்றிருந்தார்.

இவர்களின் காதலைப்போல் கம்போங்கின் ஆயுசும் குறைவுதான் என்பதை வெளிநாட்டில் படிப்பை முடித்துத் திரும்பிய நாள் தெரிந்துகொண்டார். நகரமயமாக்குதலால் அவர்கள் குடியிருந்த கம்போங்கும் அங்கிருந்த மக்களும் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்குச் சென்றது தெரியவந்தது. ஆளுக்கொரு திக்காகச் சென்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே ரகுவுக்குத் தெரியவில்லை. அஞ்சலையின் பெற்றோர்கள் ஊருக்கே சென்று விட்டார்கள் என்ற செய்தி மட்டும் அப்பாவின் மூலம் தெரியவந்தது. ஆனால் இச்சிறிய தீவில் அஞ்சலை என்னவானாள் என்று சொல்வதற்கு ஆள் இல்லை. ரகு சிறிது நேரம் அமைதியாக இருக்க முயற்சித்தார், ஆனால் மனம் இரைச்சலாக இருந்தது.

மற்றுமொரு இரத்தப் பரிசோதனைக்காக அறைக்குள் நுழைந்தாள் தாதி. கண்காணிப்பு இயந்திரங்களின் திரையில் தெரிந்த துல்லிய மாற்றத்தை உணர்ந்தவளாக உடனே மருத்துவரை அழைத்துவர ஓடினாள்.

வெளியேறுவதற்குமுன் "சார், ப்ளீஸ் வெயிட் அவுட் சைட்" என்றாள். விடைபெறும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தவராக வாஞ்சையுடன் அஞ்சலையின் நரைத்த கேசங்களை கோதி விட்டார்.

"அஞ்சும்மா, உனக்கு ஒன்னும் இல்லம்மா. நீ பொழச்சுக்குவ. நம்பிக்கையை விட்டுறாத. நீ..நீ.. தைரியமானவ. எனக்குத் தெரியும், நீ மீண்டு வந்துருவ... உனக்காக எப்பவும் நா காத்திருப்பேன்..." ரகுவின் சூடான கண்ணீர்த் துளிகள் அவளது சுருங்கிய நெற்றியில் விழுந்து, உருண்டோடி, தலையணை விரிப்பை நனைத்தது.

"சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..." ரகுவின் சட்டைப்பைக்குள் கைப்பேசியின் சிணுங்கல் இயந்திரங்களின் ஒலியோடு கலந்து எதிரொலித்தது. கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு, கைப்பேசியை அணைத்துவிட்டு, கனத்த இதயத்துடன் வெளியேறினார்

நிழல்போல் அறையிலிருந்து வெளியேறும் ரகுவின் முதுகில் பதிந்து, நிலைகுத்தியது அஞ்சலையின் விழிகள்!

-நிறைவு

ஓர் அசா­தா­ரண போராட்ட உணர்­வோ­டு­தான் அவ­ளுக்கு விழிப்பு வந்­தது. கறுமை போர்த்­திய அடர்வனத்­தில் கை நீளும் பக்­க­மெல்­லாம் வெறுமை. ஒரு வெற்­றுத் தாளைக் கொடுத்து நீயே எழு­திக்­கொள் என்­ப­து­போல் காலம் அவ­ளின் முன்னே நிர்­வா­ண­மாக நின்­றது.

தூரத்­தில் துய­ரம் மிகுந்த அழு­கு­ரல் சன்­ன­மாய் கேட்க, அந்­தக் குரலை உண­ரு­முன்பே இருண்மை அவளை அனைத்­துக்­கொண்­டது.

உயிர்மீட்புக் கரு­வி­க­ளின் ஒலி­யாலும், இரத்த பரி­சோ­த­னை­க­ளுக்­காக ஊசி­யு­டன் நுழை­யும் தாதி­யரின் வரு­கை­க­ளாலும் மட்­டுமே அந்­தத் தீவிர கண்­காணிப்பு அறை உயிர்ப்­பெற்­றி­ருந்­தது.

இரண்டு நாள்க­ளாக கோமா நிலைக்­குச் சென்று­ விட்ட அம்மா, இமை திறக்கமாட்­டாளா என கட்­டி­லின் விளிம்­பில் கலங்­கிக்­கொண்­டி­ருந்­தாள் நிர்­மலா.

சிறுகதை

பிரேமா மகாலிங்கம்