கட்டுமரம்!

கட்டுமரம்!

1 mins read
b400fa8f-f2ab-4f52-8874-87ac8e8b53bb
-

வாழும் மரத்தினிலே

எத்தனை உறவுகள்

வீழ்ந்து கிடந்தபோது

சொல்லொண்ணா தனிமைகள்

விறகாகும் என்றார்கள்

பயனில்லை என்றார்கள்

வீழ்ந்தமரம் எதற்கும்

உதவாது என்றார்கள்

துண்டுதுண்டாக்கி

மூலையிலே போட்டார்கள்

விறகாய் எரித்துவிட

விலைக்குக் கேட்டார்கள்

வீழ்ந்த மரங்களே

ஓடமாய் மாறின

சாதனைப் பயணங்கள்

ஓடத்தால் கூடின

மரமாய் நின்றபோதும்

பல்லுயிர்கள் வாழ்ந்தன

ஓடம் ஆனபோதும்

பயணங்கள் தொடர்ந்தன!

எத்தனை வரலாற்றைப்

பார்த்தன மரங்கள்

எத்தனை வரலாற்றைப்

படைத்தன மரக்கலங்கள்!

வீழ்ந்தாலும் எழுந்திரு

வாழ்ந்தாலும் பயனுறு

வசைகளை மறந்திடு

வான்நோக்கிப் பறந்திடு!

நம்பிக்கை ஒன்றே

நல்ல தொடக்கம்

பயனுற வாழ்ந்தால்

எல்லாம் கிடைக்கும்

- அனுபமா உதிவ்