நான் அந்த வீட்டை அடையும்போது அதிகாலை மலர்ந்து திசையெங்கும் வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. முதல் பார்வைக்கு அந்த வீடு சிறிதளவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை. எல்லா அடுக்குமாடி வீடுகளைப் போலத்தான் அதுவும் இருந்தது. பன்னிரெண்டாம் மாடியின் மூலை வீடு அது. வெண்ணிறம் பூசப்பட்ட கதவு ஊடலில் உள்ள பெண்ணின் முகம்போல இறுக்கமாக இருந்தது. கதவின் மேலேயோ அல்லது அதற்கு அருகிலோ தெய்வப் படங்களோ குறிகளோ இல்லை.
அந்த வீட்டைப் பார்த்தாலே அது அச்சுறுத்தும் என்றும் அமானுட சாயல் கொண்ட வீடு என்றும் நண்பன் சொல்லியிருந்தான். சொல்லியிருந்தான்.
அந்த வரிதான் என்னை இந்த வீட்டிற்கு வரவழைத்திருக்கும் என்று இன்று யோசிக்கையில் தெரிகிறது. ஆனால், அதிகாலையில் அந்த வீட்டின் தரிசனம் எனக்கு ஏமாற்றத்தைத்தான் அளித்தது. வெகு நாள்கள் இங்கு தங்கும் என் திட்டத்தை மாற்றிக்கொண்டு சீக்கிரமே இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்ற முடிவிற்கு மனம் வந்திருந்தது.
கதவிற்கு அடியிலுள்ள வாசல் படியில் நிரம்பியிருந்த தூசுப்படலம் கெட்டியாக இருந்தது. சமீபகாலமாக சுத்தமே செய்யப்பட்டிராத வீடு என்றபோதும் பன்னிரெண்டாம் தளத்தில் ஆளைத் தூக்கும் காற்றின் வேகத்தில் இந்தத் தூசுப்படலம் இந்தப் படியில் உருவாகி நிலைத்திருக்க வாய்ப்பேயில்லை. இந்த வீட்டின் அமானுடக் குறிகளில் ஒன்றா இது?
அருகிலிருக்கும் வீடுகளைப் பார்த்தேன். அவை வழமை போலவே இருந்தன. எவ்வித வித்தியாசமும் இன்றி. எவரும் என்னைக் கண்டுகொள்ள வில்லை. எதிர்வீட்டிலிருந்த ஆள் மட்டும் என்னைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்தான்.
சட்டையற்ற அவனது உடல் முழுக்க ஒருவித செடியைப் பச்சை குத்தியிருந்தான். அந்தச் செடியின் முட்களைப் பார்க்கும்போதே கண்களைக் குத்துவது போலிருந்தது. சிரிப்பும் அல்லாத வெறுப்பும் அல்லாத மையமான முகபாவத்தை வரவழைத்துக் கொண்டிருந்த அவன், சற்று நேரத்தில் கதவை மூடிக்கொண்டான். வாசல்படியின் தூசுப் படலத்தை மீண்டும் பார்த்தேன்.
எனக்கு அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தே ஆகவேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லை. ஆகையால், அந்த தூசுப் படலத்தோடு விளையாடிப் பார்க்கலாமே என்று தோன்றியது. என் கைப்பையைத் தரையில் வைத்துவிட்டு, தூசுப் படலத்தில் விரலால் 'வ' என்ற எழுத்தை எழுதினேன். அடுத்த எழுத்தை எழுதுவதற்குள் சட்டென காற்றில் ஒரு அசைவு தோன்றி 'வே' என்ற எழுத்தை எழுதியது. என் நரம்பு மண்டலத்தில் வெள்ளமெனப் பிரவகித்த அதிர்ச்சியின் அழுத்தத்தால் தரையிலேயே அமர்ந்துவிட்டேன்.
எந்த மாயவிரல் இந்த எழுத்தை எழுதியது? எனில், என்னருகில் இருப்பது யார்? அல்லது இல்லாது இருப்பவர் யார்? அச்சத்தின் ஆக்ரமிப்பில் இருந்து விலகாமலேயே அடுத்த எழுத்தான 'ண'வை எழுதினேன். அதற்காகவே காத்திருந்ததுபோல உடனே 'ண்' என்ற எழுத்து அதற்கருகில் தோன்றியது. என் சந்தேகங்கள் யாவும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டன.
ஆக, இங்கு எவரோ இருக்கிறார்கள். அல்லது, எதுவோ இருக்கிறது. சரிதான். இனி நான் என்ன செய்வது? வந்த வழியி லேயே திரும்பி ஓடிவிடலாமா? வாழ்வின்மீது ஆசையுள்ளவர்கள் அதைத்தான் செய்வார்கள்.
ஆனால், என் கதை வேறு. ஆகையால், கண்ணுக்குத் தெரியாத விரலோடு நான் ஆரம்பித்த விளையாட்டைத் தொடர எண்ணினேன்.
தூசுப் படலத்தில் இப்போது 'க்' என்ற எழுத்தை வரைந்தேன். அதற்காகவே காத்திருந்தது போல 'டா' என்ற எழுத்து அதன் அருகில் முளைத்தது. மீண்டும் 'க' என்ற எழுத்தை நான் எழுத, 'ம்' என்ற எழுத்து அருகில் தோன்றியது. இப்போது அந்தத் தூசுப் படலத்தில் ஒட்டுமொத்தமாக எழுத்துகள் இவ்விதம் காட்சியளித்தன.
வ- வே
ண-ண்
க்- டா
க- ம்
நான் வணக்கம் என்ற சொல்லை எழுதி முடிப்பதற்கு முன்னரே, வேண்டாம் என்ற வார்த்தை எழுதப்பட்டுவிட்டது. நான் இந்த வீட்டிற்குள் நுழைவது ஏற்கப்படவில்லை. மிகத் தெளிவான செய்திதான். உயிராசை உடையவர்களுக்கு. எனக்கல்ல. உயிருள்ளவர்களின் கட்டளைகளையே நான் மதிப்பதில்லை, உயிரற்றவைகளின் கட்டளை என்ன செய்துவிட முடியும்? வீட்டுக்குள் நுழைந்து பார்த்து விடுவது என்று முடிவெடுத்தேன்.
நண்பனிடமிருந்து வாங்கிய சாவியைப் பைக்குள்ளிருந்து எடுத்தேன். அவன் இந்த வீட்டை விற்கும் முடிவுக்கு வந்து விட்டிருந்தான். ஆனால், வீட்டைப் பற்றிக் கேள்விப்பட்டார்களோ என்னவோ எவரும் இதுவரை இந்த வீட்டை வாங்க முன்வரவில்லை.
பணி நிமித்தமாக துபாயில் இருந்த நண்பனும், அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடத் தீர்மானித்திருந்தான். சிங்கப்பூரில் சில நாள்கள் தங்கும் திட்டத்தில் வரும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த வீட்டின் சாவியை அனுப்பிவிடுவான். அப்படி வந்தவர்கள் எல்லாம் முதுகில் மூச்சுக்குத்து வாங்கியவர்கள் போன்று வாயைத் திறந்தும் திறக்காமலும் அலறி ஓடிய பின்னர்தான் அவனுக்கு இந்த வீட்டை விற்று விடத் தோன்றியிருக்கிறது.
அதிர்ஷ்டவசமாக அவன் இந்த வீட்டில் இருந்தபோது அவனுக்கு எவ்விதமான அமானுட சக்திகளின் தொந்தரவுகளோ, உற்பாதங்களோ ஏற்பட்டிருக்கவில்லை. சிலருக்கு இப்படித்தான், கெட்ட சக்திகளின் தரிசனமோ, அவற்றின் தொந்தரவுகளோ வாழ்க்கை முழுவதும் ஏற்படாது.
ஜோசியர்களைக் கேட்டால் ராசிகளையும் நட்சத்திரங்களையும் காரணம் சொல்வார்கள். சிலவகை ராசிக்காரர்களுக்கு அமானுட சக்திகளின் இருப்போ, தொடுகையோ தெரியாது. சுடுகாட்டுக்குச் சென்றாலும் அவர்கள் எவ்விதமான சங்கடமூட்டும் அனுபவங்களும் ஏற்படாமல் தப்பித்துவிடுவார்கள்.
என்னைக் கேட்டால், இது ஒன்றும் நல்லூழ் அல்ல. ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் ஒரு பேயைக் கூடப் பார்க்கவில்லையென்றால் அது என்ன வாழ்க்கை? அப்படிப்பட்ட "பாதுகாக்கப்பட்ட" வாழ்க்கையினால் கிடைக்கும் சௌகரியத்தின் அர்த்தம்தான் என்ன? அதனால்தான் சிங்கப்பூரிலேயே குடியிருந்தாலும் இந்த வீட்டைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் சில நாள்கள் இவ்வீட்டில் தங்கிப் பார்ப்பதென துணிச்சலுடன் வந்துவிட்டேன்.
நான் இந்த வீட்டின் சாவியைக் கேட்டவுடன் நண்பன் ஆச்சரியப்படவில்லை. "வேண்டாம் என்றால் நீ கேட்கமாட்டாய். மற்றபடி, உன்னுடைய தற்போதைய நிலைமையில் இந்த வீடு உனக்கு ஒரு மருந்தாகக்கூட அமையலாம்," என்று சொல்லியிருந்தான்.
சாவித் துவாரத்தில் சாவியை நுழைத்துத் திருகியதும் ஒரு விநோதமான ஒலி செவியைத் துளைத்தது. அது ஒரு மிருகத்தின் உருமல் போலிருந்தது. அல்லது காலத்தின் உருமலா? இறந்த காலத்தில் புதைவு கொண்டிருந்த வீட்டின் கதவு நிகழ்காலத்துக்கு வரமறுக்கின்ற ஓலமா? ஆம். கதவைத் திறந்ததும் மனம் தானறியாத தொல் பழங்காலத்துக்குச் சென்றுவிட்ட உணர்வுதான் இருந்தது.
வீட்டிற்குள் நுழைந்ததும் கண்களைமூடி என்னைச் சுற்றியிருந்த காற்று மண்டலத்திலிருந்து ஆழமாக மூச்சை இழுத்தேன். வீட்டின் ஆன்மாவை சுவாச மண்டலத்துக்குள் இழுப்பதைப்போல. கண்களைத் திறந்து என் முன்னிருக்கும் வீட்டின் அந்தரங்கத்தை ஆழ்ந்து நோக்கினேன். எவ்வித வித்தியாசமும் இன்றி வெகு சாதாரணமாக இருந்தது வீடு.
நான் நினைத்ததற்கு மாறாக வீட்டிற்குள் குப்பையோ, அழுக்கோ, தூசுப்படலமோ இல்லை. பொருள் களின் ஒழுங்கு குலையாமல் புத்தம் புதிதாகப் பேணப்பட்டிருந்தது வீடு. ஆட்கள் புழங்கிய தடமும் தென்பட்டது. வழக்கமான வீடு போன்று காட்சியளித்து இந்த வீடு என்னை ஏமாற்றப்பார்க்கிறது. நான் இதற்கெல்லாம் ஏமாறுபவனல்ல. நானும் இந்த வீட்டை ஏமாற்றப்போகிறேன்.
எந்த விதமான தயக்கமும் இன்றி ஹாலில் இருந்த சோபாவில் தொப்பென விழுந்தேன். கால் மேல் கால் போட்டபடியே வீட்டை ஆராய்ந்தேன்.
அதன்பின் வீட்டின் அறைகளுக்குள் சென்று ஒரு நோட்டம் விட்டேன். ஸ்விட்சைப் போட்டதும் விளக்கு எரிகிறதா என்றுதான் முதலில் பார்த்தேன். அதன்பின் குழாயில் தண்ணீர் வருகிறதா என்று. எல்லாம் சரியாகத்தான் இருந்தது. இந்த வீட்டில் எந்தவொரு துர்நிமித்தத்தையும் சாயலையும் அவலட்சணத்தின் கூறுகளையும் என்னால் கண்டறிய முடியவில்லை. மெல்லியதொரு சலிப்பு எழுந்தது.
நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். சிங்கப்பூரிலேயே இருந்துகொண்டு எதற்காக இந்த வீட்டிற்கு வந்தேன். உண்மையில் நான் சாகச விரும்பியா? அல்லது வாழ்வின் மீதுள்ள வெறுப்பில் வாழ்வைப் பழிதீர்ப்பதற்காக அலைகிறேனா? சிறிது காலத்துக்குத் தனியாக இருக்கவேண்டாம் என்றல்லவா மருத்துவர் சொல்லியிருக்கிறார். அதை ஏன் நண்பனுக்கு நான் தெரிவிக்கவில்லை? எந்தத் தனிமையும் என்னை மீட்காது என்று நான் ஏன் உணர மறுக்கிறேன்?
சட்டென்று உடல் நடுங்கத் தொடங்கியது. வலி மின்னல்கள் மூளைத்திரையில் மின்னி அணைந்தன. பின்கழுத்தில் யாரோ பாறையைத் தூக்கி வைத்தது போன்ற வலி துளைத்தது.
கண்ணுக்கு முன்னிருக்கும் பொருள்கள் யாவும் அனலில் வெந்து உருகுவதுபோல மறைந்து கொண்டே வந்தன. சட்டென்று பிடிமானத்திற்காக அருகிலிருக்கும் மதிலில் கைவைத்து அதனுடன் ஒட்டிக்கொண்டேன். இதுபோன்ற சமயங்களில் நிலையாக எதுவோ கையருகில் இருப்பது எவ்வளவு வசதியாக இருக்கிறது.
மெல்ல என்னை நிலைமீட்டுக் கொண்டேன். மூச்சை ஆழ இழுத்து வெளிவிட்டேன்.
ஒன்றுக்குள் ஒன்றாய் பிணைந்துபோயிருந்த நரம்புகள் மெதுவாகச் சீரடைந்து வருவதை உணர முடிந்தது. உயிரைப் பிடுங்கும் இந்த வாதை சமீபகாலமாக என் உடலுக்குள் தொற்றிக்கொண்டு விட்டது. கால சர்ப்பம் தன் விஷமூச்சை என் மேல் வீசத் துவங்கிவிட்டது. எமனின் பாசக்கயிறு போன்ற அதன் தேகம் என்னைச் சுற்றிக்கொண்டு விட்டது. சமயம் பார்த்து உடம்பை இறுக்கத் துவங்கி விடுகிறது.
எந்த மருந்தும் என்னை இதிலிருந்து மீட்கும் வல்லமையுடையதல்ல. என் கலையைத் தவிர.
பென்சிலையும் தூரிகையையும் கையில் எடுத்து வரையத் துவங்கினால் விடுதலை அடைந்துவிடுவேன். காட்டாற்று வெள்ளத்தில் இலையைப் பிடித்து தப்பித்துக் கரையேறும் எறும்பைப் போல ஒரு சிறிய ஓவியத்தை வரைவதன் மூலமாக நான் என்னைக் கொல்லும் வலியின் சைன்யத்தினின்றும் தப்பிவிடுவேன். சந்தேகமில்லை.
பயணப்பையில் இருந்த ஓவியத் தாளையும் பென்சிலையும் எடுத்தேன். வண்ணங்களையோ தூரிகைகளோ மற்ற உபகரணங்களையோ எடுத்து வரவில்லை. ஓவியத்தாளை எதிரில் இருந்த சுவரில் ஒட்டினேன். பென்சிலைக் கூர்தீட்டிக்கொண்டு வரையத் துவங்கினேன். வண்ணங்களை அளவாகவே பயன்படுத்தும் ஓவியன் நான். அதிலும் பென்சில் ஓவியங்கள் வரைவதில் நிபுணன் எனப் பெயர் பெற்றிருந்தேன்.
வரையப்படாத வெள்ளைத் தாள் வழிபாட்டுக்குரியது. அடுத்த கணம் அதில் என்னவிதமான ஓவியம் தோன்றப்போகிறது என்று ஓவியனான எனக்கே தெரியாது. கலையின் மாபெரும் கருப்பை அல்லவா அது. அதில் தோன்றக்கூடிய ஓவியம் குப்பைக்கும் போகும், கலைக்கூடத்துக்கும் போகும். இன்றே அழிந்தாலும் அழியலாம் அல்லது தலைமுறைகள் கடந்து நினைவுகூரவும் படலாம். எண்ணிக்கையற்ற சாத்தியக்கூறுகளை உள்ளடக்கிய வெள்ளைத்தாளைத் தொட்டு முத்தமிட்டேன். சட்டென அகத்தின் தோன்றிய உருவத்தை தாளில் கீறினேன்.
வண்டிச்சக்கரத்தில் ஒட்டிய பல்லியைப்போல அகச்சக்கரத்தில் ஒட்டிக்கொண்டு அது பயணமாகும் திசைக்குள் செல்லத் துவங்கினேன். அகத்தின் வீச்சுக்குள் சிக்கிய உருவத்தை மெல்ல மெல்ல ஓவியத்துக்குள் பெயர்த்துக்கொண்டு வந்தேன்.
முழுமையாக ஓவியத்தை வரைந்து முடித்தபோது இரவு முதிர்ந்திருந்தது. எனில் எவ்வளவு நேரமாக நான் வரைந்துகொண்டிருந்திருக்கிறேன்? என் கலை யில் நான் கவனம் குவிக்கத் துவங்கினால் மணித்துளிகள் வினாடிகளெனக் கரைந்தோடி விடும். அதுதான் எனக்கு நல்லது என்றும் மருத்துவர் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும், எனக்குள் இருக்கும் துர்தேவதைகள் என்னை ஓவியத்தின் பக்கம் வரவொட்டாமல் துரத்திவிடுகின்றன. இவற்றை நான் எந்த அளவுக்கு வெல்கிறேனோ அந்த அளவுக்கு மீண்டுவிடுவேன்.
முழுமையாக வரைந்து முடித்த ஓவியத்தைப் பார்த்தேன். பத்மாவின் முகம் துல்லியமாக வந்திருந்தது. நிறைவேறாத அவளது கனவுகளின் எடை மிகுந்த கண்கள். காதோரமாக மிதக்கும் அந்த ஒற்றை முடியில் அல்லவா என் இதயம் ஊஞ்சலாடியது. குழந்தை நிலவு போன்ற நெற்றி. குடை போன்று வளைந்த புருவங்கள். இளமையின் கொழுந்தைச் சுமந்த கன்னக் கதுப்பு. தோண்டத்தோண்ட நீர் சுரக்கும் மணற்கேணியைப்போல தொடும்போதெல்லாம் தட்டாமல் முத்தங்கள் சுரக்கும் இதழ்கள்.
நோக்க நோக்க எல்லாமே அழகாகவும் இனிதாகவும் இருக்கும் இந்த முகம் ஏன் இப்போது என்னுடன் இல்லை? எப்போதைக்குமாக என் வாழ்வில் இருந்து எவர் பெயர்த்துப் போனார்கள் இம்முகத்தை? இந்த வடிவான முகம் வாழ்வில் எனக்களித்த அர்த்தங்களையெல்லாம் எப்படி இந்த ஒற்றைத் தாளில் கீறுவது?
மீண்டும் சோபாவில் படுத்துக் கொண்டேன். களைப்பின் சுமை உடலை அழுத்தவே, புதைமணலில் ஆழ்வதுபோல மெல்ல மெல்ல உறக்கத்தினுள் மூழ்கினேன்.
அமைதி... ஆழ்ந்த அமைதி. இதைத் தேடித்தானே இத்தனை காலம் அலைந்தேன். கைக்கு எட்டுவதுபோல வந்து வாய்க்குச் சிக்காமல் என்னிடம் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடும் வஸ்து இதுதானே.
இப்படிப்பட்ட அமைதிகிட்டு மானால் இதுபோல் ஆயிரமாயிரம் பேய் வீடுகளுக்குச் செல்வேனே. ஏன், ஆயிரமாயிரம் வீடுகளுக்குப் போகவேண்டும்? இந்த வீட்டி லேயே நிரந்தரமாக தகைவு கொண்டுவிட்டால் என்ன? நீரில் மேற்பரப்பில் தோன்றும் மெல்லிய அலைகளென சிந்தனை வட்டங் களின் சலசலப்புகளைத் தாண்டி, அமைதியின் ஊற்றுமுகத்தை நோக்கி அகம் சென்றுவிட்டிருந்தது.
ஆனாலும், வலையில் சிக்கிய மீனைப்போல ஒரு பெருங்கனவுக்குள் மனம் சிக்கிக்கொண்டதை உணரமுடிந்தது. இப்போது என்முன்னிருக்கும் வெளிமுழுக்கத் ததும்பிக்கிடப்பது தூய பொன்னிற மணல். பாலைவனத்தில் தீயாய்ப் பொழியும் வெயில்.
ஆனால், அதிசயம்போல அந்த வெயிலோ வெயிலில் சுடும் மணல்வெளியோ எனக்கு எந்தவிதமான சிரமத்தையும் அளிக்கவில்லை. பூக்கள் கொட்டப்பட்ட பாதையில் நடப்பதைப்போல சௌகரியமாக நடந்துகொண்டிருந்தேன்.
தூரத்தில் கருநிற சேலை யணிந்த ஒரு தேவதையின் பின்புறத் தோற்றம். கானல் அலையடிக்கும் அந்த மங்கலான நிலவெளியிலும் அந்த தேவதையின் உருவம் மனதிற்கு மிகவும் பழக்கப்பட்ட உருவம் போலிருந்தது. இத்தனை தூரத்தைக் கடந்து அவளிடம் எவ்வாறு செல்வது என்று மனம் தவித்தது. என் தவிப்பின் ஓலம் அவளுக்கு எட்டிவிட்டதுபோல, சட்டென என் அருகில் வந்துவிட்டாள்.
இந்த நெடுந்தூரத்தை மனிதக் கால்களால் இத்தனை விரைவில் தாண்டிவிட முடியாதே, இவள் யார்? காற்றின் சுழலில் அந்தரத்தில் ஒரு சவுக்கென எழுந்த மணல் துகள்களுக்கு நடுவே என் தேவதையின் சௌந்தர்ய முகத்தை இப்போது தீர்க்கமாகக் காணமுடிந்தது.
இந்த முகத்தை மறக்கமுடியுமா? இந்த முகத்தின் சுடர்வெளிச்சத்தில்தானே என் இதுவரையிலான ஆயுள் கழிந்திருந்தது. என் சுகங்களையும் துக்கங்களையும் மனச்சலனங்களையும் அறிந்த முகமல்லவா இது.
இதைத்தானே நான் விழித்திருக்கும் போதெல்லாம் வரைந்து கொண்டிருக்கிறேன். என் சிந்தனையை இடைவெட்டிப் பேசினாள் பத்மா.
"இங்கு என்ன செய்கிறாய்?"
"சற்று முன்னர்வரை இங்கு ஏன் வந்தேன் என்று எனக்கே தெரியாதுதான். ஆனால், உன்னைப் பார்த்ததும் அறிந்தேன். நான் வரவேண்டிய இடத்துக்குத்தான் வந்திருக்கிறேன்".
"இங்கு நீ வரக்கூடாது?"
"ஏன்?"
"இது அமரர்கள் உலவும் பிராந்தியம்."
"எனில் என்னையும் அமரனாக்கிவிடு".
"கடைசிவரை உன்னை இங்கு வரவொட்டாமல் தடுக்கமுயன்றேன்."
"வேண்டாம் என்று படியில் எழுதியது நீதானா?"
"என்னுடைய பேச்சை நான் உயிரோடிருந்தபோது நீ கேட்டதில்லை. இப்போதுதாவது கேள்."
"நம் குழந்தை இப்போதும் உன் வயிற்றில் இருப்பானா?"
........
"ஏன் பதில் பேசாதிருக்கிறாய்"?
.......
"உன்னைக் கொண்டுபோன கொரோனா என்னைக் கொண்டு போயிருக்கலாமே?"
"எதுதான் நம் கைகளில் இருக்கிறது?"
"இரண்டே வாரங்கள்தான் வெளியூர் சென்றேன். அதற்குள் என்னைத் தவிக்கவிட்டுப் போய்விட்டாயே?"
........
"உயிரோடு எரிந்துகொண்டிருக்கிறேன். பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய்?"
"ஆம். உன் மூச்சு வெளிக்குள் தான் இன்னமும் இருக்கிறேன். உயிரோடு நீ எரிவதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்."
"என்னை மீட்கமாட்டாயா? மருத்துவன் எனக்கு மனப்பிறழ்வு என்கிறான். நான் தெளிவானவன் என்று அறிந்தவள் நீ மட்டும்தான். தயவுசெய்து என்னை மீட்டுவிடு"
"என் உயிரே. யோசித்துத்தான் பேசுகிறாயா? அந்த உலகில் இன்னும் நீ அனுபவிக்க வேண்டிய எதுவும் இல்லையா?"
"அனுபவித்ததெல்லாம் உன்னோடு அனுபவித்தாயிற்று. என்னை உன்னுடைய உலகிற்கு அழைத்துச் செல். இந்த வீட்டிற்கு நான் வந்ததே இதற்காகத்தான். இந்த வீட்டில் நிச்சயம் உன்னை என்னால் பார்க்க முடியும் என்று என் மனம் உணர்ந்ததால்தான் இங்கு வந்தேன்."
"ஆம். சில வீடுகள்தான் அமரர்களுக்கு இடமளிக்கின்றன. இது அப்படிப்பட்டதொரு வீடு"
"என்னை அழைத்துச் செல்!"
"ஆம். நேரம் வந்துவிட்டது. கண்ணைத் திற. இனி உன் கனவில் இருந்து விரைவாக வெளியேறு."
சட்டென விழித்துப் பார்த்தேன். வியர்வையில் நனைந்திருந்தது உடல். இதயம் அதன் அதிகபட்ச துடிப்பில் தள்ளாடிக்கொண்டிருந்தது. அலைகடலில் தவிக்கும் படகில் நின்றிருப்பது போல என் பாதத்திற்கு கீழிருந்த தரை தள்ளாடியது. எதிரில் இருந்த பத்மாவின் ஓவியத்தைப் பார்த்தேன். இப்போது அது ஓவியமாக இல்லை. முழுக்க மலர்ந்த மனித முகமாக, என் பத்மாவின் முகமாக உருப்பெற்றிருந்தது. உருவெளி மயக்கமல்ல. உயிர் ததும்பும் ஒண்முகம்.
"வா. எனக்குள்ளாக வா. எப்படி வருவது என்று உனக்குத் தெரியுமல்லவா..." என்ற குரல் ஒலித்தது.
எப்படி அவளுக்குள் செல்வது என்று சில வினாடிகள் குழம்பினேன். அவள் முகத்தில் இருக்கும் சாவியை சட்டெனக் கண்டு பிடித்தேன். இந்தச் சாவியை எப்படி மறந்தேன்? உயிரூறும் அந்த முகத்தின் ஈர இதழ்களில் மெல்ல என் இதழை ஒற்றினேன்.
அதன்பின் நடந்ததெல்லாம் என்னால் ஊகிக்கவே முடியாத ஆச்சர்யங்கள் அல்லது அமரர் உலகின் யதார்த்தங்கள். மெல்ல அந்தச் சிறிய இதழ்கள் ராட்சத வடிவில் பெரிதாகி என் மொத்த உடலையும் உறிஞ்சின.
காந்தத்தைச் சென்றடையும் இரும்புத் துகளென என் உடல் அதற்குள் நொடியில் சென்று மறைந்தது. போதக் கரையில் இருந்த என்னை அபோதக் கடல் உள்ளிழுத்துக்கொண்டது. இனி எனக்குத் துக்கம் இல்லை. நினைவுகளின் சுமை இல்லை. காலத்தின் அழுத்தம் இல்லை. கனவுகளின் பிரமைகள் இல்லை. இப்போது நான் துளி மிச்சமு மின்றி அவளில் நிரந்தரமாகவும் முழுமையாகவும் கலந்தேன்.
பின்குறிப்பு: இன்னும் சிறிது நாள்களுக்குப் பின் நாற்றம் தாளாமல் இந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு என் உடலை அப்புறப்படுத்துவார்கள். அதன்பின் என்ன ஆகும்? நான் பெற்ற இந்த மீட்சியை மற்றவர்களுக்கும் அளிக்க விரும்புகிறேன். என்னைப் போன்ற துயரம் பீடித்த இன்னொரு மனிதர் இந்த வீட்டுக்கு வரும்வரை அவருக்காக நானும் என் பத்மாவும் காத்திருப்போம்.
சிறுகதை
கணேஷ் பாபு

