தலைப்பு: பராரி : ஏழு கடல் ஏழு மலை
நூலாசிரியர்: நரன்
பதிப்பாளர்: சென்னை : சால்ட் , 2021.
குறியீட்டு எண்: Tamil NAR
அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
இந்தியாவின் கடைசி வீட்டில் கடைசியாகப் பிறந்தவன் சூரவேல் இந்தியாவின் முதல் வீட்டில் பிறந்த லேயாவைச் சந்திக்கும் ஒரு பயணத்தின் கதை இது.
"மனிதனுக்கான ஆதிசாலைகளை முதலில் உருவாக்கித் தந்தவை விலங்குகளின் குளம்படிகள்தான்" என்று தொடங்கும் இந்தப் பயணத்தில் சூரவேல் எப்படி கடைசி வீட்டுப் பையன் ஆகிறான் என்பது அவனின் அப்பா கரியனின் பயணத்திலிருந்து தொடங்குகிறது.
தன் கையில் பருத்த திமிலுடன் செவலை நிறத்தில் முந்தைய நாள் களவாண்ட மாட்டுடன் சந்தைக்குள் நுழைகிறான். அங்கு அவன் மாட்டிக்கொள்ள, கொம்பையா என்பவர் கரியனைக் காப்பாற்றுகிறார்.
கரியனின் கதையைக் கேட்ட கொம்பையாவிற்கு ஒரு தந்தையின் உணர்வு ஏற்படுகிறது. கரியனின் பயணம் கொம்பையாவுடன் தொடங்குகிறது.
ஒரு நெடுஞ்சாலையில் கிளை பாதையாக இதில் கொம்பையாவின் கதையையும் சுவாரசியம் குறையாமல் கொண்டு செல்கிறார் எழுத்தாளர் நரன். ஒரு சொல் பிழையால் கொம்பையா தன் நண்பனை இழந்த பின்பு, தன் பாதையும் ஒரு பள்ளத்தில் முடியும் என்று தெரிந்தும் அதில் வீரநடை போடுகிறார்.
பின் கரியன் நாட்டின் வடக்கே ராஜா என்கிற வெறும் பட்டத்தை மட்டும் சுமந்து கொண்டிருக்கும் ஒருவரின் மகளைத் தனது கடைசி வீட்டிற்கு அழைத்து வருகிறான். கடைக்குட்டி சூரவேல் தன் பயணத்தைத் தொடர்ந்து லேயாவைச் சந்திப்பது நம்மை ஒரு பயணத்திற்கு ஆயத்தப்படுத்துவதுபோல் இருக்கிறது. ஏழு கடல் ஏழு மலை தாண்டிச் செல்வோம் வாருங்கள். -தேசிய நூலக வாரிய நூல் அறிமுகக் குழு
இந்த நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

