- மலையரசி சீனிவாசன்
வழக்கமாகக் குளிர்சாதனப்பெட்டியைச் சுத்தம் செய்வதற்கு நான் போகும் அந்த வீட்டின் பெண்மணி கூறியதைக் கடந்து போகமுடியவில்லை.
’மாஸ்டர் பெட்ரூம்’ குளிர்சாதனப்பெட்டியில் கழுவிய வடிகட்டிகளைச் சரியாகப் பொருத்திவிட்டு அது சிறிதுநேரம் இயங்க வேண்டுமென்பதால் அதன் ’ரிமோட் கண்ட்ரோலில்’ எண் 23-ஐ அழுத்தி மெத்தையின் மீது வைத்துவிட்டுக் கதவைச் சாத்தினேன்.
நேர் எதிரே இருக்கும் அறையின் கதவு பாதியாகத் திறந்திருந்தது. அதை வந்ததும் கவனித்தேன். உடனே “உங்கள் மகன் எங்கே?” என்று எப்படிக் கேட்க முடியும்.
பெரும்பாலும் நான் போகும்போது அவன் தூங்கிக்கொண்டிருப்பான்.
“ஆர்மியிலிருந்து ரொம்ப நேரங்கழிச்சுத்தான் வந்தான். தொந்தரவு செய்யவேண்டாம்” என்றதும் சாமான்களோடு கிளம்பிவிடுவேன்.
பல நேரங்களில் அவன் இல்லாதபோதுதான் குளிர்சாதனப்பெட்டியைச் சுத்தம் செய்திருக்கிறேன்.
அன்று அவர்கள் வீட்டில் நுழையும்போதே கோழிக் குழம்பின் மணம் வரவேற்றது. “ரொம்ப நாளா உங்க ரெண்டு பேரையும் பார்க்க முடியல?”
தொடர்புடைய செய்திகள்
ஜூரோங் வட்டாரத்திற்குச் செல்லும் வெளிநாட்டுப் பணியாளர் ஓராண்டுக்கு மேலாக மருத்துவ விடுப்பில் இருந்தான்.
‘சீனியரான’ என்னை அந்த வட்டாரத்தின் வேலைகளைப் பார்க்கும்படி முதலாளி கூறிவிட்டார்.
ஏழாண்டுகளுக்கு மேல் அவரிடம் வேலை பார்ப்பதால் என்னை ’சீனியர்’ என்றே அழைப்பார்.
“மகன் அறையில் இருக்கும் ஏசியையும் சுத்தம் செய்துவிடுங்கள்!” என்றதும் அதிசயத்து நின்றேன்.
“சீக்கிரம்! இன்னும் மூணு இடம் போகணும்!”
இதற்குத்தான் ஒரு சக பணியாளர் வேண்டும்.
சுறுசுறுப்புடன் இரு அறைகளிலும் அடுத்து வரவேற்பறையிலும் வேலைகளை முடித்தோம்.
முன்பு ஒருமுறை அவன் அறையில் இருக்கும் ஏசியைச் சுத்தம் செய்வதற்குத் தவறுதலாக நுழைந்துவிட்டேன்.
மேசை மீதும் தரையிலும் புத்தகங்கள் வாய் பிளந்துகிடந்தன.
குப்பைத்தொட்டியில் தாள்கள் குவிந்திருந்தன.
படுக்கை விரிப்பும் கலைந்து கிடந்தது.
இதென்ன பணிப்பெண் இருக்கும்போது இப்படியொரு அலங்கோலமா?
சுவரில் மாட்டியிருக்கும் வெள்ளைப்பலகையில் வியப்புடன் என் பார்வை ஒன்றியது.
“குட் மானிங் அம்மா! அறையைச் சுத்தம் செய்யவேண்டாம் பிளீஸ்!! நாளை கணக்குத்தேர்வு. கடைசி நாள். அதன் பிறகு சுத்தம் செய்யலாம். லவ் யூ அம்மா!!” பக்கத்தில் வரைந்த இதயமிருந்தது.
“உங்களுடன் பையன் பேசுவதில்லையா?”
“அப்படியில்லை... ஒரு ஃபிரண்டைப்போல லூட்டியடிப்பான். அந்த வெள்ளைப்பலகையில் எதையாவது எழுதுவதும், வரைவதும் அவனுக்குப் பிடிக்கும்,” என்று நெகிழ்வுடன் கூறினார்.
அதே நினைவுகளோடு விளக்கைப்போட்டதும் அறை சுத்தமாக வெறிச்சோடி இருந்தது.
மெத்தை விரிப்பு கலையாமல், படிக்கும் மேசையில் எல்லாம் ஒழுங்காக அடுக்கியிருந்தது.
அங்கிருந்த குப்பைத்தொட்டியில் ஒரு குப்பைகூட இல்லை.
“ம்… என்ன ஆச்சு?” என்ற என் பார்வை சுவரில் மாட்டியிருந்த வெள்ளைப்பலகையில் நிலைகுத்தி நின்றது.
’டார்லிங்’ அம்மாவுக்கு,
1) என்னைப்பத்தியே நினைச்சுக்கிட்டு இருக்காமல், சாப்பிடுங்க, நல்லா தூங்குங்க, இல்லன்னா பல்லி வந்துடும்!” சிரிக்கும் முகம்.
அன்பான அப்பாவுக்கு,
2) பிளட் பிரஷர் மாத்திரைகளை மறக்காமல் போட்டுக்கொள்ளுங்கள்.
அம்மா சீரியல் பார்த்தால் ஒன்றும் சொல்லாதீர்கள் பிளீஸ்!! ஒரு கண்ணை மூடிய முகம்.”
அடடா!! ரசிக்கும்படி இருந்ததை மீண்டும் படித்தேன். ஏதோ நெருடியது.
“சீக்கிரம்….சீக்கிரம்!!” சக பணியாளரின் குரல் எச்சரித்தது.
“இன்னைக்கு வீட்டுல என்ன விசேசம்?” வேலைக்கான ’பில்லை’ நீட்டினேன்.
“அவன் பல்கலைக்கழகத்திலிருந்து இன்னைக்கு வந்துட்டு திங்கட்கிழமை காலையில் போயிடுவான்.”
“அப்படின்னா? ஆர்மி முடிஞ்சுட்டா!”
ஆச்சரியத்துடன் உதட்டைப் பிதுக்கினேன்.
“அதுதான் அவனுக்குப்பிடித்த கோழிக் கறியோடு, பிரியாணியும் தயாராகிறது. நீங்களும் சாப்பிட வாங்க!” என்று பாசத்துடன் கூறியவருக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டுக் கிளம்பினேன்.
வாரயிறுதியில் வரும் மகனுக்காக இவ்வளவு தடபுடலான ஏற்பாடுகளா?
அடுத்தடுத்த வீடுகளில் ’ஏசி’யைச் சுத்தம் செய்து முடித்ததும், சிறிது நேரம் அது இயங்க வேண்டுமென்பதற்காக ரிமோட்டில் 23ஆம் எண்ணை அழுத்தியதும், நெஞ்சமும் அழுத்தியது.
“நம்ம கையைப்பிடிச்சு நடக்கும்போது குழந்தைகளுக்கு உலகமே நாமதான்.
வளர்ந்ததும் அவர்கள் உலகமே வேறு. அதில் அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பதற்குக் கிடைக்கும், மற்றொரு அற்புதமான சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியோடு நடக்கணும்.
இப்பவும் அவன் கைகளை நீட்டுகிறான். கைகோர்த்து நடக்கிறோம். அதற்கு அப்புறம்?”
அந்தப் பெண்மணியின் பெருமூச்சும் கேள்விக்குறியும் என்னைத் துளைத்தது.
கார்பேட்டையில் நிறுத்திய வண்டியிலிருந்து வெளியில் வராமல் அப்படியே அமர்ந்திருந்தேன். கபிலன் எத்தனையோ முறை ஒரு கையில் பூப்பந்து ராக்கெட்டையும், மறு கையால் என் தோளையும் தொட்டு “விளையாட வாங்கப்பா” என்று கெஞ்சுவான்.
“நிறைய வேலை. ரொம்ப அசதியாக இருக்கு, நீ போய் விளையாடு” என ஏதோவொரு சாக்கை கூறிவிட்டுத் தொலைக்காட்சி முன் குறட்டை விட்டுத் தூங்கியது நினைவுக்கு வந்தது.
தூசு அடைந்திருக்கும் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து அடிக்கும் அனல் காற்றைப்போல மனம் புழுங்கியது. கார்ப்பேட்டையின் நான்காவது மாடியிலிருந்து எட்டிப் பார்த்தேன்.
கபிலன் நண்பர்களுடன் பூப்பந்து விளையாடுவது தெரிந்தது.
“கபிலா... இதோ நானும்” என்று அங்கிருந்தபடியே வேகமாகக் கையசைத்துச் சத்தமாக கத்தினேன்.
அந்நேரம் திடலில் விளையாடும் பிள்ளைகள் போடும் கூச்சலிலும், வானைக்கிழிக்கும் விமானத்தின் இரைச்சல் சத்தத்திலும் என் குரல் கலந்தது.
“ச்சே... பரவாயில்லை உடனே போய் அவன் முன் நிற்க வேண்டும், விளையாட வேண்டும்!” என்று புதிய துள்ளலோடு கார்ப்பேட்டையின் மின்தூக்கியை நோக்கி விரைந்தேன்.
கைப்பேசியின் அதிர்வு தடுத்தது.
கம்பெனி விசயமாக கோலாலம்பூர் சென்றிருக்கும் முதலாளியின் குரல் பதிவைக் கேட்டதும் உறைந்துவிட்டேன்.
“சீனியர்! வீட்டுல ’ஏசி’ [Ϟ]வேலை செய்யலையாம். பிள்ளைங்களுக்குச் சிரமமாயிருக்கும். சீக்கிரமா போய் பாரு!!”


