விம்மல்

விம்மல்

fallback-0

22 Oct 2023 - 3:58 pm

1 mins read

வெய்யோனின் வெண்கதிர்கள் பட்டதில்லை!

அதிகாலைப் பனிக்காற்றில் முகம் மோதியதில்லை!

சில்லென்ற மழைத்தூரலில் நனைந்ததுமில்லை!

ஆனாலும் ஆனந்தத்திற்கு அளவில்லை!

மாட மாளிகைகளைக் கண்டதில்லை!

பஞ்சு மெத்தைகளில் புரண்டதில்லை!

மின்விசிறியைக் கண்டதேயில்லை!

தென்றலின் அவசியமே ஏற்படவில்லை!

வேளாவேளை உணவிற்கு குறைவில்லை!

உறக்கத்திற்குப் பஞ்சமேயில்லை!

உடலுழைப்பிற்குத் தேவையில்லை!

மனதில் எந்த வஞ்சகமுமில்லை!

என் துயரெல்லாம் இது நெடுநேரம்

நீடிக்கப் போவதில்லை!

இனி இந்த இடத்தை வாழ்வில் மறுமுறை

நான் காணப் போவதுமில்லை!

என் தாயின் கருவறைக் கதகதப்பை

விட்டு வெளி வரப்போகிறேன்!

தாயன்பைத் தவிரக் கலப்படமில்லா

இப்பனிக்குடத்தின் தூய மீச்சிறுவெளியில் . . .

கடைசியாக ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறேன்

காலப்பெருவெளியில் அடைக்கலம் ஆகும் முன்!!!

சரஸ் வேல்

குறிப்புச் சொற்கள்