நகரச் சித்திரம்

நகரச் சித்திரம்

1 mins read
61fa821e-8865-4a23-ad61-84b805bdd7b6
-

ஈரச்சந்தையிலிருந்து தட்டுத் தடுமாறி வரும்

தள்ளுவண்டிகளின் தடங்கள்.

உடற்பயிற்சியகங்களில்

ஒய்யாரமாய் இசையோடு ஒன்றியசைபவர்கள்.

அடுக்குமாடித் தளங்களில்

‘பீப் பீப்’பெனும் காராங்கோணிகளின்

சுருதி பிசகிய சங்கீதம்.

குடியிருப்புத் தோட்டங்களில்

அயராது உழைக்கும் கூன் முதுகுகள்.

உணவங்காடிகளில் சிவப்பு மிளகாயைக்

குட்டிக்குட்டி வட்டங்களாக்கும்

கண்ணாடியணிந்த காரிகைகளென

ஊரெங்கும் எறும்புகளாய்த் திரிவதால்

முதியோர் வளாகங்களில் ஈயாடுகின்றது.

முதுமையின் சுருக்கங்களிலிருந்து

நீளும் விரல்களாய்ப் பேரப் பிள்ளைகளும் சூழ

சில முறை இளமையிடமிருந்தும்

சில முறை முதுமையிடமிருந்தும்

நகரம் சிறு பந்தாகி கூடைக்குள் வீழ்வது

நீர்வீழ்ச்சியாய் ஓடுகின்றது!

தேன்மொழி அசோக்