இது பொம்மை அல்ல உண்மை

இது பொம்மை அல்ல உண்மை

7 mins read
6f3131dc-70a3-48fc-ab19-ef8493f2c47a
மகாத்மா காந்தியின் பாத்திரத்தை ஏற்ற ரூபி, அவர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தனது பொறுப்பற்ற குணத்தை மாற்றிக்கொண்டு, தாயின் கஷ்டங்களைப் புரிந்துகொள்கிறாள். - படம்: செயற்கை நுண்ணறிவு

சுருக்கம்: ஓய்வில்லாமல் உழைத்து, தன் மகளுக்காகப் பாடுபடும் சுமதியின் வேதனையை ரூபி புரிந்துகொள்வதில்லை. பள்ளி நாடகத்தில் மகாத்மா காந்தியாக நடித்த பிறகு, அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, ரூபி பொறுப்புள்ள மகளாக மாறி தாய்க்கு ஆறுதல் அளிக்கிறாள்.

- சொர்ணலட்சுமி

அதிகாலை 5 மணிக்கு நடைப்பயிற்சிக்குச் செல்லலாம் என்று கதவைத் திறந்த சுமதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரவு பெய்த கனத்த மழையில் வெளியில் காய போட்டு இருந்த துணிகள் நனைந்து போய் அதிலிருந்து நீர் சொட்டு சொட்டாய் வடிந்து கொண்டிருந்தது.

இரண்டு வார துணிகளைச் சேர்த்து வைத்து அரைநாள் முழுவதும் துவைத்து காய வைத்த துணிகள். எடுக்க நேரம் இல்லாமல் இப்படி நனைந்து போனதை எண்ணி வருந்தினாள் சுமதி. அலுவலக வேலைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்யும் சுமதிக்கு தன் வீட்டு வேலைகளைக் கவனித்து செய்வதற்கு மட்டும் நேரம் இல்லாமல் போய்விடுகிறது. என்ன செய்வது?

வீட்டில் ஒத்தாசைக்கு என்று யாரும் இல்லை. இரண்டு வருடமாகவே வீடு ,அலுவலகம் என ஓட்டமும் நடையுமாகத் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது சுமதிக்கு.

சுமதி தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்தாக வேண்டும். 40 வயதை தாண்டியதிலிருந்து நடைபயிற்சி கட்டாயமாகிவிட்டது. உடல் நலத்தையும் கவனித்தாக வேண்டுமே, மாலையில் உடற்பயிற்சி செய்யலாம் என்றால் வேலை முடித்து வந்ததும் சற்று ஓய்வு எடுத்தால் தான் இரவு நேர சமையலை கவனிக்க முடிகிறது.

தினமும் காலையில் 6 மணிக்குச் சமையல் வேலையைத் தொடங்கி, பரபரவென்று ஓடினால்தான் 8:00 மணிக்கு வெளியில் கிளம்ப முடியும். இடையில் அவளின் செல்ல மகள் ரூபிக்கு 7:00 மணிக்குப் பள்ளி பேருந்து வந்துவிடும். அதற்குள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும். ஒன்பது வயதான தன் மகளிடம் இருந்து எந்த ஒரு சிறு உதவியையும் எதிர்பார்க்க முடியாது.

மகளைப் பள்ளிக்கு அனுப்பிய பிறகு, அடித்துப் பிடித்து மிச்சம் மீதியை காலை உணவாக அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடினால் தான் சரியாக எட்டரை மணிக்கு அலுவலகத்தில் இருக்க முடியும்.

மலைபோல் குவிந்து கிடக்கும் கோப்புகளைக் கணினியில் சரி பார்த்துப் பதிவேற்றம் செய்தால் நேரம் போவதே தெரியாது. அலுவலக வேலைகளைச் சிரித்த முகத்துடன் கடகடவெனச் செய்து பழகி விட்டாள் சுமதி.

நிமிர்ந்து பார்க்கும் பொழுது கடிகாரம் 12:30 என காட்டும். மதிய உணவு இடைவேளையில் அலுவலக நண்பர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு அப்படியே மதிய உணவை சாப்பிட்டு விடுவாள் சுமதி. மீண்டும் பம்பரம் போல் சுழலத் தொடங்கி விடுவாள்.

மாலை 5 மணிக்கு வீடு திரும்பும் போதெல்லாம் மகளின் நினைவுதான். தன் மகளின் எதிர்காலம் குறித்து பெரிதும் கவலைப்படுவாள் சுமதி.

முன்பெல்லாம் தன் பொறுப்பில்லாத கணவனை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட வாகன விபத்தில் தன் குடிகார கணவன் இறந்த பிறகு இப்பொழுதெல்லாம் பொறுப்பில்லாத தன் மகளை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாள் சுமதி.

கணவன் இருந்தபோதும் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்ததில்லை. சம்பாதித்த பணத்தை வீட்டுச் செலவிற்கோ, மகளின் படிப்புச் செலவிற்கோ கொடுத்ததில்லை. எதிர்காலத்திற்கு என்று எதுவும் சேமித்ததும் இல்லை. நண்பர்களும் மதுவுமாகவே இருந்துவிட்டு போய்விட்டான். மகளுக்கு அப்பா என்று ஒரு உறவு இருந்தது அவ்வளவுதான் இப்பொழுது அதுவும் இல்லை என்றாகி விட்டது.

தொடக்கநிலை நான்கில் பயின்று வரும் மகள் ரூபிக்கு படிப்பிலும் கவனம் இல்லை. வீட்டிலும் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை. எதை வாங்கிக் கொடுத்தாலும் ரூபிக்கு அதில் கொஞ்சம் கூடத் திருப்தி இருக்காது. தன் தகுதிக்கு மீறித்தான் சுமதி பார்த்துப் பார்த்துச் செய்கிறாள். இருந்தாலும் எதற்கெடுத்தாலும் மூக்கு நுனியில் கோபத்தை காட்டும் ரூபியின் எதிர்பார்ப்புகளைச் சுமதியால் பூர்த்தி செய்யவே முடிவதில்லை.

நல்ல துணிமணிகள் வேண்டும், நல்ல காலணிகள் வேண்டும், நல்ல உணவகத்திற்கு சென்று வாரம் ஒரு முறையாவது சாப்பிட வேண்டும் இப்படி தன் எதிர்பார்ப்புகளை அடுக்கிக் கொண்டே போவாள் ரூபி. ஆனால் அம்மா படும் கஷ்டத்தைச் சிறிதும் நினைத்துப் பார்த்ததில்லை.

ரூபியின் வகுப்பு ஆசிரியர் இந்த மாதத்தில் இரண்டு முறை போன் அடித்துவிட்டார். வீட்டுப் பாடங்களை எல்லாம் ஒழுங்காகச் செய்து வருவதில்லையாம். படிப்பிலும் கவனம் என்பதே கிடையாதாம். எதிலும் ஒரு அலட்சியப் போக்கு என்கிறார். இப்படியே விட்டுவிட்டால் நிலைமை என்னவாகும் என்று யோசிக்கவே பயமாக இருந்தது சுமதிக்கு. முதலில் இதைப் பற்றி மகளிடம் தெளிவாகப் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை தான். ரூபி நினைத்தால் அதிகாலையில் எழுந்து அம்மாவுக்கு சிறிது உதவிகள் செய்யலாம். ஆனால் அதெல்லாம் கனவில் கூட நடக்காது என்று சுமதிக்கு தெரியும்.

காலை மணி 9 அடித்தது. ”கொஞ்சம் எழுந்து வா ரூபி! இருவரும் காலை உணவை ஒன்றாக சாப்பிடலாம்” என்று செல்லமாக அவள் தலையை வருடி எழுப்பினாள் சுமதி.

”சரி! சரி! நான் எழுந்து வருகிறேன்! முதலில் காலை உணவு என்ன செய்திருக்கிறாய் என்று சொல்” என்று கேட்டாள் ரூபி. ”நேற்று செய்த மீன் குழம்பு அப்படியே இருக்கிறது வா இருவரும் சேர்ந்து சாப்பிடலாம். சூடாக சோறு வடித்திருக்கிறேன்” என்றாள் சுமதி.

ரூபிக்கு கோபம் தலைக்கேறியது. “ஒரு மீன் குழம்பை வைத்து மூன்று நாளை ஓட்டப் பார்க்கிறாய்! எனக்கு வேறு ஏதாவது சுவையான உணவு வேண்டும்” என்று அடம் பிடிக்கத் தொடங்கினாள் ரூபி.

”சரி, அதற்கென்ன, சீக்கிரம் செய்து விடுகிறேன் ரூபி” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு அப்படியே பேச்சைப் படிப்புப் பக்கம் திருப்பினாள் சுமதி.

”ரூபி, நீ இன்னும் இரண்டு ஆண்டுகளில் தொடக்கநிலை பள்ளி இறுதியாண்டு தேர்வுகள் எழுத வேண்டும். உன் படிப்பு அவ்வளவாகச் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. ஏன் இப்படி?” என்று கேட்டாள் சுமதி. “ஓ! என் வகுப்பு ஆசிரியர் அதற்குள் எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிட்டாரா?” என்று அலட்சியமாகக் கேட்டாள் ரூபி.

”நான் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்றால் துணைப்பாட வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும். உன்னிடம் தான் காசு இல்லையே, அப்புறம் எப்படி என்னால் நன்றாகப் படிக்க முடியும்?” என்று கேட்டாள் ரூபி. “ஆனால் நீ ஏன் வீட்டு பாடங்களைச் செய்து கொண்டு போவதில்லை? நான் வேலை முடித்து வரும் வரை தெருவில் விளையாடிக் கொண்டு தானே இருக்கிறாய்? வகுப்பில் ஆசிரியர் கொடுக்கும் பாடங்களை வீட்டில் வந்து படித்தால் தானே புரியும்? நீ ஏன் இப்படி சோம்பேறியாக இருக்கிறாய்?” என்று கேட்டாள் சுமதி.

“அப்படியே துணைப்பாட வகுப்புகளுக்குச் சென்று தான் ஆக வேண்டும் என்றால் அதற்கான செலவை நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நீ இது போன்ற காலணிகள், விலை உயர்ந்த துணிமணிகள் இவற்றைக் கேட்பதை கொஞ்சம் நிறுத்த வேண்டும். நம் தேவைகளைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால்தான் படிப்புக்கான செலவை நம்மால் செய்ய முடியும்” என்று பொறுமையாக அறிவுரை கூறினாள் சுமதி.

ஆனால் ரூபி இதை எதையுமே காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. வேகமாக எழுந்து குளியல் அறைக்குள் ஓடினாள். சிறிது நேரத்தில் உணவு மேசையில் வந்து அமர்ந்த ரூபி, அம்மாவிடம் எனக்கு 50 வெள்ளி வேண்டும் என்றாள். சுமதிக்கு இதைக் கேட்டவுடன் தூக்கி வாரிப் போட்டது. “எதற்கு திடீரென ஐம்பது வெள்ளி?” என்று கேட்டாள்.

“என் பள்ளியில் தேசிய தினத்தை ஒட்டி ஒரு நாடகம் நடத்தப் போகிறோம். அம்மா, அதில் நான் கலந்துகொள்ளப் போகிறேன். அதற்கான செலவுக்காகத் தான் இந்த 50 வெள்ளி” என்றாள். “நாங்கள் ஒரு குழு நாடகம் போடப் போகிறோம். அதற்கு என் பங்கிற்கு நான் 50 வெள்ளி தர வேண்டும்” என்றாள். வேறு வழி இல்லாமல்,”நீ நாடகத்தில் பங்கு பெறுவது எனக்கு மகிழ்ச்சி தான் ஆனால் படிப்பிலும் கொஞ்சம் கவனத்தை செலுத்து” என்று அறிவுரை கூறியபடியே ஐம்பது வெள்ளியை எடுத்துக் கொடுத்தாள் சுமதி.

எப்பொழுதுதான் இவளுக்குப் பொறுப்பு வருமோ? என்று எண்ணியபடியே மற்ற வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். மறுநாள் எப்பொழுதும் போல் வேலைக்குச் சென்று விட்டாள். இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டது. நாடகத்திற்காக ஆசிரியர் கொடுத்த உரைகளை மனப்பாடம் செய்யத் தொடங்கினாள் ரூபி. ரூபியிடம் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை உணர்ந்தாள் சுமதி.

ஆனால் வேலை காரணமாக மகளிடம் அமர்ந்து இது பற்றி பேச நேரமில்லாமல் போனது சுமதிக்கு. பள்ளியில் தேசிய தின விழா கொண்டாடப்பட்டது. ரூபி மகாத்மா காந்தியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாள். அனைவரும் வெகுவாக ரூபியைப் பாராட்டினர். சிறந்த நடிப்பிற்கான வெற்றிக் கோப்பையும் ரூபிக்கு வழங்கப்பட்டது. அத்தோடு மகாத்மா காந்தியின் உருவச் சிலையையும் பரிசாகப் பெற்றாள் ரூபி.

அன்று மாலையில் வீடு திரும்பிய சுமதிக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது என்றைக்கும் இல்லாத திருநாளாக ரூபி பள்ளியிலிருந்து வந்ததும் ஓடி வந்து அம்மாவை கட்டிக்கொண்டு அழுதாள்.

“ரூபி, உனக்கு என்னவாயிற்று? ஏன் இப்படி அழுகிறாய்?” என்று அக்கறையோடு விசாரித்தாள் சுமதி. “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா நான் உங்களுக்கு எவ்வளவு தொந்தரவு கொடுத்து விட்டேன். உங்கள் வார்த்தையை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறேன். பொறுப்பில்லாத பிள்ளையாக இருந்திருக்கிறேன்” என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதாள்.

சுமதிக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் இந்தத் திடீர் மாற்றம்?” என்று தன்னையே கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ரூபி பேசத் தொடங்கினாள். “நான் இனிமேல் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டு உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன். படிப்பில் முழுக் கவனத்தை செலுத்தி முன்னேறுவேன். என் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்குவேன். வீட்டுப் பாடங்களை ஒழுங்காகச் செய்வேன்.

வாழ்க்கை முழுவதும் நேர்மையாக நடந்து கொள்வேன்.” என்றாள் ரூபி. மகளின் இந்த மன மாற்றத்தைக் கண்டதும் சுமதியின் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. இப்படி ஒரு நாள் வந்துவிடாதா என்று தானே சுமதி காத்திருந்தாள்.

யார் சொல்லியும் திருந்தாத ரூபி இது சாதாரண மாற்றமல்ல அவளின் எதிர்காலத்தை நல்ல விதமாக மாற்றியமைக்க கடவுள் காட்டிய வழி. ஆனால் இதற்கான காரணம் என்ன என்ற குழப்பத்தில் இருந்த சுமதிக்கு பதில் சொல்லும் விதமாகத் தன் கையில் இருந்த மகாத்மா காந்தியின் உருவச் சிலையைக் காட்டினாள் ரூபி.

இது வெறும் பொம்மையல்ல… உண்மை என்பதை உணர்ந்தாள்.

குறிப்புச் சொற்கள்