கவிதை: அதிகாலைப் பயணம்

கவிதை: அதிகாலைப் பயணம்

படம்: செயற்கை நுண்ணறிவு

13 Apr 2025 - 6:00 am

1 mins read

-ரெமிலா

சூரியன் எழுவதற்கு முன்பே

தன் பயணத்தைத் தொடங்குகிறது

பேருந்து

தொலைபேசியில் தன்னைத்

தொலைத்திருந்த பெண்மணி,

பேருந்தின் பேரசைவினால் தடுமாறுகிறார்

அவமானத்தில் வெட்கி

அருகில் இருந்த கைப்பிடியை

இறுகப் பற்றிக்கொள்கிறார்

காலையில் காபியின் சுவையறியா

ஒரு முதியவர்,

அதீத எரிச்சலுடன்

பேருந்தினுள் நுழைகிறார்

கண்ணில் பட்ட

முதல் இருக்கையில்

சட்டென்று அமர்கிறார்

அவருக்குச் சற்றுப் பின்னே

ஒரு சிறு பிள்ளை,

கையில் வைத்திருந்த

வாகனப் பொம்மையை

சன்னலோரம் ஓட்டியபடி

தனது மழலை உளறல்களால்

பேருந்தை நிரப்பியது

குழந்தையின் புன்முறுவலைக்

கண்ட வானம்

மெல்ல காலை வெளிச்சத்தை

உலகிற்குப் பரப்பத் தொடங்கியது

குழந்தைக்கு நேர் எதிரே

பள்ளிச் சீருடை அணிந்திருக்கும்

மாணவன் ஒருவன்,

காதில் ஒலித்துக்கொண்டிருக்கும் இசையால்கூட

அவனது ஆழ்ந்த உறக்கத்தைக்

கலைக்க இயலவில்லை

அவனுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை

ஆனால் அவனைத் தாலாட்டியபடி

மெல்லிய உறுமல்களுடன்

உருண்டு கொண்டிருந்த பேருந்து

எப்பொழுதோ விழித்துவிட்டது

சூரியன் உறங்கிய பின்னும்

பேருந்து உறங்குவதில்லை…

குறிப்புச் சொற்கள்
பயணம்கவிதைஞாயிறு முரசு