கடலினைக் கடந்து
கனவுகளைச் சுமந்து
வாழ்விடம் தேடி வந்தோரின்
ஒற்றைக் குரல்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
என்று ஓங்கி ஒலித்த
ஒற்றுமைக் குரல்.
உலகப்போரில் உருக்குலைந்த பூமிப்பந்தின்
மலாய தேசத்தில் மாறாப் பொலிவுடன்
தீபச்சுடராய் ஒளிர்ந்த பேரொளி
நாடு இரண்டுபட்டு
தமிழ் மக்கள் பிளவுபட்டு
சிறு தீவு சிங்கைத் தேசமாய்
பிரகடனம் ஆக்கப்பட்டபோது
தேச வளர்ச்சியும் தேசிய ஒருமைப்பாடும்
உயிரெனக் கொண்டு முரசு கொட்டிய பேரொலி
சீர்திருத்தமே சமுதாய வளர்ச்சியின்
ஆணிவேர் என்று ஆணித்தரமாய் எடுத்துரைத்து
மக்களை வழிநடத்திய வரலாறு
Digital திரை வந்து
வாசிப்புத் திசை மாறியபோது
தன்னைப் புதுப்பித்துப் புத்தம் புது பரிணாமங்களில்
தரணி ஆள வந்த தமிழ் பரணி.
தமிழவேள் கோ சாரங்கபாணியின் எழுத்தாணி
பிரசவித்த மகராணி
அச்சில் பிறந்த கலைவாணி தமிழ் முரசு!
தமிழ் முரசுக்கு அகவை 90!
பூமாலை அணிவித்தால்
வாடிவிடுமே என்று
கவிதையால் பா மாலைகொண்டு
வாழ்த்துகிறோம்.
முரசை மக்களின் ஓரங்கமாய்ச் செய்த
சாரங்கபாணிக்கு நன்றி சொல்லவா?
முரசை முப்பதாயிரம் முறை கொட்டிய
பல கரங்களுக்கு நன்றி சொல்லவா?
முரசைத் தமிழரின் அலைவரிசையாய்
மாற்றிய அரசுக்கு நன்றி சொல்லவா?
சிங்கை மண்ணை எம் மொழியின்
கூடாய் மாற்றிய தமிழ் அன்னைக்கு
நன்றி சொல்லவா?
இல்லை ஊர் கூடி அழகாக விழா
ஒன்று எடுக்கவா?
தொண்ணூறு தொட்டதற்காக விழா வா ?
இல்லை எண்ணூறைத் தொடப் போவதற்கான விழாவா?
தடைகளைக் கடந்து
மடைகளைத் திறந்து
பல்லினச் சூழலில்
பன்மொழிச் சாரலில்
என் முகம் என் மொழி
என் உயிர் என்றுயர்
எண்ணம் வளர்ந்திட
முரசு முனைந்திட
அக் கணம் இக் கணம்
எக் கணம் ஆயினும்
மெய்தொட்டு கருத்தெழ
மைதொட்டு தாள் விழ
இளைத்தவர் களைத்தவர்
உழைத்தவர் அனைவர்க்கும்
சக தொழிலாளிகள்
இணைந்திங்கு நிற்கவே
தமிழ் முரசுக்கு தலையங்கம்
கொடுக்கிறோம்
தமிழ் முரசோடு
தமிழ் முரசின் கடந்த கால - நிகழ் கால - வருங்கால
தொழிலாளர்களுக்குமான விழா இது !
======
ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுவது போல்
நாளுக்கு நாள் வித்தியாசப்படும் செய்தித்தாள்
தாளுக்குத் தாள் தகவல்களில் வித்தியாசப்படுத்துகிறது
செய்தித்தாளுக்கு அப்படி என்ன சிறப்பு ?
காலையில் வந்து
மாலையில் மரிக்கும்
காகிதத் தாள்தானே என்ற எண்ணம் இருக்கலாம்.
வரலாற்றை எழுதும் வல்லமை கொண்டது செய்தித்தாள்.
மக்களுக்காய் அதிகாரத்தின்
அடித்தளத்தை அசைக்கும்
குரல்வளையை நெரிக்கும் நேர்மை கொண்டது செய்தித்தாள்.
செய்தித்தாள் - வாசிக்கச் சொல்லி
வாசலில் தவம் இருக்கும்
பகுத்தறிவின் பெரும் விதைகள்
வியாபாரச் சந்தைகளில்
நீதிக்கு குரல் கொடுக்கும்
உண்மைகளின் வேர்க் கதைகள்
உலக நடப்பிற்கு ஈடு கொடுத்து
காது கொடுக்கும்
காலத்தின் காற்தசைகள்.
செய்தித்தாள் -
முடி திருத்தக் கடைகளில் கத்திரிக்கோல் சத்தத்துக்கும்
கண்ணாடி பிம்பத்திற்கும் இடையில்
வெறுமையைத் துரத்த மறுத்தது இல்லை
சமையல் அறையில் சாம்பார் கொதிப்பதற்கும்
சோறு வடிப்பதற்கும் இடையில்
படிப்பதற்குச் செய்தித் துணுக்குகளைக் குறைத்ததில்லை
வெள்ளை அங்கியில் பரந்து வரும்
வாய்மையின் வங்கிக் கணக்கு!
உலகுக்கும் நமக்குமான
தரவுகளின் தொப்புள் கொடி!
வாசகனின் காபி நேரத்துக்
கட்டாயக் கூட்டணி!
செய்தித்தாள் -
படை எடுப்புகள் பற்றிய அதிரடி
தகவல்கள் இருக்கலாம்
பங்குச் சந்தை சரிவுகளின்
அலசல்கள் இருக்கலாம்
அரசியல் சூழலின் சர்ச்சைகள்
இருக்கலாம்
சினிமா நட்சத்திரங்களின்
கிசு கிசுக்கள் இருக்கலாம்
விளையாட்டைப் பற்றிய
விமர்சனங்கள் இருக்கலாம்
அவசரமாய் வேலைக்கு
ஆள் கேட்டிருக்கலாம்
கவிதை சிறுகதை என
கற்பனைகள் மிதக்கலாம்.
வாசகனின் தேடலுக்கு
வழிகாட்டியாய் இருக்கலாம்!
***
தூசு படிந்த கைகளிலே
காசு படியாததால்
ஒரு காசுக்கு வந்த முரசே
ஒரு காசுக்கு அச்சில் வந்தாய்
ஒரு காசுக்குக் கற்றுத் தந்தாய்
ஒரு காசுக்கு வாழ்வு தந்தாய்
ஒரு காசுக்குக் காலம் வென்றாய்
உன் பயணத்தை ஒரு காசில்
அழகாகத் துவங்கினாய்
நியாயத்தைப் பொதுத் தராசில்
வைத்தே நீ வணங்கினாய்
மலிவாக வந்தாலும்
மெலிவாக வந்தாலும்
பொலிவாக வந்தாயே
நடு நிலையாக நின்றாயே
சிறிதும் வளையாமல் வென்றாயே
பலரின் முதல் கதைக்கு
தளம் அமைத்தது - தமிழ் முரசு
பலரின் கவிதைக்கு
வளம் பெருக்கித் தந்தது - தமிழ் முரசு
பலரின் கட்டுரைக்கு
களம் அமைத்துத் தந்தது - தமிழ் முரசு
சிலரின் வெட்டுரைக்கும்
பதில் எழுதி வந்தது - தமிழ் முரசு
உயிரும் உயிர் மெய்யும்
உண்மைகளைச் சுமந்து சிங்கை வீதிகளில்
உலா வரச் செய்த உன்னதம் - தமிழ் முரசு
சிங்கையின் ஆட்சி மொழி
சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும்
தமிழைத் தாங்கும்
திடமான தூண்களில் ஒன்று
தமிழ் முரசு.
சிறுகதை பெருங்கதையாகும்
பெருங்கதை நாடகமாகும்
சிறு விதை விருட்சமாகும்
மரங்கள் கூடிக் காடாகும்.
பிள்ளைகளின் நாவினில்
தமிழ்ப் புழக்கம் வருவதற்கு
வருங்கால சந்ததிகள்
தமிழ் முழக்கம் இடுவதற்கு
பாலர் முரசு கொடுத்த தமிழ் முரசு
நாளைய தலைமுறை தமிழை
நயம்பட உரைத்திட
இளையர் முரசு கொடுத்த தமிழ் முரசு.
மரபும் மொழியும் பண்பாட்டு பரவலால்
மரிக்காமல் இருக்க
மரபை மொழியால் ஊட்டிய தமிழ்முரசு
காலை நேரத்து ஒளியில்
வாசகர் விழியில் ஒளி ஊட்டும் தமிழ்முரசு
இனம் காக்க நாடெங்கும் வியாபித்த
தமிழ் முரசு
சமுதாயச் சமன்பாட்டை யோசித்த
தமிழ் முரசு
தரவுகளைக் கனவுகளைச் சேமித்த
தமிழ் முரசு
உண்மைகளின் நன்மைகளை வாதித்த
தமிழ் முரசு
முரசே நீ வாழ வேண்டும்.
மெய் எழுத்தாக நீ வாழ வேண்டும்
உயிர் துடிப்போடு நீ வாழ வேண்டும்
எங்கள் கருத்தாக நீ வாழ வேண்டும்
என்றும் செழிப்பாக நீ வாழ வேண்டும்
முரசே நீ வாழ வேண்டும்
எழுத்தாக… எங்கள் எழுச்சியாக…
உயிராக… எங்கள் உரிமையாக!
எங்கள் அறம் பேசும் குரலாக நீ வாழ வேண்டும்
தமிழ் போல தளைத்தோங்க வேண்டும்!