அடிக்கடி புருணை சென்றுவரும் ரவியுடன், இம்முறை ரவியின் வயதொத்த நண்பரான முப்பது வயது சுந்தரமும், ஒரு மூன்று வயது மூத்தவரான வீராசாமியும் கூடவே சேர்ந்துகொண்டனர், அந்நாட்டின் வணிக வாய்ப்பினை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்..
புருணையில் மூன்று நாள், தலைநகர், பண்டார் ஸ்ரீ பகவானிலுள்ள அங்’ஸ் ஹோட்டலில் தங்கி வணிக நிலைகளைத் தெரிந்த பின்பு, அருகில் இருக்கும் சரவாக் நாட்டிற்குச் செல்ல ஆவல் கொண்டனர் வீராசாமியும், சுந்தரமும். அந்தச் சுற்றுவட்டாரத்தை நன்கு தெரிந்துவைத்திருந்த ரவியும் அவர்கள் விருப்பத்திற்கு இணங்கி, நூற்றி அறுபது கிலோமீட்டர் தூரமுள்ள புருணை எல்லையைத் தாண்டி, சரவாக் நாட்டின் எல்லையோர நகரான மிரிக்கு காரை ஓட்டியவண்ணம் நெருங்கினார்.
‘அது சரி ரவி, இந்த சரவாக் பகுதியில், காட்டில் நீண்ட வீடுகளைக் கட்டி பல குடும்பங்கள் கூட்டாக வாழ்வது பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை ‘சரவாக் லாங் ஹவுஸ்’ என்று அழைப்பார்கள் இல்லையா? இன்னும் அதுபோன்ற வீடுகள் அங்கு இருக்கின்றனவா’ என வினவினார் வீராசாமி
“ஆமாம். இந்த 1983 ஆம் ஆண்டிலும் அப்படி வாழும், டாயாக் மற்றும் இபான் இனத்தவர் சிலர் சரவாக் காட்டில் இத்தகைய வீடுகளில், இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்,” என்று பதிலளித்தார் ரவி.
“நாம் ஓய்வு கிடைத்தால் சென்று பார்க்கலாமா,” என ஆர்வத்துடன் கேட்டார் சுந்தரம்.
சற்று நேரம் சிந்தனை செய்துவிட்டு...
‘மிரி நகரிலிருந்து, ஒரு இருபது கிலோமீட்டர் தொலைவில், சுற்றுலா வருபவர்களுக்காக இதுபோன்ற ஒரு ‘மாதிரி’ வீட்டை அரசு கட்டிவைத்துள்ளதாம். அதை விசாரித்துச் சென்று பார்க்கலாம் என்று சொல்லி சுந்தரத்தை உற்சாகப்படுத்தினார் ரவி.
“இந்த இபான் மற்றும் டாயாக் இனத்தவர்களைப் பற்றி நானும் படித்திருக்கிறேன். ஒருகாலத்தில் எதிரிகளின் தலையை வெட்டும் மிக மூர்க்கமானவர்களாக இருந்துள்ளனர்,” என்றார் வீராசாமி
‘ஐயோ அப்படியா’ என்று விழியகல வியந்தார் சுந்தரம்.
“அது ஒரு காலம். இக்காலத்தில் அவர்கள் இப்படியான கொடூரத்தில் ஈடுபடுவதில்லை. பயப்படாதீர்கள்,” என்று சிரித்துக்கொண்டே சுந்தரத்தின் பயத்தை போக்க முயன்றார் ரவி.
“அதுமட்டுமல்ல, வெட்டிய தலையின் மண்டையோட்டை, ஏதோ ஒருவகை மூலிகை ரசாயனத்தைக் கொண்டு பாதி அளவிற்கு சுருங்கச்செய்து, தம் வாசல்முன் பந்தலிட்டு, இந்தச் சுருங்கிய மண்டையோட்டை தொங்க விடுவார்களாம். இது ஒருவனின் வீரத்தை குறிப்பதாகவும் கொள்வராம். ஒருவன் எத்தனை தலைகளை வெட்டினானோ, அதைக் கட்டைவிரல் ஓரத்தில் பச்சை குத்தியிருப்பானாம். அதிக எண்ணிக்கையுடையவனே சிறந்த வீரனென்று, பெண்கள் அவனை மணக்க விரும்புவார்களாம்,” என்று வீராசாமி சொல்லி முடித்ததும், சுந்தரம் மேலும் மிரண்டுபோனார்.
“அட ஏன் அண்ணே சுந்தரத்தை மிரள வைக்கிரீர்கள்,” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு...
“இப்பொழுது அவர்கள் மாறிவிட்டனர். இங்கும், புருணை தலைநகரத்திலும், சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். காலம் மாறும் போது, மக்கள் மாறத்தானே செய்கிறார்கள்,” என்று சொல்லியபடியே சாலையில் கவனம் செலுத்தினார் ரவி.
ஒரு அரைமணி நேரத்தில், மிரி நகரை அடைந்ததும், மதிய உணவை ஒரு மலாய் உணவுக் கடையில் முடித்துக்கொண்டு, நகரை, காரில் இருந்தபடியே ஒரு மணிநேரம் சுற்றி வந்தனர்.
‘சரி நேரம் ஆகிக்கொண்டே போகுது, சுந்தரம் ஆசையாகப் பார்க்க விரும்பிய நீண்ட இபான் ‘மாதிரி’ வீடு இங்கிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதாம். இப்பொழுது கிளம்பினால் ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்துப் பார்த்துவிட்டு விரைவாகத் திரும்பலாம்’ என்று ரவி சொல்லி முடித்ததும் எல்லாரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு புறப்பட ஆயத்தம் ஆயினர்.
“நீங்க இடத்தைக் கவனித்து வழி சொல்லுங்க, நான் காரை ஓட்டுகிறேன்,” என்று சொல்லி, சுந்தரம் காரை ஓட்டவும், பக்கத்தில் ரவி அமர்ந்துகொண்டு, தான் விசாரித்துத் தெரிந்துகொண்ட வழியைக் காட்டினார். பின்னிருக்கையில் வீராசாமி அமர்ந்து கொண்டார். கார் அந்த இபான் ‘மாதிரி’ வீட்டைநோக்கி விரைந்தது.
ஒரு அரைமணிநேரம் வழிகாட்டிக்கொண்டிருந்த ரவி, மதிய உணவின் காரணத்தாலோ என்னவோ அமர்ந்தபடியே அயர்ந்து தூங்கிவிட்டார்.
காரை ஓட்டிக்கொண்டே ஏதோ பேசிக்கொண்டிருந்த சுந்தரம், பின் இருக்கையில் அமர்ந்திருந்த வீராசாமியிடம்...
“பேசிக்கிட்டே இருந்த ரவி தூங்குறாரு அண்ணே. நீங்களும் தூங்கிடாதிங்க,” என்று சொல்லி மெல்ல சிரித்தார்.
“அந்த மலாய்க்கார சாப்பாடு அப்படித் தூங்க வைக்குது. சிறிது நேரம் ரவி தூங்கட்டும். பரவால நீ காரை கவனமா ஓட்டு. எப்படியும் கொஞ்ச நேரத்துல அந்த வீடு கண்ணுக்கு படமா போய்விடாது,” என்றார் வீராசாமி
இரண்டுபக்கமும் பார்த்துக்கொண்டே ஒரு அரைமணிநேரம் காரை ஓட்டிச்சென்றதும்...
“என்ன அண்ணே இது. ரவி சொன்னத விட இன்னும் தூரமாக வந்துவிட்ட மாதிரி தெரியுது. ஆனால் அப்படியொரு வீடு இருப்பதாகத் தெரியலையே,” என்றார் சுந்தரம்.
‘நீ ஒன்னு செய். தூரத்துல ஒருவர் மலாய்க்காரர் சாலையோரம் நடந்து வருவது தெரியுது. கொஞ்சம் கார ஓரமா நிறுத்து. நான் அவரிடம், வழிகேட்டுவிட்டு வர்றேன்’ என்றார் வீராசாமி.
அதே போல் காரைச் சாலையோரம் நிறுத்தினார் சுந்தரம். காரைவிட்டு வெளியே சென்று, சிறிது நேரம் அந்த வழிப்போக்கனிடம் பேசிவிட்டு திரும்பினார் வீராசாமி.
“அவன் பேசுற மலாய் சரியா புரியல. ஆனா கிட்டத்தான் இருக்கு என்று சொன்னவன், கொஞ்ச தூரம் போய், இடது பக்கத்து சாலைல திரும்பச் சொல்லுறான்,” என்றார்.
‘ரவிய எழுப்பலாம்’ என்றார் சுந்தரம்.
“பரவால. அதான் நெருங்கிட்டோம் போலத் தெரியுதே. அங்க சேர்ந்ததும் எழுப்பலாம்,” என்றார் வீராசாமி
வீராசாமி சொன்னதுபோல் சிறிது தொலைவில் தென்பட்ட இடதுபுற சாலையில் திரும்பிய சுந்தரம், ஒரு இருபது நிமிடம் ஓட்டியபின்...
“என்ன அண்ணே, அவன் சரியாகத்தான் புரிந்து வழியைச் சொன்னானா. வரவர ஜன நடமாட்டம் குறையுது. காடாய் அல்லவா தெரியுது,” என்று கொஞ்சம் சந்தேகத்துடன் கேட்டார் சுந்தரம்.
“ஆமாம் எனக்கும் சந்தேகமாகத்தான் இருக்கு. சரி நான் ரவியை மெல்ல எழுப்புறேன்,” என்று சொல்லியபடி முன் இருக்கையில் சாய்ந்தபடி உறக்கத்தில் இருந்த ரவியை மெல்ல எழுப்பினார்.
சோர்ந்த நிலையில், உறக்கத்திலிருந்து விழித்தார் ரவி, அவர் கேட்ட முதல் கேள்வி..
“எந்த இடம் இது?” என்பதாக இருந்தது.
“கார் கிளம்பின சற்று நேரத்தில் நீ களைப்புல தூங்கிட்ட. உன்ன எழுப்ப வேண்டாமுன்னு நாங்களே அந்த இடத்த தேடினோம். ஆனா கண்ணுக்குத் தென்படல. அப்புறம் ஒரு வழிப்போக்கரிடம் கேட்டோம். இடது பக்கத்து சாலையில திரும்பிக் கொஞ்ச தூரம் போனா தெரியும்னு சொன்னான். ஆனா இவ்வளவு தூரம் வந்தும் ஒன்னும் தெரியல. அதான் உன்னை எழுப்பினோம்,” என்றார் வீராசாமி,
சற்றுக் குழப்பத்துடன்...
“அட கொஞ்சம் முன்னதே என்னை எழுப்பி இருக்கலாமே அண்ணே,” என்று முகத்தை துடைத்துக்கொண்டே, தூக்கத்தைக் களைக்க முயன்ற ரவி,
“அட மணி ஆற நெருங்குதே. இது எந்த இடமுன்னு தெரியலயே,” என்று சற்றுக் குழப்பத்துடன் சுற்றிப்பார்த்த வண்ணம் பேசினார் ரசி.
“சாலை இருக்க இருக்க குறுகலாகப் போய்க்கொண்டு இருக்கு,” என்று சொல்லி காரின் முன் விளக்கைப் போட்டார் சுந்தரம்.
“இதுக்குமேல ஓட்டுனிங்கனா, சாலை, மண்சாலைப் பகுதிக்கு வந்துவிடும் அறிகுறி தெரியுது. அதனால காரை சாலை ஓரமாக முதலில் நிறுத்துங்கள்,” என்றார் ரவி.
‘மன்னிச்சிடுங்க ரவி. நான் ஒரு மணிநேரத்துக்கு முன்னால உங்கள எழுப்பியிருக்கணும். இந்த வீட்டைப் பார்க்கும் ஆர்வத்துல இப்படி ஆய்டிச்சு. வேண்டாம் விபரீதம். நாம மிரிக்கு திரும்பிடலாம்’ என்று சற்று வருத்தத்துடன் சுந்தரம். சொல்லிக்கொண்டிருக்கும் போது, சற்று தூரத்தில், நான்கு பேர், கார் நிற்கும் இடத்தை நோக்கி வருவது தெரிந்தது. கொஞ்சம் இருட்டிக்கொண்டுவரும் இந்த மாலை நேரத்தில் வருபவர்கள் யார் என்று, ரவிக்கு ஆரம்பத்தில் சரியாகப் புரியவில்லை. ஆனால் அவர்கள் நெருங்கி வரும்போதுதான், அவருக்குப் புலப்பட்டது.
“வருபவர்களைப் பார்த்தால் இபான் இனக் காட்டுவாசிகள் எனத் தெரிகிறது. மேலாடை எதுவும் இன்றி, வெறும் அழுத்தமான பழைய கால்சட்டையும், இடுப்பில், பாராங் என்று அழைக்கப்படும் அரிவாளும் சொருகி வைத்திருப்பதை வைத்துச் சொல்லுகிறேன்” என்று ரவி சொன்னதும்...
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அந்த நான்கு காட்டுவாசி இபான் இனத்தவர் நெருங்கி வந்ததைக் கண்டு, புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, மலாய் மொழியில் வணக்கம் சொல்லவும், பதிலுக்கு அவர்களும் வணக்கம் கூறினர்.
பின்பு காரிலிருந்த நான்கு சிகரெட் பாக்கெட்டுகளை அவர்களுக்கு ரவி கொடுக்கவும் அவர்கள் மிகவும் மகிழ்ந்து போயினர். பின்பு மெல்ல தாங்கள் இந்த நீண்ட வீட்டைப் பார்க்கும் ஆர்வத்தில் வெகுதூரம் வந்துவிட்டதை பக்குவமாக, அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச்சொன்னார்.
இதைக்கேட்டதும், சின்ன புன்முறுவலுடன், தாங்கள் அவ்வகை வீட்டில் வாழும் இபான் இனத்தவர் என்றும், இப்பொழுது அங்குத்தான் வேட்டை முடிந்து திரும்புவதாகவும் அவர் சொல்லிவிட்டு.. வாருங்கள் எங்களுடன். அழைத்துச்சென்று காட்டுகிறோம் என்றார்.
ரவியிடம் பேசியவன் மட்டுமே சற்று புன்னகையுடன் பேசினான். மற்ற மூவரின் முகத்தில் எந்த பாவனையும் இல்லை. அந்த நால்வரில், ஒருவன் மட்டும் ஒரு எண்பத்தைந்து வயது மதிக்கத்தக்க முதியவனாக தென்பட்டான். அவன் எல்லோரையும் ஏற இறங்க பார்த்தவண்ணம் இருந்தான்!
அந்த இபான் இனத்தவர் சொன்னதை ரவி மற்ற இருவருக்கும் எடுத்துச் சொன்னார்
“எனக்கும் அவன் சொன்னது புரியுது. ஆனா இருட்டிக் கொண்டு வருகிறதே. மேலும் இவர்களை நம்பிப் போகலாமா,” என்று அச்சப்பட்டார் வீராசாமி.
“ஆமாம் ரவி. அதுவும் அந்த கிழவனைப் பார்த்தா பயமா இருக்கு,” என்றார் சுந்தரம்!
“அவர்கள் தங்கியிருக்கும் வீட்டைப் பார்க்கும் ஆர்வத்தில் இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. அதனால் போய்க் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வரலாம். இவர்கள் நம்மை ஒன்றும் செய்துவிடப்போவதில்லை, ஆனால் அவரின் அழைப்பை மறுத்தால் அதை அவமானமாக நினைத்துக்கொள்ள நேரிடும். மேலும், அவர்களின் குணம் பற்றி எனக்குத் தெரியும். அதனால்தான் அவர்களைக் கண்டவுடனேயே நட்பைக்காட்ட, சுந்தரம் வாங்கிய சிகரெட் பாக்கெட்டுகளை அவர்களுக்குத் தானம் கொடுக்க வேண்டியிருந்தது,” என்று சொல்லியதும், ஒருமனதாக மற்ற இருவரும் கூடவே செல்ல ஒத்துக்கொண்டனர்.
அந்த முதன்மை இபானிடம், தாங்கள் வருகிறோம் என்று சொன்னதும், அவன் தன் மகிழ்வைக் காட்டிக்கொண்டு, ஒரு குறுகிய மண்பாதை வழியே நடந்தவண்ணம் கையசைத்து, மூவரையும் பின்தொடரச் சொன்னான். அது காட்டின் இடையே செல்லும் ஒற்றையடிப்பாதை. சற்றுமுன் பெய்த மழையால் கொஞ்சம் சேறும், சறுக்கலாகவும் இருந்தது. மேலும் இருட்ட ஆரம்பித்ததால், மூவரும் தட்டுத்தடுமாறி நடக்க ஆரம்பித்தனர். முதலில் அந்தத் தலைமை இபானும், அதற்கடுத்து ரவியும், அவரைத் தொடர்ந்து வீராசாமியும், அவருக்குப் பின் கடைசியாக, சுந்தரமும் மெல்ல நடந்தனர். சுந்தரம் பயந்த அந்த வயோதிக இபான், சுந்தரத்திற்குப் பின் வந்துகொண்டிருக்க, மற்ற இரு இபான்கள் சற்று தள்ளி வந்துகொண்டிருந்தனர்.
சுந்தரத்திற்குப் பின் வந்துகொண்டிருந்த கிழவன், சுந்தரத்தின் தோல்மீது தன் கையைப் போட்டு மெல்ல பொக்கை வாயால் சிரித்து, தன் தோழமையைக் காட்டிக் கொண்டான். சுந்தரத்திற்கு இது பய உணர்வைத்தான் தூண்டியது! போதாதகுறைக்கு, தோல்மீது போட்ட வயோதிகன், கையின், கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில், மூன்று மனித தலை ஓடுகளைப் பச்சைகுத்தி இருப்பதை, அந்த மங்கிய ஒளியில் கண்டு பதறிப்போனார். அந்தக் குளிரிலும், காதோரம் வியர்க்கத் தொடங்கியது சுந்தரத்திற்கு!
தான் கண்டதை மெல்ல முன்னுக்கு போய்க்கொண்டிருந்த வீராசாமியிடம் முணுமுணுத்தார் சுந்தரம்.
“அண்ணே! எனக்குப் பின்னால வரும் கிழவன் கையில மூனு மனித தலை ஓடுகளைப் பச்சை குத்தியிருப்பத பார்த்தேன். அவன் என் தோல்மேல கைபோட்டு நடக்கிறப்ப பார்த்துட்டேன்’ என்று படபடப்புடன் மெல்ல காதோரம் சொல்லவும், வீராசாமிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“அடுத்தது உன் தலைனு சொல்லாம சொல்லுறான். ஜாக்கிரதை,” என்று வேடிக்கையாகச் சொன்னாலும், சுந்தரம் பயந்தே நடந்தார்.
அடர்ந்த காட்டுப்பகுதிவழியே, சறுக்கலான மண்பாதையில் அவர்கள் தொடர்ந்து நடந்தனர். மாலை மெல்ல இரவின் ஆடையை மாற்றிக்கொள்ள தொடங்கியது. மின்மினிப் பூச்சிகள், வழிகாட்டுவதுபோல், அவர்களின் முன்னே பறந்து சென்றன.
ஒரு பத்து நிமிட நடைக்குப்பின், ஒரு சிறிய பள்ளத்தாக்கில், அவர்கள் காணவிரும்பிய அந்த நீண்ட வீடு அவர்கள் கண்முன்னே காட்சியளித்தது!
மரத்தாலும், மூங்கில்களாலும் கட்டப்பட்டு, தென்னை ஓலைகளால் கூரை நெய்யப்பட்டிருந்தது. இந்த நெடிய, சற்று உயரமான அஸ்திவார, கால் வைத்த வீட்டிற்கு, ஒரு நான்கு இடத்தில் மரத்தால் செய்யப்பட்ட எட்டு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. வீட்டின் கீழ்த்தளத்தில், அவர்கள், பன்றிகளை அடைத்துவைத்து வளர்ப்பது தெரிந்தது. கீழே பன்றிகளை வளர்ப்பவர்கள், அந்தத் துர்நாற்றத்துடன், மேற்புறத்தில் வாழப் பழகிக்கொண்டனர் என்றே தெரிகிறது!
அந்தக் கிழவன் மீண்டும் சுந்தரத்தின் தோலில் தன் கையைப்போட்டு, பொக்கைவாயால், சிரித்துக்கொண்டே ஏதோ சொன்னான். ஆனால் அதைச் சுந்தரத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை!
பயந்துகொண்டே சுந்தரம் செல்ல, எல்லாரும் அந்த நீண்ட வீட்டை அணுகவும், அங்குக் குடியிருந்த பெண்கள், குழந்தைகள், எனப் பலரும், இந்தப் புதிய வேற்று இன ஆடவர்களின், திடீர் வரவைக் கண்டவுடன் வாசலில் வந்துநின்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அந்த இபான் இனத்தலைவன், ஒரு வீட்டின் படிமீது ஏறி, வாசலுக்குள் வரும்படி சைகைகாட்டி அழைத்தான்.
சற்று தயக்கத்துடன் மூவரும் வீட்டிற்குள் சென்று, அவன் காட்டிய கோரைப்பாயில் அமர்ந்தனர். சின்ன கைவிளக்கு மட்டும் அந்த அரைக்கு மங்கிய வெளிச்சத்தை தந்தது.
இங்கும், அந்தப் பொக்கைவாய் கிழவன், சுந்தரத்திற்குப் பின்னால் அமரவும், சுந்தரத்திற்கு மேலும் கலவரம் கூடிக்கொண்டே போனது.
அங்கிருந்த பெண்கள் சிரித்துபேச ஆரம்பித்தனர்.
இந்த புது விருந்தாளிகள் உண்ணுவதற்காக, மூன்று பாத்திரங்களில் கூழ்போன்ற தோற்றத்தில் ஏதோ ஒன்றை பரிமாறினார்கள். அதில் மலாய் இனத்தவர் அழைக்கும் ‘மாத்தா கூச்சிங்’ என்ற சிறு பழம் போன்ற தோற்றத்தில் சில மிதந்தன!
புன்னகை பூத்தபடி சாப்பிடுங்கள் என்றார் அந்த இபான் இனத் தலைவர். போதாத குறைக்கு, அங்கு கூடியிருந்த பெண்களும் கோரஸாக உண்ணும்படி சிரித்துக்கொண்டே வேண்டினார்கள்
ஆகா... இதுவல்லவா விருந்தோம்பல்!
தவித்தனர் மூவரும்.
‘உள்ளுக்கு என்னென்ன போட்டிருக்கானோ தெரியலடா சாமி’ என்றார் சிரமமான புன்னகையை வரவழைத்துக்கொண்டு வீராசாமி!
“நாம் இதை உண்ணாவிட்டால் அவர்கள் வருத்தம் அடைய கூடும். ஆகையால் ஒரே மடக்காகக் குடித்து விடுங்கள். சீக்கிரம் விடைபெற்றுக் கொள்ளலாம்,” என்றார் ரவி.
சுந்தரம், அந்தக் கூழ்போன்ற உணவை, கண்ணை மூடிக்கொண்டு, மூச்சை அடக்கி, ஒரே மடக்கில் தொண்டைக்குள் கொட்டினார் என்றே சொல்ல வேண்டும். பின்னால் அமர்ந்திருந்த பொக்கைவாய்க் கிழவன், இதைக் கண்டு, வேகமாகச் சிரித்தபடி சுந்தரத்தின் தோலை தட்டிக் கொடுத்தான்!
சுந்தரத்தை தொடர்ந்து மற்றவர்களும் தங்கள் அருவருப்பை, முடிந்தவரை காட்டிக்கொள்ளாது சின்னப் புன்னகையை முகத்தில் வரவழைத்துக்கொண்டு, அந்தக் கூழை குடித்து முடித்தனர். பின்பு அந்த இபான் இனத் தலைவன் தந்த புகையிலைச் சுருட்டை மறுக்காது ஏற்றுக்கொண்டனர். உணவின் வாடையை அது மாற்றியது அவர்களுக்குச் சாதகமாயிற்று!
புகைபிடிக்கும் பழக்கமில்லாத ரவியும் இருமிக்கொண்டே புகைத்தார்!
இவர்களின் இந்தக் கோமாளிப் போக்கைக் கண்டு, கூடியிருந்த பெண்களுக்குச் சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலவில்லை!
உள்ளுக்குள் இவர்கள் படும் அவஸ்தையை அந்த காட்டுவாசிகளால் புரிந்துகொள்ளவா முடியும்!
மெல்ல, அந்த இபான் தலைவனிடம், அவனுக்குப் புரியும் வண்ணம் பேச்சு கொடுத்தார் ரவி.
நேரமாகிவிட்டதாகவும், தாங்கள், சரவாக்கை தாண்டி புருணை தலைநகர் பண்டார் வரை செல்ல இன்னும் நான்கு மணி நேரமாகும், அதனால் இப்பொழுதே புறப்படவேண்டியுள்ளதை நயமாக எடுத்து சொன்னார், இதைக்கேட்ட அந்தத் தலைவன் முகத்தில் சற்று ஏமாற்றம் தென்பட்டாலும், அவர்களின் அவசரத்தை உணர்ந்தான்.
மற்றவர்களிடம் ஏதோ சொன்னவுடன், அந்தப் பெண்களிடமும் ஏமாற்றம் தென்பட்டு, அந்தத் தலைவனிடம் ஏதோ கூட்டாகச் சொல்லவும், தலைவன் ரவியைப் பார்த்து இரவு, இங்கு தங்கிவிட்டு நாளைப் போகலாம் என்றதும், அதைப் புரிந்துகொண்ட சுந்தரத்திற்கு, மயக்கமே வருவதுபோல் இருந்தது. ஆயினும், ரவி மீண்டும் சாமர்த்தியமாகத் தாங்கள் இப்பொழுதே புறப்பட வேண்டும் எனவும், நாளை மதியம் விமானத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பதை மிகப் பணிவாகச் சொன்னதும் அதை ஏற்றுக்கொண்டு சற்று வருத்தத்துடன் விடைகொடுத்தவுடன்தான், அந்த மூவர்க்கும் உயிரே திரும்ப வந்ததுபோல் இருந்தது.
அவர்கள் கிளம்பும்போது, அந்தத் தலைவனும் மேலும் ஒருவனோடு அந்தக் கிழவனும் வழியனுப்பக் கூடவே வந்தனர்.
பழையபடி ஒற்றையடிப் பாதைவழி கார் நிaத்திய இடத்திற்கு வந்து சேர்ந்தனர். மீண்டும் அந்த மூன்று இபானியருக்கும் நன்றி சொல்லிவிட்டு காருக்குள் அமர்ந்தனர்.
கார், புறப்படும் வரை, அங்கேயே நின்று அவர்கள் போவதைப் பார்த்தவண்ணம் நின்றுகொண்டிருந்தனர் அந்த விருந்தோம்பிய இபானியர்.
கார் புறப்பட்டதும், தன் தலை தப்பியதாக நினைத்துப் பெருமூச்சு விட்டார் சுந்தரம், ஆயினும், அந்த இபான் இனத்தவரின் அன்பையும் விருந்தோம்பலையும் நினைத்துப் பார்க்கத்தான் செய்தது மூவரின் மனமும்.

