அவளுக்கென்று ஓர் இடம்

5 mins read
b48837de-93e6-4019-9224-5481febb7924
அவளுக்கென்று ஓர் இடம் சிறுகதை ஆசிரியர். - சித்ரா தணிகைவேல்

“என்னது, 25 வெள்ளியா?” ஆத்திரமும் அதிர்ச்சியும் கலந்த குரலில் கேட்டேன்.

“வாரநாள் என்பதாலதான் இவ்வளவு குறைவு; இதுவே வார இறுதின்னா, ஒரு மணி நேரத்துக்கு 30-35 வெள்ளி. அதுவும் ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே பதிவு செய்து வைக்கணும்,” பதில் சொன்னாள் பகுதிநேரப் பணிப்பெண்களுக்கான முகவர்.

“எங்களுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு வந்து வேலைசெய்து குடுத்தாப் போதும்!”

“குறைந்தது ஐந்து மணி நேரத்துக்குத்தான் அனுப்புவோம். அதுதான் எங்க நிறுவனத்தோட பணிப்பெண்களுக்கான அடிப்படை வேலை நேர அளவு,” எனக் கூறிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தாள் முகவர்.

எரிச்சலுடன் போனை டீபாயின்மேல் வீசிவிட்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தேன்.

ரொம்பப் பசித்தது. அடுக்களைக்குச் சென்று குளிர்பதனப் பெட்டியைத் திறந்தேன். காய்கறிகளையும் பழங்களையும், இன்னும், சின்னச்சின்ன பொருள்களையும்கூட அழகாய்த் தனித்தனியாய், அதனதற்கான பெட்டிகளில் அடுக்கிவைத்திருந்த ராஜியின் நேர்த்தி கண்டு வியந்து நின்றேன்.

பிள்ளைகள் முதன்முதலாகத் தாமாகக் கலந்துகுடித்த இன்ஸ்டண்ட் காப்பியின் கவர்களும், காப்பிக் கோப்பைகளும் அடுப்பு மேசைமேல் இருந்தன; கடையிலிருந்து வாங்கிய உணவில் பாதிக்கும்மேல் உண்ணப்படாமல் மீந்துபோன உணவுப்பொருள்களுடன் தட்டுகளும் இருந்தன! அவளில்லாத அடுப்பங்கறையை ஏனோ பார்க்கப் பிடிக்கவில்லை.

காலை ஆறரை மணிக்குள்ளாகப் பம்பரமாய்ச் சுழன்று பகல் உணவைத் தயாரித்து, மேசையில் வைத்துவிடுவாள்!

எங்கள் மூன்று பேருக்கும் பிடித்ததுபோல் விதவிதமான மதிய உணவை டப்பாக்களில் கட்டி மறக்காமல் எடுத்துச் செல்கிறோமா என்று கவனித்துப் பார்ப்பாள்!

கட்டிலில் சுருண்டு படுத்திருக்கிறாள்.

இப்படியெல்லாம் படுப்பவளில்லை!

இருவாரங்களுக்குமுன் திடீரென்று அவளிடமிருந்து அழைப்பு.

“கொஞ்சம்... சீக்கிரம்... வரமுடியுமா?” திக்கித் திணறித்தான் பேசமுடிந்தது அவளால்.

“என்ன ஆச்சு?” பதறிவிட்டேன்.

“கே.கே... போகணும், ரத்..” அதற்குமேல் அவள் பேசியது கேட்கவில்லை.

ஜூரோங்கிலிருந்து காமன்வெல்த்துக்கு வெறிபிடித்ததுபோல் எனது வண்டியைச் செலுத்தினேன். மகாபாரத யுத்தத்திற்குச் சீறிப் பாய்ந்த கண்ணனின் ரதமாய்ச் சீறியது என் வண்டி.

வீட்டினுள் நுழைந்தபோது, பழுப்புநிறச் சோபாவில் வாடிய மலராய்க் கிடந்தாள். அவள் உட்கார்ந்திருந்த இடம் முழுக்க செந்நிறத் திட்டுகள்.

அவசர உதவி தேவைப்பட, அழைத்த ஐந்து நிமிடத்தில் விரைந்து வந்தனர். அந்தப் பதற்றத்திலும் அவர்களின் மின்னல்வேகச் சேவையை வியக்காமல் இருக்கமுடியவில்லை.

தூக்குப் படுக்கையில் அவளைப் படுக்கவைத்தபோதே என் மனம் உடைந்துவிட்டது. என்னால் அதைக் கண்கொண்டு பார்க்கவே இயலவில்லை. அதே வண்டியில் கே.கே. மருத்துவமனைக்கு விரைந்தோம்.

பெண் மருத்துவர் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு யோசித்துப் பதில் சொல்ல எனக்குச் சிறிது அவகாசம் தேவைப்பட்டது.

அடையாள அட்டையில் உள்ள எண்ணைத் தட்டினால் ஒருவரின் சரித்திரமே வந்துவிடும் என்றாலும் ராஜியைப் பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவர் திடீரெனக் கேட்டார், “இவங்க வயசென்ன?”

“ம்ம்..48?!?” என்ற என்னை மருத்துவரின் பார்வை ஊடுறுவியது.

“கொஞ்ச காலமாவே ஏனோ என்கிட்ட இருந்து விலகிப் போறா; அத்தனை பெரிய பிள்ளைகளுக்குச் சோற்றை ஊட்டி விட்டுட்டே அரட்டை அடிக்கிறவ, கொஞ்ச நாளா சமைச்சதை எல்லாம் விட்டேத்தியா மேசை மேல வச்சிட்டுப்போயிடறா. பிள்ளைங்க கிட்டக்கூடப் பேசாம திடீர் திடீர்னு அமைதியாயிடறா.”

நடந்தவற்றை நினைவுப் பெட்டகத்திலிருந்து தருவித்துப் பூடகமாக மருத்துவரிடம் சொன்னேன்.

அவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மருத்துவர், “மெனோபாஸ் நெருங்கும்போது பெண்களுக்கு இப்படியெல்லாம் நடக்கறது இயல்புதான். இந்தக் காலகட்டங்களில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமா நடந்துப்பா,” கூறிக்கொண்டே ராஜியின் நாடியைப் பரிசோதித்தார்.

நாடித்துடிப்பின் எண்ணிக்கையும் வெளுத்துப்போன அவள் முகமும் காலையிலிருந்து பத்துமுறை நாப்கின் மாற்றிவிட்டதாகச் சைகையில் அவள் சொன்னதும் மருத்துவரின் முகத்தைக் கலவரமாக்கியது.

“உடனே ஒரு ஊசி போடறேன். இல்லேன்னா அவங்க சிரமப்படுவாங்க. இரண்டொரு நாள்கள் இங்கேயே தங்கவேண்டி இருக்கும்,” என்று மருத்துவர் கூறியதற்கு மறுப்பேதும் சொல்லமுடியவில்லை.

பெரும்பாலும் மாத்திரைகளையே பரிந்துரை செய்பவர்கள் சிங்கப்பூர் மருத்துவர்கள். ஊசி போடவேண்டும் என்றதும் நான் கலவரமானேன்.

பிள்ளைகளை மருத்துவமனைக்கு வரச்சொல்லி ராஜியுடன் இருக்கச்சொல்லிவிட்டு வீட்டுக்கு விரைந்துசென்றேன். போகும் வழியில் என். டி. யு. சி. யில் சோபா துடைக்கும் ஸ்பிரே புட்டில் ஒன்றை வாங்கிக்கொண்டேன். அழுகிய மீனின் வாடை வீட்டை நிறைத்திருந்தது. முடிந்த அளவுக்கு டெட்டால் போட்டு சோபாவைத் துடைத்தேன்.

இரண்டு நாட்களாக நாங்கள் மூவருமாக மாற்றி மாற்றி விடுப்பு எடுத்து கே. கே. மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்தோம். இன்று மாலை ராஜியை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் சொன்னதும் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தோம்.

கைப்பிடித்து அவளை வீட்டுக்குள் அழைத்து வரும்போது, திருமணமாகி அவள் முதன்முதலில் என் கைப்பிடித்து என்னுடன் நடந்து வந்தது ஏனோ நிழலாடியது. ரொம்ப நாள் கழித்து அவள் கைப்பிடித்தபோது என்னவோ செய்தது.

இதெல்லாம் இவ்வளவு நாளாகச் செய்யவில்லையே. ஏன்? இடையில் என்னவானது என்று என் மனம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லும் மனநிலையில் நான் இல்லை.

இரண்டு நாட்களாக ஏதும் செய்யாததால், வீடே தலைகீழாக மாறியிருந்தது. சுத்தம் செய்யலாம் என்றால் வீட்டு வேலை எல்லாம் செய்து பழக்கமே இல்லாததால், விருப்பமே இல்லாமல் ஐந்து மணி நேரத்திற்கு ஒரு பணிப்பெண்ணை வரவைத்தேன்.

இடம் புதிது என்பதால் அவள் கொஞ்சம் தடுமாறினாள். வேண்டிய பொருட்கள் இருக்கும் இடத்தைக் காட்ட நானும் தடுமாறித்தான் போனேன்!

வீட்டைச் சுத்தம் செய்துகொண்டே, நான் கேட்காமலேயே, அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள அவள் குக்கிராமத்தைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

ராஜிக்கு வீட்டுச் சாப்பாடு இருந்தால் கொஞ்சம் தெம்பாக இருக்கும் எனத் தோன்ற, அப்பணிப்பெண்ணிடம், “நீ சமைப்பியா?” என்றேன்.

“வீடு சுத்தம் பண்ண மட்டும்தான் நிறுவனத்துல சொல்லிக் குடுத்திருக்காங்க,” என்றது அந்தக் கிராமத்துச்சிட்டு.

ராஜி செல்லமாய் வளர்ந்தவள்! அவள் அம்மா வீட்டில் சமையலுக்கும் இதர வேலைக்குமாக இரண்டு பணியாட்கள்! நினைத்தபோது உள்ளுக்குள் ஏதோ உறுத்தியது.

அடுத்தநாள் எங்கள் துணிகளைச் சலவைசெய்து அயர்ன் செய்ய இன்னொருத்தி வந்தாள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பணிக்கெனவே பிரத்தியேகமாகப் பயிற்சி கொடுக்கப்பட்ட பெண்கள் வந்து சென்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக யாரும் வரவில்லை. நாங்கள் மூவரும் முயற்சி செய்து பார்த்துவிட்டு அயர்ந்து தூங்கிவிட்டோம்.

இன்று ராஜியின் முகத்தில் கொஞ்சம் தெளிவிருந்தது. கூப்பிட்டாள்.

“என்ன ராஜி?”

“நாளைக்குக் கல்யாண நாள்! இருவத்தஞ்சாவது வருஷம்! வீட்டைக் கூட்டித் துடைச்சி, ‘முடிஞ்சதுன்னா,’ விளக்காவது ஏத்தணுங்க!” என அவள் இவ்வளவு நீளமாகப் பேசிக்கேட்டு நாட்கள் ஆனது. என்னால் மறுத்துப்பேச முடியவில்லை.

சொல்லிக்கொண்டே மெல்ல எழுந்தாள்; தாங்கிப்பிடித்தேன்!

ஒரு வாரத்திற்குப் பிறகு இன்றுதான் அறையிலிருந்து வெளியே வருகிறாள்; தடுக்கமுடியவில்லை. துடைப்பத்தைத் தேடினாள். ‘அது அது இருக்கவேண்டிய இடத்தில் இல்லை!’ அவள் மனக்குறிப்பை அவள் நயனங்கள் உணர்த்தின! கொஞ்சம் வலித்தது! எனக்கு!!

குறிப்புச் சொற்கள்