அவளைத் தனியாக விட்டு இருக்கக்கூடாது. ‘இது ஆபத்தானது’ என்று ஒரு வார்த்தை கூறவில்லையே என்று மனம் உறுத்தியது. ‘ஐ லைக் இட்’ என்று கூறும் அவள் இறப்பையும் லைக் செய்வாள் என்று அவர்கள் உணரவில்லை.
“நம்மோடிருந்த பாப் பாடகி இறந்துவிட்டாள்” என்று மூவரும் அழுதுவடியும் முகத்துடன் பத்து நாட்களாக இருக்கிறார்கள்.
“எனக்கு மட்டும் தெரிந்திருந்தால் அவளைச் சாகவிட்டிருக்கமாட்டேன்” என்றான் உயரமானவன், கலங்கியபடி சட்டென்று தரையில் கிடக்கும் பையை எடுத்தான். அழுது அழுது சிவந்திருக்கும் மூக்கை இழுத்தபடி “பாவம்டா அவ…” என்றவளின் தோளைச் சுருள் முடிக்காரன் தட்டிக் கொடுத்தான்.
“இந்தப் பழக்கத்தை ஆரம்பிக்கும்போது என்ன சொன்னேன்?” ஆவேசத்துடன் பைக்குள் கைகளை விட்டான். புத்தகங்களின் அடியில் மறைத்து வைத்திருப்பதை வெளியே எடுத்துப் போட்டான். நான்கு வகையான பழங்களின் பெயர்களில் இருந்தன அவை.
“டேய்…டேய் முதல்ல அத எடுத்து மறைச்சி வைடா” எனப் பதறினான் சுருள் முடிக்காரன்.
அவர்கள் அமர்ந்திருக்கும் மாடிப்படியை நோக்கி யாராவது வருகின்றார்களா? என்று உடலை சுவரில் பல்லியைப்போல் ஒட்டிக்கொண்டு நடைபாதையைப் பார்த்தான். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத மதிய நேரம். “யாரும் வரவில்லை” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே மாடிப்படியில் அமர்ந்தான்.
“இசைக் கனவுகளுடன் போய்விட்டாளே..” ஆறு விழியோரங்களில் வழியும் கண்ணீருடன் அழகிய நட்பின் முதல் நாள் சந்திப்பும் வழிந்தோடியது.
“அலோ…” என்றவளின் குரலை ரசித்தான். “என்ன ஓர் இனிய குரல்” என்றான் உயரமானவன். “நன்றி! என் கனவே ஒரு ’பாப்’ பாடகியாக வரவேண்டும்,” என்றவள் ஓர் ஆங்கிலப் பாடலைப் பாடியபடி பதிலளித்தாள். “வாவ்…அருமை” பாராட்டியபடி சுருள் முடிக்காரனும், சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும் அவளும் வந்து சேர்ந்தாள்.
“நீ மட்டும் என்ன? கணக்கை வெள்ளைப் பலகையில் எழுதியதும், மறுவினாடியே பதிலைக் கூறிவிடுகிறாயே” என்றாள் ’பாப்’ பாடகி
“நன்றி!” என்றான் மெல்லிய புன்னகையுடன் சுருள் முடிக்காரன்.
“ஏன்? இவள் மட்டும் என்ன தமிழ் இலக்கியத்தையும் ஒரு பாடமாக எடுத்திருக்கிறாள்,” என்றான் உயரமானவன்.
“எனக்கு இவள் சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழி பிடிக்கும்” அணைத்துக் கூறினாள் ’பாப்’ பாடகி.
ஒருவரையொருவர் பார்த்து வியந்து கொண்டார்கள்.
“ஓ…அப்படியென்றால் ஒரு ’பாப்’ பாடகி, ஒரு கணித மேதை, ஓர் இலக்கிய ஆர்வலர், ஒரு வழக்கறிஞர்” என்றதும், “வழக்கறிஞரா?” என ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். “அம்மா வழக்கறிஞர். அதனால் நானும் வழக்கறிஞருக்குத்தான் படிக்கணும்னு சொல்லிட்டாங்க,” என்றான் உயரமானவன். “கிரேட்” என்று கைக்குலுக்கினார்கள்.
இளையர் விழாவையொட்டி தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் மிகப் பிரபலமான ’பாப்’ பாடகியின் பாடலைப் பாடினாள்.
நீதிபதிகளின் மனங்களை வசீகரித்தவளுக்கு எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். முதல் பரிசுடன் அரங்கிலிருந்து வெளியே வந்தவளிடம் நண்பர்கள் மலர்க்கொத்தை நீட்டினார்கள்.
”இந்தப் பாடலைப் பாடிய ’’பாப் பாடகி அடுத்த ஆண்டு சிங்கப்பூர் வருகிறார். நேரில் போய்ப் பார்க்கவேண்டும், இந்தப் பாடலை அவரிடம் பாடிக் காட்ட வேண்டும்,” என்றாள் துள்ளலுடன். அந்தப் பாடகி இங்கு வருவதற்கான நுழைவுச் சீட்டுகள் விற்பனைக்கு வந்ததும் அதிக விலை கொடுத்து வாங்கினாள்.
“நீ அவரிடம் பாடும்போது வருகிறோம்” என்று நண்பர்கள் புத்தகங்களுடன் ஒதுங்கினார்கள். ’பாப்’ பாடகியின் பிரபலமான பாடல்களை முணுமுணுத்தபடியே அவள் இருந்தாள். ஒரு திருவிழாவைப்போலக் கோலாகலமாகப் ’பாப்’ பாடகியின் நிகழ்ச்சி நடைபெற்றது.
முழுமையாக அந்தப் பாடகியைப்போலத் தன்னை அலங்கரித்துக்கொண்டாள். அவரை நேரில் கண்டு அவளால் பாட முடியாவிட்டாலும் அவள் பார்த்த நிகழ்ச்சியை முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தாள். நிறைய ’லைக்ஸ்’ கிடைத்தன. அந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாட வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நண்பர்களை அழைத்திருந்தாள்.
மத்திய வட்டாரத்தில் அமைந்திருக்கும் ஒரு காண்டோவிற்குள் நுழைந்தார்கள். பதினாறாவது மாடியிலிருந்து சிங்கப்பூரின் அழகை ரசித்தார்கள்.
“வக்கீலானதும் இந்த மாதிரி காண்டோமினியம்தான் வாங்குவேன்.”
“இப்ப மட்டும் என்ன பெரிய தரை வீட்டில்தானே இருக்கிறாய்” என்றவள் காப்பி மேசை மீது நான்கு கண்ணாடிக் கிண்ணங்களை வைத்தாள்.
“பணிப்பெண் இல்லையா?” குளிர்பானத்தை அருந்தினார்கள்.
“மியன்மாரில் இருக்கும் குடும்பத்திற்குப் பணம் அனுப்ப வெளியே சென்றிருக்கிறாள்.” காலியான நான்கு கண்ணாடிக் கிண்ணங்களும் காப்பி மேசையை நிறைத்தன.
வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த பியானோவைப் பார்த்ததும், “வாவ்…” என்று பரவசமடைந்தனர். பிரபலமான ’பாப்’ பாடகியின் “ANTI HERO” பாடலை இசையோடு பாடச் சொல்லி வற்புறுத்தினர்கள். எதையோ யோசித்தபடி நின்றவளின் வாய்க்கு நேராக ’டிவி’ ’ரிமோட்டை’ நீட்டினார்கள்.
“சரி…சரி பாடுறேன். ஆனா,”
“என்ன ஆனா?” ஆச்சரியத்துடன் கேட்டார்கள். “ம்ம்…நானும் ஒண்ணு சொல்வேன். நீங்க செய்யணும்” என்றாள்.
“ஓ…எஸ்” என்றதும் பாடல் இசையோடு கலந்தது.
கைகளைத் தட்டியும், தலையசைத்தும் ரசித்தார்கள். கேட்ட பாடலோடு மேலும் இரண்டு பாடல்களையும் பாடி முடித்தாள்.
“கிரேட்…நிச்சயமா நீயும் ஒருநாள் பெரிய ’பாப்’ பாடகிதான்!” கைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள். அப்போது கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி “பணிப்பெண் வந்து விடப்போகிறாள்” என்று அறைக்கு விரைந்தாள்.
சுருட்டிய கலர் காகிதத்துடன் வந்தாள்.
“என்ன அது?” சிரித்துக்கொண்டே கேட்டவளின் கன்னத்தில் குழி விழுந்தது.
“எங்க மூணு பேருக்கும் பிறந்தநாள் முடிந்துவிட்டதே” சுருள் முடிக்காரன் கூறினான். உயரமானவன் தலையசைத்தான்.
“ம்ம்…இன்று உன் பிறந்தநாளும் இல்லையே”
சுருட்டிய கலர் காகித்தத்தில் பேனாக்கள்.
“ஓ…பேனா” ஆளுக்கு ஒன்று கொடுத்தாள்.
“பேனா இல்லை, மின் சிகரெட்” என்று கிசுகிசுத்து அதை முத்தமிட்டுச்சொன்னாள். “ஐ லை திஸ்”
“என்ன?” கைகள் நடுங்கின.
அவளுக்கு மட்டும் எதைப் பார்த்தாலும், “ஐ லைக் திஸ்”தான். சில நேரங்களில் பள்ளி முடிந்ததும் அங்காடி கடைத் தொகுதியைச் சுற்றி வருவார்கள். கவர்ச்சியான ஆடைகளையும், அலங்காரப் பொருட்களையும் பார்த்ததும், “ஐ லைக் திஸ்” என்று களிப்புடன் கூறுவாள். சாப்பிடும்போதுகூட மூவரின் மூக்கைப் பிடிக்க வைக்கும் உணவோடுதான் வந்து அமர்வாள். “ஐ லைக் திஸ்” என்று காலியான தட்டை உரிய இடத்தில் வைத்துவிட்டுத் திரும்புவாள்.
“இந்தப் பழக்கத்தை எப்ப ஆரம்பிச்ச?” பதறினார்கள்.
“ரொம்ப நாளா எனக்கும் டாடி மாதிரி சிகரெட்டை ஊதித் தள்ள ஆசையா இருந்தது. அதுக்குத்தான்…”
“டாடி மாதிரி ஊதித் தள்ளணுமா?”
“உனக்கு என்ன மூளை கெட்டுவிட்டதா?” ஆத்திரத்துடன் கத்தினார்கள்.
“என்ன நடந்ததுனு சொல்றேன்,”
“எதுவாக இருந்தாலும் நீ மின் சிகரெட் வாங்கியது பெரிய குற்றம்”
“இரண்டு வாரங்களுக்கு முன் ஒருநாள் சித்தி வீட்டுக்குப் போய் இருந்தேன். சித்தியின் மகள் வெளிநாட்டில் படிக்கிறாள். பார்த்துப் பேசிக் கொண்டிருக்கும்போது இந்த மின் சிகரெட்டை கொடுத்து(VAPE) உள்ளிழுக்கச் சொன்னாள்.”
“யாருக்கும் தெரியாது. பழம் சாப்பிட்ட மாதிரிதான் வாசனையடிக்கும்” சித்தியின் மகள் ’வேப்’ செய்வதையே கண் இமைக்காமல் பார்த்தாள். “பயப்பட வேண்டாம்” என்ற அடுத்த வினாடியே ’வேப்’ செய்து உள்ளிழுத்தாள் புகையாக வெளிவந்தது. “எஸ்…ஐ லைக் இட்” என்றாள்.
“வாட்?”
“ச்சே…எப்படி உன்னால்?”
அவளோ தலை முடியைக் கோதியபடியே இருந்தாள்.
“’வேப்’ செய்வதால் ஏற்படும் தீமைகள் எதுவும் நினைவில் இல்லையா?” உயரமானவன் நெற்றியில் அடித்துக்கொண்டான்.
“உடம்பிற்குள் செல்லும் நிக்கோட்டின் விளைவிக்கும் ஆபத்துகளையும், கேடுகளையும் உன் மண்டைக்குள் ஏற்றவில்லையா?” சுருள் முடிக்காரன் உறுமினான்.
“வேப்’ செய்யும் குற்றத்திற்குக் கடுமையான தண்டனைகள் இருக்குன்னு சொன்னது. எல்லாத்தையும் மறந்துவிட்டாயா?” சிரிக்கவில்லை அவள்
“நண்பர்களே! பிளீஸ்! நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க.” அமைதியானார்கள்
“நமக்கு ’டீனேஜ்’ வயது.”
“சரி அதுக்காக?”
“இப்ப அனுபவிக்காம எப்போ அனுபவிக்கப் போறோம். எனக்கும் மின் சிகரெட்டை ’வேப்’ செய்வதால் இதயம், நுரையீரல்னு எல்லா உடல் உறுப்புகளும் ஆரோக்கியத்தை இழந்து பயங்கரமான விளைவுகளைத் தரும் என்று தெரியும்.”
“தெரியுமா?” அதிர்ச்சியடைந்தார்கள்.
“மின் சிகரெட்டின் ஆபத்தைப் பற்றி அரசாங்கம் சொல்றதும், டீச்சர்கள் சொல்றதும் புரியுது.”
“அப்புறம் ஏன் இதெல்லாம்?” ஒரே குரலாகக் கேட்டது
“உங்களுக்கும் அந்த அனுபவம் வேண்டாமா?”
“என்ன அனுபவமா?”
“இன்னொரு விசயம் ’வேப்’ செய்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது மம்மியும் டாடியும் கண்டு பிடிக்கவேயில்ல.” பெரிய சாதனையைச் செய்தவளைப்போலக் கூறினாள்.
“வக்கீல் அம்மா முகர்ந்து பார்க்காமலேயே கண்டு பிடித்துவிடுவாங்க” உயரமானவன் கையில் இருப்பதை உற்று நோக்கினான்.
“அய்யோ…வேண்டவே வேண்டாம்” என்று கிளம்பிய இருவருக்காக வாசற் கதவைத் திறந்தாள்.
அப்போது, “நான் வேப் செய்யப் போகிறேன்” என்று உயரமானவன் கூறுவதைக் கேட்டதும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.
“நீயா”?
“இவ்வளவு நேரமா பெரிய வக்கீல் மாதிரி நிறைய பேசிவிட்டு இப்போ என்ன ஆச்சு?”
“டீனேஜ் வயசு. அது பிடித்திருக்கு. இப்போ அனுபவிக்காம அப்புறம் எப்போ?”
“சிகரெட்டைவிட நூறு மடங்கு ஆபத்தானது வேப்பிங்டா”
“அவனாவது அனுபவித்துப் பார்க்கட்டுமே. நாம நாலு பேரும் சேர்ந்து மின் சிகரெட்டை ’வேப்’ செய்ய வேண்டும்னு ஆசையோடுதான் வீட்டுக் கூப்பிட்டேன்.” அவள் கூறியதை மீண்டும் கூறியபடியே இருந்தாள்.
“இன்று ஒருநாள் மட்டும்”
பேனா வடிவில் இருக்கும் மின் சிகரெட்டை வாயில் வைத்து இழுத்தான். புகை வெளியே வந்தது. வளையங்களாக காற்றில் அலையும் புகையைப் பார்த்தவர்களின் இளம் மனது அந்த வளையத்துக்குள் நுழைந்தன.
சிலநாட்களுக்குப் பிறகு “இனி வெளியே எங்காவது சந்தித்து ’வேப்’ செய்யலாம். அந்தப் பணிப்பெண் வீட்டைவிட்டு அசையமாட்டேங்கிறா” என்றாள்
“யாராவது பார்த்துவிட்டால்?” பயத்துடன் சுருள் முடிக்காரன் கேட்டான்.
“எனக்கு ஓர் இடம் தெரியும். போன ஆண்டு மூத்தவர்கள் வாழும் வீட்டைச் சுத்தம் செய்யபோய் இருந்தேன். அந்த அடுக்குமாடியின் கடைசி மாடிப்படியில் வெளிச்சம் ரொம்பவும் குறைவா இருந்தது.” சிரித்ததும் கன்னத்தில் குழி விழுந்தது
“கிரேட்…அங்கேயே சந்திப்போம். அதுதான் கடைசியாக இருக்கணும்” கைக்குலுக்கிவிட்டு நகர்ந்தார்கள்.
ஆசிரியர் தினக் கொண்டாட்டத்துடன் ஒருவார விடுமுறை முடிந்து பள்ளியின் வளாகத்தில் நுழைந்தார்கள். தலைமையாசிரியர் அவர்களை அலுவலகத்திற்கு வரச் சொல்லி அழைத்தார். “ஏன்? என்ன நடந்தது? கண்டு பிடித்துவிட்டார்களா?” என்று மனம் புழுங்கியபடி அலுவலகத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்.
ஒன்றாகச் சுற்றிய நால்வரில் ஒருத்தி ’கேபோட்’ பயன்படுத்தியதைப்பற்றித் தெரியுமா? என்று ஏற இறங்கப் பார்த்தபடி வினவினார். அதைக் கேட்டதும் “என்ன?” என்று அதிர்ச்சியால், பயத்தால் நடுங்கினார்கள்.
“நோ…” என்று பதில் கூறுவதற்குக்கூட முடியாமல் தவித்தார்கள். அப்போது தலைமையாசிரியர் கூறியது ’ஏப்ரல் ஃபூல்’ காமெடியாக இருக்க வேண்டுமென்று அவர்களின் மனம் அடித்துக்கொண்டது.
“கேபோட் பயன்படுத்துவதைப் பெற்றோர்கள் பார்த்திருக்கிறார்கள். அவளைக் கண்டித்துப் பேசியதும் மாடியில் இருந்து குதித்துவிட்டாள்.” என்றார். அதிர்ச்சியுற்றவர்கள் கதறினார்கள். “பாப் பாடகியாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டாயே” என்று கூறிக்கொண்டே ஒருவரையொருவர் மாறி மாறி அணைத்துக்கொண்டு அழுதார்கள்.
“கேபோட் பிடிப்பது தெரிந்திருந்தால் அவளைத் தடுத்து இருக்கலாமே” கதறியவர்களின் மனம் வலித்தது.
“உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” தலைமையாசிரியர் கேட்டார்.
“யாரிடமாவது மாட்டிக்கொண்டால் யாரையும் காட்டிக் கொடுக்கவேண்டாம்” என்று கடைசியாகச் சந்தித்தபோது கூறிச் சென்றாளே. இதை மனத்தில் வைத்துதானா?
மேடையில் மைக் பிடித்துப் பாடியும் ஆடியும் மகிழ்விக்க வேண்டியவளை ஒரு வெள்ளைப் பெட்டிக்குள் பார்த்ததும் நண்பர்களின் அழுகையை நிறுத்த முடியாமல், துக்கத்திற்கு வந்திருந்த கூட்டம் தடுமாறியது.
பத்து நாட்களுக்குப் பிறகு அன்றுதான் சந்தித்துக் கொண்டார்கள்.
“பாவம்டா அவ…” என்றவளின் தோளைத் தட்டிக் கொடுத்தான் சுருள் முடிக்காரன். “இப்போ எதுக்கு மின் சிகரெட்?” உயரமானவனிடம் கோபத்துடன் கேட்டான்.
“கடைசி” என்று கூறிச்சென்றவள் உயரமானவனை கைப்பேசியில் அழைத்து இன்னொரு நாள் கடைசியாகப் பிளீஸ் என்று கேட்டிருக்கிறாள்.
“என்னது?” ஆத்திரத்துடன் அவன்மீது சீறி விழுந்தார்கள்.
“இனிமேல் இந்த மின் சிகரெட் வேப்பிங் வேண்டாம். கொஞ்ச நேரத்தில் நம்ம வகுப்பு ஆசிரியர் வந்துவிடுவார். நடந்த எல்லாத்தையும் அவரிடம் கூறிவிட்டேன்.” என்றான் சுருள் முடிக்காரன்.
“ஆஆஆ…அடப் பாவி…”
“அவர் ரொம்பவும் கண்டிப்பானவராச்சே”
“ஒரு குறுஞ்செய்தி அனுப்புங்க உதவுக்கு வருகிறேன்னு அவர்தானே கூறுவார். அதுதான்…”
அப்போது “யாரும் பயப்பட வேண்டாம், எங்கும் ஓட வேண்டாம்” என்று கூறியபடி வந்தார் திரு. அகிலன். அவரைப் பார்த்த அடுத்த நொடியே “மன்னித்து விடுங்க சார்” என்று கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதார்கள்.
“அழுவதை நிறுத்துங்க…” என்றார் கண்களைத் துடைத்துக்கொண்டார்கள். “உங்களிடம் இருக்கும் மின் சிகரெட்டுகளைச் சிவப்புக் குப்பைத் தொட்டியில் போடலாமா இல்ல..?” என்றார் சன்னமான குரலில்
“அய்யோ…இதுக்கு மேலே இது வேண்டாம் சார்”
சிவப்புக் குப்பைத் தொட்டி இருக்கும் வேறொரு வட்டாரத்திற்கு வாகனத்தைச் செலுத்தினார் திரு அகிலன். அந்த இடத்தை அடைந்ததும், “உங்க மூணு பேருக்கும் ஒரு வேலை கொடுக்கப் போறேன்”
“சார்…” குழம்பியபடி விழித்தார்கள்
“மின் சிகரெட்டை வேப் செய்வதால் கிடைத்திருக்கும் அனுபவங்களையும் அதனால், நடக்கும் தீமைகளையும் மற்ற மாணவர்களுக்கு விளக்கும் தூதுவராக மூவரையும் நியமிக்கப் போகிறேன்”
“அப்படின்னா?”
“ஒருவரைப் பார்த்ததும் மின் ’சிகரெட்டோ’ அல்லது ’கேபோட்டோ’ பயன்படுத்துகிறார்கள் என்று அவர்களது ஏதாவது ஒரு நடவடிக்கையை வைத்து உங்களால் எளிதாக அடையாளம் காண முடியும் என்று நம்புகிறேன்”
“முடியும் சார். ஆனா…வீட்டுக்குத் தெரிந்தால் கொன்றேவிடுவார்கள்” கலக்கத்துடன் கூறினார்கள்.
“இங்கு நடந்ததை வேறு யாரிடமும் கூறமாட்டேன்.”
“நன்றி சார்…”
“நீங்கள் இளம் தூதுவர்கள் மட்டும்தான் புரிந்ததா?” சிவப்புக் குப்பைத் தொட்டியைக் காட்டினார்.
“உங்க கையாலேயே போடுங்கள்.” என்றார்.
தொட்டியில் போடும்போது நான்காவது கை ஒன்றும் சேர்ந்துகொண்டது.
ஆக்கம்- மலையரசி சீனிவாசன்

