தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புயலுக்குப்பின் அமைதி

11 mins read
a68a6142-f21c-4a96-9df0-6f1e237477f0
புயலுக்குப்பின் அமைதி சிறுகதை - கி. சுப்பிரமணியம் - கி. சுப்பிரமணியம்

அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மோசமான அரசியல் சூழலை தன் தந்தையும், அவர் நண்பர் ரெங்கசாமியும் விமர்சித்துக் கொண்டதெல்லாம் இன்றும் முத்துவின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது!

எத்தனையோ போராட்டத்திற்கும், அமைதியின்மைக்கும் இடையில், சிங்கப்பூர், ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற, அண்டை நாடுகளான, மலாயா மற்றும் சாபா, சரவாக்குடன் இணைந்து மலேசியா என்ற ஒரு கூட்டமைப்பை கண்டதால், இந்த இந்தோனேசிய அதிபர் சுக்கார்னோவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? என்று கண்ணனை பார்த்து எரிச்சலுடன் கேட்டர் ரெங்கசாமி.

மறுபடியும் மறைமுகமாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை இது கொண்டுவருமென்ற தவறான தோற்றத்தை அவருக்கு இந்த கூட்டணி ஏற்படுத்தியுள்ளது. வேறு என்ன. என்று பதிலளித்த கண்ணன், மேலும் தொடர்ந்தார்.

எப்படியும் இந்த உடன்பாட்டில் இருக்கும் நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும், நிலையற்ற தன்மையை உருவாக்கவும் உறுதிபூண்டு, பயங்கரவாத தாக்குதலை முடுக்கிவிடச்செய்துள்ளார். என்று சொல்லி முடித்தார்.

மூன்று நாடுகள் மீதும் வெடிகுண்டு தாக்குதலை, பயங்கரவாதிகள தூண்டிவிட்டு செஞ்சிருக்காங்க. இதுல அதிக பாதிப்புக்கு உள்ளானது சிங்கப்பூரே!

மொத்தம் 32 குண்டுவெடிப்பு சம்பவங்கள்! என்ன கொடுமை என்று சொல்லி பெருமூச்சு விட்டார் ரெங்கசாமி.

அது தான் பத்திரிக்கையில் செய்தி வந்ததே. கேத்தே திரையரங்கு அருகில் இருந்த மெக்டொனால்டு ஹவுஸ் என்னும் கட்டிடத்தை குண்டுவைத்து தகற்த்தியதில், மூவர் மரணம்! காத்தோங் பகுதியில் கார் குண்டுவெடிப்பு! இருவர் மரணம். இப்படியே தொடர் செய்திகள் வந்த வண்ணம் தானே இருக்கு. சலித்துக்கொண்டார் கண்ணன்.!

நாடே நடுக்கம் கண்ட நேரம். இரவில், வெளியில் செல்ல பலருக்கும் பயம். முடிந்தவரை வீட்டில் இருக்குமாறு அரசு அறிவிப்பு வெளிவந்துள்ளது என்றால், பாருங்க நிலமைய என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினார் ரெங்கசாமி!

தொடர்புடைய செய்திகள்

இப்படி நாட்டின் நிலையை அவர்கள் ஒருபுறம் பகிர்ந்துகொண்டிருக்க, அரசாங்கம் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியது.

விஜலைண்டி கார்ப் என்ற சீருடை விழிப்புப்படை அமைப்பை உருவாக்கி, தீவின் முக்கிய பகுதிகளில் ரோந்து வேலையில் ஈடுபடவைத்தது.

அதோடு நில்லாது சில முக்கிய வீடமைப்பு பகுதிகளில், தன்னார்வ அமைப்பை உருவாக்கியது. ஆர்வமும், தேசபக்தியும், துணிச்சல் மிக்கோரும், இதில் சேர்ந்து காவல் பனியில் ஈடுபட செய்தது. அப்படித்தான், முத்து அக்காலத்தில் வாழ்ந்த ஜாலான் டெக் வை குடியிருப்பு பேட்டையிலும் உருவானது.

வீடுவீடாக சென்று ஆள் சேகரித்தபோது, முத்துவின் தந்தை கண்ணனும் முன்வந்து தன் பெயரை கொடுத்தார்!

இயற்கையிலேயே வலிமையான உடலமைப்பை பெற்றதோடு, அஞ்சாமை மிக்கவர் முத்துவின் தந்தை கண்ணன்!

கையில் ஒரு நீண்ட டார்ச்லைட்டும், இரும்பால் செய்யப்பட்ட வேல்கம்பு போன்ற ஒன்றை ஏந்திய வண்ணம், அந்த குடியிருப்புபேட்டையிலுள்ள மேட்டுப்பகுதியின், இருண்ட காட்டு எல்லையை பாதுகாக்க கிளம்பிவிட்டார்!

‘எல்லாரும் வீட்டுக்குள்ளேயே இருங்க. வெளியில் வரவேண்டாம். காலம் கெட்டுக்கிடக்குது’ என்று வீட்டில் இருக்கும் தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உத்தரவிட்டபடி வெளியில் செல்ல ஆயத்தமானார்.

அவர் சொல்லிவிட்டு கிளம்ப தயாரானபோது, கையில் ஒரு மெல்லிய மூங்கில் கம்புடன் பத்து வயது முத்து தந்தையின் பின்னால் நின்றுகொண்டிருந்தான்!

‘நீ எங்கடா குச்சிய தூக்கிட்டு கிளம்பிட்ட?’ என்றார் தன் மகனைப்பார்த்து!

‘நானும் காவ காக்க உங்களோடு வறேன் அப்பா’ என்றான் முத்து, தந்தையை அன்னார்ந்து பார்த்தபடி!

கண்ணனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

‘இந்த மூங்கில் குச்சிய வச்சிக்கிட்டு அந்த தீவிரவாதிகள விரட்டமுடியுமா. அவனுங்க துப்பாக்கி, வெடிகுண்டு எல்லாம் வச்சிருப்பானுங்கடா! இந்த குச்சிக்கு பயப்படுவானுங்களா’ என தன் புதல்வனின் தலையை வருடியவண்ணம் சிரித்தபடி சொன்னார் அந்த அன்புள்ளம் கொண்ட தந்தை!

‘அப்பா காவ காக்க போறதால, அம்மா, அக்கா எல்லாருக்கும் துணையா நீ இருக்க வேண்டாமா? நீ வீட்டில் இருந்து எல்லாரையும் பார்த்துக்க என்ன?’ என்று மீண்டும் தட்டிக்கொடுத்துவிட்டு வீட்டை தாண்டி இருளில் காட்டு எல்லையை நோக்கி நடந்தார்.

இந்த டெக் வை பகுதியில் உள்ள காட்டின் மறு எல்லையில், தேங்ஙா என்று அழைக்கப்படும் இடத்தில் இராணுவ விமான தலம் இருந்தது. அதை ஆர்.ஏ.எஃப் என்று அழைப்பார்கள்.

ஆகவே டெக் வை எல்லையில் பாதுகாப்புக்காக இரும்பு வேலிகள் போடப்பட்டிருந்த போதும், காடுகள் அதை ஆக்கிரமித்து, வேலியே மறைத்து கிடந்தன. இதை பயன்படுத்தி பயங்கரவாதிகள், ஊடுருவ கூடும் என அதிகாரிகள் கருதவே, இந்த ரோந்து பாதுகாப்பு ஏற்பாட்டை செய்தனர்.

விஜலைண்டி கார்ப் அங்கு வந்தபோதும், ஆள்பற்றாக்குறையின் காரணத்தால் கண்ணன் போன்றோரும் உதவ வேண்டி இருந்தது.

இரு பக்கம் பார்த்தவண்ணம் கண்ணன் நடந்துகொண்டு போகும்போது, பின்னால் இருளில், ஒரு உருவம் பின்தொடர்ந்து வருவதை உணர்ந்து உஷாரானார்!

‘நில்லுங்க அண்ணே. நானும் கூட வறேன்’ என்றது பின்னால் வந்துகொண்டிருந்த உருவம்.

குரலை வைத்து அடையாளம் கண்டுகொண்டார் கண்ணன்.

‘யாரு ரங்கசாமியா. வாங்க’ என்றார் கண்ணன்.

‘காட்டு வழியா, தேங்ஙா இரும்பு வேலி, எல்லைவரை, காவலுக்கு போகச்சொல்லி, என்னோடு இன்னொரு விஜலைண்டி கார்ப் ஆளையும் சேர்ந்து போக சொன்னாங்க. அந்த மலாய்க்காரருக்கு கடைசி நேரத்துல, உடல்நலம் சரியில்லைனு வரல. அது தான் நான் மட்டும் தனியே எப்படி காட்டுல போறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப, நீங்க நடந்துபோறத பார்த்தேன்’ என்று சொன்னார் ரங்கசாமி.

‘வாங்க சேர்ந்தே போகலாம்’ என்று உற்சாகப்படுத்தினார் கண்ணன்.

‘என்ன இருந்தாலும், நீங்க துணிச்சலானவரு அண்ணே. தனியாக கிளம்பி போறிங்களே’ என்று தன் மனதில் பட்டதை சொன்னார் ரங்கசாமி.

‘என்ன செய்றது. நாடு இப்ப இருக்கிற நிலையில, முடியாதுன்னு சொல்ல முடியல. பயந்தா நம்ம பிள்ளைகுட்டிகளுக்கும் ஆபத்துதானே. ஹும்... காலைல இருந்து வெயில்ல வேலைசெய்து, பாடுபட்டுட்டு, இரவுல ஓய்வெடுக்காம இதிலேயும் ஈடுபடுறது கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனாலும் ஈடுபடாம ஒதுங்க மனம் ஒத்துக்கல.’ என்று தன் மனநிலையை எடுத்து சொன்னார் கண்ணன்.

‘எனக்கும் அப்படித்தான் அண்ணே. நான் ஹில் வியு சாலை ஓரமா இருக்கிற யூனியன் கார்பைட் தொழிற்சாலைல தான் வேலை செய்யுறேன். அது உங்களுக்கு தெரியும் இல்லையா’ என்றார் ரெங்கசாமி.

‘ஆமாம். அத எல்லாரும் பேட்டரி கம்பனினுதான் சொல்லுராங்க. அந்த தொழிற்சாலை கோபுரத்துல பெரிய பேட்டரி போன்ற அமைப்பும் அதன் மேல ஒரு கருப்பு பூனையின் சிலையையும் கவணிக்காதவங்க யாரு இருக்கா. சொல்லுங்க’ என்றார்.

‘ஆமாம். எவரெடி பேட்டரி செய்ற கம்பெனி. அங்க, அந்த மேடாக குவிந்து கிடக்கும் சூடான கருப்பு கார்பன் தூள்கல அள்ளி, அள்ளி மிஷினுக்குள்ள எறியிற கடுமையான வேலை. அந்த சிரமமான வேலை செஞ்சிதான், எப்படியோ ஐந்து பிள்ளைங்கள வச்சிக் காப்பாத்துறேன். உடம்பு அசந்து போகுது. ஆனாலும் இந்த இந்தோனேசிய பயங்கரவாத பயலுவ செய்ற அநியாயத்த நினைச்சா நெஞ்சு பொறுக்க முடியல. அதனால தான் இதுல சேர்ந்துட்டேன். நாடு பாதுகாப்பாக இருந்தாதானெ வீடு பாதுகாப்பாக இருக்கும். என்ன நான் சொல்லுறது?’ என்றார் உருக்கமாக.

‘உண்மைதான்’ என்று ஆமோதித்தார் கண்ணன்.

இருவரும், இரண்டு மணிநேர ரோந்துக்குப்பின், காட்டைவிட்டு வெளியில் வந்து, அடுத்து தங்கள் பங்கிற்கு காவல் காக்க வந்தவர்களுக்கு வழிவிட்டு, வீடு நோக்கி சென்றனர்.

எப்படியோ அந்த பகுதியில் எந்த மோசமான நிகழ்வும் ஏற்படவில்லை. ஒருவேளை, இந்த தீவிர ரோந்தின் நிலையை கண்டு தீவிரவாதிகள் ஒதுங்கியிருக்கக்கூடும்!

இப்படியே ஒரு வருடம் ஓடி மறைந்தது. ஆயினும் பயங்கரவாதிகளின் நாசவேலையும் மிரட்டல்களும் ஓய்ந்தபாடில்லை.

ஒருநாள் மாலையில் கண்ணன் களைத்து வீடு திரும்பிக்கொண்டு இருக்கும்போது ரங்கசாமியுடன் மேலும் இரண்டு விஜலைண்டிக் கார்ப் அதிகாரிகளை வழியில் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் ஏதோ இரகசியமாக சற்று பதட்டத்துடன் பேசிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது கண்ணனால்.

‘அதோ கண்ணன் வருகிறார் பாருங்கள்’ என மலாய் மொழியில் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார் ரங்கசாமி

அந்த விஜலைண்டி அதிகாரிகள் கண்ணனை நெருங்கி, அவரிடமும் மெதுவாக ஏதோ சொல்லிவிட்டு அவசரமாக கிளம்பிவிட்டனர்.

‘சொன்னார்களா விஷயத்த’? என்றார் ரங்கசாமி.

‘ஹும்....’ என்று மட்டும் சொல்லிவிட்டு. ‘இப்ப அதுபத்தி பேசவேனாம். நான் வீட்டிற்கு போய்விட்டு, ஒருமணிநேரத்தில், புக்கிட் பான்ஜாங் தபால் கட்டிடத்துக்கு பக்கத்துல உங்கள சந்திக்கிறேன்’, என்று மட்டும் கூறிவிட்டு அவசரமாக வீட்டிற்கு கிளம்பினார் கண்ணன்.

மாலை ஆறு மணிக்கு தபால் கட்டிடம் அருகே நெருங்கிக்கொண்டிருந்த கண்ணன், ஏற்கனவே அங்கு வந்து காத்திருக்கும் ரங்கசாமியை பார்த்தபடி, அவரை நெருங்கினார்.

‘அவர்கள் சொல்வதைக் கேட்டா இது பெரிய அசம்பாவிதத்த உண்டு பண்ணும் விஷயமாக அல்லவா தோணுது’ என்றார் ரங்கசாமி, மெல்லிய குரலில்.

‘ஆமாம்,அந்த புக்கிட் தீமா ரயில் தண்டவாளத்துல வெடிவைக்கப் போறதா கிடைக்கப்பட்ட தகவல் உண்மையா இருந்தா பெரிய ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். அதுவும் ரயில் வரும் நேரம் என்றால் அவ்வளவுதான்’. என்று உள்ளக்குமுறலை மெல்ல வெளிப்படுத்தினார் கண்ணன்.

‘ஆமாம் அண்ணே. அதனால தான் நம்மை இந்த பத்தாங்கல் ரயில்வே கேட்டுல ஆரம்பிச்சி, புக்கிட் கொம்பாக், ரயில்வே கேட்டையும் தாண்டி, புக்கிட் தீமா ரயில்வே ஸ்டேஷன் வரை கவனமாக ரோந்து செய்ய சொல்லியிருக்காங்க’. என்றார் ரங்கசாமி

‘அதுசரி, நாம இரண்டு பேர் மட்டும் எப்படி போதுமானதாகும்?’ என்றார் கண்ணன்

‘புக்கிட் தீமா இரயில்வே ஸ்டேஷன்ல அதிகமா போலிஸ் கூடியிருக்காங்க. இருந்தாலும் எங்க இந்த நாசகார பயலுக பதுங்கி இருப்பானுங்ன்னு யாருக்கு தெரியும்?’. என்றார் ரங்கசாமி

‘சரி வாங்க. இருட்டிக்கொண்டு வருது. தண்டவாளத்துல நடந்தபடி பேசுவோம்’. என்றார் கண்ணன்.

தண்டவாளத்தின் இருபுறமும் இருட்டில் மெல்ல மூழ்கி இருந்தது. சற்று தூரத்தில் அங்குமிங்குமாக சில வீடுகளில் மங்கலாக விளக்கு எரிந்தபோதும் எதையும் தெளிவாக பார்ப்பது கடினமாகத்தான் இருந்தது இருவருக்கும்.

கையில் வைத்திருக்கும் டார்ச்லைட்டை கொண்டே தண்டவாளத்தையும் பக்கத்தில் வளர்ந்துகிடக்கும் புதரையும் ஊடுருவி பார்த்தவண்ணம் பேசிக்கொண்டு இருவரம் நடந்தனர்!

‘உள்நாட்டிலேயே இப்ப சுகார்னோவிற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கு. எந்த நேரமும் இராணுவ புரட்சி ஏற்பட்டாலும் ஏற்படலாம். என பக்கத்து நாட்டு நிலவரத்தை எடுத்து சொன்னார் கண்ணன்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ரங்கசாமி....

‘இன்னொரு விஷயம் தெரியுமா அண்ணே, சில நாளுக்கு முன்னால புக்கிட் தீமாவில் உள்ள பெரிய, தண்ணீர் பைப்புகல வெடிவைக்க முயற்சி செய்தப்ப, அங்க போலிஸ் பாதுகாப்பு அதிகம்னு தெரிந்து கைவிட்டவனுங்கதான், இப்ப, இங்க இரயில் தண்டவாளத்துல வெடிவைக்க முடிவெடுத்ததாக நம்ம அதிகாரிகளுக்கு உளவு கிடைத்தது.’ என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தார் ரங்கசாமி

குரலை தாழ்த்தி பேசியதை கேட்டுக்கொண்டே கண்ணனும் சேர்ந்து நடந்தார்.

இருவரும் புக்கிட் கொம்பாக் ரயில்வே கேட் பக்கம் நெருங்கும்போது, தூரத்தில் இரண்டு உருவம் தண்டவாளத்தில் அமர்ந்து இருப்பதுபோல் கண்ணனின் கண்ணுக்கு மங்கலாக தெரிந்தது.

‘ரங்கசாமி அண்ணே, டார்ச்லைட்ட அடச்சிடுங்க சீக்கிரம்!’ என்று அவர் காதுபட இரகசியமாக சொல்லிவிட்டு, தன் டார்ச் லைட்டயும் அடைத்தார் கண்ணன்

‘தூரத்துல யாரோ இரண்டு பேர் தண்டவாளத்தில் உட்கார்ந்தபடி ஏதோ செய்யுறதுபோல் தெரிகிறது கூர்ந்து பாருங்க’ என முணுமுணுத்ததோடு, ரங்கசாமியை குனிந்து இருக்கும்படி சொல்லிவிட்டு தானும் தண்டவாளத்து பக்கவாட்டு புதரில் மறைந்துகொண்டார்.

‘ஏதோ நடக்குது அண்ணே’ என்று ஆச்சரியத்துடன் முணுமுணுத்தார் ரங்கசாமி

‘நாம இப்படியே புதரின் ஓரமாக குனிந்து, அவர்களை நோக்கி வேகமாக நெருங்குவோம். வாருங்கள் என்றார் கண்ணன்.

இருவரும் இருளில் வேகமாக அந்த உருவங்களை நோக்கி நகர்ந்தனர்!

‘நெருங்கி விட்டோம். கவனமா இருங்க’ என்றார் கண்ணன்.

‘பையிலே இருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்து, தண்டவாளத்துல வைக்கிற மாதிரி தெரியுது’ என்றார் பதட்டத்துடன் ரங்கசாமி.

‘ஆமாம் அப்படிதான் தெரியுது.’ என ஒத்துக்கொண்டார் கண்ணன்.

‘அண்ணே இனி வேற வழியில்ல. நான் விஜலைண்டி சீருடை போட்டிருப்பதால, நேராக அவர்களை நெருங்கி, கையும் களவுமா பிடிக்கிறேன். எனக்கு பக்க பலமா நீங்க பின்னால ஓடிவாங்க’ என்று சொல்லிவிட்டு, கண்ணனின் பதிலுக்கு கூட காத்திராது, அந்த உருவங்களை நோக்கி ஓடினார் ரங்கசாமி.

கொஞ்சம் அதிர்ச்சியடன் அவரை தொடர்ந்து சற்று தள்ளி ஓடிவந்தார் கண்ணன்!

‘ஏ... யாரது?’ என்று உரக்க மலாய் மொழியில் கத்திக்கொண்டே ரங்கசாமி நெருங்கவும், கையில் வைத்திருந்த பொருளை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தனர் அந்த உருவத்தினர். சற்று தள்ளி கண்ணனும் ஓடிவந்துகொண்டிருந்தார்.

மிக நெருக்கமாக ஒருவனை பிடிக்கும் நிலையில், நெருங்கியபோது, தண்டவாளத்தில் கால் தடுக்கி திடீரென ஆ...அய்யோ வென கத்தியவண்ணம் கீழே விழுந்தார் ரங்கசாமி!

அதற்குள் அந்த மர்ம நபர்கள், பக்கத்து காட்டு புதர்களை கடந்து ஓடி மறைந்தனர்.

ரங்கசாமி கீழே அலறியபடி விழுந்ததை கண்டு, ஓடியவர்களை பிடிக்கும் எண்ணத்தை கைவிட்டு கீழே கிடந்த ரங்கசாமியை ஓடிவந்து, தாங்கிப் பிடித்தார் கண்ணன்.

‘என்ன ஆச்சி அண்ணே’ என பதட்டப்பட்டார் கண்ணன்.

‘ஆஆஆ.... பாதம், தண்டவாளத்துல மாட்டியதாலே கீழே விழுந்துட்டேன். ஆ.ஆ வலி தாங்கல அண்ணே’.....என வலியல் முனக ஆரம்பித்தார் ரங்கசாமி.

இந்த நேரம் பார்த்து தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்க ஆரம்பித்தது

‘அண்ணே, தூரத்துல ரயில் வரும் சத்தம் கேட்குது, மெல்ல எழுந்து நில்லுங்க’ என கண்ணன் ரங்கசாமியை தூக்க முயன்றபோதுதான், அவரின் கால் தண்டவாளத்தில் சிக்கியிருப்பதை கண்ணனால் உணரமுடிந்தது.

‘அண்ணே பாதம், தண்டவாளத்துல மாட்டி இருக்கு. மெல்ல பாதத்த வெளியே எடுக்கப்போறேன். வலியை தாங்கிக்குங்க’. என சொல்லியவாறே, தனது முழு பலத்தைக்கொண்டு சிக்கிய பாதத்தை வெளியே இழுக்கும்போது, சத்தமாக, ‘ஆஆ..அய்யோ’ என அலறியபடி மயக்கமுற்றார் ரங்கசாமி. அதற்குள், ரயில் அவர்களை நோக்கி நெருங்கிக்கொண்டிருந்தது.

கண்மூடி கண்திறப்பதற்குள் ரங்கசாமியை தன் இரு கைகளால் தூக்கி பக்கவாட்டு புதரில் போட்டு, தானும் பாய்ந்து புதரில் விழவும், ரயில், அவர்களை கடந்து செல்லவும், நேரம் சரியாக இருந்தது!

நல்லவேளையாக சத்தத்தை கேட்டு கொஞ்சம் தூரத்தில் ரோந்தில் ஈடுபட்டு இருந்த சிலரின் உதவியுடன், ரங்கசாமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தண்டவாளத்தில் சிக்கிய பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு, கீழே விழுந்ததால் தண்டவாளத்தில் போடப்பட்ட கல்லில் நெற்றி மோதி, அங்கும் ஆழமான காயமும் ஏற்பட்டு எட்டு தையல்கள் போட்டனர் மருத்துவர்கள்.

பாதுகாப்பு அதிகாரிகள் யாவரும் ரங்கசாமியை மருத்துவமனையில் சந்தித்து அவரின், மருத்துவ செலவுகளை ஏற்றதோடு, ரங்கசாமி மற்றும் கண்ணனின் துணிவையும், நாட்டு பாதுகாப்பின் மீது அவர்கள் கொண்ட அக்கரையையும்.வாயார பாராட்டி சென்றனர்.

ஒரு மாத சிகிச்சைக்குப்பின், ரங்கசாமி வீடு திரும்பினார்.

கண்ணன் தன் மகன் முத்துவையும் அழைத்துக்கொண்டு, ரங்கசாமியை, அவர் வீட்டில் சென்று பார்த்தார்.

‘என்னை துணிச்சலானவர் என்று சொன்ன நீங்கத்தான் துணிச்சலானவர் அண்ணே’ என ரங்கசாமியை புகழ்ந்தார் கண்ணன்.

அப்படி இல்ல அண்ணே. கூட நீங்க இருந்ததாலத்தான் எனக்கு துணிவு வந்தது என்றார்.

தொடர்ந்து....ஆனாலும் அந்த தீவிரவாதி பயலுகல பிடிக்கமுடியாம போச்சே என்று ஆதங்கப்பட்டார்.

எப்படியும் அசம்பாவிதம் நடக்காம காப்பாத்திட்டோம். அது போதும் என்றார் கண்ணன்.

சில காலம் உருண்டோடியது. தவிர்க்முடியாத சூழ்நிலையால், சிங்கப்பூர், மலேசிய கூட்டமைப்பைவிட்டு விலக நேரிட்டது!

‘பத்திரிக்கைல வந்த நல்ல செய்திய பார்திங்களா அண்ணே’ என்றார் ரங்கசாமி.

‘என்ன செய்தி’ என்றார் கண்ணன்.

‘இந்தோனேசியாவில், சுகார்னோவின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டு, அவரை பதவியிலிருந்து விலக்கி, சுகார்தோ என்ற நடுநிலையாளர் ஆட்சியை கைப்பற்றியதோடு, இந்த மலேசிய கூட்டமைப்பை எதிற்கும் போக்கையும் கைவிடப்போவதாக உத்திரவாதம் தந்துள்ளார். சிங்கப்பூரின் சுதந்திர ஆட்சியையும் அங்கீகரிப்பதாகவும் கூறியிருக்கிறார்’. என்று முகமகிழ்ச்சியுடன் சொல்லிமுடித்தார் ரங்கசாமி.

‘இனி நம் நாட்டிற்கு ஏற்பட்ட கஷ்டகாலம் விட்டது அண்ணே. இனி நல்ல முன்னேற்றத்த நோக்கி நாடு நடைபோடும்’ என்று உணர்ச்சிபூர்வமாக பதில் சொன்னார் கண்ணன்!

இன்று அறுபது வருடங்கள் கடந்துவிட்டன.

அன்று முத்துவின் தந்தை கண்ணனும், ரங்கசாமியும் பேசிக்கொண்டதை, சிறுவனாக இருந்து கேட்டதை, இன்றம் முத்துவின் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

இன்று, தானும் முதுமையடைந்த நிலையில், அதை எண்ணிப்பார்க்கும்போது, மறைந்துபோன தன் தந்தை, மற்றும் ரங்கசாமியின் உரையாடல் இன்று உண்மையாகி, நாடு உச்சத்தில் இருப்பதை நினைத்து, இருவரின் தன்னலமற்ற தியாகத்திற்காகப் பெருமைப்பட்டது முத்துவின் மனம்..

கி. சுப்பிரமணியம்

குறிப்புச் சொற்கள்
கதைகதை/கவிதைஞாயிறு முரசு