அதிகாலை 3 மணியிருக்கும், எனக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது...?
இந்த வரிகளுடன் நான் எழுத ஆரம்பித்தக் கவிதையினை இரவில் முழுமையாய் முடிக்காமலேயே தூங்கிப்போயிருந்தேன். பொதுவாகவே படுக்கையறைகளில் சுழலும் தாகத்தின் நாவு போல்... இன்னமும் முடிக்கப்படாமல், ஆரம்பித்த வேகத்திலேயே தொடராமல் தூங்கிப்போன எனது கவிதையின் ஆரம்ப வரிகள் மெத்தையில் படபடத்து விசும்பிக் கொண்டிருந்தன...
பிறகு மெதுவாய், என் சொப்பன வாயிலை நோக்கிப் பயணப்பட ஆரம்பித்தன... என் கனவிற்குள் நுழைந்த அந்தக் கவிதை மிருகம் மெதுவாய்த் தன் கூர் வரி நகங்களால் என் மூளைத்திசுவைப் பிறாண்ட ஆரம்பித்தது. படுக்கையின் இடப்பக்க மூலையிலிருந்து வலப்பக்கமாய் நான் புரண்டு உறங்கிக் கொண்டிருந்தேன். காற்றின் முகர்தலுக்கு இணக்கமாய் ஜன்னல் திரைச்சீலைகள் அசங்கிக்கொண்டிருந்தன...
விழித்துக் கொண்ட மிருகத்தின் பற்களில் நான்!
என, கவிதையின் அடுத்த வரிகள் என்னை மெதுவாய்த் தின்ன ஆரம்பித்தன.
கண்களை ஒரு கைகளால் மடக்கி மறைத்தபடியே படுத்துத் தூங்கப் பழகிய நான், இப்பொழுது என் மேல் இடி விழுந்தால் கூட கலைந்துவிடாத ஆழ்ந்த அடர் நிஷ்டையில் இருந்தேன். பக்கத்துத் தீவின் அடர்வனம் எரிந்த மாசுபட்டக் காற்றின் நாசச் சுவாசம் என் நாசியில் ஏறுவதுமறியா அசதியில் நான் அயர்ந்த நித்திரையில் இருந்தேன்...
இப்பொழுது நானா மிருகமா எனும் குருஷேத்திரம் ஆரம்பமாகியிருந்தது...
என கவிதையின் தொடர் வரிகள் உள்ளுக்குள் ஊசியாய்க் குத்தத் தொடங்கியது.
அப்பர் செராங்கூன் சாலையின் எதிர்புறம் நடந்து கொண்டிருக்கும் கட்டுமானப்பணித் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் டவர் கிரேன்களின் விளக்கு வெளிச்சம் ஜன்னல் வழி என் முகத்தில் படர்ந்தபோதும் நான் உறங்கிக் கொண்டிருந்தேன். அதிகாலை மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.
மிருகத்தின் வாயில் மிருக மனதுடன் நான்... நான் எனும் மிருகமே , மிருகத்தின் வாயில்...
என்றபடி முடிக்கப்படப் போகும் என் கவிதை வரிகளால், இந்த விடியலின் அதிகாலையில் உங்களுக்குள் இருக்கும் மிருகமும் இனி விழித்துக் கொள்ள ஆரம்பிக்கலாம்… என்பதைச் சொல்வதுபோல் என் படுக்கையறையில் முடிக்கப்படாமல் எழுதப்பட்ட வரிகளின் படபடப்புடன்...
இப்பொழுது நேரம் சரியாக அதிகாலை 3 மணி!
நெப்போலியன்

