சிட்டுக் காட்டினாய்
சிறு முகை முட்டிப்போகும் நிலாக்காட்டினாய்
சிகை தடவி என் பிஞ்சு முகம் தடவி
சின்னப் பொய்சொல்லி -இல்லா
மூன்று கண்ணனை வரச்சொல்வாய்
பதறி வாங்கிக்கொள்வேன்
மருதாணி பூசிக்கொண்ட கைவிரலின் வாசத்தோடே
கவளவாய் உண்டபின்னும்
கவலை கொள்வாய்
கண்ணுருட்டி, அதட்டி மிரட்டி -நான்
கண்கலங்க
கன்னமழுந்த முத்தமிட்டு, கண்ணே என்பாய்
“ஆ” காட்டி இரண்டாம் முறையும் வாங்கிக்கொள்வேன்
உண்ட வாய் வழிய
கண்ட இடமும் ஓடித்திரிவேன் -நீ
நின்ற இடம் ஒளிந்துகொள்வாய்
மறைந்த இடம் தேட, மரம் -செடி சுற்றிப்பார்ப்பேன்
பறவை போல் சத்தம் செய்வாய்
ஓடி வந்து கட்டிக்கொள்வேன் -முத்தம் பரிமாற ,
மீண்டும் ஒரு பிடி உள்ளிறங்கும்
முகிலுண்டு துப்பிய நிலா- கடிபட்ட
முகம் காட்டும் -நீ,
அந்த நிலாவுக்கு ஒருவாய்
மரம் அமரும் பறவைக்கு ஒருவாய்
வாலாட்டி முகம்காட்டி நிற்கும் நாய்க்கு ஒருவாய்
வழித்து துடைத்து -என் தங்கக் கட்டிக்கு ஒருவாய்
என்றேற்கும் கடைசிவாயோடு
முடியுமந்த நிலாச்சோறு ...
சோறுண்ட களைப்பில் தூங்கிப்போகும்
வெளித்தூளியில் நானும்
எனக்கு நேர் மேலே நிலவும் ...
ரிஷிசேது

