விழித்தெழும் கதிரவன்,
கீழ்த்திசையில் முகம் மலரும்
அந்த அழகும் ஒரு கவிதையே!
முகம் மலர்ந்த கதிரவனின்
முகத்தினை மூடி மறைத்து
விளையாடும் மேகக் குழந்தைகளின்
அந்தச் சுட்டித்தனமும் ஒரு கவிதையே!
விளையாடும் மேகக் குழந்தைகளை
ஆசையுடன் அரவணைத்துச் செல்லும்
அந்தத் தென்றல் காற்றின் அன்பும்
ஒரு கவிதையே!
தென்றல் காற்றின்
அரவணைப்பில் அசைந்திடும்
அந்த விருட்சகங்களின் நடனமும்
ஒரு கவிதையே!
நடனமாடும் விருட்சகங்களின்
கிளைகளில் அமர்ந்து
பாட்டுக் குயில்கள் பொழியும்
அந்த கானமும் ஒரு கவிதையே!
அமுத கானம் பொழியும்
பாட்டுக் குயில்களின் குரலில் மயங்கி
இந்த மனிதன் இயந்திர வாழ்க்கையிலிருந்து
விடுபட்டு லயிக்கும் கணநேரத்தில்
அவனது வதனத்தில் தீட்டப்படும்
அந்த ஓவியமும் ஒரு கவிதையே!
அழகு பொங்கும், அன்பு வழியும்
அமைதி தரும், அர்த்தப்படும்
அனைத்தும் எனக்கு கவிதையே!
அ.ஷாஹூல் ஹமீது

