அந்தரங்கம் அழகானது

9 mins read
d38bcbd0-30eb-42b1-a35a-3491d49d6d79
சிவக்குமார் கே.பி. - சிவக்குமார் கே.பி.

அந்த சனிக்கிழமை காலை, இயற்கைக்கு சிங்கப்பூர் மீது பாசம் பொங்கி வழிந்தது என்பதற்கு அடையாளமாய், லேசான மேகமூட்டத்தோடு மழைத் தூறலும், ஜில் என்ற காற்றும் வீசியது. இயற்கை வரைந்த இந்த படத்திற்கு பின்இசை அமைப்பதுபோல், அடர்ந்த மரங்களினிடையே மறைந்திருந்த சிட்டுக்குருவிகளும் மைனாக்களும் தங்கள் குரல் வளத்தை முழுமையாக வெளிப்படுத்தின.

அன்று விடுமுறை என்று அறிந்தும் கூட, ஏனோ சற்றே சீக்கிரம் எழுந்த மீரா, இயற்கையின் எழிலை தன் வீட்டு வெராண்டாவில் நின்று ரசித்துக்கொண்டிருந்தாள். அந்த ஒளியும் ஒலியும் கொண்ட வரைபடத்திற்கு, தங்களால் மணமும் சேர்க்க முடியும் என்று அந்த வெராண்டாவிலிருந்த மல்லி செடியின் லேசாக விரிந்த மொட்டுக்கள் நறுமணத்தை வீசின.

இந்த இயற்கையின் எழிலை ரசித்திகொண்டிருக்கும் வேளையில், கார்த்திக் அவளருகே இரண்டு கப் சூடான காபியோடு நிற்கிறான் என்பது கூட அறியாமல் அந்த அமைதியில் தன்னை மறந்திருந்தாள் மீரா.

“மீரா, என்ன அதிசயமா சனிக்கிழமை சீக்கிரம் எழுந்திட்ட?” என்று

அவன் கேட்டபோது, அந்த காபியை வாங்கியவாறு ‘தேங்க்ஸ்’ என்றாள்.

சற்று நேரம் கழிந்து அவனை மீண்டும் பார்த்து, “ என்ன சொன்ன கார்த்திக்?” என்று அவள் கேட்டதும், அவன் லேசாக தலையை அசைத்து சிரித்தான்.

“சாரி, ஏதோ நினைப்புல இருந்தேன்” என்று சொல்லிவிட்டு தொடர்ந்தாள். “கார்த்திக், நேத்து சொல்ல மறந்துட்டேன். என்னோட சக வேலை செய்யறவரையும் அவர் மனைவியையும் இன்னிக்கி சாயந்திரம் நம்ம வீட்டுக்கு விருந்துக்கு அழைச்சிருக்கேன். அவர் பெயர் ஜான். ஜானும் அவர் மனைவியும் இந்தியாவிலிருந்து கொஞ்ச வாரம் முன்னதான் சிங்கப்பூர் குடி வந்திருக்காங்க. நைஸ் பெர்சன். யு வில் லைக் ஹிம்”

“குட். நான் கூட இன்னிக்கி சாயந்திரம் என்ன பண்ணலாமுனு யோசிச்சிட்டிருந்தேன். பரவாயில்லை, புதுசா ஒருத்தரோட பழகறது நல்லதுதான்.” என்று அவனும் அவள் முடிவை ஆமோதித்தான்.

மணி ஏழு. ஜான் வருகைக்காக மீரா காத்துக்கொண்டிருந்தாள். அவர்கள் வருவதற்குள், ஏதோ ஆபீஸ் வேலை முடிக்க கார்த்திக் தன் அறையில் வேலை செய்துகொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து வாசற்கதவருகே அவர்கள் வருவதை கண்ட மீரா, “ஹே ஜான்!! வாங்க வாங்க” என்று அவனை வரவேற்றுவிட்டு ஜான் பின்னால் நின்றிருந்த அவர் மனைவியிடம் “ஹலோ. வெல்கம்” என்றாள்.

“மீரா, இது தான் என் மனைவி ஜெனிபர்” என்று ஜான் அவன் மனைவியை அறிமுகப்படுத்தியபோது, மீராவுக்கே ஜெனிபரைப் பார்த்துக் கொஞ்சம் பொறாமையாக இருந்தது. ‘நல்ல அழகா இருக்கா!!’ என்று மனதில் நினைத்ததைக் கொஞ்சம் மெதுவாக “லுக்கிங் குட்” என்று அவளை வரவேற்றாள்.

“வாவ்!! அழகான வீடு மீரா. ரொம்ப அழகா இருக்கு. நைஸ் டேஸ்ட்” என்று வீட்டிற்குள் வந்ததும் சொன்ன ஜானை பார்த்து, “தேங்க்ஸ் டு கார்த்திக். என் கணவர்” என்று சொல்லி கார்த்திக்கை அழைத்தாள்.

அங்கே வந்த கார்த்திக்கிடம் “கார்த்திக், இது தான் என்னோட சக வேலை பண்ணற மிஸ்டர் ஜான். இது அவர் மனைவி ஜெனிபர்” என்று அவர்களை மீரா அறிமுகப்படுத்தியபோது “வெல்கம்” என்று ஜானிடம் கைகுலுக்கியவன், ஜெனிபரைப் பார்த்த அடுத்த நிமிடம் சிலையாகிவிட்டான்.

அவன் ஜெனிபரைப் பார்த்து ஒரு நிமிடம் சிலையானதை கார்த்திக்கை கடந்து சென்ற மீராவும், ஜானும் கவனிக்கவில்லை. அந்த வாய்ப்பு தங்களுக்குச் சாதகமாக அமைந்தது கண்டு, கார்த்திக்கும் ஜெனிபரும் ஒருவரையொருவர் ஐந்து நொடிகள், ஆம் ஐந்து நொடிகள் அமைதியாகப் பார்த்துக்கொண்டனர். ஆனால் அந்த ஐந்து நொடிகள், அவர்கள் இருவரின் நினைவலைகளை ஒரு பதினைந்துவருடம் பின்னுக்கு தள்ளியது.

ஆழ்ந்த உறவில் இருந்த இருவர் பிரிந்து சென்று பதினைந்து வருடங்கள் ஆனாலும், அந்த கடைசி சந்திப்பை மனதின் ஆழ்கடலிலிருந்து தேடி எடுத்து, தூசி தட்டி துடைத்து, ஏதோ இப்போது விரிந்த மொட்டின் வாசனைபோல் அந்த நினைவுகளை அவர்கள் முன்னே மனம் கொண்டு நிறுத்தும். அப்படித்தான் கார்த்திக்குற்கு அவர்களின் கடைசி சந்திப்பு அப்போது அவன் முன் நின்றது.

‘இது நடக்காது கார்த்திக். எங்க வீட்டில யாருக்கும் இதுல சம்மதம் இல்லை. நீ பேசாம அமெரிக்காவுக்கே படிக்க போயிடு. எனக்காக உன்னோடு எதிர்காலத்தை வீணாக்கிக்காதே. என்னை மறந்துடு.. ப்ளீஸ் ப்ளீஸ் “ என்று ஜெனிபர் அவளின் மீன்விழிகளில் கண்நீர் தளும்ப கார்த்திக்கிடம் கடைசியாக பேசிய வார்த்தைகளும், அவள் அன்று அணிந்திருந்த அந்த வெள்ளை நிற சுடிதாரையுங்கூட அவன் மனம் மறக்காமல் அவன் முன் நிறுத்தியது.

அதன் பின் அந்த இரவு முழுவதும் பித்து பிடித்தவன் போல் தன் பைக்கில் தனியாக சுற்றியது அவன் நினைவிற்கு வந்தது. அடுத்த நாள் காலை ஜெனிபர் வீட்டிற்கு ஒரு சொட்டு தூக்கம் கூட இல்லாமல் அவன் சென்று ஏதோ தைரியத்தில் அவள் தந்தையிடம் பேசினான். அவள் அப்பாவும் அண்ணனும் ஜென்னிபரை அவன் தொந்தரவு செய்வதாக போலீசில் புகார் செய்ய, தன் வாழ்க்கையில் முதல் முறையாக போலீஸ் வண்டியில் ஏறிய கசப்பான அனுபவம் கூட அவன் நினைவிற்கு வந்தது.

நல்ல வேளையாக அப்பாவின் நண்பர் போலீசில் பெரிய அதிகாரியாக இருந்ததால், அவன் மீது எந்த வழக்கும் பதிவாகாமல், பின் மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றுவிட்டான். இது நடந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஜென்னிபரின் அந்த நினைவுகளில் ஆழ்ந்து மூழ்கி இருந்தவனை ‘மிஸ்டர் கார்த்திக், எல்லாம் ஓகே தானே?” என்று ஜெனிபர் பற்றி நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் அவன் நினைவுகளை கலைத்தார் ஜான்

“உங்களுக்கு இன்னிக்கி ஏதோ ஆபீஸ் வேலை இருக்கறதா மீரா சொன்னா. சாரி நாங்க உங்க வேலைய டிஸ்டர்ப் பண்ணிட்டோம் போல” என்று அவர் மேலும் தொடர , “நோ நோ. எஸ் எஸ்.. ஏதோ ஆபீஸ் நினைப்புல இருத்தேன். மன்னிக்கணும்” என்று கார்த்திக் சமாளித்தான்.

“மீரா, வந்தவங்களுக்கு காபி, டி ஏதாவது கொடுத்தியா?. ஜென்னிபருக்கு ஐஸ் டி...” என்று வாய் தவறி சொன்னதை, “ஐஸ் டி….ரிங்க்ஸ் கொடுத்தியானு கேட்க வந்தேன்” என்றான். மீரா பேச்சு மும்முரத்தில் அதை கவனிக்கவில்லை. ஆனால் அவன் வாய் தவறி சொன்ன ‘ஐஸ் டீ‘ ஜென்னிபரின் நினைவுகளை தூண்டின.

சென்னை, இலயோலாக் கல்லூரி. வருடம் 2003. ஜூலை மாதம். நாள் 23. அந்த நாளை ஆழ்மனதிலிருந்து தேடி கண்டுபிடிக்க ஜென்னிபருக்கு ஒரு நொடி கூட எடுக்கவில்லை.

அன்று முதலாம் ஆண்டு மாணவர்கள் சேரும் தினம் என்பதால் கல்லூரியில் ராக்கிங். ஆனால் அதை ராக்கிங் என்று அப்பட்டமாக சொல்லாமல் ‘ஜூனியர்ஸ் சீனியர்ஸ் மீட்’ என்று அதற்கு பெயர் கொடுத்து முதலாம் ஆண்டு மாணவர்கள் அவர்கள் சீனியர்ஸ் கேட்பதை வாங்கி கொடுக்கவேண்டும்.

யார் யாருக்கு வாங்கி கொடுக்கணும் என்று சீட்டு குலுக்கி போடுவார்கள். உண்மையில் அது ஜோடி சேர்க்க விளையாடும் விளையாட்டு.

“ஜெனிபர் - கார்த்திக். யாருடா கார்த்திக்? முன்னால வா” என்று அவள் தோழியின் குரல் கூப்பிட்டபோது ஜெனிபர் முதல் முறை கார்த்திக்கை பார்த்தாள்.

“த்..தோடா... ரொம்ப சமத்து பையன் மாதிரி இருக்க…. டேய் ஜெனிபருக்கு என்ன வேணும் கேட்டுட்டு வாங்கிட்டுவா” என்று அவர்கள் இருவரை சேர்க்க முதல் அடி எடுத்துவைத்தது அவள் தோழியின் குரல்.

ஜெனிபர் கார்த்திக்கை விட ஒரு வருடம் சீனியர். முதல் முறையாக அவள் கார்த்திக்கை பார்த்தபோது அவளுக்கு கோபம் வந்தது. படிப்பே வாழ்க்கை என்று இருந்த ஒரு பையனை தன்னோட கோர்த்துவிட்டதற்காக தன் தோழியை ஓரக்கண்ணால் திட்டினாள்.

“எஸ் அக்கா” என்று அவளை முதல் முறை கார்த்திக் அழைத்தபோது, “என்ன அக்காவா!!! அவனவன் ஜெனிபர் கூப்பிடமாட்டாளா காத்துட்டிருக்கான்.. நீ என்னடானா அக்கானு கூப்பிடற??” என்று அவள் அவனை செல்லமாக ஏசிவிட்டு “எனக்கு ஐஸ் டி வேணும். போய் கேன்டீன்ல வாங்கிட்டுவா” என்று அவனை அனுப்பினாள்.

“ஹே ஜெனிபர், நம்ம கேன்டீன்ல எங்கடி ஐஸ் டி கிடைக்கும்?. பாவம் டீ அவன்” என்று அவள் தோழி மெதுவாக சொன்னபோது “ஹே!! நீ வேற.. பையன் சமத்தா இருக்கான். கொஞ்சம் கலாய்ப்போம்” என்று ஜெனிபர் பதிலலித்தாள்.

‘ஐஸ் டி’ வாங்க சென்றவன் ஒரு அரை மணி நேரம் ஆகியும் வரவேயில்லை.

“இதுக்கு தான் நான் அப்போவே சொன்னேன். சும்மா கலாய்க்காதே. எங்க ஏரியா ‘தயிர் சாதம்’ பசங்க பற்றி எனக்கு நல்லா தெரியும் டி!!! ஜூட் விட்டுருப்பான்” என்று அவள் தோழி சொல்லிமுடிக்கும் போது ஜெனிபர் முன் வந்து நின்றான் கார்த்திக்.

வேர்க்கவிருவிருக்க இருந்தவனைப் பார்த்ததும் ஜெனிபர்க்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

“இவ்வளோ அழகான சீனியர் கேட்டதுக்கப்புறம் ஒரு ஐஸ் டி கூடவா என்னால வாங்கிக்கொடுக்க முடியாது. அதனால பைக் எடுத்துட்டு, பக்கத்துல இருக்கற காபி ஷாப் போய் வாங்கிட்டு வந்தேன். இந்தாங்க ‘ஐஸ் டீ’” என்று சொல்லிவிட்டு கார்த்திக் ஜெனிபரிடம் முதல் முறையாக அந்த ஐஸ் டீயை நீட்டியது ஜெனிபர் நினைவில் இப்போதும் பசுமை மாறாமல் அவள் முன் வந்து நின்றது.

ஜெனிபரின் நினைவலைகளை அந்த நேரத்தில் கலைக்கும் வண்ணம், ஜானின் குரல் அவளை 2025 வருடத்திற்கு கொண்டுவந்தது.

‘ஹே ஜெனிபர்! மீராவும் நானும் மும்முரமா ஆபீஸ் விஷயம் பத்தியே இப்போ மீட் பண்ணும்போது கூட பேசிட்டிருக்கோம். அதுல உங்க ரெண்டு பேரையும் கவனிக்கலை” என்று ஜெனிபரையும் கார்திக்கையும் பார்த்து ஜான் சொல்லிவிட்டு, “சாரி டார்லிங்,“ என்று ஜெனீபரை செல்லமா அணைத்தான்.

“மிஸ்டர் கார்த்திக். ஜெனிபருக்கு நான் சக வேலைபண்ணறவங்க வீட்டுக்கு போறோம்னு சொன்னாலே பிடிக்காது. நீ எப்போதும் அங்கேயும் ஆபீஸ் விஷயம் பத்தி தான் பேசுவ சொல்லி வேற ஏதாவது டாபிக் பத்தி பேசச் சொல்லுவா. ஆனா இன்னிக்கி ரொம்ப ஆச்சர்யம், அவ எதுவுமே பேசாம அமைதியா கேட்டுட்டிருக்கா. ஐ திங்க், ஷி லைக்ஸ் தி ஈவினிங்” என்று ஜான் சொன்னபோது கார்த்திக்கும் ஜெனிபரும் முதல் முறையாகப் பதினைந்து வருடம் கழிந்து நேருக்கு நேர் பார்த்து லேசாகச் சிரித்துக்கொண்டனர்.

“வாங்க சாப்பிடலாம்” என்று இப்போது மீரா எல்லோரையும் அழைக்க, அவர்கள் ஜோடியாக மேஜையின் எதிர் எதிரே அமர்ந்தனர்.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஜானோடு சிங்கப்பூர் பற்றி பேசிக்கொண்டிருந்த கார்த்திக், ஜெனிபரிடம் எதுவும் நேராக பேசவில்லை. மீரா மட்டும் ஜெனிபரோடு அவ்வப்போது பேச்சுக்கொடுத்து கொண்டிருந்தாள்.

“ஜெனிபர், உங்களோட இந்த வெள்ளை சுடிதார் ரொம்ப அழகா இருக்கு. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா!! கார்த்திக்குற்கு வெள்ளை தான் ரொம்ப பிடிக்கும். ஆனா அது அழுக்கு ஆயிடும்னு சொல்லி நான் வாங்கறதில்லை. “ என்று அவள் சொன்னபோது கார்த்திக்கும் ஜெனிபரும் ஒரு அரை நொடியில் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கொண்டனர்.

“ஜான் கேட்கணுமுனு நினைச்சேன். உங்க கலியாணம் எப்படி? வீட்டில பார்த்து ஏற்பாடு செஞ்சுதா? இல்லாட்டி லவ்….” என்று மீரா கேட்டதற்கு, ஜான் அவனருகே இருந்த ஜெனீபரை பார்த்து, “ஜெனிபர், பேசாம இதுக்கு நீ பதில் சொல்லேன். நானே பேசிட்டுருக்கேன்” என்று அந்த கஷ்டமான கேள்வியை ஜெனிபர் பக்கம் தள்ளிவிட்டான். அனைவரும் இப்போது ஜெனிபரின் பதிலுக்காக காத்திருந்தனர்.

“லவ்” என்று ஆரம்பித்த ஜெனிபர், “என்ன பொறுத்தவரைக்கும் வீட்டில பெரியவங்க பார்த்து நிச்சயம் பண்ணினாலும் சரி, நாம பார்த்து லவ் பண்ணினாலும் சரி, கடைசிவரை வாழப்போறது நாம தான். அதுக்கு லவ் தான் அடித்தளம். கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணுவதை விட, கல்யாணத்துக்கப்புறம் லவ் பண்ணி அந்த உறவை பாதுகாப்பது தான் முக்கியம்.” என்று அவள் சொன்னபோது அதற்கு மற்ற மூவரும் அமைதியாக இருந்தனர்.

ந்த அமைதியை கலைக்க ஜெனிபர் கார்த்திக்கை பார்த்து, “என்ன மிஸ்டர் கார்த்திக்? நான் சொன்னது சரியா? ஏன்னா உங்க வீட்டில மாட்டியிருக்கிற அந்த ‘தாஜ்மகால்’ முன்னாடி நீங்களும் மீராவும் எடுத்த படம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உங்களுடைய மண வாழ்க்கையும் லவ்னுதான் நினைக்கிறேன்,” என்று அவள் சொன்னபோது முதல் முறையாக ஜெனீபரை கண்ணோடு கண் பார்த்து கார்த்திக் லேசாகச் சிரித்தான்.

அந்த அழகான மாலைச் சந்திப்பு முடிந்து, ஜானும் ஜெனிபரும் கிளம்பிய பிறகு, கார்த்திக்கும் மீராவும் அமைதியாக அவர்கள் வீட்டு முகப்பில் நின்று கொண்டிருந்தனர்.

இயற்கைக்கு சிங்கப்பூர் மீது பாசம் இன்னும் பொங்கி வழிந்துகொண்டிருந்தது என்பதற்கு அடையாளமாய் ஜில் என்று காற்று வீசியது. காலையில் லேசாக மலர்ந்திருந்த மல்லியின் மொட்டு இப்போது முழுமையாக மலர்ந்து நல்ல மணமும் வீசியது.

கார்த்திக் தன் மனதின் அந்தரங்கத்தில் ஜெனிபர் சொன்ன அந்தப் பதிலை நினைத்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும், அவள் நினைவில் தன்னை இழந்துவிடுவேனோ என்று நினைத்தவனுக்கு அவளின் பதில் தெளிவைக் கொடுத்தது.

அப்போது கார்த்திக்கின் அருகே வந்த மீரா, சற்று நேரம் அந்த அமைதியை ரசிக்க கார்த்திக்கின் தோளில் சாய்ந்தாள்.

‘நானும் ஜானும் லவ் பண்ணின விஷயம், அந்த அந்தரங்கம், ஒரு முடிந்த கனவாகவே இருக்கட்டும். அதுதான் எல்லாருக்கும் நல்லது,” என நினைத்தாள் மீரா.

சற்று நேர அமைத்துக்குப்பின், கார்த்திக்கும் மீராவும் அவர்கள் அறைக்குள் சென்றனர்.

அதற்கு பின் நடந்தது, அவர்களின் அந்தரங்கம்.

சிவக்குமார் KB

குறிப்புச் சொற்கள்
கதைகவிதைஞாயிறு முரசு