புதுமைதாசன் (மூத்த எழுத்தாளர் பி.கிருஷ்ணன்)
செந்தமிழ்ச் செல்வர் செவ்விய நெறியர்;
சிந்திடும் புன்னகை சிறப்புக் குரியர்!
அப்பர் பெயரை அணியெனத் தாங்கி
இப்புவி தன்னில் இனிதே தோன்றிய
நல்லார் நற்றிரு நாவுக் கரசெனும்
வல்லார் தம்மை வாழ்த்திதல் கடனே!
நந்தமிழ் இலக்கியம் நன்னகர் ஈங்கு
நொந்த நிலையில் நுடங்கிய வேளை
பகலவன் அன்ன பண்பார் அரசு
தகவின ராகச் சடுதியில் வந்தார்.
இன்றமிழ் இலக்கியம் இழிந்ததை எண்ணிக்
குன்றென உயர்ந்த கொள்கைப் பிடிப்பால்
ஈர்மைத் திறத்துடன் இலக்கியச் சர்ச்சையும்
சீர்மைச் சிறப்புடன் சிறுகதைப் போட்டியும்
இரசனை வகுப்பும் இண்ளை பிறவும்
முரசில் முழங்கிட முயன்று வென்றார்!
எழுத்தை யாளும் இயல்புடை யாரை
இழுத்துத் திரட்டி எடுத்தார் பேரவை!
‘தமிழகப் படைப்புகள் தனிச்சிறப் புடையன.
தமிழர் தம்மின் தன்மையும் அதுவே’
என்னும் போக்கை இசைவாய் மாற்றி
இன்னரும் சிங்கை எழுத்துப் படையில்
எழுச்சி யுற்றே ஏற்றங் காண
முழுத்திறத் துடனே முயன்று வென்றார்!
இறும்பூ தெய்தும் இயல்பினைப் போன்று
நறும்பூந் தோட்டம் நனியுற அமைத்தார்!
‘தும்பி’ யென்னும் தூய பெயரில்
விம்மிதம் பொங்கும் விழுமியக் கருத்தைக்
கூர்த்த மதியால் குவலயம் வியக்க
ஆர்த்தே முழங்கினார் அழகுடைத் தமிழில்,
பைந்தமிழ் நெறிகளைப் பாங்காய்ப் பகர்ந்தார்!
நைந்து கிடந்த நந்தமிழ் மக்கள்
உய்திடும் வண்ணம் உரன்மிகு எழுத்தால்
‘வய்தி’ என்னும் வண்டமிழ்ப் பெயரில்
வடித்தார் படைப்பை வன்மை யுடனே!
குடிமை எண்ணம் குவிந்து பெருகிட
அரசுப் பணியில் அரும்பணி யாற்றி
முரசுப் பணிக்கு முடுகித் திரும்பினார்.
முனைப்புடை முறையில் முரசை முடுக்கிடும்
விணையினைத் தொடங்கிட வீறுடன் எழுந்தார்.
அச்சுக் கோத்தலின் அரிய முறையினை
மெச்சும் வண்ணம் மேன்மைக் கணினியில்
ஏற்றும் முறைக்கே ஏற்பச் செய்து
மாற்றங் கண்டார் மாண்புறும் வகையில்!
முரசின் ஏற்றம் முதன்மை யுடைத்து;
முரசு தமிழர் முகவரி யென்று
முனைந்தே உழைத்த முனைவரை
நினைந்து போற்றுதல் நேரியர் கடனே!

