கெடு

5 mins read
50eac734-5f6d-46c6-b4c2-17f3e589d7bf
-

ரா. கமல்ராஜ்

அந்த இணைய பக்கத்தையே கொஞ்ச நேரமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தின் வடிவமைப்பும், வண்ணங்களும் நன்றாகத் தான் இருந்தன. அந்த இணையப்பக்கம் கொட்டை எழுத்தில் காண்பித்துக் கொண்டிருந்த அந்த ஒரு விஷயம் தான் எனக்கு அப்படி ஒரு கோபத்தை ஏற்படுத்தியது. அங்கே எழுதி இருந்தது - “போட்டிக்கான கெடு நாளை மாலை 6 மணி.”

இன்னும் 24 மணி நேரம் கூட இல்லை. அதற்குள்ளாக ஒரு கதை எழுத வேண்டும் என்றால் இது நடக்கிற கதையா?. ஒரே மாதிரியான தினசரி வேலைகளை நாள்தோறும் தொடர்ந்து செய்து வந்ததில் கற்பனைக் குதிரை, கற்பனை ஆமையாகி இருந்தது. கவிஞர் கண்ணதாசன் எப்போது கவியரங்கம் பேசினாலும் இப்படித்தான் ஆரம்பிப்பாராம்;

“தோண்டுகின்ற போதெல்லாம்

சுரக்கின்ற செந்தமிழே!

வேண்டுகின்ற போதெல்லாம்

விளைகின்ற நித்திலமே!

உன்னைத் தவிர

உலகில் எனைக் காக்க

பொன்னோ! பொருளோ!

போற்றி வைக்கவில்லையம்மா!.”

இப்படி தமிழ் அன்னையின் ஆசி பெற்றவர் கண்ணதாசன். எனக்கோ தமிழ் அன்னையின் கடைக்கண் பார்வைகூட கிடைக்கவில்லை. கதை எழுத வேண்டும் என்றால் கற்பனை வேண்டும், மொழி வேண்டும். கற்பனை ஆமையாக, மொழி ஊமையாக தவித்துக் கொண்டிருக்கிறேன்.

எழுத்து ஒரு கலை என்கிறார்கள். இப்படி காலக்கெடு வைத்து அழுத்தம் கொடுத்தால் கலை வருமா? களை தான் வரும். நினைக்கும் எதையும் எழுதலாம் என்கிற எழுத்து சுதந்திரமும் இல்லை, சுதந்திரமாக எழுதுவதற்கு போதிய அவகாசம் இல்லை.

நான் என்ன ஒரு முழு நேர எழுத்தாளனா? முழு நேர எழுத்தாளனாக இருப்பது தமிழ்ச் சூழலில் என்றைக்காவது சாத்தியமா? புதுமைப்பித்தன் காலம் தொட்டு இன்று வரை எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்துவிட முடியுமா?

ஒரு எழுத்தாளானாக இருப்பது எவ்வளவு கடினம் என்று உங்களுக்குத் தெரியுமா? சமூகம் எழுத்தாளனுக்கு ஏதாவது வசதி செய்து கொடுக்கிறதா இந்த உலகத்தில்? நூலகத்தில் கூட படிப்பறைகள் உண்டு. எழுத்தறைகள் என்று ஒன்றை பார்த்திருக்கிறீர்களா?. அலுவலகங்களில் உடல்நிலை சரியில்லை என்றால் விடுப்பு எடுத்துக்கொள்ள சில விடுப்பு தினங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன - உடல் சுகவீனம் என்றால், குழந்தைகளை, குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள விடுப்பு எடுத்து கொள்ளலாம். எழுதுவதற்கு?. இப்படி சூழல் நமக்கு எதிராக இருக்கும்போது ஒருவன் எப்படித்தான் எழுதுவது? அதுவும் கொடுக்கப்பட்ட காலகெடுவிற்குள்? என் கோபம் உங்களுக்கு புரிகிறதா? அதில் இருக்கும் நியாயம் தெரிகிறதா?

“அப்பா எக்ஸாம் பீஸ் கட்டிட்டீங்களா? காலையில இருந்து நாலு தடவை சொல்லிட்டேன். இன்னைக்கு லாஸ்ட் டே” - மகள் டீவி பார்த்துக்கொண்டே கத்தினாள். உடனே மனைவியின் தன் பங்கிற்கு ஆரம்பித்தார் - “அங்க உள்ள என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இங்க வந்து சப்பாத்தி உருட்டிக் கொடுங்க”

இப்போது என் ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? எதற்குக் கடைசி நாள் எழுத உட்கார்ந்து கொண்டு இப்படி புலம்புகிறேன் என்று உங்கள் தோன்றுகிறது தானே? நியாயம் தான்.

போன வாரம் முழுக்க ஆபீஸில் ஒரு ஆடிட்டிங். காரப்பரேட் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு தான் தெரியும் ஒரு ஆடிட்டிங்கை கடந்து வருவது எவ்வளவு சிரமம் என்று. நீங்கள் என்ன செய்தாலும் கேள்வி கேட்பார்கள். இப்படிச் செய்தால் ஏன் அப்படி செய்யவில்லையென்று. அப்படிச் செய்தால் ஏன் இப்படிச் செய்யவில்லையென்று.

உங்களுக்குப் புரிவதற்காக ஒரு எளிய உதாரணம் சொல்கிறேன். நீங்கள் தினமும் அலுவலகத்திற்குப் பேருந்தில் போகிறவர் என்று வைத்துக்கொள்வோம்.

உங்கள் வீட்டில் இருந்து இடது பக்கமாக ஐந்து நிமிடம் நடந்தால் அங்கே ஒரு பேருந்து நிறுத்தம். அங்கே வரும் பேருந்து 61 இல் ஏறினால் பத்து நிமிடத்தில் அலுவலக வாசலிலேயே நிறுத்தம். இப்படி தான் கடந்த ஆறு வருடமாக அலுவலகம் போய் வந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு பிரச்சனையும் இல்லை.

ஆடிட்டிங்ல் என்ன தெரியுமா கேட்பார்கள்? இதுதான் அலுவலகம் செல்ல சிறந்த வழி என்று உங்களுக்கு யார் சொன்னது? யாராவது ஆலோசகரைக் கூட்டி வந்து நீங்கள் செல்லும் வழி சரிதானா என்று என்றைக்காவது கேட்டிருக்கிறீர்களா? இரத்த அழுத்தம் ஏன் உலகின் மாபெரும் பிரச்சினையாக உருவாகி வருகிறது என்பது இப்போது உங்களுக்கு புரிகிறது தானே.

திருவிளையாடல் தருமியின் வசனம் தான் நினைவிற்கு வருகிறது. “பாட்டு எழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்”. ஒருவர் நன்றாக வேலை செய்தும் பேர் வாங்கலாம். ஆடிட்டர் போல அதில் பிழை கண்டுபிடித்தும் பேர் வாங்கலாம்.

ஆடிட்டிங் நடக்கும் நாட்களில் வேறு உலகத்தில் இருப்பது போலிருக்கும். ட்ரம்ப் புதிதாக ஏதும் வரி அறிவித்திருக்கிறார? காஸாவில் போல் முடிந்து விட்டதா என எந்த ஒரு உலக நிகழ்ச்சிகள் முதற்கொண்டு காலையில் என்ன சாப்பிட்டுவிட்டு வந்தோம் என்பது வரை எதுவுமே உங்களுக்குத் தெரியாது. அப்புறம் எப்படி நான் கதை எழுதி இருக்க முடியும்? நீங்களே சொல்லுங்கள்.

அதற்கு முன்வாரம் என்ன செய்து கொண்டிருந்தாய் என்றுதானே கேட்க வருகிறீர்கள். அதையும் சொல்கிறேன்.

உலகத்தையே ஆட்டிப்படைத்து விட்டுச் சென்று விட்டது என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கொரோனா இன்னும் சில இடங்களில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. என் வீட்டிற்கும் வருகை தந்தது நீங்கள் கேட்கும் அந்த வாரம்.

நான் ஒரு கதை எழுத வேண்டியிருக்கிறது, அதற்கு காலக்கெடு இருக்கிறது என்கிற கருணை அதற்குக் கொஞ்சம்கூட இல்லை. கண்ணுக்கு தெரியாத மிக சிறிய கிருமி என்பதால் அதன் உடலில் கருணைக்கோ இரக்கத்திற்கோ கொஞ்சமும் இடம் இல்லை. கொரோனா வந்திருக்கிறது உடல்நிலை சரியில்லை என்று மருத்துவ சான்றிதழ் கொடுத்தால் அலுவலகத்தில் ஏற்றுக்கொள்வார்கள். போட்டி நடத்துபவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஓர் இடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு நியாயம் இன்னோர் இடத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் அப்புறம் அது என்ன நியாயம்?

‘கெடு’ என்ன ஒரு வார்த்தை பாருங்கள். “காலக்கெடு” என்றாலும் பொருந்துகிறது. “எழுத்து கலையைக் கெடு” என்றாலும் பொருந்துகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் கெடு என்ற வார்த்தை இருக்கிறதா? சங்கப் புலவர்களுக்கும் இதே கெடு பிரச்சனை இருந்ததா? தேடிப் பார்க்க வேண்டும்.

சப்பாத்தி உருட்ட கூப்பிட்டு பத்து நிமிடமாகியும் கணவன் வெளியே வராததால் மனைவி அறைக்குள் வந்தார்.

“கத எழுதப் போறேன்னு சொல்லிட்டு போய் என்ன போன பாத்துட்டு உக்காந்து இருக்கீங்க?”

“நாளைக்கு ஆறு மணிக்குள்ள சப்மிட் பண்ணனும். எப்படிம்மா முடியும்? ஒரு மனுசனுக்கு எவ்ளோ வேல இருக்கு”

“இப்படி எல்லாம் டேட் செட் பண்ணா எப்படிமா கதையை எழுத முடியும்?” - என் மன ஆதங்கத்தை கொட்டினேன்.

மனைவி புன்னகைத்தார்.

“இந்தக் கதைக்கு முன்னாடி என்ன கெடு வைச்சிருந்தாங்க?”

“இந்த மாசம் 16ஆம் தேதி”

“இன்னிக்கு என்ன தேதி?”

“31”

“15ஆம் தேதி என்ன சொன்னீங்க?”

“அப்ப எப்படிமா எழுதி இருக்க முடியும்? உனக்குத் தெரியாதா? அந்த வாரம் காலேஜ் ரீயூனியன் போயிட்டு வர வேண்டிய வேல இருந்துச்சி. அதுக்கு முந்துன வாரம் ஊருக்கு அப்பா அம்மாவ பாக்கப் போற வேலை இருந்துச்சு. கத எழுத எங்க டைம் இருந்துச்சு?”

“கெடுவ ரெண்டு வாரம் எக்ஸ்டென்ட் பண்ணாங்கல?”

“ஆனா எனக்கு தான் ஆபீஸ்ல ஆடிட்டிங் இருந்துச்சுல. கொரோனா வேற வந்துச்சு. நான் என்னமா பண்றது?” பாவமாகக் கேட்டேன்.

“போட்டி வைக்கிறது கத எழுதுறவங்களுக்கு. ஏன் எழுதலனு கத சொல்றவங்களுக்கு இல்ல” மனைவி சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே நகர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்
கதைகவிதைஞாயிறு முரசு