பொங்கலோ பொங்கல்

1 mins read
36247877-50e7-4d93-ab9a-1698d6120043
-

பொங்கலென்றால் புதுப்பானை நினைவில் நிற்கும்!

பொங்கியெழும் கடலலைபோல் ஆர்ப்ப ரிக்கும்!

கங்குகரை யில்லாத கழனி போலே

காட்சிதரும் கதிரவனின் ஆட்சி யெங்கும்!

தங்கம்போல் மின்னுகின்ற நெல்லி னங்கள்

தாங்கிநிற்கும் பழுத்தநல்ல நெற்ப யிர்கள்!

ஏங்குகின்ற விவசாயம் வெற்றி காண

இடர்ப்பாட்டை தகர்த்தெறிந்த வெற்றி யாகும்!

ஆற்றினிலே நீர்வரத்துப் பொய்த்த போதும்

ஆர்வமாக உழைக்கும்நம் உற்ற தோழன்

சேற்றினிலே கைவைப்போர் வாழ வைப்பர்

சோற்றினிலே கைவைக்க வாழ வைப்பர்

ஆற்றலாலே அமுதத்தை எடுக்க வல்லார்

ஆரவாரம் இல்லாத பேறு பெற்றோர்

ஊற்றாக ஊறிடுமே எருதின் பாசம்

உறவாக போற்றிடுமே இவர்கள் நேசம்!

இனிக்கின்ற பொங்கலிலே இன்பம் பொங்கும்

இன்னல்கள் விடைபெற நன்றி கூறும்!

கனிகின்ற இதயங்கள் அறங்கள் செய்யும்

கசப்பான எண்ணங்கள் மறைந்து போகும்!

இனிவரும் காலங்கள் உழைப்பைப் போற்றும்!

இணையாக துணையாக வாழ்க்கை மாறும்!

இனிக்கின்ற இந்தபொங்கல் எழுச்சி கூட்டி

எந்நாளும் ஒன்றாக இணைந்தே வாழ்வோம்!

சீர்காழி உ செல்வராஜு

குறிப்புச் சொற்கள்
சீர்காழி உ செல்வராஜுபொங்கல்பொங்கல் கவிதைஞாயிறு முரசுகவிதை