ஷனல் என்ற சிவகாமி

ஷனல் என்ற சிவகாமி

11 mins read
cfbdec63-68ab-45be-a152-eee50e193a54
மணிமாலா மதியழகன் - மணிமாலா மதியழகன்

‘நல்லாயிருக்குன்னு சும்மாவேனும் சொல்லி இருக்கலாமோ?’ எனும் எண்ணம் மிகத் தாமதமாகத் தோன்றியது. ஓய்ந்திருந்த கைப்பேசியின் கருந்திரையையே அனிதா பார்த்துக்கொண்டிருந்தாள். பக்கத்து இருக்கையில் இருந்தவள், உதட்டுச்சாயத்தை சரிப்படுத்திக்கொண்டே என்ன பிரச்சினை எனக் கேட்டபிறகுதான் அலுவலகத்தில் இருப்பது நினைவுக்கு வந்தது. உள்ளத்தின் புலம்பலை உதடு வெளிப்படுத்திவிட்டதோ என்ற பதற்றத்துடன் பார்த்தாள். அப்படியே கேட்டிருந்தாலும் அவளுக்குப் புரியவா போகிறது என்ற எண்ணம் மனத்தைச் சீராக்கியது. வேலை முடிந்து, காதலனைச் சந்திக்கப் போகும் ஆவல் உடன் பணிபுரிபவளின் கண்களில் மின்னியது.

‘நம் வரவை எதிர்பார்த்து ஒருவர் காத்திருக்கிறார் என்பதில் கிடைக்கும் உற்சாகம் சாதாரணமானதா?’ அனிதா உள்ளுக்குள் முளைவிட்ட பொறாமை விதையைச் சட்டென நசுக்கி, புருவத்தைச் சீர்ப்படுத்திக்கொண்டிருந்தவளைப் பார்த்தாள். ஒன்றுமில்லையெனப் புன்னகையுடன் பதிலளித்து கணினியின் பக்கம் பார்வையைத் திருப்பினாள். வேலை நேரம் முடிவதற்குப் பத்து நிமிடங்கள் இருந்தன.

‘இப்படிக் கையைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கேனே’ வெறுப்பு உள்ளத்தைக் குத்தியது. ‘சின்ன உதவிதான். அதைச் செய்தால் சாந்தா நிம்மதியாவான்னு தெரிஞ்சும் ஏன் இப்படி இருக்கேன்?’ கேள்வி தொடர்ந்தவேளையில் கைப்பேசி ஒலித்தது. சாந்தாவாக இருக்குமோ என்ற கவலையுடனே எடுத்தாள். வேலை சம்பந்தப்பட்ட அழைப்பு என்று தெரியவும் மனம் சற்று அமைதியானது.

“வேலை முடிஞ்சி போறப்ப வீட்டுக்கு வர்றியா?” என சாந்தா ஒருநாள் கேட்டாள். ஏதும் அவசரத் தேவையாக இருக்குமோ எனும் சிந்தனையை வளரவிடாமல், “முக்கியமான விருந்தாளி வீட்டுக்கு வந்திருக்காங்க. உன்னை அவங்களுக்கு அறிமுகப்படுத்தத்தான்” என்றாள். யாரெனக் கேட்டதற்கு அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது, நேரில்தான் வர வேண்டும் எனச் சொல்லிவிட்டாள். இருவரது பிள்ளைகளும் பாலர்பள்ளியில் ஒன்றாகப் படித்தபோது முளைவிட்ட நட்பு, பிள்ளைகளின் பல்கலைக்கழகப் படிப்பு முடியும் தருவாயில் பெருமளவில் செழித்துள்ளது.

“அவங்களுக்குன்னு எதுவும் வாங்கிட்டு வந்துடாதே” என்றும் சொன்னாள். தோழியின் வீட்டுக்கு வந்துள்ள விருந்தினர் யாராக இருக்கும் என மற்ற தோழிகளிடம் விசாரித்தபோதுதான் அவளது வீட்டில் புதிதாக நாய்க்குட்டி வாங்கியிருப்பது தெரிந்தது. ‘இதுக்குதான் இவ்ளோ அலப்பறையா?’ அனிதா அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் சாந்தா விடுவதாக இல்லை.

“எங்க வீட்டுச் செல்லம் இருக்கே... கைக்குழந்தைங்க என்னல்லாம் சேட்டை செய்யுமோ அத்தனையும் செய்யுது, அதுக்கு மேலவும் செய்யுது. எந்த நேரமும் அதோட பார்வையில யாராவது இருக்கணும். இல்லன்னா அப்படியே முகத்தை சோகமா வச்சிக்கிட்டு வீட்டைச் சுத்திச் சுத்தி வரும். கதவுக்குப் பின்னாடி ஒளிஞ்சிருப்போமோன்னு கதவைத் தள்ளிட்டுப் பாக்கும். தூங்க போறப்ப எங்களோட வந்து கொஞ்சிட்டு அப்புறம் சமத்தா அதோட படுக்கையில போய்ப் படுத்துக்கும். படுக்கையில ஒரு பக்கம் வாத்து பொம்மையும் மறுபக்கம் மீன் பொம்மையும் வச்சிக்கிட்டு அது தூங்குற அழகைப் பாக்கணுமே...!” என்று சொல்வதோடு விடமாட்டாள். கைப்பேசியை கீழே வைப்பதற்குள் நாய்க்குட்டி தூங்கும் புகைப்படங்கள் வந்து சேரும். ‘நைஸ்’ என்று அனுப்பியதோடு கைப்பேசியிலிருந்து அவற்றை நீக்கிவிட்டுதான் அனிதா மறு வேலை பார்ப்பாள்.

“மெயின் டோருக்கு பக்கத்துல இருக்குற சன்னல மூடிட்டா என்னவோ அதுக்கு நான் ஆகாததை செஞ்சிட்டதைப்போலப் பார்க்கும். கொஞ்ச நாளா, சோபா மேல ஏறி உக்காந்துக்கிட்டு மூடியிருக்கிற திரைச்சீலையை அழகா கொஞ்சம் கொஞ்சமா நகர்த்திடுது. இப்ப என்ன செய்வேங்கிற மாதிரி தலையைத் திருப்பி என்னை ஒரு பார்வை பார்க்கும் பாரு... அவ்ளோ க்யூட்டா இருக்கும்.”

“எங்க செல்லத்தோட காதை சுத்தப்படுத்திட்டு இருந்தேன். அதுக்குச் சுகமா இருக்கும்போல. மடியில படுத்து அப்படியே கண்ணை மூடிக்கும். அதனாலதான் நீ போனடிச்சப்ப எடுக்க முடியல.”

“வெளியே அழைச்சிட்டுப் போனா என்னா கொண்டாட்டம்னு பாக்கிறே? வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற பூங்காவுல நாலு பேர் தினமும் அவங்களோட நாய்களை அழைச்சிக்கிட்டு வருவாங்க. அவை வேற வகையா இருந்தாலும் இது என்னவோ பெரிய மனுசியாட்டம் எல்லாரையும் போய்க் கண்டுக்கும். இதுதான் அங்கே இருப்பதிலேயே குட்டி. ஆனாலும் அதோட பார்வை என்னவோ பெரிய மனுசிமாதிரி இருக்கும்” துள்ளலுடன் ஒலிக்கும் தோழியின் குரலை வெறுமனே கேட்டுக்கொண்டிருப்பாள் அனிதா. அவளைத் தவிர மற்ற தோழியர் அந்த நாய்க்குட்டியைப் பார்த்துவிட்டனர். அதன் துறுதுறுப்பையும் குழந்தைபோலக் கொஞ்சுவதையும் அவர்கள் வியந்து பேசுவதைக் கேட்கும்போது உள்ளுக்குள் எழும் வெறுப்பை வெளிக்காட்டாமலிருக்க மிகவும் சிரமப்பட்டாள்.

“ஒரு நிமிஷம் சும்மாயிருக்காம துருதுருன்னு வீடு முழுக்க அலைஞ்சிகிட்டேதான் இருக்கும். மத்தியானம் சாப்பிட்ட பிறகு நான் கொஞ்ச நேரம் படுக்கையில சாஞ்சா போதும். ஓடியாந்து பக்கத்துல படுத்துக்கும். நான் போனை பாத்தா இப்படியும் அப்படியுமா தாவிக்கிட்டே இருக்கும். உன்னையேதான் பாக்கணுமான்னு ஒருநாள் கொஞ்சம் சத்தமா கேட்டுட்டேன். அப்படியே அதிர்ந்து பார்த்துட்டு உடனே திரும்பிப் படுத்துக்கிச்சி. அப்புறமென்ன? அதைத் தூக்கிக் கொஞ்சிதான் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது” குரலில் பூரிப்பு பொங்கியது.

தோழியரின் வாட்சப் குழுவில்வேறு அவளது நாய்க்குட்டி நாளும் வலம் வந்தது. “எங்க செல்லத்துக்கு இன்னிக்குப் பேர் வச்சோம்” என்ற செய்தி ஒரு நாள் வந்தது. ‘இவளுக்கு வேற வேலையே இல்ல’ அலுவலகத்தில் இருந்த அனிதா செய்தியைப் படித்தும் கண்டுகொள்ளாமலிருந்தாள். என்ன பெயரென ஒரு தோழி கேட்டதற்கு, “ரெண்டு பேர் வச்சிருக்கோம்” என்றாள். ‘பூடல் டாய்’ வகையைச் சேர்ந்த அந்நாய்க்குட்டிக்கு மகன் ஷனல் என்று பெயர் வைத்தானாம். “சணல் கயிறுன்னு பேரா அது?” எனக் கணவர் கேட்டுவிட்டு அவரது அக்கா பெயரான சிவகாமி என்று வைத்துள்ளதாகவும் சொன்னாள். “ரெண்டு பேர் வச்சி அழைச்சா அது குழம்பாது?” பொருமினாள். “நீ எப்படி அழைப்பாய்?” என என்றொருத்தி வினவ, “நான் ஏன் சிவகாமின்னு கூப்பிடப் போறேன்?” பதிலுடன் முகத்தைச் சுளிக்கும் ‘இமோஜி’ துள்ளி வந்தது.

“ஷனலுக்குப் பல்லு முளைச்சாலும் முளைச்சது. சேட்டைய தாங்க முடியல. சோபா, டிவி ரிமோட், மிதியடி, செருப்புன்னு எல்லாத்தையும் கடிக்குது. பந்து மட்டும் போதாது, கடிச்சி விளையாடுற பொம்மைங்க வாங்கிக் கொடுக்கணும்னு மகன் சொன்னான். இதுவே பொம்மை மாதிரிதான் இருக்கு, இதுக்குப் பொம்மையான்னு இருந்தது. கடைக்குப் போய் சோளம் மாதிரி ஒண்ணும் எலும்பு மாதிரி ஒண்ணும் வாங்கிட்டு வந்தேன். அதை வச்சி விளையாடுறதைப் பாக்கணுமே... அன்னிக்கே நாலைஞ்சி பொம்மைங்களுக்கு ஆன்லைன்ல ஆர்டர் கொடுத்துட்டோம்.” பொம்மைகளை வைத்து அந்த நாய்க்குட்டி விளையாடும் காணொளிகள் தோழியரின் ‘வாட்சப்’ குழுவுக்கு உடனே வந்தன.

“ஒவ்வொண்ணையும் பாத்துப் பாத்து நான் செய்யுறேன். அது என்னன்னா கணவர்மேலதான் ரொம்ப பாசமாயிருக்கு. முன்னல்லாம் வேலையிடத்துலயே வேர் விட்டதுபோலக் கிடப்பார். இந்தம்மா வந்த பிறகு டாண்ணு ஆறரைக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடறார். போன வாரம் வேலை விஷயமா ஓவர்சீஸ் போயிருந்தார். இது சாயந்திரமானா போதும் வாசலையே பார்த்துக்கிட்டு பரிதாபமா உக்காந்திருக்கு. போன்ல சிவகாமிங்கிற குரலைக் கேட்டதும் வாலை படபடன்னு ஆட்டிக்கிட்டு ரப்பர் பந்துபோல இப்படியும் அப்படியுமா எம்பி எம்பிக் குதிச்சதைப் பார்க்கணுமே... அதுக்குப் போனை பாக்கத் தெரியல. சத்தம் மட்டும்தான் வருது, ஆளைக் காணோமேன்னு கேக்குறமாதிரி என்னைப் பாவமா பாக்குது!” தான் சொல்வதை மறுமுனையில் இருப்பவள் காது கொடுத்துக் கேட்கிறாளா இல்லையா என்பதைக்கூட உணராமல் பேசுபவளை என்ன சொல்வது எனப் புரியாது.

“கொஞ்சங்கூடப் பொறுப்பேயில்லாம இருக்கார்!” கணவரைப்பற்றி கோபத்தில் வெடித்தன சொற்கள். “ஷனல வெறுங்காலோட வாக்கிங் அழைச்சிட்டுப் போயிருக்கார்... குழந்தைதான அது? ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடுச்சின்னா என்ன பண்றது?” என்று சொல்ல, அனிதாவுக்கு கோபம் மண்டைக்கு ஏறியது. ‘வாயைத் திறந்தால் ஏதும் சொல்லிடப் போறோம்’ எனச் சிரமப்பட்டு நாவை அடக்கினாள்.

“போனடிச்சா போதும், குடுகுடுன்னு ஓடியாந்து என்னையே பாத்துக்கிட்டு நிக்கும். உடனே போய் போனை எடுத்துடணும். இல்லைன்னா எடுக்கிறவரை விடாம காலைச் சுத்திச்சுத்தி வரும். இப்ப கொஞ்ச நாளா மெசேஜ் வர்ற சத்ததுக்கெல்லாம் ஓடியாந்து என்னைப் பாக்குது. அதனால போனை சைலன்ட்லயே போட்டுடறேன்” என்றாள்.

சாந்தா, அனிதாவுடன் இன்னும் இரு தோழிகளுமாக வழக்கமாக மாதத்தில் முதல் வெள்ளியன்று சவுத் பிரிட்ஜ் சாலையிலுள்ள மாரியம்மன் கோயிலில் சந்திப்பர். எப்பொழுதுமே சாந்தாதான் முதல் ஆளாக வந்து கோயிலில் காத்திருப்பாள். ஒருநாள் கோயிலில் அவளைக் காணவில்லை. மற்ற இருவரும் வந்த பிறகும் அவள் வராது போக, அனிதா அவளுக்குப் போனடித்தாள்.

“ஓ... முதல் வெள்ளியா இன்னிக்கு...? இந்தம்மா எங்க வீட்டுக்கு வந்ததிலேருந்து நாளும் பொழுதும் அது பின்னாடியே சுத்துறதுல வேற எதுவுமே ஞாபகத்துல இல்லன்னா பார்த்துக்கோ” குரல் குதூகலத்துடன் ஒலித்தது. அத்துடன் விட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. “ஷனலுக்கு ரொம்ப சீக்கிரத்துல முடி வளர்ந்துடுது. அதோட சீப்பைக் கையில எடுத்தாலே ஓடிடும். பிடிச்சிக்கிட்டு வந்து மடியில போட்டா அப்படியே படுத்துக்கும். முடி சுருள்சுருளா இருக்கிறதால கவனமா சீவணும். இருந்தும் எப்படியோ ரெண்டு மூணு இடத்துல சிக்கு விழுந்துட்டு. ஹேர் டிரஸ்ஸரிடம் அழைச்சிக்கிட்டுப் போகத்தான் கிளம்பிட்டிருக்கேன்” என்றாள்.

‘நாய்க்கு முடி வெட்டப் போறாளாம்’ சாமி கும்பிட்டுத் திரும்பிய பின்னும் தோழியரின் புலம்பல் தொடர்ந்தது.

இரண்டு நாள்களுக்கு முன் அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தபோது சாந்தாவின் அழைப்பு வர, அனிதா வேண்டா வெறுப்பாகக் கைப்பேசியைப் பார்த்தாள். பெருவிரைவு இரயிலிலுள்ள கூட்டத்தில் அப்போதே பேச வேண்டுமா என்று தோன்றியது. இருந்தும் கைப்பேசியைக் காதுக்குக் கொண்டு போனாள்.

நினைத்ததற்கு மாறாக, தோழியின் குரல் கரகரப்பாக வந்தது. அவளது மாமனார், நெஞ்சு வலியெனச் சாய்ந்தவர் எழவே இல்லையாம் எனச் சொல்கையில் குரல் தழுதழுத்தது. அப்போதே குடும்பத்துடன் இந்தியாவிற்குப் புறப்படுவதாகச் சொன்னாள்.

“கணவரும் நானும் காரியம்லாம் முடிஞ்ச பிறகுதான் வருவோம். மகனுக்கு இந்த வாரத்துல தேர்வு இருக்கிறதால அவன் மட்டும் நாளை மறுநாள் வந்துடுவான். திடீர்னு கிளம்புறதால ஷனலுக்கு எந்த ஏற்பாடும் செய்ய முடியாம போயிடுச்சி. மகனோட நண்பர்கள் அவங்க வீட்டுக்குத் தூக்கிட்டுப் போயிடறதா சொல்றாங்க. புது இடம், புது ஆளுங்கன்னா இதுவும் பயப்படும். ஒரு நாள்தானே வீட்டிலேயே இருக்கட்டும்னு முடிவு பண்ணியிருக்கோம். என்ன ஒண்ணு... அதுகூட யாராவது இருக்கணும்னு எதிர்பாக்கும். உங்கிட்டதான் எங்க வீட்டுச் சாவி இருக்கே. நாளைக்கு வேலை முடிஞ்சி போகும்போது ஒரு நடை போய் பாத்துடுறியா?” என்று கேட்டாள்.

அவள் குரலில் தெரிந்த கரகரப்பு நாய்க்குட்டியைவிட்டுப் போவதாலா மாமனார் இறந்ததாலா என்ற சந்தேகம் வந்தது. “அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை, நீ கிளம்பு. வேற எந்த உதவி தேவைப்பட்டாலும் சொல்” என்றாள். அந்தச் சூழலில் ஏதோ ஒரு வேகத்தில் சொல்லிவிட்டாள். ஆனால் நாயைப் பார்ப்பதற்காகப் போகணுமா என்ற வெறுப்பில் போகவில்லை. எப்படியும் மறுநாள் சாந்தாவின் மகன் வந்துவிடப் போகிறான். அதற்குள் ஏன் போக வேண்டுமென நினைத்தாள். சோதனையாக, சாந்தாவின் மகனுக்கு கடுமையானக் காய்ச்சல் இருப்பதால் இன்னும் ஓரிரு நாள் கழித்துதான் வர முடியுமாம். “ஷனலைப் பாத்தியா?” என்ற கேள்விக்கு உடனே பதிலளிக்க முடியவில்லை.

பக்கத்து இருக்கையில் இருந்தவள் ஒப்பனையை முடித்துக்கொண்டு போகலாமா என்பதைப்போலப் பார்த்தாள். கணினியின் திரையை மூடிவிட்டு எழுந்த அனிதாவின் மனத்திரையில் இருள் அப்பிக் கிடந்தது. ‘இதே மனநிலையுடன் வீட்டுக்குப் போவதும் சரியில்லை’ என்ற எண்ணம் சட்டெனத் தோன்றவும் சாந்தாவின் வீட்டுக்குப் போய்விட்டு வருவதாகக் குடும்ப வாட்சப் குழுவில் தகவலளித்தாள்.

அனிதாவின் மகன் கைக்குழந்தையாக இருந்தபோது ஏதோ வினோதமான ஒலி கேட்டது. அவளது வீட்டுக்கு நேர் மேல் வீட்டில் புதிதாக வந்திருக்கும் நாய்க்குட்டியின் சத்தம்தான் அதுவெனப் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். “பொதுவாக நாய் வளர்ப்பவர்கள் மூன்று மாதத்துக்கு மேலுள்ள குட்டிகளைத்தான் வளர்ப்பார்கள். இது ரொம்ப சின்னக்குட்டிபோல” என்றும் சொன்னார். அவளது குழந்தை தூங்குவதற்காகவே அது காத்திருக்குமோ என்னவோ? குழந்தையைத் தொட்டிலில் போட்ட சில நிமிடங்களில் அது குரல் கொடுக்க, ஆழ்ந்த உறக்கத்துக்குப் போன குழந்தை திடுக்கிட்டு அழும்.

ஒருநாள், குழந்தையைத் தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு அனிதா வீடு திரும்ப மின்தூக்கிக்குள் நுழைந்தாள். மின்தூக்கி மூடவிருந்த வேளையில், மேல்வீட்டு அம்மணி நாய்க்குட்டியோடு உள்ளே வந்தார். குழந்தையோட தூக்கத்தைக் கெடுப்பது இதுதானா என நினைத்துக்கொண்டே அதைப் பார்த்தாள். திடீரென நாய்க்குட்டி குழந்தை மீது தாவ, நிலைகுலைந்தாள். உரிமையாளர் உடனே அதைப் பிடித்துக்கொண்டாலும் அனிதாவுக்கு நடுக்கம் அடங்குவேனா என்றது.

“குழந்தைய விளையாடக் கூப்பிடுதோ இல்லை குழந்தை கையில் இருக்கிற பொம்மை தன்னோடதுன்னு நினைச்சதோ” என அவரது ஐயத்தை சொன்னதுடன் வருத்தமும் தெரிவித்தார். நொடியில் நடந்த சம்பவம், அனிதாவின் பல நாள் உறக்கத்தைக் கெடுத்தது. மகனது பிறந்தநாளுக்குப் பரிசாக வந்த நாய்க்குட்டிப் பையைக்கூட அவள் மகனைப் பயன்படுத்தவிடவில்லை.

‘என்னவோ இதுங்க தண்ணி ஊத்தாட்டா கட்டடங்களே கருகிடுற மாதிரி செய்யுதுங்களே’ எனும் வெறுப்பு அவற்றைப் பார்க்கையில் தோன்றும்.

‘வீட்டுக்குப் போனதும் அந்த நாயை ஒரு போட்டோ எடுத்து சாந்தாவுக்கு அனுப்பிட்டா தொல்லை முடியும்’ என நினைத்தாள். மனம் முழுக்க வெறுப்பு விரவிக் கிடந்தது. கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். குடும்ப வாட்சப் குழுவில் அவள் போட்ட செய்திக்குப் பதிலே இல்லை. ‘எனக்காக யார் காத்திருக்கப் போறாங்க?’ மனம் வலித்தது.

‘தியோங் பாருவிலிருக்கும்’ சாந்தாவின் வீட்டுக்கு ‘எம்ஆர்டி’இலிருந்து ஐந்து நிமிடங்களில் போய்விடலாம் என்றாலும் அன்று வழி வளர்வதுபோலிருந்தது. நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக்கொண்டு நடந்தாள். நடுத்தர வயதுடைய ஒருவர் கையில் தாளுடன் இரண்டு நாய்களை அழைத்துச் சென்றார். வெறுப்பு மனத்தில் கிளைவிடச் சட்டெனப் பார்வையைத் திருப்பினாள்.

நாற்பது தளங்களைக்கொண்ட அக்குடியிருப்பின் நான்கு மின்தூக்கிகளுமே மேலே சென்றிருந்தன. முதியவர் ஒருவர் மின்தூக்கிகளின் மேல் எரிச்சலுடன் பார்வையைச் சுழற்றிக்கொண்டிருந்தார். புத்தகப் பையைச் சுமந்தவாறு இரண்டு சிறுவர்கள் நின்றிருந்தனர். ஓர் இளம் தம்பதியினர் கையில் உணவோடு வேக நடையில் வந்தனர். ‘வீட்டுக்குப் போய் சமைக்கணும்’ உள்ளுக்குள் அழுத்தம் கூடியது. இரண்டு மின்தூக்கிகள் ஒரே நேரத்தில் தரைத்தளத்தை அடைந்தன. முப்பத்திரண்டாவது தளத்தில் இளம் தம்பதியினர் வெளியாகிவிட, அனிதா மட்டுமே இருந்தாள். காதுகள் அடைப்பதுபோலிருந்தன. முப்பத்தேழாவது தளத்தில் மின்தூக்கியின் கதவு திறந்தது.

நாய்க்குட்டிக்காகத் திறந்திருக்கும் சன்னல் வெறுமையாகயிருந்தது. ‘எப்பவும் இங்கதான் இருக்கும்னு சாந்தா சொல்லியிருக்காளே’ யோசனையாகக் கைப்பைக்குள்ளிருந்த சாவியை எடுத்தாள். கதவைத் திறந்து உள்ளே அடியெடுத்து வைத்தபோது, மெத்தென்ற ஏதோவொன்று மேலே வந்து விழவும் அலறிவிட்டாள். விழுந்தது நாய்க்குட்டிதான் என மூளைக்கு உறைக்கவே சில நொடிகள் ஆகின. மறையச் செல்லும் கதிரவனின் பார்வை தாராளமாகக் கதவு வழி நுழைந்திருந்தது.

அந்நாய்க்குட்டி குரைக்கவும் இல்லை, உறுமவும் இல்லை. மாறாக, ஒருவிதத் தழுதழுத்த ஒலியை எழுப்பியவாறு பஞ்சு பந்து தரையில் உருண்டு வந்ததைப்போலச் சுழன்றது.

ஒளி மிகுந்த கண்கள், சிறிய கறுப்பு மூக்கு, மடிந்து தொங்கும் காதுகள், தேன் வண்ணத்தில் பட்டுப்போலிருந்த ரோமங்களுடன் இருந்த அது, சிறிய பாதங்களால் துள்ளிக் குதித்துக் குட்டை வாலை குதூகலமாக ஆட்டியது. விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் அதன் படுக்கைக்கு அருகிலேயே இருந்தன. அவற்றை வைத்து விளையாடியதற்கான அறிகுறியோ அதற்கான உணவைத் தின்றதற்கான அறிகுறியோ சிறிதும் இல்லை.

தாவித் தோளில் ஏறி தலை, முகம், கழுத்து என நக்கி என்ன செய்வதெனத் தெரியாமல் கீழே குதித்து ஏதோ சத்தம் கொடுத்துக்கொண்டே மீண்டும் தாவியது. அனிதா கழுத்தில் ஏதோ ஈரத்தை உணர்ந்தாள். அவள்மீதிருந்து சட்டெனக் கீழே குதித்தது. தன்மேல் சிறுநீர் கழித்த அதன்மேல் அவளுக்குக் கோபம் வராதது அவளுக்கே வியப்பாகயிருந்தது. குட்டை வாலை ஆட்டிக்கொண்டு தெரியாமல் செய்துவிட்டேன் என்பதைப்போல அண்ணாந்து பார்த்தது. கைப்பையைக் கீழே வைத்த அனிதா, அப்படியே தரையில் அமர்ந்தாள். தாவி உடலை அவள்மீது தேய்த்து, அதன் சிறிய தலையை அவள் கன்னத்தில் சாய்த்துக்கொண்டது. தனிமையின் பயமும் என்னைவிட்டுப் போய்விடாதே என்ற தவிப்பும் அதன் கண்களில் மின்னின. அடுத்த நொடியே கீழே குதித்துப் படபடவென வாலை ஆட்டிக்கொண்டே அவளைச் சுற்றிச்சுற்றி வந்தது. ததும்பும் பாசத்துடன் ‘என்னைத் தூக்கிக்கொள்ளேன்’ என்பதைப்போலக் கெஞ்சுதலோடு பார்த்த ஷனலை ஏந்திக்கொண்ட அனிதாவின் கண்களில் நீர்க் கசிந்தது.

ஆக்கம்: மணிமாலா மதியழகன்

குறிப்புச் சொற்கள்