இங் ஹாக் கியான் ராதிகாவைத் திருமணம் செய்து கொண்டான் என்று அலுவலக நண்பர்கள் சொன்னார்கள்.
எங்கள் அலுவலகத்தில் பேரழகி என்றால் ராதிகாதான். தரக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி. வேலையில் கடுமை. நடையில் கம்பீரம். யாரும் எளிதாக நெருங்க முடியாத ஒரு தூரம் அவளைச் சுற்றி எப்போதும் இருந்தது.
அந்த ராதிகா, அலுவலகத்திற்கு வேன் ஓட்டும் ஹாக் கியானைத் திருமணம் செய்துகொண்டது - ஹாக் கியானைத் தவிர மற்ற எல்லோருக்கும் ஆச்சரியம்தான்.
ஒரு மாலை செங்காங் கோப்பித்தியாமில் உள்ள ஒரு கடையில் அவர்கள் இருவரையும் பார்த்தேன். உணவுக்காக வரிசையில் நின்றிருந்தார்கள். நான் இரண்டு பேருக்கு அப்பால் நின்றிருந்தேன்.
பேசலாமா? ஹாக் கியான் இப்போதாவது பேசுவானா? என்று தயக்கத்தோடு நின்றேன். ஐந்து ஆண்டுகளுக்குமுன் நான் அறிந்த ஹாக் கியான் அதிகம் பேசமாட்டான். பேசவே மாட்டான் என்பதே சரி. யாராவது எவ்வளவு பேசினாலும், அவனிடமிருந்து கிடைப்பது ஒரு சிறிய புன்னகைதான். அந்தப் புன்னகை கண்களில் தொடங்கும். மெல்ல இதழ்களுக்குப் பரவும். அதன் ஓரத்தில் நின்றுவிடும். அவன் புன்னகைக்கும்போது அவன் பற்களை யாரும் பார்த்ததில்லை.
காலையும் மாலையும் எம்ஆர்டி நிலையத்திலிருந்து ஆள்களை அலுவலகத்திற்குக் கொண்டுவருவது ஹாக் கியானின் முதல் வேலை. காலை இரண்டு டிரிப். மாலையும் இரண்டு டிரிப். இரண்டாவது டிரிப் 8.15 என்றால், சரியாக 8.15 மணிக்கே வண்டி கிளம்பிவிடும்.
எம்ஆர்டியிலிருந்து இறங்கி மின்படிகளிலும், சிமென்ட் நடைபாதையிலும் திபுதிபுவென்று ஓடி வந்து கைகாட்டுபவர்கள் - ஓரக்கண்ணாடியில் அவர்களது முகம் ஒரு நொடி தோன்றும். அடுத்த நொடியே வண்டி நகர்ந்திருக்கும்.
அவர்கள் அங்கேயே நின்று வண்டி கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்துக்கொண்டு நிற்பார்கள்.
அவனுக்கு எல்லாமே விதிப்படி நடந்தாக வேண்டும். நேரப்படி நடந்தாக வேண்டும்.
அவன் உலகத்தின் நியாயங்கள் மிக எளிமையானவை. ஆனால் எம்ஆர்டி டிரிப்புகளோடு அவனது வேலை முடிந்துவிடாது. நாள் முழுக்க மேனேஜர்களோ, எஞ்சினியர்களோ, சூப்பர்வைசர்களோ - யாராவது மீட்டிங்கிற்கோ, கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களுக்கோ செல்ல அவன் வேனைப் புக் செய்திருப்பார்கள்.
அலுவலக வரவேற்பறையில் அதற்காக ஒரு ‘புக்கிங் ரிஜிஸ்டர்’ இருந்தது. எப்போது, எங்கு, எதற்காக என்று எழுதிவிட்டுப் போய்விடுவார்கள். காலை எம்ஆர்டி டிரிப் முடிந்ததும் ஹாக் கியான் அந்த ரிஜிஸ்டரை ஒருமுறை பார்த்துவிடுவான். கிளம்ப வேண்டிய நேரத்துக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவரின் மேசை அருகில் வந்து நின்று தனது வழக்கமான புன்னகையை அவிழ்ப்பான். அதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.
‘கிளம்பலாம்.’
ஐந்து நிமிடம் கிரேஸ் பீரியட். அதற்கு மேல் ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் - கார் நிறுத்துமிடத்தில் வேன் மட்டும் இருக்கும்.
ஹாக் கியான் இருக்க மாட்டான். எவ்வளவு முயன்றாலும் அவனது கைத்தொலைபேசி அடைக்கப்பட்டிருப்பதாகத்தான் செய்தி வரும்.
இப்படிச் சில அதிகாரிகள் முக்கியமான மீட்டிங்குகளைத் தவறவிட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அப்படிப்பட்டவர்கள் வெகுண்டு எழுந்து அலுவலக நிர்வாகிகளிடம் புகார் செய்ததும் உண்டு.
ஆனால், அந்தப் புகார்கள் அதிக தூரம் போகவில்லை. ஹாக் கியான் தவறு செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை மேலதிகாரிகளின் மனத்தில் ஏற்கெனவே பதிந்திருந்தது.
இருநூறு பேருக்குமேல் வேலை செய்யும் ஒரு கட்டுமானத் திட்டத்தில் - ஒரு சாதாரண வாகன ஓட்டி, அலுவலகத்தில் ஒரு கதாநாயகன் ஆகிப்போனது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால், அவன் ராதிகாவிற்கும் கதாநாயகன் ஆகப் போகிறான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ராதிகா தரக் கட்டுப்பாட்டு அதிகாரி. பேரழகி மட்டுமல்லள். எதற்கும் வளைந்து கொடுக்காத எஃகு போன்ற பெண்.
அவளுக்கென்று ஒரு தனியான நிர்வாக முறை இருந்தது. பணி சம்பந்தமாக யாராவது அவளது மேசைக்கு வந்தால் அவள் உடனே நிமிர்ந்து பார்க்கமாட்டாள். அவர்களைக் கவனிக்காதவள்போல் தொடர்ந்து தனது வேலையைச் செய்துகொண்டே இருப்பாள். அந்தச் சில நிமிட மௌனம் எதிரில் நிற்பவர்களை யோசிக்க வைக்கும். நிமிடங்கள் மெதுவாக நகரும்.
‘இவள் சற்று கடினமானவள்’ என்ற எண்ணம் அப்போது உருவாகிவிடும். பிறகுதான் நிமிர்ந்து பார்ப்பாள். அந்தக் கண்களில் கருணை இருக்காது. ‘என்ன?’ என்று வார்த்தையில்லாமல் கேட்கும் பார்வை. அந்த அன்பற்ற வெறுமை - எதிரில் நிற்பவர்களை இன்னும் ஓர் அடி தள்ளி நிற்க வைக்கும். அது அவளது நிர்வாக முறை.
ஒருநாள் அலுவலகமே அல்லோலகல்லோலமாகிப் போன ஒரு சம்பவம் நடந்தது.
ஒரு இன்ஸ்பெக்ஷனுக்காக காலை பத்து மணிக்கு துவாஸ்வரை போக வேண்டுமென்று ராதிகா ஹாக் கியானின் வேனை புக் செய்திருந்தாள். வழக்கம்போல் 9.55க்கு ஹாக் கியான் அவளது மேசை அருகில் வந்து நின்றான். ராதிகா ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தாள். பிறகு மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தாள்.
“மேடம், பத்து மணிக்கு உங்கள் புக்கிங் இருக்கிறது. நான் வேனில் காத்திருக்கிறேன். பத்து ஐந்துக்குள் வந்து விடுங்கள்.” என்று சொல்லிவிட்டுச் சென்றான் ஹாக் கியான்.
ராதிகா கிளம்பியபோது மணி 10.15. வேன் இருந்தது. ஹாக் கியான் இல்லை.
அவனது கைத்தொலைபேசி அடைக்கப்பட்டிருந்தது.
அவள் நேராக நிர்வாகி கோவிடம் சென்றாள். கோ பிரச்சினையின் நுனியை உடனே புரிந்து கொண்டார்.
“உட்காருங்கள் ராதிகா. அவன் இல்லாவிட்டால் என்ன? தலைமை நிர்வாகியின் பென்ஸ் கார் இருக்கிறது. அதில் போய்விட்டு வாருங்கள்.”
ராதிகா அமைதியாகத் தலையசைத்தாள். “பிரச்சினை வாகனத்தைப் பற்றியது இல்லை. நிர்வாகச் செயல்முறையைப் பற்றியது,” என்றாள்.
“என் புக்கிங் பத்து மணி முதல் பன்னிரண்டு மணி வரை. அந்த நேரத்தில் அவன் வாகனத்தோடு வாகனத்தில்தான் இருக்க வேண்டும்.”
ஹாக் கியானைத் தேடிப் பிடித்து அழைத்துவந்தார்கள். “ராதிகாவிற்குத் தாமதமாகிவிட்டது, கிளம்பு,” என்றார் கோ.
ஹாக் கியான் அமைதியாகப் பதில் சொன்னான். “மிஸ்டர் கோ, நான் 10.10 வரை காத்திருந்தேன். அவர்கள் வரவில்லை. தாமதமாகும் என்றும் சொல்லவில்லை.
“எனக்கு நேரம் முக்கியம். குறித்த நேரத்தில் ஆள்கள் வராவிட்டால் நான் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதுதான் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த விதிமுறை.”
“புரிகிறது. ஆனாலும்… எனக்காக ஒருமுறை…”
கோ சொல்லிக் கொண்டிருக்கையில் ராதிகா குறுக்கிட்டாள்.
“உங்களுக்காகவா? இது அலுவலகம். இங்கே யாரும் யாருக்காகவும் இரக்கம் காட்டத் தேவையில்லை. அவரவர் வேலையைச் செய்தாலே போதும்.”
“மிஸ் ராதிகா, கொஞ்சம் பொறுமை. நான் பேசிக்கொள்கிறேன்.” என்றார் கோ.
அப்போது ஹாக் கியான் மெதுவாகச் சொன்னான். “ஸாரி மிஸ்டர் கோ. நானே உங்களைப் பார்க்க நினைத்தேன். காலையிலிருந்து கொஞ்சம் மயக்கமாக இருக்கிறது. டாக்டரிடம் போகலாம் என்று நினைக்கிறேன். உங்கள் அனுமதி வேண்டும்.”
“பொய்!” என்றாள் ராதிகா.
“மயக்கத்தோடு வண்டி ஓட்டி விபத்தில் சிக்க நான் தயாரில்லை,” என்றான் அவன். அந்தப் போராட்டத்தில் ஹாக் கியான்தான் ஜெயித்தான்.
அந்த அமளி கொஞ்சம் அடங்கியிருந்த நாள்களில் தான் கம்பெனியின் கணக்கு வழக்குகளை உள்தணிக்கை செய்ய லண்டனிலிருந்து கிரிஸ் வந்தான்.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவன். உயரமானவன்.
மெல்லிய உதடுகள். பொன்னிற முடி. நீல நிறக் கண்கள். மற்றும் எப்போதும் உதடுகளில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு புன்னகை.
சில பெண்கள் வெளிப்படையாக ரசித்தார்கள். சிலர் ரகசியமாக ரசித்தார்கள்.
ராதிகா அவனைக் கண்டுகொள்ளவில்லை.
அதை கிரிஸ் கவனித்தான். அந்த அலட்சியம் அவனுக்குப் பிடித்தது. அடிக்கடி அவளைத் தேடிச் சென்று பேசினான். சிரித்தான். மெல்ல மெல்ல ராதிகாவும் சிரிக்கத் தொடங்கினாள்.
எந்த நொடியில் அவர்கள் இருவருக்குள் காதல் பற்றிக்கொண்டது என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் அது நடந்துவிட்டது.
இரண்டு சுவாரசியமான மனிதர்களுக்கிடையில் உருவாகும் காதலை அலுவலகத்துக்குள் மறைத்து வைப்பது எளிதன்று.
“ராதிகாவிற்குக் காதலா?”
அலுவலகம் முழுவதும் அதிர்ச்சியடைந்தது.
ஆண்களின் வாசமே வேண்டாம் என்று இருந்த முப்பத்தேழு வயது ராதிகாவிற்கு,
வளர்ந்த பிள்ளைகளின் தகப்பனும், விவாகரத்து பெற்றவனும், வெளிநாட்டுக்காரனுமான கிரிஸ்மீது எப்படிக் காதல் வந்தது என்று அலுவலகத்தில் பேசாத ஆளே இல்லை.
காதல் வந்தபின் அதை மறைக்க ராதிகா முயலவில்லை. கிரிஸோடு கைகோத்துக்கொண்டு நகரத்தின் பல உணவகங்களுக்குச் சென்றாள். திரையரங்கின் இருளில் அவனோடு அமர்ந்து படம் பார்த்தாள். மாலை நேரப் பூங்காக்களில் அவனை அணைத்தபடி நடந்தாள்.
ஒருநாள் தன் தாயினுடைய வீட்டிலிருந்து சில உடைமைகளை எடுத்துக்கொண்டு பார்க் ஒயாசிஸில் இருந்த கிரிஸின் வாடகை அபார்ட்மென்டிற்கே குடிபோய்விட்டாள்.
அந்த உடைமைகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது - ஹாக் கியானின் வேன்தான்.
வண்டியை ஓட்டியபடி கண்ணாடி வழியாக அவர்களைப் பார்த்தான் ஹாக் கியான்.
ராதிகா கிரிஸைப் பார்த்தபடி சிரித்துக்கொண்டிருந்தாள். ஒரு பெண் காதலால் நிரம்பியபோது பேரழகியாகி விடுகிறாள் என்று அவனுக்குத் தோன்றியது.
கிரிஸின் உள்தணிக்கை வேலை இரண்டு மாதங்களுக்கு மட்டும்தான். அது முடிந்து அவன் லண்டன் திரும்பிப் போகும் நாளும் வந்தது. அன்றும் ஹாக் கியான்தான் அவர்களை சாங்கி விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றான்.
விமான நிலையத்திற்கு வெளியே கிரிசைக் கட்டியணைத்து விடைபெற்றாள் ராதிகா. அவளது கண்கள் அழுததால் சிவந்திருந்தன.
திரும்பி வரும்போது வண்டியின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த ராதிகா தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாள். அழுத கண்களைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே இருந்தாள்.
வண்டியை ஓட்டியபடி கண்ணாடி வழியாக அவளை ஒரு நொடி பார்த்தான் ஹாக் கியான். அவள்மீது அவனுக்குக் கொஞ்சம் இரக்கம் தோன்றியது.
அதற்குப் பிறகு அலுவலகத்தில் ராதிகாவிடம் பல மாற்றங்கள் தெரிந்தன. அவளது கம்பீரம் மங்கியிருந்தது. முன்பு சட்டென்று நிமிர்ந்து ‘என்ன?’ என்று கேட்கும் அந்தத் தீர்க்கமான கண்களில் - இப்போது ஒரு சோகம் வந்து உட்கார்ந்திருந்தது.
எல்லோரும் கிளம்பிப் போன பிறகும் வேலை செய்துகொண்டே அலுவலகத்தில் தங்கும் ராதிகா இப்போது மாலை ஆறு மணிக்கே கிளம்பத் தொடங்கினாள். வேலையிலும் தடுமாற்றங்கள் தென்பட ஆரம்பித்தன.
ஒருநாள் தலைமை நிர்வாக அதிகாரியே அவளை அழைத்துப் பேசியதாக அலுவலகத்தில் பேச்சு.
“உனக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் சொல். நீ சோர்வடைந்திருக்கும்போது உனக்குத் துணையாக இருப்பதுதான் நாங்கள் உனக்குக் காட்டும் நன்றி.” என்று அவர் சொன்னாராம். ராதிகா எதுவும் சொல்லவில்லையாம்.
ஆனால், செய்தி லண்டனிலிருந்து வந்துவிட்டது. கிரிஸ் தனது நான்கு ஆண்டுக் காதலி கரோலினைத் திருமணம் செய்து கொண்டுவிட்டான். ராதிகா அவனுடைய வாழ்க்கையில் ஒரு தற்காலிக வசிப்பிடம் மட்டும்தான் என்று சொன்னார்கள்.
இந்தச் செய்தி ஹாக் கியானின் காதுகளிலும் வந்து விழுந்தது. ஒரு காலத்தில் தனது வண்டியின் பின்புற இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்த அந்த இருவரின் சிரிப்புகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன. அப்போது அவன் எதுவும் பேசவில்லை. ஒரு வாகன ஓட்டியாகத் தனது வேலையை அமைதியாகச் செய்தான்.
அவர்கள் பேசினால் - அதிகபட்சம் ஒரு புன்னகை.
ஒரு நாள் ஒரு இன்ஸ்பெக்ஷனுக்காக ராதிகாவை அழைத்துக் கொண்டு ஹாக் கியான் தீவு விரைவுச் சாலையில் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான். வண்டியின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த ராதிகா சாலையோர மரங்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியாமல் அவளது கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. ஹாக் கியான் கண்ணாடி வழியாக அவளை ஒரு நொடி பார்த்தான்.
பிறகு மெதுவாகப் பேசினான்.
அது அவன் ராதிகாவிடம் தனிப்பட்ட முறையில் முதல்முறையாகப் பேசும் பேச்சு.
“மேடம்… உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது. அழாதீர்கள். கண்களைத் துடைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அன்பால் நிறைந்தவர். ஆனால் அந்த அன்பு - தகுதியானவர்களிடம் போய்ச் சேர வேண்டும்.”
வண்டி ஓட்டிக்கொண்டிருந்தபடியே அமைதியாகச் சொன்னான் ஹாக் கியான்.
ராதிகா அதிர்ச்சியோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அதற்குப் பிறகு நடந்தது எல்லோருக்கும் ஆச்சரியமான ஒன்றுதான். ராதிகாவும் ஹாக் கியானும் ஒரே நாளில் வேலையிலிருந்து விலகினார்கள். சில நாள்களில் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்.
அந்தச் செய்தி அலுவலகம் முழுவதும் பரபரப்பாகப் பரவியது.
இது எல்லாம் நடந்தது ஐந்து ஆண்டுகளுக்குமுன். இப்போதுதான் அவர்களை மீண்டும் பார்க்கிறேன்.
பேசலாமா? வேண்டாமா? என்று ஒரு நிமிடம் தயங்கினேன். பழைய காயத்தின் வடுக்களை நான் மீண்டும் கிளறிவிடக்கூடும் என்று தோன்றியது. அதனால் அமைதியாகவே நின்றேன்.
இந்த ‘நான்’ யார் என்று நீங்கள் யோசிக்கலாம். பல கதைகளில் இந்த ‘நான்’ முக்கியமில்லாமல் போய்விடுகிறது. இந்தக் கதையிலும் அப்படித்தான். முக்கியமில்லாத இந்த ‘நான்’ - அவர்களிடம் பேசவே இல்லை.

