பெருவிரைவு ரயிலின்
நடைமேடை தரைப் பாதையில்
யாருமற்றுத் தனியே
விழுந்து கிடக்கின்றது
ஓர் ஒற்றை மஞ்சள் ரோஜா !
பெருநகரில் பணி உழல
குதிகாலின் அடி உயர்த்தும்
காலணிகள் அழகணிந்து
குதிரை நடை ஒலியெழுப்பி
விறுவிறுவென நடந்து போன
யுவதியவள் தலையிலிருந்து,
தவறி விழுந்த மஞ்சள் ஒளியோ ?
காத்திருந்து காத்திருந்து
கைகளில் ஒரு தவம்போல் ஏந்தி
இறுதிவரை வந்திடாத
உடைந்து போன நேசத்தின்
கண் கசிந்தக் கண்ணீர்த் துளியோ ?
தந்தையுடன் கை கோர்த்துத்
தாவியாடிக் குதித்தபடி
பரபரப்பு நெரிசல் நடுவே
பறந்து செல்லும் பட்டாம்பூச்சி
தவறவிட்ட மென் கனவோ ?
இயற்கைபோல்
செயற்கை நெய்யும்
இயந்திர உலகில் பூத்த
மலரெனும் மாயப் பொருளோ ?
தோட்டத்தில் பூத்துக் குழுங்கிப்
பயணத்தில் மலர்ந்து சிரித்துப்
பாதியில் வழி பிரிந்த
திசை தொலைத்த ஒற்றைச் சிறகோ ?
வழிபாடோ… வாழ்த்துதலோ…
அலங்காரமோ… அடையாளமோ…
அன்போ… ஆசையோ…
எப்படி நீ பிரிந்து இங்கு
மிதிபடாமல் உறங்குகின்றாய் ?
எந்நேரமும் யார் கால்களோ
உனைக் கடக்க இதழ்கள் முறியலாம்…
எவரேனும் உனை எடுத்து ஓர் ஓரம்
ஒதுக்கி வைக்கலாம்…
இந்நாளின் இறுதியில் நீ
துப்புரவாய் துடைக்கப்படலாம்…
அதுவரை நீ,
யார் பூவோ ?
எங்கிருந்தோ இங்கு வந்தாய் !
பெருவிரைவு ரயில் மேடை
தரைப்பாதை மஞ்சள் மலரே…
நெப்போலியன்

