காரைக்காலில் அந்தப் பழமை வாய்ந்த பள்ளிவாசலில் சுபுஹு தொழுகைக்குப் பின் ஹவுலடியில் வழக்கமாக ஒரு கூட்டம் கூடும். அதைக் கூட்டம் என்று சொல்வதைவிடப் பிஸாது கமிட்டி என்று கூறலாம். அந்தக் கமிட்டியில் மானா சேனா, நியாஜி காகா, சின்ன மரைக்கார் போன்ற பெரிய தலைகள் தலைமைத் தாங்கும். அந்த இடம் பள்ளிவாசல் என்பதையும் மறந்து மூக்குப் பொடியை உறிஞ்சி உதறியப்படியும், சுருட்டு புகைத்தப்படியும், பக்கத்து வீட்டில் ஆரம்பித்து, பக்கத்து தெருவிற்குச் சென்று, அப்படியே கீழத்தெருவில் நடக்கும் பிரச்சனைகளை முடித்து, ஆப்பரேசன் சிந்தூர், காஸா வரை நீளும், அதற்குள் வானமும் தனது கிழக்கு வாசலில் சூரியனை வரவேற்கும். அப்போது இந்தக் கூட்டம் தேத்தண்ணிக் குடிக்க ஜப்பார் கடையை நோக்கி நகரும். தினமும் கமிட்டியில் குறைந்தது பத்து பேராவது இருப்பார்கள். வெள்ளிக்கிழமைகளில் இந்தக் கமிட்டி மாயமாய் மறையும், காரணம் அன்று பள்ளியில் ஹதீஸ் சொல்வார்கள்.
அன்று பொதுவிடுமுறையாதலால் கூட்டம் ஜெகஜோதியாகக் களைகட்டியது. அன்றைய ஸ்பெஷலாக வக்பு திருத்த சட்டம் பற்றி ஆளாளுக்குக் கருத்துச் சொன்னார்கள். அப்போது நாகூரிலிருந்து வந்த ஜமால் காகா, ‘ஒங்களுக்குச் சேதி தெரியுமாங்கனி?’ என்றவுடன், என்ன விசயம் என்பதை வார்த்தையால் கேட்காமல், ஒட்டு மொத்த கமிட்டியும் முகத்தில் எதிர்வினை காட்டி ஜமால் காகாவை ஆவலோடு நோக்கியது. ‘நம்ம சேத்த காகா இருக்காஹள்ள, அஹ மவ இன்னிக்கி காலங்காத்தால யாரோ ஒரு பையனோட ஓடிப்போயிடுச்சாம். பாவம் சேத்த காகா இடிஞ்சிப் போயி வுக்காந்திருக்காஹலாம்’ என்று ஜமால் காகா சொல்லி முடித்தவுடன், அவல் கிடைத்த சந்தோசத்தில் உரல்கள் இடிக்கத் தொடங்கின. அதில் சிதறியதில் சில அவல்கள்.
‘ஊருக்கே நாயம் சொல்ற சேத்த காகா, இதுக்கு என்ன சொல்ல போறாஹா?’
‘ஓய், ஊருக்குத்தாங்கனி உபதேசம், சொல்றது ஒன்னு செய்யிறது ஒன்னு’
‘எஹ வூட்டயே கவனிக்க முடியல, அப்புறம் எப்படி ஊரக் கவனிப்பாஹா’
‘எப்பவும் இந்த முசீபத்து புடிச்சவள, தலையில தூக்கிவச்சுக்கிட்டு ஆடுவாஹா. இந்தத் தொடர்பு எவ்வளவு காலமா இருந்துச்சோ, இஃது அவுஹ வூட்டுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்’
‘ச்சே, இவ ஓடிப்போயி நம்ம மார்க்கத்துக்குத்தான் கெட்டப்பேரு’
‘எல்லாம் சினிமாவ பாத்துக் குட்டிசுவராப் போச்சு’
கடைசியாக மானா சேனா, ‘நிறுத்துங்கனி, சினிமாவுல ஆயிரம் காட்டுவான். எல்லாத்தையும் செய்வீரோ? இதெல்லாம் சும்மா சல்ஜாப்பு வேல, பொண்ண ஒழுங்கா வளக்கத் தெரியல. எஹல்லாம் ஊருல பெரிய மனுஷனுவ. இதுவே எம்பொண்ணா இருந்தா, வெட்டி குழிதோண்டி பொதச்சி மூணாம் ஹத்தம் ஓதி, பாச்சோறு கொடுத்திருப்பேன். வாங்கனி போலாம்’ என்று சொல்லியபடியே முன்னே செல்ல, செம்மறியாட்டுக் கூட்டம் போல மற்றவர்கள் பின்னே சென்றனர்.
இதையெல்லாம் கண்ட பள்ளியின் பேஷ் இமாம் இந்த மூமின்களை நினைத்துக் கண்கலங்கினார். இவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்தார். அவரால் இதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது. காரணம், ஏற்கனவே இரண்டு மூன்று முறை அவர்களிடம் நேரடியாகவே ‘பள்ளிவாசலில் உட்கார்ந்து புறம்பேசி பாவத்தைச் சம்பாதிக்காதீங்கனு’ சொல்லி இவர்களுடைய பகையை இமாம் சம்பாதித்துக் கொண்டார். இதற்கொரு முடிவு கட்டவேண்டுமென இமாம் நிய்யத்து வைத்தார்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கான பாங்குச் சொல்லி முடிந்தவுடன், மிம்பரில் ஏறிய இமாம் குத்பா பிரசங்கத்தைத் தொடங்கினார். பிஸாது எனும் புறம் பேசுவது பாவக் காரியம் எனக் கூறி, ஹதீஸ் விளக்கமளித்தார். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! புறம் பேசுவது விபச்சாரத்தை விடக் கொடியது என்பது எதற்காக? என்று சஹாபாக்கள் கேட்டபோது, ‘நிச்சயமாக, விபச்சாரம் புரிந்த மனிதன் அதைப் பற்றி இறைவனிடம் தவ்பாச் செய்கிறான்; அதை இறைவனும் மன்னித்துவிடுவான். ஆனால், ஒருவன் யாரைப் பற்றிப் புறம் பேசினானோ, அவரைப் புறம் பேசப்பட்டவர் மன்னிக்காதவரை, புறம் பேசியவனை இறைவனும் மன்னிக்க மாட்டான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக மிஸ்காத் மூலமாக அபூஸஈது (ரலி), ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேலும் அபூதாவூத்தில், “இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிஃராஜிக்குச் சென்றிருந்த சமயம் ஒரு கூட்டத்தாருக்கு அருகில் கடந்து செல்லும்போது, அவர்களுக்கு ஈயத்தினாலான நகங்கள் இருந்ததாம். அவர்கள் அந்த நகங்களினால் தங்களது முகம் மற்றும் நெஞ்சங்களைக் காயப்படுத்திக் கொள்கிறார்கள். ஜிப்ரயீலே யார் இவர்கள் என்று ரசூலுல்லா கேட்க, இவர்கள்தான் மக்களின் இறைச்சிகளைச் சாப்பிட்டு அவர்களின் குறைகளில் விழுந்தவர்கள். அதாவது புறம்பேசித் தெரிந்தவர்கள் என்று சொன்னதாக அனஸ் (ரலி) அவர்கள் பதிவுசெய்கிறார்கள். ‘இனிமேலாவது நாம் அடுத்தவர்களைப் பற்றிப் புறம்பேசாமல் இருக்க வேண்டும். அடுத்தப் பத்து நாள்களில் புனித ரமலான் மாதம் வருகிறது. ஆகவே நமது நாவை பாதுகாக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக, ஆமீன்’ என்று இமாம் தமது உரையை முடித்து, ஜூம்ஆ தொழுகையை நடத்தி முடித்தார்.
தொழுகை முடிந்து வெளியே வந்தவுடன், நமது பிஸாது கமிட்டி மய்யத்தாங்கொல்லையில் கூடியது. ‘காகா, இந்த இமாம் நம்மளப் பத்திதான் குத்பாவுல குத்தி காட்டுராஹா, கவனிச்சீங்களா’ சின்ன மரைக்கார் தொடக்கவுரை வாசிக்க, ‘இந்த இமாமோட யோக்கியதை நமக்குத் தெரியாதா? இவுஹ, ரஸூலுல்லா பரம்பரையில் வந்தாஹா பாரு, வாழ்க்கையிலே இவுஹ, பிஸாது பேசியதே இல்லையா?” இது மானா சேனா.
உடனே நியாஜி காகா, ‘நம்ம ஊருக்கு பொழைக்க வந்திட்டு, நமக்கே அறிவுரை சொல்லுறாஹாலா. இருக்கட்டும் எங்க முத்தவல்லி மச்சான்கிட்ட சொல்லி, இவுஹள இந்த ஊரவிட்டு தொரத்துறேன்’ என்று அல்லாஹ்வை மறந்து அங்குச் சபதம் செய்தார்.
மறுநாள் அதிகாலையில் கண் விழித்து எழுந்த நியாஜி காகா, தன் மனைவி ஜெய்த்தூனை எழுப்பித் தேத்தண்ணிப் போட சொல்லிவிட்டு கக்கூசுக்குப் போனார். செல்லும்போது தன் மகன் அன்சாரியின் அறையை எட்டிப் பார்த்தவருக்கு ஆச்சரியம், காரணம் எப்போதும் எட்டு மணி வரை தூங்கும் அன்சாரி, இப்ப காணவில்லை. சந்தேகத்துடன் தன் மனைவியிடம், ‘ஏம்புள்ள ஜெய்த்தூன் அன்சாரி எங்கே? அறையில காணோம்’ என்று கேட்டவுடன், ஜெய்த்தூன் சாதாரணமாக, ‘வாசக்கதவு வேற திறந்து கிடக்கு, வெளியே போனா சொல்லிட்டு போவானே. இருங்க, போன் அடிச்சு பாக்குறேன்’ என்று சொல்லிக்கொண்டே போன் செய்தவர், ‘என்னங்க, போன் சுவிட்ச் ஆப்னு வருது’ என்று அலற. நியாஜி காகா அவசர அவசரமாக அவனுடைய அறைக்குள் சென்று பார்த்தார். அவனுடைய அலமாரியின் கதவுகள் சரியாகச் சாத்தப்படாமல் இருந்தது. திறந்துப் பார்த்தார் உள்ளே அடுக்கி வைக்கப்பட்ட துணிகள் கலைந்து, பாதித் துணிகள் இல்லாமல் இருந்தது. ‘என்னங்க, இங்கே பாருங்க லெட்டர்’ என்று ஜைத்தூன் சொல்ல, திரும்பிய நியாஜி காகாவின் கண்களில் அந்த லெட்டர் ஃபேன் காற்றில் படப்படத்தது. அந்த லெட்டரை நடுங்கிய கைகளில் எடுத்துப் பிரித்துப் படித்தவர் அதிர்ச்சியடைந்தார்.
“அன்புள்ள வாப்பா, உம்மாவுக்கு அன்சாரி எழுதிக்கொண்டது. நான் பாரதி நகர்ல ஒரு பெண்ணைக் காதலிச்சேன். ரெண்டு பெரும் மனசாரக் கல்யாணம் செஞ்சிக்க ஆசப்பட்டோம். இந்த விசயம் தெரிந்தால் நீங்களும், நம்ம சொந்தக்காரங்களும் ஒத்துக்கமாட்டீங்க. அதுனால, நாங்க பெங்களூருக்குப் போயி நிம்மதியா வாழ போகிறோம். எங்களுக்கு அல்லா வழி காட்டுவான். தயவுசெய்து எங்கள தேடவேண்டாம். இப்படிக்கு அன்சாரி”
படித்து முடித்தவுடன், நெஞ்சைப் பிடித்தபடியே நியாஜி காகா அங்கேயே உட்கார்ந்துவிட்டார். மனைவி ஜெய்த்தூன் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார். நியாஜி காகா நேற்று பேசியதை நினைத்துப் பார்த்தார். நாம நாகூர் சேத்த காகாவை பற்றிப் பிஸாது பேசினோம். அந்தப் பாவத்துக்கு அல்லாஹ் இன்னிக்கி எனக்குக் கூலியை தந்துட்டான். இனிமே நா எப்படித் தல நிமிர்ந்து நடப்பேன்? தனக்குத்தானே புலம்பினார்.
இன்ஷா அல்லா இனிமே நா பிஸாது பேசமாட்டேன். மத்தவங்களையும் பிஸாது பேச வைக்கக்கூடாது. யாராவது பிஸாது பேசினா, அத கேட்கவும் கூடாது. மொதல்ல இமாம்கிட்ட போயி மன்னிப்பு கேட்கணும். அப்புறம் அந்தப் பிஸாது கமிட்டியை கலைச்சிடணும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டே, சட்டை பொத்தான்கள் ஒவ்வொன்றாகப் பூட்டினார். அப்போது சுபுஹு தொழுகைக்கான பாங்கோசை ஒலிக்கத் தொடங்கியது. இப்போது மனத்தெளிவுடன் தொழ நியாஜி காகா பள்ளிவாசலுக்குப் புறப்பட்டார். நியாஜி காகா திருந்திட்டாஹா. ஆனா நாம எப்ப?
மில்லத் அகமது

