தலைப்பு: முகம் தொலைத்தவனின் அகக்குறிப்புகள் : சிறுகதைத் தொகுப்பு நூலாசிரியர்: ஹேமா
பதிப்பாளர்: Singapore : Hemalatha, 2023.
குறியீட்டு எண்: Sing HEM
அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை
இந்நூல் பதினெட்டு சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகள் சிங்கப்பூர் சூழ்நிலையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதோடு, பல்வேறு தளங்களிலும் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.
ஒரு கட்டடம் ஆன் பிளாக் திட்டத்தின்கீழ் (en bloc) சிறிது நாள்களில் இடிக்கப்படப்போகிறது. அங்கிருந்து வெளியேறப் போகும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை மிக நுட்பமான முறையில் ஆராயந்து கூறும் ‘பெயர்ச்சி’ என்ற சிறுகதை தங்கமுனை விருதை வென்ற கதை என்பது குறிப்பிடத்தக்கது.
‘வியூகம்’ கதையில் வீடு மாறிச்செல்லும் ஒரு தம்பதியினர் புது வீட்டில் சில அமானுஷ்யமான சம்பவங்களை எதிர்நோக்குகின்றனர். சிங்கப்பூரில் நடந்த உண்மைச் சம்பவத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை.
வேலையில் விடுப்பு எடுத்துக்கொண்டு தனக்கென ஒரு தினத்தை கொண்டாடும் நாயகி ‘அவளுக்கென்று ஒரு தினம்’ கதையில் வருகிறாள். பெற்றோர்கள் சண்டையிடுவதால் ஒரு குழந்தைக்கு ஏற்படும் உளவியல் மாற்றங்களை அற்புதமாகப் படம் பிடித்துக்காட்டுகிறது ‘மொட்டுக்கும் மனசு உண்டு’ என்ற கதை.
தொடர்புடைய செய்திகள்
‘கடவுளின் சேவல்’ கதையில் சுதந்திரமாக அலைந்து திரிந்துக்கொண்டிருக்கும் கோழிகளைக் குடும்பப் பின்னணியில் உருவான கதையோடு முடிச்சிட்டு எழுதி சுவையைச் சேர்த்திருக்கிறார் ஆசிரியர். இதைத் தவிர சில கதைகள் வரலாற்றுச் செய்திகளையும் உரசிச் செல்பவையாக உள்ளன.
மொத்தத்தில் இந்நூல் மிகச் சிறந்த படைப்பு, வாசித்து உணரலாம் தேசிய நூலக வாரியத்துக்காக, இராமசாமி குமரேசன் நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

