வெள்ளைக் காலணிகள்

வெள்ளைக் காலணிகள்

3 mins read
b8cb86f7-3252-4795-821c-452feb2c12ea
எழுத்தாளர் பாலு மணிமாறன் - எழுத்தாளர் பாலு மணிமாறன்

பாலு மணிமாறன்

சாந்தினி வுட்லேண்ட்ஸ் எம்ஆர்டி நிலையத்தில் இறங்கியவுடன் முதலில் காலைக் குனிந்துபார்த்தாள்.

அவள் காலணிகள் அதிகாலையின் மங்கலான வெளிச்சத்திலும் பளிச்சென்று தெரிந்தன. முதல்நாள் இரவு, எல்லாரும் உறங்கிய பின், பழைய பல் துலக்கும் பிரஷால் சோப்பைத் தேய்த்து காலணியோடு அவள் செய்த யுத்தம் வீண் போகவில்லை.

ஒவ்வொரு கறையைத் தேய்க்கும்போதும், தன் மீதான அவமதிப்புகளையும் சேர்த்தே தேய்ப்பதாக உணர்ந்தாள் சாந்தினி. கிழிந்த நூலை உள்ளே தள்ளி மறைத்தபோது, அது ஏழ்மையை மறைக்கும் ரகசியச் செயலாக அவளுக்குப் பட்டது.

காலணிகள் சுத்தமாக இருந்தால், தன்னைப் பற்றிய கேலிகள் குறைந்துவிடும் என்று அவள் நம்பினாள்.

கடந்த மாதம் பெய்த மழையில் காலணிகள் அழுக்கானபோது, அதைப் பார்த்து வகுப்பில் அந்த இரண்டு மாணவிகள் சிரித்த சிரிப்பு இன்னும் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஐந்து வினாடிகள் சிரிப்புதான். ஆனால் சில அவமதிப்புகளுக்கு மிக நீண்ட ஆயுள் இருக்கும். இந்த அவமதிப்பும் அப்படித்தான்.

அதற்குப் பிறகு, கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பதை விட, காலணிகளை அதிகம் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள் சாந்தினி.

பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கூட்டத்தில் அவளும் கலந்து நடந்தாள். அவளைச் சுற்றி நடந்த மாணவர்கள் விலையுயர்ந்த காலணிகளை அணிந்திருந்தார்கள். அந்தக் காலணிகள் அழுக்கானால் அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கு விரைவில் புதிய காலணிகள் கிடைத்துவிடும். ஆனால், சாந்தினிக்கு இது வெறும் காலணி மட்டுமல்ல, அவளுடைய குடும்ப பட்ஜெட்டில் ஒரு பெரும் சுமை.

தோழி மெய்லின் அவளருகே வந்தாள்.

“மீண்டும் பாலிஷ் பண்ணியிருக்கியா?”

சாந்தினி மெலிதாகப் புன்னகைத்தாள்.

“வேறு என்ன செய்ய முடியும்?” என்று அவள் நினைத்தாலும், வாய் ‘இல்லை’ என்று சொன்னது.

மெய்லின் அவளுடைய பொய்யைக் கண்டுபிடித்துவிட்டாள்.

“அவங்க சொன்னதை இன்னும் நினைக்கிறியா?” என்ற மெய்லினின் கேள்விக்கு, “இல்லை” என்று சாந்தினி இன்னொரு பொய்யைச் சொன்னாள்.

சாந்தினிவின் குடும்பம் அருகிலுள்ள வாடகை வீட்டில் வசிக்கிறது. அவளுடைய அப்பா இரவு வேளை டெக்ஸி ஓட்டுநர். அம்மாவிற்கு ஓர் உணவகத்தில் வேலை.

புதிய காலணி வாங்க வேண்டுமென்றால் வேறொறு முக்கியமான குடும்பச் செலவைத் தள்ளிப் போடவேண்டிய நிலை. அதனால்தான் சாந்தினி பழைய காலணியையே மீண்டும் மீண்டும் சுத்தம் செய்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

வகுப்பில், அதே பெண்களில் ஒருத்தி சத்தமாகக் கத்தினாள்: “வாவ்! இன்றைக்கு சாந்தினியின் காலணியில் முகம் பார்க்கலாம் போல! பளபளக்கிறது!!”

சிலர் சிரித்தார்கள்.சாந்தினியும் சேர்ந்து சிரித்தாள். அது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் சேர்ந்து சிரிப்பதைப் பார்த்ததும் மற்றவர்கள் அமைதியாகி விட்டார்கள்.

இடைவேளையில் மெய்லின் கேட்டாள்.

“ஏன் சிரிச்சே?”

சாந்தினி புத்தகப்பையைத் திறந்தாள். அதற்குள் காலை அம்மா வைத்திருந்த சிறிய குறிப்பு இருந்தது.

“காலணி சுத்தமாக இருந்தால் நல்லது. ஆனால் தலை நிமிர்ந்து நடந்தால் அதுதான் பெரியது. நீ எவ்வளவு கஷ்டப்படுகிறாய் என்று எங்களுக்குத் தெரியும். காலணியில இருக்கிற கறையை விட, பயத்தால் மனதில் வரும் கறைதான் மோசமானது. அதனால் எப்போதும் தலை நிமிர்ந்து நட என் செல்லம்.”

அவள் அந்தக் குறிப்பை ரயிலில் இரண்டு முறை வாசித்திருந்தாள்.அந்த வரிகள் சாந்தினிக்குள் புது வெளிச்சத்தைப் பாய்ச்சின. ‘அவர்கள் பார்ப்பது என் காலணியைத்தான், என்னை அல்ல’ என்ற உண்மை புரிந்தது. அம்மாவின் உழைப்பும், அப்பாவின் ஓட்டுநர் பணியும் காலணியின் விலையைவிட மேலானது என்று மனதுக்குள் ஒருவித பெருமித உணர்வு.

மெய்லினிடம் சாந்தினி சொன்னாள், “அவங்க காலணியைத்தான் பார்த்தாங்க. என்னை இல்ல.”

பள்ளி முடிந்ததும் திடீரென்று மழை பெய்தது. மாணவர்கள் ஓடி ஒதுங்கி நின்றார்கள். வாசல் அருகே நீர் தேங்கியது.

சாந்தினி தண்ணீரைப் பார்த்து ஒரு நிமிடம் தயங்கினாள்.

இது வெறும் தண்ணீர் அல்ல, தன்னுடைய பயத்தின் எல்லை என்று உணர்ந்த அந்த விநாடி, அவள் நேராக அந்தத் தேங்கிய தண்ணீருக்குள் காலடி எடுத்து வைத்தாள்.

அவளுடைய வெள்ளைக் காலணிகள் உடனே பழுப்பாயின. காலணிகளின் வெண்மை மறைந்து அவை அழுக்கானபோது அவளுக்குள் இருந்த ஏதோ ஒரு பாரம் குறைந்ததாக உணர்ந்தாள் சாந்தினி.

வுட்லேண்ட்ஸ் எம்ஆர்டி அருகே வந்தபோது அவள் கீழே குனிந்து காலைப் பார்த்தாள். காலணிகள் அழுக்காகத்தான் தெரிந்தன. ஆனால் அவள் தலையை உயர்த்தி, கூட்டத்தின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தபடி, காலணியைப் பற்றிய மனத்தடையற்றவளாக, எம்ஆர்டி நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

குறிப்புச் சொற்கள்