தலைப்பு: தருக் நூலாசிரியர்: கார்த்திக் பாலசுப்ரமணியன் பதிப்பாளர்: நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம், 2023. குறியீட்டு எண்: KAR அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
மனிதன் சிரிக்கும் விலங்கு என்ற சொலவடை போல அவன் தேடும் விலங்கு என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஊர்விட்டு ஊர், நாடுவிட்டு நாடு, கண்டம்விட்டுக் கண்டம் தேடிக்கொண்டிருக்கிறான். பொருளாக, வேலையாக, நிலமாக, வளமாக அதற்கான காரணங்களையும் வைத்திருக்கிறான்.
தேடலின் அந்தம் அதிகாரமாக அவனுள் உருக்கொள்கிறது. அதிகாரம் அடிமைப்படுத்துகிறது. அடிமைப்படுத்தப்படுதலின் வழியே துன்பத்துக்கு ஆளாகும் மனிதன், அதற்கு எதிர் வினையாக போராடுகிறான். அதைத் தொடர்ந்து வரும் சுதந்திர தாகம் என்று மனித நாகரிகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் இந்த அதிகாரமும் அடிமைப்படுத்தலும் நடந்துகொண்டே இருந்தது. இன்றும் நடக்கின்றது. இனியும் நடக்கும்.
இரு வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளைச் சமாந்தரமாக சொல்லும் புதினம். இலகு மொழியில் வாசகனைத் தன்னுடன் இழுத்துச் செல்லும் நுட்பத்தைக் கொண்டிருக்கும் கதை.
300 ஆண்டுகளுக்கு முன்பு கைதிகளோடு ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்த இங்கிலாந்து குடிமக்கள், அங்கே நிலைநிறுத்தும் இங்கிலாந்து அரசியின் அதிகாரம் என்று காலத்தில் ஒருபுறம் வில்லியம் என்ற அலுவலகர் பார்வையில் நகரும் கதை.
சமகாலத்தில் சிட்னியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்கு மனைவியுடன் வந்திருக்கும் இந்திய முஸ்லிம் இளைஞன் காசிம். இவ்விரண்டு காலக் கட்டங்களையும் இணைக்கும் ஜெட்டா என்ற தருக் பழங்குடி வம்சாவளிப் பெண்.
சொந்த நிலங்களைவிட்டு துரத்தப்படும் மாந்தர்களை மட்டுமல்ல அங்கீகாரம் கிடைக்காமல் நிறவெறியால் உடைந்துபோகும் மனித மனங்களை வாசகனின் முன் நிறுத்தும் காத்திரமான படைப்பு.
தேசிய நூலக வாரியத்துக்காக, சரவணபவன் ஆதவன்
இந்த நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

