வானவில்

வானவில்

11 mins read
e56e2cab-ca3c-4bb6-8861-d2572ea42ea9
எழுத்தாளர் டி என் இமாஜான் - டி என் இமாஜான்

டி.என்.இமாஜான்

சிங்கப்பூரின் புகழ்பெற்ற அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில், கொன்றை மரங்கள் மஞ்சள் பூக்களை உதிர்த்துக் கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுது. நூலகத்தின் படிக்கட்டுகளில் வேகமாக இறங்கி வந்த லிடியாவின் கைகளில் இருந்த புத்தகங்கள், எதிர்பாராமல் எதிரே வந்த குமரனின் மீது மோதி சிதறின.

“ஓ! ஸாரி...” என்று பதற்றத்துடன் குனிந்து புத்தகங்களை எடுத்தாள் லிடியா.

அவளுக்கு உதவ குனிந்த குமரன், அவளது கண்களைப் பார்த்த அந்த நொடி, ஏதோ ஒரு மௌன ராகம் இருவருக்குள்ளும் இசைக்கத் தொடங்கியது.

“பரவாயில்லை... நான் தான் கவனிக்காமல் வந்துவிட்டேன்,” என்றான் குமரன் தன் மெல்லிய குரலில்.

அது வெறும் சந்திப்பு அல்ல; இரு வேறு கலாச்சாரங்கள், இரு வேறு மொழிகள், இரு வேறு உலகங்கள் ஒன்றிணைவதற்கான புள்ளி.

படிக்கும் காலத்திலேயே குமரனின் கவித்துவமான தமிழும், லிடியாவின் துடிப்பான சீனப் பாரம்பரிய ஓவியக் கலையும் அவர்களை இன்னும் நெருக்கமாக்கின. குமரன் அவளுக்குப் பாரதியார் கவிதைகளின் அர்த்தங்களை ஆங்கிலத்தில் விவரிப்பான். லிடியா அவனுக்குச் சீனப் புத்தாண்டு பலகாரங்களின் பின்னணியில் உள்ள கதைகளைக் கூறுவாள்.

ஒருநாள், மெரினா பே சாண்ட்ஸ் கடற்கரையில் அமர்ந்திருந்தபோது, லிடியா குமரனின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“குமரன், நம்முடைய இந்த அன்பு வெறும் பல்கலைக்கழகப் பருவத்துக் கனவாகவே முடிந்துவிடுமா? நம் வீடுகளில் ஏற்பார்களா?” என்று கவலையோடு கேட்டாள்.

குமரன் அவளது கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, “லிடியா, காதலுக்கு மொழி தெரியாது, இனம் தெரியாது என்று சும்மா சொல்லவில்லை. என் மனதில் நீ மட்டும்தான். எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், உன் கைகளை நான் விடமாட்டேன்,” என்றான்.

வசந்த காலம் அழகாக நகர்ந்தது. இருவரும் படித்து முடித்து, நல்ல வேலைகளிலும் அமர்ந்தனர். ஆனால், நிஜ வாழ்க்கை என்னும் புயல் அவர்களை நோக்கி வீசத் தயாராகிக் கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை.

முதலில் புயல் குமரனின் வீட்டில்தான் வெடித்தது. லிடியாவைப் பற்றிக் குமரன் தன் தந்தை முத்துக்கிருஷ்ணனிடம் கூறியபோது, அவரால்தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஊசி குத்தியது போல முகம் சிவந்தது.

“என்னடா சொன்னாய்? ஒரு சீனப் பெண்ணா? நம்முடைய குடும்பப் பாரம்பரியம் என்ன, நம்முடைய குலம் என்ன? உன்னைப் படிக்க வைத்ததற்கு நீ தரும் பரிசு இதுதானா?” என்று சத்தமிட்டார்.

“அப்பா, லிடியா ரொம்ப நல்ல பொண்ணுப்பா. அவ என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கா. மனிதநேயமும் அன்பும் தான் முக்கியம்ப்பா, இனம் இல்லை,” என்று வாதாடினான் குமரன்.

“நிறுத்து! இந்த வீட்டில் நான் இருக்கும் வரை இது நடக்காது. வேறு பெண்ணைப் பார்த்தால் கல்யாணம் செய்துகொள், இல்லையென்றால் உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை,” என்று தீர்க்கமாகக் கூறிவிட்டார் முத்துக்கிருஷ்ணன். தாய் ராஜேஸ்வரி ஒருபுறம் கண்ணீர் வடித்தாளே தவிர, கணவனை எதிர்த்துப் பேசத் துணிவில்லை.

மறுபுறம், லிடியாவின் வீட்டிலும் நிலைமை மோசமாக இருந்தது. அவளது தந்தை டான் செங் லூங், பாரம்பரியமிக்க ஒரு சீனத் தொழிலதிபர்.

“லிடியா! நம்முடைய குடும்ப கௌரவம் என்ன என்று உனக்குத் தெரியாதா? ஒரு இந்திய வாலிபனை நீ திருமணம் செய்வதா? நம் சடங்குகள், நம் மொழிகள் எங்கே? அவனுடைய கலாசாரம் எங்கே? இதற்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்,” என்று மேசையைத் தட்டி கோபத்தை வெளிப்படுத்தினார்.

“அப்பா, அன்பு காட்டும் இதயத்திற்கு நிறமும் இனமும் கிடையாது. குமரனைத் தவிர வேறு யாரையும் என் கணவனாக நினைக்க முடியாது,” என்று அழுதுகொண்டே தன் அறைக்குள் ஓடினாள் லிடியா.

இரு வீடுகளிலும் பேச்சுவார்த்தைகள் முடங்கின. காதலர்கள் இருவரும் நடுவழியில் நிற்பது போல் உணர்ந்தனர். ஆனால், அவர்களின் காதல் பலவீனமானது அல்ல.

குமரனும் லிடியாவும் தங்கள் பெற்றோர்களை எதிர்க்கவில்லை; மாறாக, தங்கள் மௌனத்தாலும், மாறாத அன்பினாலும் அவர்களை வெல்ல நினைத்தனர்.

குமரன் தன் தந்தையின் கோபத்தைத் தாங்கிக் கொண்டு, வீட்டிற்குத் தேவையான அனைத்துக் கடமைகளையும் சரியாகச் செய்தான். யாரிடமும் பேசாமல், தன் உணவை மட்டும் தவிர்த்தான். அவனது உடல்நிலை நலிவடைவதைக் கண்டு தாய் ராஜேஸ்வரியின் இதயம் உருகியது.

“ஏங்க, பையன் பாவம்ங்க. காதலிச்சா என்ன, அந்தப் பொண்ணு குணத்துல தங்கமாமே. நம்ம பையனோட சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்?” என்று கணவரிடம் கெஞ்சினாள்.

அதே சமயம், லிடியா தன் தந்தையிடம் வாதாடவில்லை. ஆனால், உணவை மறுத்து, தன் அறையிலேயே முடங்கிக் கிடந்தாள். அவளது முகத்தில் இருந்த புன்னகை மறைந்துபோனது. டான் செங் லூங் தன் மகளின் இந்த நிலையைத் தாங்க முடியாமல் தவித்தார்.

ஒரு கட்டத்தில், குமரனின் நண்பன் ஆகாஷ் இரு குடும்பங்களையும் ஒரு பொது இடத்தில் சந்திக்க வைத்தான்.

அங்கே முத்துக்கிருஷ்ணனும், டான் செங் லூங்கும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இருவரிடமும் இருந்த ஈகோ மெல்ல கரையத் தொடங்கியது.

முத்துக்கிருஷ்ணன் பேசினார், “என் மகனின் உயிர் அந்தப் பெண்ணிடம் இருக்கிறது என்பதை அவனது கண்கள் சொல்கின்றன. உங்கள் மகளின் நிலையும் அதுதான் என்றால், நம் பிடிவாதத்தால் அவர்களின் வாழ்க்கையை ஏன் அழிக்க வேண்டும்?”

டான் செங் லூங் பெருமூச்சு விட்டார். “ஆமாம், பிள்ளைகளின் மகிழ்ச்சியைவிட நம் கௌரவம் பெரிதல்ல. நான் சம்மதிக்கிறேன்.”

இரு குடும்பத்தாரும் சம்மதித்தனர்.

சிங்கப்பூரின் ஒரு புகழ்பெற்ற மண்டபத்தில் திருமணம் மிக விமரிசையாக நடைபெற்றது. அது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.

காலை வேளையில், குமரனின் பாரம்பரியப்படி, லிடியா பட்டுப்புடவை உடுத்தி, மல்லிகைப் பூச்சூடி, குமரனின் கைகளால் மாங்கல்ய தாரணம் செய்துகொண்டாள். நாதஸ்வர ஓசை மண்டபமெங்கும் எதிரொலித்தது. முத்துக்கிருஷ்ணனும் ராஜேஸ்வரியும் மருமகளை ஆசிர்வதித்தனர்.

மாலை வேளையில், சீனப் பாரம்பரியப்படி தேநீர் வழங்கும் சடங்கு நடைபெற்றது. குமரன் பாரம்பரியச் சீன உடையில் கம்பீரமாக வீற்றிருக்க, லிடியா சிவப்பு நிற ‘க்யூபாவ்’ உடையில் தேவதையாக வந்தாள். இருவரும் பெரியவர்களின் காலில் விழுந்து தேநீர் வழங்கி ஆசி பெற்றனர்.

“லிடியா, நீ இப்போது எங்கள் வீட்டு விளக்கு,” என்று ராஜேஸ்வரி அவளது நெற்றியில் திலகமிட்டார்.

“குமரன், என் மகளை நன்றாகப் பார்த்துக்கொள்,” என்று கண்ணீருடன் கூறினார் டான் செங் லூங்.

இரு குடும்பங்களும் ஒன்றிணைந்தன. குமரனும் லிடியாவும் ஒரு புதிய வாடகை வீட்டில் தங்கள் கூட்டு வாழ்க்கையைத் தொடங்கினர். ஆரம்ப நாட்கள் தேனிலவாக இனித்தன.

திருமண வாழ்க்கை என்பது வெறும் சில நாட்களின் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது வாழ்நாள் முழுமைக்குமான புரிதல் என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்தனர்.

ஆரம்பத்தில் சிறிய விஷயங்களில் சிக்கல்கள் தொடங்கின. சமையலறையில் இருந்து சிக்கல் ஆரம்பித்தது. குமரனுக்கு மசாலாக்கள் நிறைந்த தென்னிந்திய உணவுகள் பிடிக்கும். லிடியாவிற்கு மசாலா இல்லாத, வேகவைத்த சீன உணவுகள் பிடிக்கும்.

“லிடியா, சாம்பாரில் உப்பு கொஞ்சம் கம்மியா இருக்கு. அப்புறம் இந்த கறிவேப்பிலையை ஏன் வதக்காமல் போட்டாய்?” என்று குமரன் சாதாரணமாகக் கேட்பான்.

ஆனால், வேலை முடிந்து களைப்பாக வந்த லிடியாவிற்கு அது பெரிய குற்றச்சாட்டாகத் தோன்றும். “குமரன், நான் எனக்காகச் சமைக்கவில்லை, உனக்காகத் தான் முயற்சி செய்கிறேன். என் சமையல் உனக்குப் பிடிக்கவில்லை என்றால் நீயே சமைத்துக் கொள்,” என்று கோபிப்பாள்.

அதுமட்டுமின்றி, திருவிழாக்கள் மற்றும் சடங்குகளின் போது குழப்பங்கள் நீடித்தன. தீபாவளியின் போது லிடியாவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. சீனப் புத்தாண்டின் போது குமரனால் அவர்களின் உறவினர்களோடு முழுமையாக ஒன்றிணைய முடியவில்லை. மொழி ஒரு தடையாக நின்றது.

பெரிய அளவில் சண்டைகள் இல்லை என்றாலும், இருவருக்குள்ளும் ஒரு மெல்லிய மௌன இடைவெளி உருவாகத் தொடங்கியது. அந்த இடைவெளிதான் பின்னாட்களில் வரப்போகும் பெரிய புயலுக்கு அஸ்திவாரம் என்பதை அவர்கள் அறியவில்லை.

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், குமரனின் நிறுவனத்தில் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாகப் பலரை வேலையை விட்டு நீக்கினர். அதில் குமரனும் ஒருவன் ஆனான்.

திடீரென வேலை இழந்ததால் குமரன் மன அழுத்தத்திற்கு ஆளானான். வீட்டின் வாடகை, அன்றாடச் செலவுகள் அனைத்தும் லிடியாவின் ஒற்றைச் சம்பளத்தில் சுமையாக விழுந்தன.

குமரன் வேலை தேடி அலைந்தான். ஆனால், தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. அவனது ஈகோ லிடியாவின் சம்பளத்தில் வாழ்வதை ஏற்க மறுத்தது.

“லிடியா, நான் ஒரு ஆண். என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியவன் நான். ஆனால், இப்போது உன்னிடம் கையேந்தும் நிலையில் இருக்கிறேன்,” என்று ஒருநாள் இரவு விரக்தியில் கத்தினான் குமரன்.

“குமரன், நாம் இருவரும் கணவன் மனைவி. இதில் உன் காசு என் காசு என்ற பாகுபாடு எதற்கு? உனக்கு வேலை கிடைக்கும் வரை நான் பார்த்துக்கொள்கிறேன், நீ ஏன் இவ்வளவு கோபப்படுகிறாய்?” என்று லிடியா சமாதானப்படுத்த முயன்றாள்.

“உனக்குச் சொன்னால் புரியாது லிடியா! நீ ஒரு சீனப் பெண், உங்கள் கலாசாரத்தில் இதெல்லாம் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், எங்கள் குடும்பத்தில் இது அவமானம்,” என்று வார்த்தைகளைக் கொட்டினான் குமரன்.

அந்த வார்த்தை லிடியாவின் இதயத்தை ஆழமாகக் காயப்படுத்தியது. “குமரன்! இத்தனை நாட்களுக்குப் பிறகும் என்னை நீ ‘சீனப் பெண்’ என்று பிரித்துப் பார்க்கிறாயா? நான் உன்னுடைய மனைவி இல்லையா?” என்று அழுதுகொண்டே தன் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

இருவருக்குள்ளும் இருந்த காதல், வறுமையின் மற்றும் ஈகோவின் முன்னால் தடுமாறியது.

வார்த்தைகள் தடித்தன. மௌனம் இன்னும் நீடித்தது. ஒருநாள் லிடியாவிற்கு அவளது அலுவலகத்தில் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அவளை இலண்டன் கிளைக்கு இரண்டு ஆண்டுகள் சென்று பணிபுரியுமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

லிடியா குமரனிடம் வந்தாள். “குமரன், எனக்கு இலண்டனில் வேலை கிடைத்துள்ளது. இரண்டு வருடங்கள் நான் அங்கே இருக்க வேண்டும். நீயும் என்னுடன் வா, அங்கே உனக்கு நல்ல வேலை கிடைக்கும்,” என்றாள்.

ஆனால், குமரன் அதைத் தவறாகப் புரிந்து கொண்டான். “ஓ... அப்படியென்றால், சிங்கப்பூரில் எனக்கு வேலை கிடைக்காது, நான் உன்னை நம்பித்தான் வாழ வேண்டும் என்று மறைமுகமாகக் கூறுகிறாயா? நான் வரமாட்டேன். நீ போக வேண்டும் என்றால் போய்க்கொள்,” என்றான் கடினமாக.

லிடியா அதிர்ந்து போனாள். “குமரன், நீ ரொம்ப மாறிட்டே. உன்னோட இந்த சந்தேகக் குணத்தோடவும் ஈகோவோடவும் என்னால வாழ முடியாது. நான் இலண்டன் போறேன். நாம் சில காலம் பிரிந்திருப்பதே நல்லது,” என்று கூறி, தன் பைகளை அடுக்கத் தொடங்கினாள்.

அவள் வீட்டை விட்டு வெளியேறிய போது, குமரன் அவளைத் தடுக்கவில்லை. அவனது பிடிவாதம் அவளைப் போகவிட்டது. லிடியா இலண்டன் சென்றாள்.

வீடு பாழடைந்து கிடந்தது. குமரன் தனிமையில் வாடினான். நாட்கள் வாரங்களாயின, வாரங்கள் மாதங்களாயின. இருவருக்குள்ளும் எந்தத் தொடர்பும் இல்லை. விவாகரத்து வரை செல்லும் சூழ்நிலை உருவானது. இரு வீட்டாரும் கவலையடைந்தனர்.

ஆறு மாதங்கள் கடந்தன. குமரனுக்கு ஒரு புதிய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால், அவனது மனதில் மகிழ்ச்சி இல்லை. லிடியா இல்லாத வாழ்க்கை அவனுக்கு நரகமாக இருந்தது. தன் தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்புக் கேட்க நினைத்தான், ஆனால் அவளது தொலைபேசி எண் மாறிக் கிடந்தது.

ஒருநாள், குமரனின் நண்பன் ஆகாஷ் பதற்றத்துடன் குமரனின் வீட்டிற்கு ஓடிவந்தான். அவனது கையில் ஒரு மருத்துவ அறிக்கை இருந்தது.

“குமரன்! நீ என்ன மனிதன்டா? அங்கே லிடியா இலண்டனில் மரணப் படுக்கையில் இருக்கிறாள், நீ இங்கே அமைதியாக உட்கார்ந்திருக்கிறாயா?” என்று கத்தினான்.

குமரன் அதிர்ச்சியில் உறைந்தான். “என்ன சொல்கிறாய் ஆகாஷ்? லிடியாவிற்கு என்ன ஆச்சு?”

ஆகாஷ் அந்த மருத்துவ அறிக்கையை அவனிடம் கொடுத்தான். “குமரன்... லிடியா உன்னை விட்டுப் பிரிந்ததற்குக் காரணம் உன்னுடைய ஈகோவோ அல்லது அவளது வேலையோ அல்ல. அவளுக்கு ‘அக்யூட் லுகேமியா’ இரத்தப் புற்றுநோய்) முற்றிய கட்டத்தில் இருப்பது அவளுக்கு இலண்டன் போகும் முன்பே தெரிந்துவிட்டது.”

குமரனின் கைகள் நடுங்கின. “என்ன... என்ன சொல்கிறாய்?”

“ஆமாம் குமரன். நீ வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்தாய். அந்த நேரத்தில் தனக்கு நோய் வந்திருப்பதைச் சொன்னால் நீ இன்னும் உடைந்து போவாய் என்று பயந்தாள். தன் மருத்துவச் செலவு உனக்கு மேலும் சுமையாகும் என்று நினைத்தாள். அதனால்தான், உன்னை வெறுப்பது போல நடித்து, உன்னை விட்டு விலகி இலண்டன் சென்றாள். அங்கே அவளுக்குச் சிகிச்சை அளிக்க அவளது தந்தை டான் செங் லூங் உதவினார். ஆனால், இப்போது அவளது நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. சிங்கப்பூர் தேசிய மருத்துவமனைக்கு அவளை நேற்றுதான் அவசர அவசரமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவளது கடைசி ஆசை உன்னைப் பார்ப்பது மட்டும்தான்!” என்று கூறி முடித்தான் ஆகாஷ்.

குமரனின் உலகம் அப்படியே சுழன்றது. தன் மனைவி தன்னைச் சுமையாக நினைக்கவில்லை, மாறாகத் தன் மீது கொண்ட அளவற்ற அன்பினால் தான் இவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்தபோது அவனது கண்கள் ஆறாகப் பெருகின.

“லிடியா... என்னை மன்னித்துவிடு!” என்று கத்திக்கொண்டே மருத்துவமனையை நோக்கி ஓடினான்.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்), பல குழாய்களுக்கிடையில், வெளுத்துப்போன முகத்துடன் படுத்திருந்தாள் லிடியா. அவளது அருகில் அவளது பெற்றோரும், குமரனின் பெற்றோரும் அழுதுகொண்டே நின்றிருந்தனர்.

குமரன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓடினான். அவளது படுக்கைக்கு அருகில் முழங்காலிட்டு, அவளது மெலிந்த கைகளைப் பற்றிக் கொண்டு கதறி அழுதான்.

“லிடியா... லிடியா... என்னை மன்னித்துவிடு. நான் எவ்வளவு பெரிய முட்டாள்! உன்னைச் சந்தேகப்பட்டேனே, உன்னைத் தப்பாகப் பேசினேனே... தயவுசெய்து என்னை விட்டுப் போய்விடாதே லிடியா,” என்று அவளது கைகளில் முத்தமிட்டான்.

குமரனின் குரல் கேட்டு, லிடியா மெல்ல கண்களைத் திறந்தாள். அவளது உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. தன் பலவீனமான கைகளால் குமரனின் கண்ணீரைத் துடைத்தாள்.

“குமரன்... நீ... நீ வந்துவிட்டாய் அல்லவா... அதுபோதும். எனக்கு உன் மீது எந்தக் கோபமும் இல்லை. நான் உன்னைச் சுமையாக்க விரும்பவில்லை, அதான்...” என்று மூச்சடைக்கப் பேசினாள்.

“இல்லை லிடியா, நீ எனக்குச் சுமை இல்லை. நீதான் என் உயிர். உனக்கு ஒன்றும் ஆகாது. நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்,” என்றான் குமரன்.

அப்போது அங்கே வந்த டாக்டர் லீ, “குமரன், லிடியாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது உண்மைதான். ஆனால், அவளது மனதில் இருந்த கவலையும் தனிமையும்தான் அவளது நோயை வீரியமாக்கின. இப்போது உன்னைப் பார்த்தவுடன் அவளது இதயத் துடிப்பும், முகத்தில் இருக்கும் பொலிவும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகின்றன. ‘போன் மாரோ டிரான்ஸ்பிளான்ட்’ ( எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை) செய்ய நாம் ஏற்பாடு செய்துள்ளோம். அவளது தந்தையின் மஜ்ஜை அவளுக்குப் பொருந்துகிறது. அவளது வாழும் ஆசை கூடினால், இந்த நோயில் இருந்து அவளைக் காப்பாற்றிவிடலாம்,” என்றார் நம்பிக்கையுடன்.

குமரன் லிடியாவின் நெற்றியில் முத்தமிட்டான். “லிடியா, நாம் மீண்டும் நம் பழைய கூட்டுக்குத் திரும்புவோம். நம் காதல் இந்த நோயை வெல்லும்.”

லிடியாவின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

*

சில மாதங்களுக்குப் பிறகு...

அதே மெரினா பே கடற்கரை. மாலை நேரத்துச் சூரியன் மறையும் அழகிய பொழுது.

லிடியா இப்போது குணமடைந்து, தலைமுடி மெல்ல வளரத் தொடங்கிய நிலையில், குமரனின் தோள் மீது சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவளது கையில் குமரனின் கைகள் கோர்க்கப்பட்டிருந்தன. தூரத்தே, குமரனின் பெற்றோர் முத்துக்கிருஷ்ணனும் ராஜேஸ்வரியும், லிடியாவின் பெற்றோர் டான் செங் லூங்கும் மேய் லிங்கும் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

“குமரன், நம் வாழ்க்கை எவ்வளவு பெரிய போராட்டங்களைக் கடந்து வந்திருக்கிறது பார்,” என்றாள் லிடியா.

“ஆமாம் லிடியா... மொழியும் இனமும் மனிதர்களைப் பிரிக்கலாம். ஆனால், உண்மையான அன்பும் தியாகமும் இருந்தால், எந்தப் புயலையும் கடந்து நலமாய் வாழலாம் என்பதற்கு நம் வாழ்க்கையே சாட்சி,” என்றான் குமரன்.

கொன்றை மலர்கள் மீண்டும் அவர்கள் மீது உதிர்ந்தன, இந்த முறை இன்னும் அதிக வாசத்துடனும் அழகுடனும்!

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்