நிழலின் நிஜம்

நிழலின் நிஜம்

7 mins read
728e4357-b4c9-4623-8a0f-729d6be68827
சிறுகதை எழுத்தாளர் எம். சேகர் . - படம்: எம்.சேகர்

எம். சேகர்

மதிய வெயில் மெல்ல தணிந்து, மாலை நேரத்து இளஞ்சூட்டுக்காற்று ஜன்னல் திரைச்சீலைகளை அசைத்துக் கொண்டிருந்தது. அந்த இரண்டு அறை அடுக்குமாடி வீட்டின் ஒரு படுக்கை அறையும் அதன் வரவேற்பறையில், ஒரு பழைய தையல் இயந்திரத்தின் ‘கிடுகிடு’ சத்தமும், கத்தரிக்கோல் துணியைக் கிழிக்கும் ‘சக் சக்’ சத்தமும் மட்டுமே அந்த வீட்டின் நிரந்தரப் பின்னணி இசையாக இருக்கிறது.

கவிதா, தன் ஐம்பது வயதுகளின் முதிர்ச்சியோடு, கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு ஒரு பட்டுப் பாவாடைக்கு லைனிங் துணியை வெட்டிக்கொண்டிருந்தாள். கணவன் பிரிந்துபோனபோது கையில் மூன்று வயதுக் குழந்தையோடு நடுத்தெருவில் நின்றவள், யாரிடமும் கையேந்தாமல், இந்தத் தையல் இயந்திரத்தை மட்டுமே நம்பி, தன் ஒற்றை இறக்கையால் தன் மகன் சந்துருவிற்குப் பறக்கக் கற்றுக்கொடுத்தவள்.

இன்று சந்துருவிற்கு இருபத்தி நான்கு வயது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல வேலை, கௌரவமான சம்பளம்.

சந்துரு அன்று வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருந்தான். அவனது முகம் ஏதோ ஒரு பாரத்தைச் சுமப்பது போல் இருந்தது. பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருந்த தோள்பையை ஒருபுறம் வைத்துவிட்டு, சோபாவில் அமர்ந்து தன் தாயையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னடா சந்துரு, இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட? உடம்புக்கு ஏதும் முடியலையா?” கவிதா தைத்துக் கொண்டிருந்த துணியிலிருந்து பார்வையை அகற்றாமல் கேட்டாள்.

“இல்லம்மா... உடம்புக்கு ஒன்னும் இல்லை,” சந்துரு மெல்லிய குரலில் சொன்னான்.

அவன் குரலில் இருந்த ஏதோ ஒரு மாற்றம் கவிதாவை நிமிர வைத்தது. கண்ணாடியைக் கழற்றி மேஜை மீது வைத்துவிட்டு, மகனருகே வந்து அமர்ந்தாள். “அப்புறம் என்னடா? ஆபீஸ்ல ஏதும் பிரச்சினையா? யாராச்சும் ஏதும் சொன்னாங்களா?”

சந்துரு ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, தாயின் கைகளைப் பற்றிக்கொண்டான். அந்த வறண்டுபோன, தையல் ஊசி குத்திய தழும்புகள் நிறைந்த கைகள் அவனுக்கு அவளது தியாகத்தைச் சொல்லின. ஆனாலும், அவனுக்குள் பல வருடங்களாகத் தேங்கிக் கிடந்த அந்த அணை இன்று உடைந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

“அம்மா... நான் இன்னைக்கு ஆபீஸ் முடிஞ்சு வரும்போது, நம்ம பக்கத்து புளோக் கார்த்திக் வீட்டுக்குப் போயிருந்தேன். அவங்க அப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு பார்க்கப் போனேன்.”

“ஓ... அந்த விஸ்வநாதன் சாருக்கா? இப்ப எப்படி இருக்காரு?”

“அவர் நல்லா இருக்காரம்மா. ஆனா நான் அங்கே பார்த்த ஒரு விஷயம்தான் என்னை என்னவோ பண்ணுது. கார்த்திக் அவங்க அப்பாவோட மடியில தலைவச்சு படுத்திருந்தான். விஸ்வநாதன் சார் அவனோட தலையைக் கோதிவிட்டுக்கிட்டே, ‘பயப்படாதடா, நான் இருக்கேன்’னு சொன்னார். கார்த்திக் முகத்துல இருந்த அந்த நிம்மதியை என்னால மறக்கவே முடியலம்மா,” சந்துரு சொல்லும்போதே அவனது குரல் தழுதழுத்தது.

கவிதாவின் முகம் சட்டென்று சுருங்கியது. காற்றில் ஒரு மெல்லிய நடுக்கம் பரவியது. “ஏன் சந்துரு, உனக்கு நான் எந்தக் குறையும் வைக்கலையே? ஒரு அம்மாவா, அப்பாவா ரெண்டு பேராவுமே இருந்துதானே உன்னை வளர்த்தேன்? உனக்கு என்ன குறைச்சல் இப்போ?”

சந்துரு தாயின் முகத்தைப் பார்த்தான். அவளது கண்களில் சட்டென்று குடியேறிய வலியும் தற்காப்பு உணர்வும் அவனுக்குப் புரிந்தது. ஆனால், இன்று அவன் பின்வாங்கத் தயாராக இல்லை.

“நீ எனக்கு எந்தக் குறையும் வைக்கலம்மா. சாப்பாடு, துணி, படிப்பு, அன்பு... எல்லாத்தையும் அள்ளிக் கொடுத்திருக்க. ஆனா... ஆனா ஓர் அம்மாவோட அன்பு வேற, ஓர் அப்பாவோட அன்பு வேறம்மா,” சந்துரு மெல்லத் தொடங்கினான்.

“ஒரு பையன் வளரும்போது, அவனுக்கு ஓர் ஆணோட வழிகாட்டுதலும் அப்பாவோட தோழமையும் தேவைப்படுது. ஸ்கூல்ல எல்லாரும் அவங்க அப்பாவைப் பத்திப் பேசும்போது நான் ஓரமா போய் நின்னுப்பேன். ஸ்போர்ட்ஸ் டேக்கு எல்லாரோட அப்பாவும் வந்து கைதட்டும்போது, என் பின்னாடி தட்டிக்கொடுக்க என் அப்பா கை இல்லையேன்னு ஏங்கியிருக்கேன். ஆபீஸ்ல முதல் சம்பளம் வாங்கினப்போ, அதை அப்பாகிட்ட கொடுத்து ஆசீர்வாதம் வாங்கணும்னு என் உள்மனசு அழுதுச்சுமா.”

கவிதா அதிர்ச்சியோடு மகனைப் பார்த்தாள். இருபது ஆண்டுகளாகத் தான் கட்டிக்காத்த கோட்டை சரிவதுபோல் அவளுக்கு இருந்தது.

“சந்துரு! என்ன பேசுற நீ?” கவிதாவின் குரல் கோபத்திலும் வலியிலும் உயர்ந்தது. “அந்த மனுஷன்... உனக்கு மூணு வயசு இருக்கும்போதே, நம்மள விட்டுட்டுப் போனவர். உனக்கு ஒரு சட்ட துணி, சாக்லேட் ஏதாவது வாங்கிக் கொடுத்திருப்பாரா? அப்படிப்பட்ட ஒருத்தரோட அன்புக்காக நீ ஏங்குறியா? அப்போ இத்தனை வருஷம் நான் பட்ட கஷ்டம், அசிங்கம், அவமானம் எல்லாம் வீண்தானா?”

“அம்மா, தயவுசெய்து தப்பா எடுத்துக்காதம்மா...” சந்துரு அவளைச் சமாதானப்படுத்த முயன்றான்.

“இல்லை சந்துரு, நீ என்னை இன்சல்ட் பண்ற. ‘சிங்கிள் மதரா’ ஒரு பையனை வளர்க்கிறது இந்தச் சமூகத்துல எவ்வளவு கஷ்டம் தெரியுமா? சுத்தி இருக்கிறவங்க பார்வை, பேசுற பேச்சு எல்லாத்தையும் தாங்கிட்டு, என் இளமையைத் தொலைச்சு, எனக்கான எந்தச் சந்தோஷமும் இல்லாம உனக்காகவே வாழ்ந்தேனே. கடைசியில உனக்கு அப்பாவோட அன்புதான் பெருசா போயிடுச்சா?” கவிதாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அந்த இரவுக்குப் பிறகு, அந்த வீட்டின் அமைதி முற்றிலும் குலைந்துபோனது. அதுவரை இருந்த ஒரு சுமுகமான, அன்பான சூழல் மறைந்து, ஒரு தடிமனான மௌனம் இருவருக்குள்ளும் சுவராய் எழுந்தது.

கவிதா சந்துருவிடம் பேசுவதைத் தவிர்த்தாள். சமையல் செய்வது, தையல் வேலை பார்ப்பது என இயந்திரத்தனமாக மாறினாள். சந்துரு பேச வந்தால், “சாப்பாடு டேபிள்ல இருக்கு, சாப்பிடு” என்ற ஒற்றை வரியோடு நகர்ந்துவிடுவாள். அவளது உள்ளத்தில் ஒரு பெரும் ஏமாற்றமும் குற்ற உணர்ச்சியும் கலந்த கோபம் இருந்தது. ‘நான் ஒரு நல்ல அம்மாவாக இல்லையோ? என் அன்பில் ஏதோ குறை இருந்துவிட்டதோ?’ என்ற எண்ணம் அவளை அரித்துக்கொண்டிருந்தது.

மறுபுறம் சந்துரு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானான். தன் தாயைக் காயப்படுத்த வேண்டும் என்பது அவனது நோக்கமல்ல. ஆனால், தன் மனத்தில் இருந்த நியாயமான ஏக்கம் தாய்க்கு இவ்வளவு பெரிய துரோகமாகத் தோன்றும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. வீட்டில் நிலவிய இந்தத் தவிப்பு அவனது அலுவலக வேலையையும் பாதித்தது. எந்நேரமும் சிந்தனையிலேயே மூழ்கியிருந்தான்.

ஒரு வாரம் கடந்தது. இருவருக்குள்ளும் இருந்த மௌனப் போர் அந்த வீட்டின் சுவர்களை இன்னும் சுருக்கியது போல் இருந்தது.

அன்று சனிக்கிழமை. பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. கவிதா ஜன்னல் ஓரம் அமர்ந்து துணிகளை மடித்துக் கொண்டிருந்தார். அப்போது அலமாரியின் மேல்தட்டிலிருந்து ஒரு பழைய டைரி தவறி கீழே விழுந்தது. அதிலிருந்து சில பழைய புகைப்படங்கள் சிதறின.

அதில் ஒரு புகைப்படம். சந்துருவிற்கு ஐந்து வயது இருக்கும்போது எடுத்தது. அவள் தைத்து முடித்த ஒரு சட்டையைச் சந்துரு உடுத்திக்கொண்டு, பெரிய மீசை வரைந்தது போல் முகத்தை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்திருந்தான்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த சந்துரு மெல்ல கவிதாவின் அருகில் வந்தான். அவளுக்குப் பின்னால் நின்று, அவள் தோள்களில் தன் கைகளை வைத்தான். அவள் நகல முற்பட்டபோது, அவன் அவளைப் பலமாக அணைத்துக் கொண்டான்.

“அம்மா... ப்ளீஸ், என்னை விட்டு விலகிப் போகாதம்மா. நான் சொன்னதை நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட,” அவன் குரல் உடைந்தது.

கவிதா அமைதியாக இருந்தாள், ஆனால் அவளது கண்கள் கலங்கின.

“அம்மா, நீ எனக்குக் கொடுத்த அன்பு உலகத்துலேயே ஆகச்சிறந்தது. அதுல எந்தக் குறையும் இல்லை, இருக்கவும் முடியாது. ஆனா நான் கேட்டது உன்னோட அன்புக்கு மாற்றான ஒன்னை இல்லைமா. ஓர் ஆணோட, ஓர் அப்பாவோட பிம்பம் என் வாழ்க்கையில இல்லாததால் ஏற்பட்ட ஒரு வெறுமை அது.”

சந்துரு அவளைத் தன் பக்கமாகத் திருப்பினான். அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சொன்னான்:

“அம்மா, பசிக்கும்போது சாப்பாடு வேணும்ங்கிறது எவ்வளவு நிஜமோ, தாகம் எடுக்கும்போது தண்ணி வேணும்ங்கிறது அவ்வளவு நிஜம். சாப்பாடு சூப்பரா இருக்குங்கிறதுக்காகத் தண்ணியே குடிக்காம வாழ முடியாது இல்லையா? அம்மாங்கிறது சாப்பாடு மாதிரி, அப்பாங்குறது தண்ணி மாதிரி. நீ எனக்கு அருமையான சாப்பாடு போட்டாய், ஆனா என் தாகத்துக்கு அங்கே தண்ணி இல்லை. அது அந்த மனுஷன் பண்ணின தப்பு, நீ பண்ணின தப்பு இல்லைமா!”

கவிதா மகனின் முகத்தைப் பார்த்தாள். அவனது வார்த்தைகளில் இருந்த முதிர்ச்சியும் நியாயமும் அவளது உள்ளத்தைத் தொட்டது.

“நீ வளரும்போது இதையெல்லாம் மனசுக்குள்ளேயே வச்சுட்டு இருந்தியாடா?” அவள் விம்மினாள்.

“ஆமாம்மா... உன்கிட்ட சொன்னா நீ கஷ்டப்படுவன்னுதான் இத்தனை வருஷம் சொல்லலை. ஆனா, நானும் ஓர் ஆணாக வளரும்போது, எனக்குள்ள ஏற்படுற சில சந்தேகங்கள், பயங்கள், உலகத்தை எதிர்கொள்ற விதம், இதையெல்லாம் ஓர் அப்பாவா ஒருத்தர் கையைப் பிடிச்சு சொல்லிக்கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு தோணுச்சு. அது உன்னை வீழ்த்துறதுக்காக இல்லைம்மா, என் மனசோட ஒரு பலவீனத்தை உன்கிட்ட பகிர்ந்துக்கணும்கிறதுக்காக மட்டும்தான்.”

கவிதாவுக்கு இப்போதுதான் விஷயம் புரிந்தது. இத்தனை காலம் தான் அதைத் தன் சுயமரியாதை மற்றும் தியாகத்தோடப் போட்டியாகப் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தாள். ஒரு தாயால் ஒருபோதும் அப்பாவாக முடியாது என்பது இயற்கையின் விதி. அதைத் தன் மகன் உணர்த்திய விதம் அவளது சுமையைக் குறைத்தது.

“என்னை மன்னிச்சிடுடா சந்துரு,” கவிதா மகனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். “நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். உன்னை எந்தக் குறையும் இல்லாம வளர்க்கணும்ங்கிற என் பிடிவாதத்துல, உன்னோட மனசுக்குள்ள இருந்த இந்த ஏக்கத்தை நான் பார்க்கத் தவறிட்டேன். உனக்கு ஓர் அப்பாவோட கைகுலுக்கலும் அரவணைப்பும் கிடைக்காம போனதுக்கு இந்த விதிதான் காரணம். ஆனா அதுக்காக நீ ஏங்குறதுல எந்தத் தப்பும் இல்லைடா.”

சந்துருவின் மனத்தில் இருந்த ஒரு பெரிய சுமை இறங்கியதுபோல் இருந்தது. அவனது தாயின் மடி அவனுக்குப் பேரமைதியைக் கொடுத்தது.