தலை குனிந்து காணப்பட்டாள் கீதா. அவள் கண்களில் கண்ணீர் துளிகள் முட்டி மோதிக் கொண்டு இருந்தன. நடந்தவைகள் அவளை மனக்கவலையில் ஆழ்த்தின. என்ன செய்வது என தன்னையே நொந்துகொண்டு கடந்த காலத்தை அசை போட ஆரம்பித்தாள்.
கீதா இளம் வயதிலேயே சேகரைத் திருமணம் செய்து அவனுடன் ஓர் அறை வீட்டில் தாமான் ஜரோங்கிற்குக் குடி பெயர்ந்தாள்.
சேகரும் மிகவும பொறுப்பானவன். ஊதாரி செலவு செய்யாமல் குடும்பத்தைச் சீராக நடத்துபவன். இருவரும் மலரும் மணமும்போல் இணைந்த தம்பதிகாளக வாழ்ந்தனர். அதிகம் ஆசைப்பட்டாமல தங்களுடைய நிலைக்கு ஏற்றவாறு குடும்பத்தை அழகாக வழிநடத்தினர். கீதாவுக்கு அதிக படிப்பறிவு இல்லாததால் அருகில் இருக்கும் ஒரு ஒரு பழங்களைப் பேக் செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். அவளின் கல்வித் தகுதிக்கும் வேலை நேரமும் ஒத்து வந்ததால் அவள் செவ்வனே வேலையைச் செய்தாள். அவளின் சுறுசுறுப்பும் கடின உழைப்பும் முதலாளிக்குப் பிடித்துப் போக அவளுடைய சம்பளத்தையும் சற்றுக் கூட்டிக் கொடுத்தார்.
சேகரின் கனவு அந்த குடியிருக்கும் வீட்டை அல்லது அதைவிட பெரிய வீடு எப்பாடுப்பட்டாவது வாங்க வேண்டும் என்பதே ஆகும். தினமும் இருவரும் இரவு உணவை முடித்துவிட்டுப் புதிய வீட்டைப் பற்றி கனவு கண்டு மகிழ்வார்கள்.
கீதாவின் திறமையைப் பார்த்து வியந்த முதலாளி அவளின் திறன்களை மேம்படுத்த யோசனை கூறினார். அரசாங்கம் அறிவித்திருக்கும் ஸ்கிள் பியுச்சர் திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தார். குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் தங்களை மேம்படுத்த அது ஒரு வரப்பிரசாதம் என்று எடுத்துக் கூறி ஊக்கப்படுத்தினார். அதற்காக அவளைப் பயிற்சி வகுப்பில் மறுநாளே சேருமாறு கூறினார். மீதமுள்ள கட்டணம் முழுவதும் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என்றும் மேலும் ஊக்கப்படுத்தினார். தேர்ச்சிப் பெற்றவுடன் குழு லீடர் பதவி உயர்வும், மாதச் சம்பளம் உயர்வும் கட்டாயம் உண்டு என்றும் உறுதி கூறினார்.
இதைக்கேட்டவுடன் கீதாவிற்குப் புதிய வீடு கனவு கண் முன்னே வந்து சென்றது.
கீதாவின் சந்தோசத்திற்கு அளவே இல்லை. மனசெல்லாம் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கப்போகும் நினப்புப் பற்றியே இருந்தது. படிப்பின் மீது அலாதி காதல் கீதாவிற்கு. என்ன செய்வது? அவளின் பிறந்த வீட்டுச் சூழ்நிலையால் அவளால் பத்தாம் வகுப்புக் கூட தாண்ட முடியவில்லை.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை என்ற பாடல் வரிகள் வானொலியில் இசைத்தன.
கணவர் சேகரிடம் செய்தியைச் சொல்ல வேக நடையோடு வீட்டை நோக்கிப் பறந்தாள். எப்போதும் செய்யும் வீட்டு வேலையில் அவளின் சிந்தனை செல்லவில்லை. மனம் படபடத்தது. உடலும் பதைப்பாக இருந்தது. எப்போது இல்லாமல் இன்று உடலும் மனமும் ஏதோ செய்வது போல் இருந்தது. பாதி பாத்திரங்களைக் கழுவும்போதே அவள் தலைக்கு மேல் சுற்றிய காற்றாடியைப் போல் தலைச் சுற்றி மயக்கமுற்று தன்னையறியாமல் கீழே சாய்ந்தாள்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்ந சேகர் கீதாவைப் பார்த்து ஒன்றும் புரியாமல் பதைபதைத்துப் போனான். உடனே சுதாரித்துக்கொண்டு தண்ணீரை முகத்தில் தெளித்தான். அன்றலர்ந்த மலரைப் போல் கீதா கண் வழித்து கணவரை ஏறிட்டாள். கீதா கண் விழித்தவுடன் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது சேகருக்கு. உடனே அவளை அப்படியே கட்டி அனைத்தான். நடந்ததைக் கேள்வியுற்று ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மனைவியின் முடியை வாரினான். களைந்த உடைகளைச் சரிப்படுத்தினான். அறைக்குள் சென்று பையில் மீதமிருந்த பணத்தை எடுத்துக்கொண்டான். அப்படியே மனைவியை அள்ளிக்கொண்டு கீழே உள்ள கிளினிக்கை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடினான்.
கீதாவுக்கு ஒன்றும் இருக்கக்கூடாது என்று குலச்சாமியை வேண்டி கொண்டான். தனியார் மருத்துவமனை கூட்டமாக இருந்தது. பல முதியோர்களும் மருத்துவரைக் பார்க்க காத்துக் கொண்டிருந்தனர். தாதி ஒருத்தி நோயாளிகளின் உயரத்தையும் எடையையும் எழுதி கொண்டிருந்தாள். சேகர் அங்குள்ள தாதியிடம் மனைவியின் நிலையைக் கூறி சற்று அவசரப் படுத்தினான்.
மருத்துவர் கீதாவை அழைத்தார். சேகர் கைத்தாங்கலாக மனைவியை அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தினான். மருத்துவர் என்ன சொல்லப்போகிறாரோ என அவரையே உற்று நோக்கிய வண்ணம் இருந்தான். கீதாவிடம என்ன நடந்தது என்று கனிவான குரலில் கேட்டார் மருத்துவர். பிறகு சற்று யோசனையுடன் முகத்தைச் சுருக்கினார். அருகில் உள்ள மணியை அழுத்தித் தாதியை வரச் சென்னார். நீல நிற ஆடை அணிந்த தாதியிடம் எதையோ ஆங்கிலத்தில் கூறினார். அந்தத் தாதி கைத்தாங்கலாகக் கீதாவைப் பக்கத்து அறைக்குச் அழைத்துச் சென்றார். சேகரை வெளியே காத்திருக்குமாறு கூறினார்.
சிறிது நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்தார். கீதா கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதைக் கேட்ட சேகர் தான் இருந்த சூழலை மறந்து மகிழ்ச்சியில் மனைவியைப் பார்த்துத் துள்ளி குதித்தான். மருத்துவமனையிலுள்ளவர்கள் அவர்களைப் பார்ப்பதை உணர்நது சுதாரித்தான். மருந்துவர் பரிந்துரைத்த மருந்துகளை வாங்கி கொண்டு வீட்டை நோக்கி நடந்தனர்.
கீதாவின் முகத்தில் உற்சாகம் துளி கூட இல்லை. எப்படியாவது ஸ்கிள் பியுச்சர் வகுப்பில் சேர்ந்து படித்துவிட்டு, அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம் என்ற கனவு தவிடுபொடியானதை எண்ணி வருந்தினாள். தன்னுடைய எண்ணத்தைக் கணவரிடம் சொல்லவும் தயங்கினாள். வகுப்பில் எப்போது வேண்டுமானால் சேர்ந்து படிக்கலாம் கடவுள் கொடுத்த குழந்தை மிக முக்கியம் என மனத்தை தேற்றிக் கொண்டாள். நாட்காட்டியில் காலச்சக்கரம் வேகமாக உருண்டன.
இதோ 5 ஆண்டுகள் கடந்து விட்டன.
புதிய மூன்று அறை வீடு, புத்தம் புதிய திரைச்சீலைகள், சோபா, புதிய சாப்பாட்டு மேசை, நாற்காலிகள், மொசைக் மேடையுடன் கூடிய சமையல் அறை, பூஜை அறை, குழந்தைக்குத் தனி அறை, தனிக்கட்டில், பெரிய அலமாரி என வீடு காட்சியளித்தது. கூடவே ஒரு வெறுமையும் குடி இருந்நது.
குழந்தை நிலா விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். சேகரையே உரித்த வைத்திருந்த நிலா சிரிக்கும்போது அவன் கன்னத்தில் விழும் குழியைப் போல் நிலா கன்னத்திலும் இருந்தது.
விதியின் சூறாவளியால் சேகர் வேலையிடத்தில் சிக்கிய விபத்தில் மாண்டதால், நிறுவனம் கொடுத்த காப்பீட்டுத் தொகையில் இம்மூவறை வீட்டை வாங்கி தங்கள் கனவை ஈடேற்றிக் கொண்டனர். எல்லா வசதியும் இருந்தும் கீதாவின் மனம் வெறிச்சோடி இருந்தது.
இவற்றையெல்லாம் சன்னலின் ஓரத்தில் மாட்டப்பட்ட புகைப்படத்திலிருந்து சேகர் பார்த்துப் புன்முறுவல் செய்தான்.
கீதா தன் கைப்பையுடன் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து இருந்தாள். தன் கணவருடன் ஒன்றாக அமர்ந்து இருந்த நாட்கள் கண்முன்னே வந்து சென்றன.
சிறிது நேரத்தில் வந்த பேருந்தில் ஏறி ஜூரோங் ஈஸ்ட்டில் இறங்கினாள். தன் தொலைந்த கனவைத் தேடி ஸ்கிள் பியுச்சர் வகுப்பை நோக்கி நடந்தாள். தூரத்தில் செவ்வானத்தில் நட்சத்திரம் ஒன்று மின்னியது.
காலச்சக்கரம் நிற்காமல் அதன் வேலையை தொடர்ந்தது.
எழுத்து: மோகன வள்ளி

