சிங்கப்பூர் 61

சிங்கப்பூர் 61

1 mins read
7f9f7845-10ad-42bf-95e8-59e3635940b1
-
Google News Preferred Icon

வேர்வை விதைத்து வெற்றி விளைத்த

மேதையர் நகரம் சிங்கை - தொலை

பார்வையில், ஆசியான் பொருளியல் உயர்வில்

பலமாய் ஆற்றிடும் பங்கை!

சாலையின் இருபுறம் பசுமைச் சோலையாய்

தாவரம் பூக்களை நீட்டும்! - அதி

காலைக் கருக்கலில் கசியும் பனித்துளி

கண்களின் சோம்பலை ஓட்டும்!

தேசத் தந்தையாம் லீஎனும் தலைமகன்

செதுக்கிய சிங்கை நாடு!-சாங்கி

வாசல் நுழைகிற வையத் தோரெலாம்

வசித்திட ஏங்கிடும் வீடு!

ஊழலோ லஞ்சமோ உணவுப் பஞ்சமோ

உள்நுழை யாத தேசம் - இது

வாழவந் தவரின் வறுமையை வளமையாய்

மாற்றி அமைத்திடும் நேசம்!

கட்டடம் போலவே வாழ்க்கைத் தரமும்

கவினுற உயர்ந்த நாடு! - சிங்கை

சட்டமும் நீதியும் ஆள்வதால் இதுவே

சமத்துவ புரமெனப் பாடு!

ந. வீ. விசய பாரதி

குறிப்புச் சொற்கள்
கதை/கவிதைஞாயிறு முரசுதேசிய நாள் கவிதைகள்தேசிய தினம் 2026