“வணக்கம் அண்ணே!”
“வணக்கம் தம்பி, நீங்க யாரு?”
“அண்ணே, நீங்க மாரிமுத்து அண்ணன்தானே?”
“ஆமாப்பா, நான் மாரிமுத்துதான்.”
“அண்ணே! என் பெயர் ரவிக்குமார்; ஊர்லெருந்து பேசுறேன். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி செங்காங்குல ஒரு காப்பிக் கடையில நாம சந்திச்சோம், நினைவு இருக்கா? அப்போ ஒரு பெரிய பிரச்சினைக்குச் சிறப்பான தீர்வு ஒண்ணு சொன்னீங்களே!”
“என்ன? நான் என்னப்பா பெரிய பிரச்சினைக்குத் தீர்வு சொன்னேன்?”
“ஆமாங்கண்ணே!”
“சரி சரி தம்பி, எனக்கு இப்ப பேச நேரமில்லை. கொஞ்சம் வேலை இருக்கு; ஒரு மணி நேரம் கழிச்சுக் கூப்பிடவா?”
“சரிங்க அண்ணே!”
“ம்ம்... நான் எந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு சொன்னேன்?” மாரிமுத்துவிற்குள் அலைமேல் அலையாய்க் கேள்விக் கணைகள் கூடிக்கொண்டே போயின. சற்று நேரத்திற்குப் பிறகு, உயர்ந்த மலைமீது உறைந்த பனி உருகி வழிந்து அருவியாகக் கொட்டுவதுபோல், பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாய் வரத்தொடங்கின.
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலைப் பொழுதில், அருகில் இருந்த காப்பிக் கடைக்குக் கையில் ஒரு புத்தகத்துடன் சென்றார் மாரிமுத்து.
தனியாக அமர்ந்து பீர் அருந்திக்கொண்டே புத்தகம் வாசிப்பது மாரிமுத்துவிற்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. ஒரே நேரத்தில் இரண்டு செயல்களில் ஈடுபடுவதில் அவருக்கு அலாதி மகிழ்ச்சி.
அன்று காப்பிக் கடையின் அனைத்து மேசைகளிலும் ஒருவர், இருவர், மூவர் என அமர்ந்திருந்தனர். மற்றவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்தால் தன் தனிமைத் தவம் கலைந்துவிடுவது போல் கருதுபவர் அவர். எனினும், யாராவது இடம் கேட்டு வந்தால் அன்போடு அமரச் சொல்வார்.
‘ஏதாவது ஒரு மேசை காலியாகட்டும், அமர்வோம்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, காப்பிக் கடையின் சுற்றுக் கம்பிக் கம்பியமைப்பில் சாய்ந்தவாறே கையில் இருந்த நூலைத் திறந்தார். ஆனால், வாசிப்பைத் தொடங்க மனநிலை வரவில்லை!
அன்றாடம் இயற்கையாக, இயல்பாக இயங்கும் மனிதர்களையும் சூழலையும் வேடிக்கை பார்ப்பது மாரிமுத்துவின் பழக்கங்களில் ஒன்று. சில நேரங்களில் தனியாகத் தன் மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டு, பழைய கம்போங்குகளைச் சுற்றிப் பார்த்து, சிங்கப்பூரின் பழங்காலத்தையும் தற்காலத்தையும் ஒப்பிட்டு ரசிப்பவர். இதனால் “பராக்கு முத்து” என்ற புனைப்பெயரும் அவருக்கு உண்டு.
அன்று காப்பிக் கடைக்கு வந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதில் அவரது கவனம் திரும்பியது. ஒவ்வொரு மேசையாக அவரது பார்வை ஊடுருவியது.
சீனாவிலிருந்து வந்து பணியாற்றும் பானம் வழங்கும் பெண் ஒருத்தி, பானங்களை அங்குமிங்கும் கொண்டு சென்று மேசைகளில் வைத்துப் பம்பரமாக இயங்கிக் கொண்டிருந்தாள். பானங்களுக்கான தொகையைப் பெற்று மீதியைத் திருப்பிக் கொடுக்கும்போது, “நீயே வைத்துக்கொள்” என்று சிலர் கை சைகை செய்கின்றனர். அதைக் கண்டு அவளது மகிழ்ச்சி, பற்கள் வழியே வெளிப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அதை ரசிக்கின்றனர்; அவளின் முக அழகைக் கண்டு சிலரின் முகத்தில் அசடு வழிகிறது.
ஒரு வாளியில் நாலைந்து பீர் பாட்டில்களை இட்டு, இடையில் பனிக்கட்டிகளைக் கொட்டி, நான்கு பேர் அமர்ந்திருந்த மேசைக்குக் கொண்டு வந்து வைத்தாள். சிரித்த முகத்துடன் இரண்டு பாட்டில்களைத் திறந்து அவர்களுக்கு ஊற்றினாள். திறந்த பாட்டில்களின் மூடிகளின் உள்பக்கத்தில் இருந்த அச்சு எழுத்துகளை அவளது அகலக் கண்கள் ஆர்வமாகப் பார்த்தன.
ஒரு மூடியில் “நன்றி” என்றும், அடுத்த மூடியில் “ஒரு பாட்டில் இலவசப் பீர்” என்றும் இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்துகள் சொன்னாள். ஆசையோடு நால்வரும் அவள் கையைப் பற்றுகிறார்கள். அவளுக்குச் சன்மானம் (டிப்ஸ்) நிறையக் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொண்டார் மாரிமுத்து!
ஒருமுறை அவரும் அவர் நண்பரும் வாங்கிய பீர் பாட்டிலின் மூடியில் இலவசப் பீர் வந்த நிகழ்வு நினைவிற்கு வந்ததால், அங்கு நடப்பது அவருக்கு எளிதாகப் புரிந்தது.
மாரிமுத்துவின் கண்கள் அடுத்த மேசைக்குப் பாய்ந்தன.
ஒருவர் காப்பி கோப்பையில் பாதியைப் பருகிவிட்டு, மீதியை மேசையில் வைத்துக்கொண்டு, தன் பொய்ப்பல் செட்டைத் தன் நாக்கால் வெளியாக்குவதும் உட்செலுத்துவதுமாக எதையோ யோசித்து அமர்ந்திருந்தார். தன்னை மறந்து ‘பல்செட்’ விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார் என்றே கூறலாம். வாயிலிருந்து வெளியில் தலைகாட்டும் அந்தப் பல்செட், பார்க்கப் பயங்கரமாகவும் பூச்சாண்டி முகம் போலவும் இருந்தது; அருவருப்பாகக் காணப்பட்டது. எதையோ நினைத்துக்கொண்டு முகத்தைச் சொறிவது, மூக்கைக் குடைவது என இவையெல்லாம் மனித இயல்புதான் என்றாலும், நாலு பேருக்கு முன்னால் கைவிரல்கள் முகத்துக்குப் போகக் கூடாது என்ற விவஸ்தை இல்லாமல் சிலர் செய்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.
மற்றொரு மேசையில் ஒருவர், நூடுல்ஸ் உணவைக் குச்சிகளால் இடுக்கி அள்ளி, மேலே இரண்டடி உயரத்திற்கு மேல் தூக்கி, அதன் நீளத்தை அளப்பதுபோல் பலமுறை கிளறிச் சுவையை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். கோப்பையைத் தாண்டி நூடுல்ஸ் கொட்டிவிடும் போல இருந்தது. ஒருவேளை சூட்டைக் குறைக்க அப்படிச் செய்திருக்கலாம்.
அவரது முகத்தில் ஒரு கறுப்புப் பரு; அதில் ஒரே ஒரு முடி. அதன் நீளம் எத்தனை சென்டிமீட்டர் இருக்கும் என்று கற்பனையாகக் கணக்கிட்ட மாரிமுத்துவிற்கு, அந்த முடி உணவோடு வாய்க்குள் போய்விடுமோ என்று தோன்றியது.
காப்பிக் கடையின் ஒரு மூலையில் ஒரு தமிழ்த் தம்பி, தனியாக ஒரு கிளாஸ் பீர் நிறைத்த கிளாசுடன் அமர்ந்தவாறு, காணொளி அழைப்பு வழியே ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
அந்தத் தம்பிக்குப் பின்புறம் இருந்த ஒரு மேசை காலியானது. மாரிமுத்து உடனே சென்று நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து, பானம் வழங்கும் சீனப் பெண்ணை அழைத்தார். புலிப் பீர் வந்தது; பணத்தைப் பைக்குள் போட்டுவிட்டுப் பாட்டிலைத் திறந்தாள். பாட்டில் மூடியில் “நன்றி” என்பதைக் காட்டிவிட்டு, கிளாஸை நிறைத்துவிட்டு அடுத்த மேசைக்குச் சென்றுவிட்டாள். பீரின் முதல் உறிஞ்சலுக்கு முன்பே புத்தகத்தைத் திறந்தார் மாரிமுத்து.
முன் மேசையில் இருந்த தமிழ்த் தம்பிக்குத் தன் பின்புற மேசையில் மாரிமுத்து இருப்பது தெரியாது. தம்பியின் பேச்சின் ஒலி கூடியது; அது சற்றுக் காரசாரமாகவும் இருந்ததைக் கேட்டவுடன், அது ஏதோ குடும்பப் பிரச்சினை என்பதை உணர்ந்துகொண்டார் மாரிமுத்து.
தமிழ்த் தம்பி தன் மனைவியைக் காணொளியில் பார்த்துக் கொண்டே ஆத்திரப்படுகிறான். வார்த்தைகள் கடுமையாகின்றன. குற்றச்சாட்டுகள் இரு தரப்பிலும் சரமாரியாக எழுகின்றன. பேச்சுக்கு மேல் பேச்சு!
‘சரி, நமக்கு இந்த இடம் சரிப்படாது’ என்று அங்குமிங்கும் பார்க்கிறார் மாரிமுத்து. எதிர் மூலையில் புகைபிடிக்கும் பகுதிக்கு அடுத்து ஒரு மேசை காலியாக இருந்தது. ‘ஆனால், புகை பரவும் இடமாச்சே’ என்று மனது எச்சரித்தது. இருப்பினும் பரவாயில்லை, அங்கு போனால் அமைதியாகப் படிக்கலாம் எனப் புத்தகத்தை இடுக்கிக்கொண்டு, பீர் பாட்டிலின் கழுத்தை இடக்கையால் பற்றி, பீர் கிளாஸை வலக்கையால் சமநிலையாக ஏந்தி எழுந்தார். ஆனால், அதற்குள் ஒரு தம்பதியர் அந்த மேசையை ஆக்கிரமித்துவிட்டனர்.
‘போச்சுடா!’ என்றது அவர் மனம். வேறு வழியின்றித் தன் பீர், பாட்டில், புத்தகம் மூன்றையும் முன்பிருந்த இடத்திலேயே வைத்தார். மீண்டும் அமர்ந்தார்.
தம்பியின் உரையாடற் போர் இப்போது உச்சக்கட்டத்தை அடைந்தது.
“உனக்குப் பொண்டாட்டியா இங்க இருந்து அன்றாடம் உன் ஏச்சையும் பேச்சையும் வாங்கிக் கட்டிக்கிறதைவிட, நான் தூக்கு மாட்டிச் சாவதே நல்லது. என்னைப் பற்றி செய்தி சீக்கிரம் வரும். நான் சொல்றதை இப்பவே நல்லாக் கேட்டுக்க...” என்று ஆக்ரோஷமாகக் கத்தியபோதே, அவளது தொலைபேசி இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
அந்தத் தம்பி சங்கடம் தாங்காமல் தவித்தான். முன்பிருந்த பீரைக் கிளாஸோடு ஒரே மூச்சில் தொண்டைக்குள் இறக்கினான். மீதி இருந்த பீரையும் ஊற்றி, இரண்டாவது சுற்றாகக் குடித்து முடித்துவிட்டு, கையை உயர்த்திச் சீனப் பெண்ணை அழைத்தான். “இன்னொன்று” என்பது போல் ஒரு விரலை உயர்த்தினான்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மாரிமுத்துவால் சும்மா இருக்க முடியவில்லை. “தம்பி, இங்கே வாப்பா...” என்று வாஞ்சையுடனும் அன்போடும் அழைத்தார்.
குழப்பத்தில் இருந்த அந்தத் தம்பியின் மனமோ, யாராவது தன் நிலையைக் கேட்டு ஆறுதல் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்தது.
“அண்ணே, மன்னிக்கணும். நீங்க இங்க இருந்தது தெரியாம ரொம்பச் சத்தம் போட்டுப் பேசிட்டேன்” என்றான்.
“அதனால் என்ன தம்பி, உன் பிரச்சினை உன்னை அப்படிப் பேச வச்சிருக்கு. இங்க வந்து உட்காரு” என்றார் மாரிமுத்து. தம்பியும் வந்து அடுத்த நாற்காலியில் அமர்ந்தான்.
தம்பி தன் மேசைக்கு மாறியதை உணர்ந்த அந்தப் பெண், பீரை மேசையில் வைத்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டாள். மூடியைத் திறந்து கிளாஸில் நிறைத்தாள்; மூடியின் உள்பக்கத்தைப் பார்த்துவிட்டு (”நன்றி” என்று இருந்ததால்) கையை விரித்துவிட்டு விரைந்து தன் பணியைக் கவனிக்கச் சென்றாள்.
மாரிமுத்து, தம்பியுடன் ‘சியர்ஸ்’ சொல்ல பீர் கிளாஸை உயர்த்தினார். மரியாதைக்காகத் தம்பியும் செய்தான். இருவரும் பீரை பருகத் தொடங்கினர்.
சற்று முன்பு நடந்த காணொளிச் சண்டை. எல்லாவற்றிற்கும் மூலக் காரணம் கீழுள்ளவை என்பதை மாரிமுத்து புரிந்துகொண்டார்:
ஒரு மாத விடுமுறையில் ஊருக்குப் போன ஒரே பிள்ளையான ரவிக்குமாரிடம், அவனது பெற்றோர் அன்பு கலந்த உறுதியோடு, “தம்பி ரவி, எங்களுக்கும் வயதாகிவிட்டது. எங்களைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. நீ ஒரு கல்யாணம் செய்துகொள்வதுதான் நல்லது” என்றனர். பெற்றோர் சொல்லைத் தட்டாத நல்ல மகனான ரவியும் திருமணத்திற்குச் சம்மதித்துத் திருமணம் செய்துகொண்டான்.
ஒரு மாதக் காலம் இல்லற வாழ்க்கை சிறப்பாகப் போய்க்கொண்டிருந்தது. அதற்கு மேல் விடுமுறையை நீட்டிக்கக் கம்பெனி அதிகாரி மறுத்துவிட்டார். வேறு வழியின்றி, சிங்கப்பூருக்குத் திரும்பி வேலைக்கு வரவேண்டிய கட்டாயம் ரவிக்கு ஏற்பட்டது.
வந்த நாள் முதல் இன்று வரை, தம்பி தன் மனைவியுடன் காணொளியில் பேசாத நாளே இல்லை. நாள்கள் நன்றாக, மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தன.
“அப்பா, உன் பொண்டாட்டி நல்ல பிள்ளைப்பா. எங்களை நல்லாப் பார்த்துக்கிறா. நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு” என்று பெற்றோர் மருமகளைப் பற்றி அவ்வப்போது பாராட்டிப் பேசுவதுண்டு.
“அப்படியென்றால் என்னதான் பிரச்சினை தம்பி?” என்று இடைமறித்துக் கேட்டார் மாரிமுத்து.
“அண்ணே... என் கம்பெனியில வேலை செய்யுற என் ஊர்க்காரன் ஒருத்தனுக்கு என்மேல எப்பவும் பொறாமை. போன மாசம் எனக்குச் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைச்சதால அவனோட பொறாமை இன்னும் அதிகமாயிடுச்சு. அவன் ஊருக்குள்ள ஒரு வதந்தியைப் பரப்ப ஆரம்பிச்சுட்டான்.
“என் மனைவிக்கு யாரோடோ தொடர்பு இருக்குன்னும், அடிக்கடி டூ-வீலர்ல வெளிய போறாங்கன்னும் இல்லாத பொல்லாத புரளியைக் கிளப்பிட்டான்.”
அந்தப் புரளி, வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமைகளில் சிராங்கூன் சாலைக்கு வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வழியே பரவி, நல்ல நண்பர்கள் சிலர் மூலமாக ரவியின் காதுக்கு எட்டியுள்ளது. அன்று முதல் தம்பிக்கும் அவன் மனைவிக்கும் வாக்குவாதம் தொடங்கியது. மனைவி பலமுறை விளக்கியும் ரவிக்குச் சந்தேகம் தீரவில்லை.
“ஒரே ஒரு நாள் உன் மாமனார் வந்து, அவர் மகள் பேர்ல கணக்கை மாத்த பேங்குக்குக் கூட்டிட்டுப் போனார். அதைத் தவிர அவ எங்கேயும் போகலப்பா” என்று அவனது தந்தை சொன்ன உண்மை கூட, ரவிக்குமாருக்கு அமைதியை அளிக்கவில்லை.
மாரிமுத்து ஒரு முடிவுக்கு வந்தார்.
“தம்பி! நீ உடனே லீவு போட்டுட்டு ஊருக்குப் போறதுதான் நல்லது. இந்த மாதிரி தினமும் ஃபோன்ல சண்டை போட்டுக்கிட்டு இருந்தா, உன்னால எப்படி இங்க நிம்மதியா வேலை செய்ய முடியும்? நீ நேரடியா ஊருக்குப் போய் என்ன ஏதுன்னு விசாரிச்சுத் தெரிஞ்சுக்கோ. அதுதான் உன் பிரச்சினைக்குச் சரியான தீர்வு. ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்ற பழமொழியைப் பாத்திருக்கியா? ஏன் மத்தவங்க சொல்றதை நம்புற? ஒருத்தனைப் பிடிக்கலைனா இப்படித்தான் புரளியைக் கிளப்புவாங்க. இது உலக இயல்பு தம்பி.”
“நீதான் சிங்கப்பூர்ல பத்து வருஷமா வேலை செய்யுறேன்றாய் காசை வீணாக்காம வீடு, வாசல், நிலம், தோட்டம்னு எல்லாம் வாங்கி வசதியா இருக்கேன்னு சொல்ற. நீ உடனே ஊருக்குப் போப்பா! போய் நேரத்தை வீணாக்காம விவசாய வேலையைப் பாரு. நீயும் உன் மனைவியும் ஒற்றுமையா இருங்க. சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெத்து எடுங்க. அதுக்கப்புறம் மறுபடி வெளிநாட்டு வேலைக்கு வர்றதைப் பத்தி யோசிக்கலாம்” என்றார் மாரிமுத்து.
இவை அனைத்தும் மாரிமுத்துவின் நினைவுக்கு வந்து சென்றன. அவர் சொன்னபடியே, ஒரு மணி நேரம் கழித்து ரவிக்குமாரை அழைத்தார்.
“அண்ணே! நல்ல செய்தி அண்ணே. நீங்க சொன்ன மாதிரி நான் ஊருக்கே வந்துட்டேன். வந்து பத்தாவது மாசத்துல எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு உங்க பேரைத்தான் வச்சிருக்கோம்!”
“என்ன, என் பெயரையா? மாரிமுத்துன்னா வச்சீங்க?”
“இல்லண்ணே, உங்க பெயர்ல இருக்குற ‘முத்து’ என்ற வார்த்தையை எடுத்துக்கிட்டு, எனக்குத் தமிழ் மேல இருக்குற பற்றால ‘முத்தமிழன்’னு பெயர் வச்சிருக்கோம்.”
“அருமை! மிக்க மகிழ்ச்சி தம்பி. உனக்கும் உன் மனைவி, மகன், பெற்றோர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நல்ல தமிழ்ப் பெயரைத் தேர்ந்தெடுத்து வச்சதுல எனக்கு மிக்க மகிழ்ச்சி!”
“அண்ணே! வெளிநாட்டுக்கு வேலைக்குப்போற இளைஞர்கள் யாரா இருந்தாலும், கல்யாணம் பண்ணிட்டு ஒரு குழந்தை பெறுவதற்கு முன்னாடி மறுபடி வேலைக்குத் திரும்புறது பெரிய மடத்தனம்னு அன்னைக்கு நீங்க சொன்னீங்க பாருங்க... அது நூற்றுக்கு நூறு உண்மைண்ணே. எல்லாரும் யோசிக்க வேண்டிய விஷயம். அன்னைக்கு நீங்க கொடுத்த அறிவுரைதான் என் வாழ்க்கையையே மாத்துச்சு. நான் வேலையைப் பெருசா நினைச்சு என் மனைவியைப் பிரிஞ்சு வந்ததுதான் நான் செஞ்ச பெரிய தப்புன்னு உணர்ந்தேன். இனிமே நான் இங்கேயே (ஊரிலேயே) இருக்கப்போறேன்.”
“அண்ணே! அடுத்த முறை நீங்க இந்தியாவுக்கு வரும்போது கண்டிப்பா எங்க ஊருக்கு வரணும். அக்கா, பிள்ளைங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு எங்க வீட்டுலதான் தங்கணும். எல்லா வசதியும் இருக்கு அண்ணே. மிக்க நன்றி, வணக்கம் அண்ணே!” என்றான் ரவிக்குமார்.
எழுத்து: முத்தழகு மெய்யப்பன்


