அம்மாவின் சமையலறையில்...

அம்மாவின் சமையலறையில்...

1 mins read
058b68dd-a1f3-44db-aab6-664434dd9a6b
-
Google News Preferred Icon

அம்மாவின் சமையலறையில்

தாளிக்கும் பொருள்கள்

அந்தந்தக் கலனிலும்

சட்டிசாமான்கள் அடுக்கிலும்

நேர்த்தியாய் இருக்கும்

பொரியல் செய்ய

வேண்டியவற்றை எடுத்துப்

பாத்திரத்தில் போட்டதும்

படபடவென்று வெடிக்கும்

அம்மா அப்படி இல்லை

அரிசியிட்ட பானையுடன்

அடுப்பு எரியும்

அருகில் போனால்

அனல் அடிக்கும்

அம்மா அப்படி இல்லை

இன்னொரு பக்கம்

தளக்புளக் என்று

காரப் பொடி போட்ட

குழம்பு கொதிக்கும்

அம்மா அப்படி இல்லை

மறு அடுப்பில்

அழுத்தம் கூடி

கோபம் தலைக்கேறியதும்

குக்கர் சத்தம் போடும்

அம்மா அப்படி இல்லை

சமையல் முடிந்து

எல்லாம் சுவையாக இருக்கும்

எல்லாரும் வயிறார

ரசித்து ருசித்து உண்பார்கள்

அம்மாவுக்கு அப்படி இல்லை

கழுவ வேண்டிய

பாத்திரங்களும் கரண்டிகளும்

தொட்டியில் குவிந்துகிடக்கும்

உண்ட களைப்பில்

அனைவரும் உறங்கிப்போவார்கள்

அம்மா அப்படி இல்லை

- சபா. முத்து நடராஜன்

குறிப்புச் சொற்கள்