~~ அனுபமா உதிவ்
காலம் என்னும் தோட்டத்திலே
கனிகள் பறிக்க வந்தேன்
கால்கள் கடுக்கும் வெயிலினிலே
மரத்தின் நிழலில் நின்றேன்
நிழலைத் தந்த மரத்திற்குச்
நிழல்கள் இல்லை தானே!
கனிகள் தந்த மரத்திற்குக்
கனிகள் இல்லை தானே!
பனையின் நிழலில் நின்றபோது
கள்ளை நினைத்து சிரித்தார்
மாவின் நிழலில் நின்றபோது
ஏளனமாய்க் கண்ணில் எரித்தார்
மரத்தின் பயனை அடைந்தவர்கள்
வரத்தை நினைப்ப தெங்கே?
சந்தன மரமாய் இருந்தாலும்
வெட்டி எரிவார் இங்கே!
அரச மரத்தின்நிழல் சொல்லும்
எட்டுப் பட்டிக் கதைகள்!
ஆல மரத்தின்நிழல் சொல்லும்
ஆதி காலக் கதைகள்!
அன்பைத் தந்த நிழலுக்கு
அன்பு ஒன்றே பரிசு!
அதை மறந்த நிஜத்திற்கு
வாழ்க்கை நிலம் தரிசே!


