- டி.என்.இமாஜான்
மண்ணில் வாழும் மாந்தரெல்லாம்
எண்ணும் அன்பில் இணையவேண்டும்!
உள்ளம் திறந்து உயிரைநேசித்து
தள்ளா நல்வழி நடத்தல்வேண்டும்!
பிறரின் துயரம் தனதுதென்று
உறவாய்க் கரங்கள் நீட்டவேண்டும்!
பசியும் பிணியும் போக்கியேதான்
கசியும் கருணை காட்டவேண்டும்!
சாதி மதங்கள் கடந்துநின்று
நீதி நெறியை வளர்க்கவேண்டும்!
பகைமை என்னும் நோயினைத்
தகைமை குணத்தால் வெல்லவேண்டும்!
வாழும் நாளில் நல்லதைத்தான்
நாளுமே நாம் செய்யவேண்டும்!
இனிய சொல்லால் இதயங்களை
கனியச் செய்து வாழவேண்டும்!
மனித நேயம் உலகினிலே
புனித விளக்காக மிளிரவேண்டும்!
எல்லா உயிரும் ஒன்றெனவே
நல்லோர் போற்றி வாழவேண்டும்!



