விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் போர்த்தியிருந்த மெல்லிய இருட்டுப்போல் மகாதேவனின் மனத்தில் லேசான குழப்பம் சூழ்ந்திருந்தது. அவர் எந்தச் சூழலிலும் துவண்டுபோய் மனம் தளர்ந்ததில்லை.
இன்றைய வாழ்க்கைச் சூழலும், இயந்திரங்களோடு இயந்திரமாய் மாறிக்கொண்டு வரும் மனிதர்களின் போக்கும் ஆரம்பத்தில் சற்று அயர்ச்சியைத் தந்தாலும் வாழ்க்கையோட்டத்தைப் புரிந்துகொண்டு அதன் போக்கில் வாழப் பழகிக்கொண்டார். அவருடைய கடந்த கால வாழ்வியலும் வேலை அனுபவமும் அவருக்கு அந்த மனப்பக்குவத்தைக் கொடுத்திருந்தது.
இன்றைய நவீன காலச்சூழலுக்கு ஏற்றாற்போல் அவர் வாழப் பழகிக்கொண்டாலும் அவரது மனைவி கோமதியால் முடியவில்லை. வெளுத்ததெல்லாம் பாலாக எண்ணும் அவரின் எண்ணமும், வெள்ளந்தியான மனமும், கண்மூடித்தனமான பாசமும் அவரிடம் நிறைந்திருந்ததுதான் அவரின் கவலைக்குக் காரணம்.
எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் புரிந்துகொள்ளாமலிருக்கும் தன் மனைவியிடம் எப்படிப் புரிய வைப்பது என்ற குழப்பம்தான் சில நாள்களாக அவரை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.
அந்தச் சிந்தனையிலிருந்தவரை, “என்னங்க இன்னும் நீங்க சந்தைக்குக் கிளம்பலையா?” என்ற மனைவி கோமதியின் குரல் அவரது சிந்தனையைக் கலைத்தது.
“அவசியம் போகணுமா? வேணும்னா மத்தியான சாப்பாட்டை நாம கடையில வாங்கிச் சாப்பிட்டுக்கலாம்.”
“இல்லைங்க, அது நல்லாயிருக்காது.”
“இப்போதான் இரண்டு நாளா உன் கை வலி சரியாயிருக்கு. கையைக் கொஞ்சமாவது அசைக்க முடியுது. இந்த நேரத்துல இப்படிக் கஷ்டப்பட்டுச் சமைக்கணுமா? அப்புறம் மறுபடியும் கை வலி வந்துச்சுன்னா உன்னால சமாளிக்க முடியாது.”
“ஒரு மாசம் கழிச்சு வீட்டுக்கு வர்ற பையனுக்குச் சமைச்சுப் போடாம கடையில வாங்கிக்கொடுக்கச் சொல்றீங்களா? நான் கையை ரொம்ப அசைக்காம மெதுவா சமைக்குற வேலைய பார்த்துக்கிறேன்.”
“உனக்கு உடம்பு சரியில்லைன்னு பார்க்க அவன் வர்றான். விருந்து சாப்பிட வரல!”
“அவனே நேரம் கிடைக்கும்போதுதான் வர்றான். அப்படி வர்ற பிள்ளைக்கு அவனுக்குப் பிடிச்ச கோழிக்கறிகூட செஞ்சு கொடுக்க முடியலன்னா எப்படிங்க?”
“நீ கீழே விழுந்து கை ஓடஞ்சு கிடந்த அன்னைக்கு மருத்துவமனையில வந்து பார்த்துட்டுப் போனவன்தான். அதுக்குப் பொறவு ஒரு மாசம் கழிச்சு இப்பதான் வர்றான். இத்தன நாள் கையில கட்டு போடுட்டு ஒத்த கையை வெச்சிகிட்டு நீ என்ன பண்ணுவன்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தானா? ஏதோ ஒத்தாசைக்குப் பக்கத்துலயிருக்கிற என் நண்பன் ஜார்ஜ் வீட்டு வேலக்காரப் பொண்ணு வந்து வேல பார்த்து கொடுத்துச்சு. அதனால எப்படியோ சமாளிச்சுட்டோம். கொஞ்சம்கூட பெத்த அம்மா மேல அக்கறையில்லாம இருக்குறவனுக்கு இப்படிக் கை வலியோட கோழிக்கறி சமைக்கத் தயாராயிருக்க...”
“அவனுக்கு வேலை அதிகமா இருந்ததாலதான் வர முடியலன்னு சொன்னான். ஆனா தினமும் எனக்குத் தொலைபேசியில அழைச்சுக் கை வலி எப்படியிருக்குன்னு கேட்டுக்கிட்டேதான் இருந்தான்.”
“தொலைபேசில பேசினா எல்லாம் சரியாகிடுமா? அவன் அலுவலகத்திலிருந்து வண்டில வந்தா வீட்டுக்கு வர இருபது நிமிஷம் கூட ஆகாது. வந்து பார்க்கணும்னு மனசிருந்தா தூரமும் நேரமும் ஒரு பிரச்சினையில்ல.”
“இப்போ பிரச்சினை அவனில்ல. நீங்கதான். நானே ஒரு மாசம் கழிச்சாவது வந்து பார்க்குறானேன்னு சந்தோஷமா இருக்கேன். நீங்க அதையும் கெடுத்துருவீங்க போலயிருக்கே.”
“நான் ஒண்ணும் கெடுக்க வேணாம். இன்னும் கொஞ்ச நாள்ல அவனே இங்க வர்றத நிறுத்திருவான்.”
“அவன் நிறுத்துறானோ இல்லையோ நீங்க இப்போ பேச்சை நிறுத்திட்டு நான் சொன்னதை வாங்கிட்டு வர்றீங்களா? இல்ல நான் போகவா?”
“இத்தனை நாளு நீ அவனுக்குச் செய்யுறதப்பத்தி நான் ஏதாவது சொன்னேன்னா? ஒரு மாசமா நீ பட்ட பாட்டைப் பார்த்ததாலதான் சொல்றேன்.”
“அதான் இப்போ இரண்டு நாளா கை வலி கொறஞ்சிருச்சே. நான் மெல்ல மெல்ல வேலைய செய்யுறேன்.”
“புள்ள பாசம் உன் கண்ணை மறைக்குது. மொதல்ல அவன் வீட்டுக்கு இன்னைக்குக் கண்டிப்பா வர்றானான்னு கேட்டுக்க. அப்புறம் தொலைபேசில அழைச்சு வேலையிருக்கு, இன்னொரு நாள் வர்றேன்னு சொல்லுவான். அதனால அவன்கிட்ட தெளிவாகக் கேட்டுட்டு அப்புறம் சமை. உன்னைப்போட்டு வருத்திக்காதே. கை வலி அதிகமாச்சுனா அப்புறம் சிரமப்படப் போறது நீதான்.”
“இன்னைக்குக் கண்டிப்பா வர்றேன்னு இப்பதான் போன்ல சொன்னான். கை வலி வந்தா மருந்து தடவிவிடத்தான் நீங்க இருக்கீங்களே. இப்ப கடைக்குப்போயி சலீம் அண்ணன்கிட்ட சொல்லி கோழியைச் சின்னச் சின்னதா வெட்டி கொடுக்கச் சொல்லுங்க. அப்புறம் உருளைக்கிழங்கும், வெள்ளரிக்காயும் வாங்கிக்கங்க போதும்.”
“சரி, நான் போய் வாங்கிட்டு வர்றேன். நீ மத்த வேலைய பாரு. பாத்திரத்தை நான் வந்து விளக்குறேன்,” என்று கூறிவிட்டு ஈரச்சந்தைக்குக் கிளம்பினார் மகாதேவன்.
அவரின் கால்கள் ஈரச்சந்தையை நோக்கி நடைபோட்டாலும் மனம் என்னவோ கோமதியைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்து.
அவர் இந்தத் தஞ்சோங் பகார் வட்டாரத்திற்குக் குடி வந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அப்போது அவருடைய அப்பா பிஎஸ்ஏவில் (PSA) வேலை செய்துகொண்டிருந்தார். கம்பத்தில் இருந்தவர்கள் எல்லாம் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறிக்கொண்டிருந்த காலமது. ஆகையால் அவருடைய அப்பாவும் தஞ்சோங் பாகார் வட்டாரத்திற்குக் குடிபெயர்ந்தார். திருமணம் முடிந்த பிறகு மகாதேவனுக்கு அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாததால் தன் பெற்றோரைப் பார்த்துக்கொண்டு அங்கேயே இருந்துவிட்டார். கோமதிக்கும் அந்த இடம் பிடித்துப்போனதால் அவர்கள் வேறு வீடு வாங்குவதுபற்றி யோசிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆரம்பத்தில் இந்த அளவுக்குப் பெரிய கட்டடங்களும், கடைகளும் அந்த வட்டாரத்தில் இல்லை. ஆனால், இப்போது இந்த இடம் மத்திய வியாபார வட்டாரமாக மாறிவிட்டது. அதனால், குடியிருப்புப் பேட்டையைச் சுற்றிலும் வங்கிகள், அலுவலகங்கள் வந்துவிட்டன. கீழேயே சிறு கடைகள், பேரங்காடி இருப்பதால் தேவையான பொருள்கள் வாங்குவதற்கு அலைய வேண்டியது இல்லாமல் இந்த வயதான காலத்தில் வசதியாக இருக்கிறது.
இவர்களின் ஒரே பிள்ளை செழியன். பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்குதான். தற்போது தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள அலுவலகத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுகிறான். வேலை செய்யும் இடத்தில் உடன் பணியாற்றிய கமலினியிடம் காதல் மலர, இருவீட்டுப் பெற்றோரின் சம்மதத்துடன் ஈராண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. அவர்கள் அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே வீடு வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். ஆரம்பத்தில் வார இறுதியில் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார்கள். பிறகு, இரண்டு வாரத்துக்கு ஒரு முறை என்று மாற்றம் கண்டு இப்போது மாதம் ஒருமுறை என்று சுருங்கிப்போனது. அதுவும் மருமகள் அத்திப்பூத்தாற்போல் எப்போதாவது வருவதுண்டு.
ஆரம்பத்தில் மகனின் மாற்றம் மனக்கஷ்டத்தைக் கொடுத்தாலும் இன்றைய இளையர்களின் மனப்போக்கு புரிந்துபோனதால் மகனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் வாழப் பழகிக்கொண்டார். ஆனால், கோமதியால் அது முடியவில்லை. அவர் எப்பொழுதும் மகனைப்பற்றியே எண்ணிக்கொண்டு உடலையும் உள்ளத்தையும் வருத்திக்கொள்வதைப் பார்க்கும்பொழுது அவருக்கு மனவேதனையாக இருக்கும்.
முதுமைக் காலத்தில் ஒரே வீட்டில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு வாழ்வது சலிப்பாக இருந்தாலும் அதைத் தாண்டி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கையை முழுமையாக்கும் என்பதை அவர் புரிந்துகொண்டார். ஆனால், அதனை உணராது மகனின் வரவையும், மகனுடனான உரையாடலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கோமதியை நினைக்கும்பொழுதெல்லாம் அவருக்கு எப்படி வாழ்க்கையைப் புரிய வைப்பது என்ற எண்ணம் அவரைக் கலங்கடிக்கும்.
அந்த நேரத்தில் அவருக்கு ஆறுதலாய் இருப்பது அவருடைய நண்பர்கள்தான். அந்த வட்டாரத்தில் அவருக்கு நண்பர்கள் அதிகம். கம்பத்தில் இருந்தபோது அவரோடு பழகிய சில குடும்பங்கள் அங்கேயிருந்ததால் மாலை வேளைகளில் அவர்களுடன் பழைய கதைகளை மனம்விட்டுப் பேசி மகிழ்ந்துவிட்டு வருவார்கள். அதுமட்டுமல்லாமல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்தியாவுக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். மகனிடம் எந்த எதிர்பார்ப்புமின்றி அவர்களுடைய வாழ்க்கையை வாழக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், சென்ற மாதம் கடைக்குப் பழம் வாங்கச் சென்ற இடத்தில் கோமதி கீழே விழுந்துவிட்டார். இடக்கை முறிந்துவிட்டது. கையில் கட்டுப்போட்டு மருத்துவமனையில் இருந்தபோது வந்து பார்த்துவிட்டுச் சென்றவன் மீண்டும் இன்று வருவதாகச் சொல்லி இருக்கிறான். இதுபோன்று அவன் வருவதாகச் சொல்லி பலமுறை வராமலிருந்த நாள்கள் அதிகம். அவனை எதிர்பார்த்து இருப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். இதனை உணர்ந்தாலும் பெத்த பாசத்தால் அதனை ஒதுக்க முடியாது கோமதி அல்லாடிக் கொண்டிருக்கிறார். கோமதியும் இதைப் புரிந்துகொண்டால் நன்றாயிருக்கும் என்பதுதான் அவரின் ஆதங்கம். காலம் அவருக்கு உணர்த்தும் என்று எண்ணிக்கொண்டே மெல்ல நடந்து எதிரேயிருந்த ஈரச்சந்தைக்குச் சென்றார். அங்கே கடை வைத்திருக்கும் பெரும்பாலானோர் அவரின் நண்பர்கள். கோழிக்கடை வைத்திருக்கும் சலீம் பாயும் அவரும் பள்ளித் தோழர்கள். கடையில் கூட்டமாக இருந்ததால் அவரிடம் அதிகம் பேச முடியவில்லை. சில நல விசாரிப்புகளுக்குப் பிறகு தேவையானதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்.
சமையலறையில் கோமதி ஒரு கையால் மெல்ல சமைத்துக்கொண்டிருந்தார். வலியையும் பொருட்படுத்தாது மகனுக்காகச் சிரமப்படும் அவரின் தாய்மை உள்ளத்தை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரின் மனத்தைப்போல உணவின் மணமும் வீடு முழுவதும் நிறைந்திருந்தது. வழக்கம்போல் ஏதாவது காரணம் சொல்லி தவிர்ப்பவன் அன்று மதிய உணவிற்கு வந்துவிட்டான். உணவைப் பரிமாறிக்கொண்டே மகனுடன் கோமதி உரையாடிக்கொண்டிருந்தார். சாப்பிட்டுக்கொண்டே இவரும் அமைதியாக அவர்களின் உரையாடலைக் கவனித்துக்கொண்டிருந்தார்.
“கை வலி இப்போ எப்படி இருக்கம்மா?”
“இப்போ பரவாயில்லப்பா. கொஞ்சம் கையைத் தூக்க முடியுது”
“அடுத்து மருத்துவரை எப்போ பார்க்கப் போறீங்க?”
“அடுத்த வாரம் வரச் சொல்லியிருக்காங்கப்பா. உன்னால அன்னைக்கு என்கூட வர முடியுமா?”
“அடுத்த வாரம் வேலை விஷயமா வெளியூர் போறேன். வர முடியுமான்னு தெரியலம்மா.”
“பரவாயில்லப்பா… நான் அப்பாகூடப் போறேன். உனக்கு எப்போ நேரம் கிடைக்குதோ அப்பெல்லாம் வீட்டுக்காவது வந்துட்டுப் போ.”
“சரிம்மா. இனிமே எங்காவது வெளில போனா பார்த்துப் பத்திரமா போங்க. பொருள்கள் வாங்கணும்னா கடைக்குத்தான் போய் வாங்கணும்ன்னு அவசியமில்ல. இப்போ எல்லாமே இணையத்துல கிடைக்குது. என்ன வேணும்ன்னு நீங்க சொன்னீங்கன்னா நான் இணையத்துல வாங்கித் தாரேன். வீட்டுக்கே வந்துடும்.”
“இல்லப்பா நான் கடைக்கே போய் வாங்கிக்கிறேன். அப்படியே எங்களுக்குப் பழகிடுச்சு. உன்னை நம்பிக்கிட்டுருந்தா உன் வேலை பளுவுல சில சமயம் மறக்க நேரிடும். அதுக்காகக் காத்துக்கிட்டு இருக்க முடியாது.”
“இல்லம்மா, அப்படியெல்லாம் காக்க வைக்க மாட்டேன்’
“இப்படித்தான் சொல்லுவ, அப்புறம் வேலையிருக்குன்னு சொல்லிட்டு பேசக்கூட மாட்டே”
அதைக் கேட்டதும் மகாதேவனால் நம்ப முடியவில்லை. பேசியது கோமதிதானா என்ற ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்துக்கொண்டே அவர்களின் உரையாடலைக் கவனித்தார்.
“செழியா! நாங்க கடைக்குச் சாமான மட்டும் வாங்கப் போகல, அன்பையும் சேர்த்து வாங்கிட்டு வர்றோம். ஏன்னா அந்த அன்புதான் எங்களை இன்னும் உயிர்ப்போட வச்சுகிட்டிருக்கு. நான் கீழே விழுந்தவுடனே ஓடி வந்து உதவி செய்தது சலீம்பாய் அண்ணனும் சுத்தியிருக்குற கடைக்காரங்களும்தான். அதுமட்டுமில்லாம இந்த ஒரு மாசமா நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டுக்கு வந்து எங்ககூட அன்பாவும் பாசமாவும் பேசிட்டுப் போனாங்க. நாங்க கடைக்குப் போயி பொருளை மட்டும் வாங்கிட்டு வரல. அப்படியே நட்பையும் நெஞ்சார்ந்த நேசத்தையும் சொமந்துட்டு வர்றோம். இணையத்துல பொருளைமட்டும் வாங்குற உங்களால இதுல இழையோடுற பாசத்தைப் புரிஞ்சுக்க முடியாது. உனக்கு என்னை வந்து பார்க்க ஒரு மாசமாச்சு. எங்களுக்கு ஏதாவது ஒன்னுனா உனக்கு முன்னால மொதல்ல ஓடி வர்றது அவங்கதான். உள்ளத்தால் ஒன்றிணைந்த இந்த உறவுகளின் பிணைப்பை உன்னால உணர முடியாது. இணையத்துல அன்பை வாங்க முடியுமா செழியா?” என்று கோமதி அமைதியாகக் கேட்டார்.
அதுவரை நாவில் மட்டும் நிறைந்திருந்த கோழிக்கறியின் சுவை இப்போது மகாதேவனின் உள்ளத்தையும் நிறைத்தது.
- பிரதீபா


