தமிழஞ்சலி

தமிழஞ்சலி

1 mins read
db9278f9-9059-4744-b39e-1f07082c8500

பட்டிமன்றப் பிதாமகனே!

தமிழ்ச் சங்கங்களில் வழங்கிய

இலக்கியத் தமிழைப்

பட்டிதொட்டியெல்லாம்

முழங்கிச் சென்ற

மதுரமான தமிழறிஞரே!

உன் பட்டிமன்றங்களில்

இலக்கியத் தமிழை

எளிய தமிழாக்கி

எளிய மக்களுக்குத்

தமிழ் கற்பித்தவரே!

அரியணையில் மட்டுமிருந்த

தமிழ்மொழியைத்

தொலைக்காட்சி மூலம்

எங்கள் தலையணைக்கு

அருகில் கொண்டு வந்தவரே!

பொங்கல் திருநாளும்

தீபாவளித் திருநாளும்

விழாவாகக் கொண்டாடுவதற்குக்

காரணமே

உங்கள் பட்டிமன்றம்தான்!

நீ பேசிய

நகைச் சுவைப் பேச்சால்

நாடே மகிழ்ந்தது

இன்று உன் மௌனத்தால்

நாடே சோகத்தில் மூழ்கியது

அன்று உன் நகைச்சுவையால்

எங்கள் மனமே சிரித்தது

இன்று உன் மௌனத்தால்

எங்கள் உயிரே அழுகிறது!

தனிமனிதனின்

சோகங்களை

நகைச்சுவைப் பேச்சால்

மறையச் செய்த

தமிழ்மொழி மருத்துவரே!

பட்டிமன்றத்தில் பேச

பலர் இருக்கிறார்கள்

நடுநாயகமான நடுவர்

நீ ஒருவர் மட்டுமே!

எல்லாரும்

நகைச் சுவையாகப் பேசுவார்கள்

நீ மட்டுமே

சுவையை நகையாகத் தருபவன்!

அன்று இதே நாளில்

பாரதியை இழந்தோம்

இன்று உன்னை இழந்தோம்

எமனுக்குத் தமிழ்மொழி படிக்க

ஆசை வந்துவிட்டதோ?

முத்தமிழின்

மூத்த தமிழை இழந்தோம்!

இனி எங்கள் பட்டிமன்றத்தின்

முத்தத் தமிழ்ப் பேசும்

நடுவர் யார்?

சாலமனைப்போலவே

தமிழ் மன்றத்தின்

நீதி தவறாத் தமிழ் மறவனே!

தமிழ்ச் சங்க

மதுரை தந்த மாணிக்கமே!

உமக்கு

எங்கள் தமிழஞ்சலி!

- அனுபமா உதிவ்

குறிப்புச் சொற்கள்
கதை/கவிதைகவிதைஞாயிறு முரசு