சிங்கைமலா யாநாடு செந்தமிழை வளர்த்தது
சீரார்ந்த தமிழ்ப்பணியை செயல்மூலம் காட்டி
தங்கத்தமி ழோங்கிட செய் தவராம்த மிழவேள்
தன்னுடலா வியெலாம்த மிழுக்காய்தந் தவராம்
சங்கம்நி றுவிதமிழ்வ ளர்த்தபாண்டி யனது
சந்ததியில் வந்தவரோ சாரங்க பாணி?
சிங்கநடை போட்டுதமிழ் சீரோங்கி நிலைக்க
செம்மாந்த தொண்டுகளை இருநாட்டில் செய்தோன்!
பண்பாடு கலாச்சாரம் பைந்தமிழின் கலைகள்
பழந்தமிழர் விழுமியங்கள் பாதுகாப்பாய் இருக்க
அன்றவர்தோற் றுவித்ததமி ழர்திருநாள் விழாக்கள்
அவர்தொண்டின் சரித்திரத்தைப் பதிவாக்கி உளது
வண்டமிழுக் கோரிடம்வேண் டிபோராட்டம் செய்து
வாழவைத்தார் பல்கலைக்க ழகத்தில்நம் தமிழை
பொன்றமிழில் தமிழ்முரசு சிங்கைமண்ணில் மணக்க
பூபாளம் பாடியநல் பத்திரிகை அதுவே!
மணிமன்றம் மலைநாட்டில் மலர்ந்துமணம் வீச
மாசற்ற தொண்டூழி யம்புரிந்த சான்றோன்
கனித்தமிழின் பேச்சாற்றல் கொண்டதிருக் கூட்டம்
கவினாக மலர்ந்ததன்று; கவிஞர்கள் பலபேர்
நனித்தமிழின் உரைஞர்கள் எழுத்தர்கள் என்று
நல்லறிஞர் முத்துகளை தமிழுக்குத் தந்து
தனிப்பெருமை சூடிக்கொண் ட கோமகனார் கோசா
தண்ணிலவாய் மிளிர்ந்தவராம் தமிழுலகி(ல்) அன்று!
அன்னாரின் தமிழ்த்தொண்டை அடையாளப் படுத்த
அருமையியக் கமாம்தமிழர் சங்கத்தார் இணைந்து
பொன்மகனார் கோசாவுக் கொருதுயில கத்தை
பொலிவுமிழும் வண்ணத்தில் ஜோகூர்பா ரென்ற
நன்னகர மண்ணிடையில் நாட்டினரே அழகாய்
நறுந்தமிழை வாழ்வித்த வரலாற்று மைந்தர்
மண்ணுறங்கிப் போனாலும் மறையாமல் இங்கே
மலர்த்தாத கண்ணுறக்கம் கொண்டுள்ளார் காண்பீர்!
தமிழ்மணி சி. வடிவேலு, ஸ்கூடாய், ஜோகூர்
