(ஐயா சாலமன் பாப்பையா நினைவாக)
புரிந்துகொண்டோம்
‘பூவிலும் தேனுண்டு
நாவிலும் தேனுண்டு ‘
அதிசயச் சந்திரனாய் நீ
கண்ட ஒரே அமாவாசை
உன் மரணம்
தாமரை முகங்களை
மலரச்செய்த
கருப்புச் சூரியன் நீ
சங்கத் தமிழின்
சந்தனவாசம் நீ
சிமிழிகள் கண் சிமிட்ட
நடுவில் குத்துவிளக்ககாய் நீ
மூன்று தலைமுறையின்
சிரிப்பு நீ – இன்று
அழுகையும் நீ
தமிழ்மலை இழந்த
தனிப்பெரும் சிகரம் நீ
சிறு கிறுக்கலிலும்
சித்திரம் கண்டவன் நீ
உன் சல்லடையில்தான்
கல் அரிசியாகிறது
நீ உழுத நிலத்தில்தான்
நாங்கள் விதைக்கிறோம்
தாய்க்கோழி நீ
கீறிய மண்ணில்தான்
நாங்கள் பொறுக்குகிறோம்
நெருப்பில் வளையா இரும்பு
உன் சிரிப்பில் வளைகிறது
ஓய்வறியா மீன் நீ
இன்று ஓய்வு பெற்றாய்
விந்தை நீதிமன்றம் நீ
எந்தக் கட்சியும் தோற்கவில்லை
சமாதானமாய்
உன் வெள்ளைச் சட்டை
சுடச்சுடத் தந்தாலும்
சரியான சூட்டில்
பருகவைத்தாய்
தொலைக்காட்சிகள்
தொலைத்துவிட்ட சொத்து நீ
‘ப’ என்றால் பட்டிமன்றம்
‘பா’என்றால் பாப்பையா இனி
கனிவுக் கயிரால் எங்களைக்
கட்டிப்போட்டவன் நீ
உனக்காக ஓர்
இணையதளம் ‘பட்டிமன்றம்’
மறைச்சொல் ‘பாப்பையா’
அமீதாம்மாள்
