நிழலும் மெய்யும்

நிழலும் மெய்யும்

fallback-0

27 Sep 2026 - 8:00 am

1 mins read

அம்மாவின் கைப்பிடித்து

நடைபயின்றோம்! - இன்று

அலைபேசி திரைபார்த்து

முடங்கிநிற்கிறோம்!

ஒளிநிலவைக் கூப்பிட்டு

உணவுஉண்டோம்! - இன்று

யூடியூப்பின் திரையிருளில்

கனவு உண்கிறோம்!

மண்தரையில் பம்பரங்கள்

உருட்டிமகிழ்ந்தோம்! - இன்று

தொடுதிரையின் வலைக்குள்ளே

சிக்கிமூழ்கினோம்!

விளையாட்டாய்ச் சமைத்துக்

கடைவிரித்தோம்!- இன்று

உணவுகளைப் படம்பிடித்துத்

திரைவிரிக்கிறோம்!

கூட்டாளியுடன் சிறகடித்து

பறவைகளானோம்! - இன்று

கூண்டுக்கிளி யாய்போனில்

கைதிகளானோம்!

குளத்தினிலே கப்பல்விட்டு

மாலுமியானோம்! - இன்று

கண்ணாடித் திரையினிலே

மாயமாகினோம்!

வண்ணத்துப் பூச்சிகளோடு

ஓடிமகிழ்ந்தோம்! - இன்று

வண்ணத் திரைகளில்கார்

ஓட்டுகின்றோம்!

பாட்டிசொன்ன நீதிக்கதையில்

தினம்வளர்ந்தோம்! - இன்று

மெய்நிகர் காட்சிப்பொய்க்

குழி வீழ்ந்தோம்!

அன்புகலந்த வரிகளிலே

கடிதம் எழுதினோம்! - இன்று

முன்பிருந்தும் ஒருவார்த்தை

பேசமறுக்கிறோம்!

குடும்ப உறவை வலுப்படுத்த

ஒன்றுகூடினோம், - இன்று

ஒன்றுகூடி அமர்ந்தாலும்

பிரிந்து வாழ்கிறோம்!

இளமை கரையுமுன்பே

இனிதுவாழ்வோம்! - என்றும்

வளமைதரு மெய்யுலகில்

வலம்வருவோம்!

பொய்யான உலகத்தைப்

புறந்தள்ளுவோம்! - என்றும்

மெய்யான வெளிச்சத்தில்

வாழ்வைத் தேடுவோம்!

அனுபமா உதிவ்

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்