நித்திலனுக்கு இரண்டு நாள்களாய் வேலைச்சுமை கூடுதலாய் இருந்தது. இரவு வெகு நேரம் கழித்து அறைக்குத் திரும்புவதும், விடிந்தும் விடியாமல் ஓடுவதுமாக இருந்ததில் அவனின் அன்றாடம் கொஞ்சம் மாறிப்போய் தற்போதுதான் இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கிறது.
அன்று வழக்கம்போல மாலை அலுவலகம் முடிந்து வருகையில் எப்போதும் உணவருந்தும் காப்பிக்கடையில் அமர்ந்தான். அதுவொன்றும் உணவங்காடியில்லை. அங் மோ கியோவின் ஓரத்தில், செங் சான் பகுதியிலிருக்கும் பழைய வீவக அடுக்குமாடி வீடுகளின் தரைத்தளத்தில் இயங்கும் கடை. அதிகம் ஆட்களுமில்லாமல், கடைகளுமில்லாமல், கடைக்காரர்களுக்கு லாபம் இருக்குமா என்று கூட சில சமயம் நினைக்கத்தோன்றும், வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே இயங்கும் ஒரு சாதாரண உணவங்காடித் தொகுதி. அவன் இந்தப் பகுதிக்குக் குடியேறிய சில மாதங்களாக இரவுணவு இங்கு என்பது வழக்கமாகவும் வசதியாகவும் இருந்தது.
அங்கு வந்ததும் அங்கிள் நினைவு வந்தது. அவரை நித்திலன் முதன்முதலில் கவனித்ததும் இங்குதான். அவன் எப்போதும் தானுண்டு தன் கைபேசியுண்டு என்று இருப்பவன். செவிக்கும் கண்ணுக்கும் உணவிட்டுக்கொண்டே உண்பதால் பெரும்பாலான நாள்கள் அவன் நாக்குச் சுவை உணர்ந்ததேயில்லை. கைப்பேசி முற்றிலும் உயிரற்ற ஒரு நாளில் தான் அவன் அவரைக் கவனித்தான்.
முதலில் பார்க்கையில் யாருக்காகவோ காத்திருக்கிறாரோ எனத் தோன்றியது. உலகெங்கிலுமுள்ள வயது முதிர்ந்தவர்கள் தோற்றம் எப்படியிருக்கும் எனப் பட்டியலிட்டால் வரும் நரைத்த தலை, சுருங்கிய தோல், மெலிந்த தேகம், லேசான வளைந்த முதுகு, மெல்லிய நடுக்கத்துடன் கைகள். கண்களை மூடும் கீழிறங்கிய இமைகள், தளர்ந்த கன்னக்கதுப்புகள், வளைந்த முதுகு என அத்தனையும் பொருந்திப்போகும் தோற்றம்.
கீழிறங்கிய தோள்களிலிருந்து இறங்கியிருக்கும் பொத்தான் வைத்த அரைக்கைச் சட்டை, முழுக்கால் பேண்ட், வார் வைத்த செருப்பு, மணிக்கட்டில் கடிகாரம், சட்டையிலிருக்கும் பாக்கெட்டிலிருந்து லேசாக வெளியே தெரியும் பேனா ஆகியவை எண்பதுகளின் இறுதியிலேயே அவரை நிறுத்திவைத்திருந்தது.
அவன் வந்த நாளிலிருந்து எப்போதும் முழுவதுமாய் எல்லா மேஜைகளும் நிரம்பி அவன் பார்த்ததேயில்லை. அங்கிளுக்கென்று ஆஸ்தான இடமிருந்தது. இடதுபக்கக் கடைசி மேஜையில் மட்டுமே அமர்ந்திருப்பார். குத்தகைக்கு எடுத்ததுபோல. நல்ல இடம். அங்கிருந்து பார்க்கையில் வளைந்து செல்லும் சாலை, அதன் குறுக்கே பக்கத்து புளோக் அருகிலிருக்கும் குழந்தைகள் விளையாட்டுத்திடல், சாலையில் செல்லும் வாகனம், பாதையில் நடக்கும் மனிதர்கள், கடைத்தொகுதியிலிருக்கும் தொலைக்காட்சி என முந்நூறு டிகிரி கோணத்தில் அனைத்தும் தெரியும்.
அங்கிள் எதுவும் கேட்காமலேயே காப்பிக்கடை அங்கிள் அவர் மேஜையில் கண்ணாடிக்குவளையில் காப்பி ஓ கோசோங் வைத்தார். எகனாமிக் ரைஸ் கடை ஆண்ட்டி தட்டில் சோற்றினை வைக்கத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் காயும் கறியும் மாறிக்கொண்டிருக்கும். யாரும் யாருடனும் எதுவும் பேசாமலேயே அங்கொரு உரையாடல் நிகழ்ந்துகொண்டிருந்தது. அதைக் கவனிப்பது நித்திலனுக்கு தினமும் பொழுதுபோக்காக இருந்தது.
தன்னிடத்திலிருந்து தெரியும் சாலை வளைவில் இருக்கும் மரத்தினை, சில நேரம் தன் சுருக்கம் நிரம்பிய கைகளை, யாரும் பார்க்காவிட்டாலும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித் திரையினை, அவர் எதிரிலிருக்கும் காப்பிக்கோப்பையை உற்றுப் பார்த்தபடியிருப்பார்.
பெரும்பாலும் மூத்தவர்கள் ஒரு குழுவாக அமர்ந்து உணவருந்துவது வழக்கம். அவர் யாருடனும் பேசிப் பார்த்ததில்லை. இதெல்லாம் நித்திலனுக்கு வியப்பாக இருந்தது. அவன் உணவருந்தும் நேரத்திற்குத் துணையாகவும்தான்.
அங்கிள் அதற்குப்பின் அடிக்கடி நித்திலனின் பார்வையில் பட்டார். அவனுக்கே அதன் காரணம் புரியாமல் இருந்தது. காலையில் அலுவலகம் கிளம்புகையில் அவரைப் பேருந்து நிறுத்தத்தில் பார்ப்பான். அந்தச் சாலையில் ஒரே ஒரு துணைப் பேருந்து மட்டுமே இயங்கும். ஆனால் ஒரு நாளும் அதில் ஏறியதில்லை. அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி பேருந்து வருவதையும் அதில் பயணிகள் ஏறுவதையும் பார்த்துக்கொண்டேயிருப்பார்.
அதன்பிறகு செங் சான் ஈரச்சந்தையில் மூன்றாவது வரிசையிலுள்ள மீன் கடைமுன்பும், பக்கவாட்டிலுள்ள முட்டைக்கடை முன்பும் பார்த்தான். கையிலிருக்கும் தடியை ஊன்றி நின்றுகொண்டிருப்பார். கவனித்த வரையில் எதுவும் வாங்குவதாகவும் தெரிந்ததில்லை. அவர் யாருடனும் பேசியும் பார்த்ததில்லை. சில நண்பகல் பொழுதுகளில் எதாவது அடுக்குமாடிக் கீழ்த்தளத்திலிருக்கும் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் அவரின் கண்கள் தொடுவானத்தை வெறித்தபடியிருக்கும்.
இப்போதெல்லாம் நித்திலனுக்கு எங்கு பார்த்தாலும் அங்கிளாகத்தான் தெரிந்தது. பேருந்து நிறுத்தம், சாலை, மார்க்கெட், தரைத்தளத்தில், இரவு எப்படியும் காப்பிக் கடையில் என அறையிலிருந்து இறங்கினால் அவரைப் பார்க்காமல் மீண்டும் அறைக்குத் திரும்பவதில்லை என்றானது.
அறையைப் பகிர்ந்துகொள்ளும் கணேசனிடம் இந்தத் தற்செயலைச் சொன்னதும்,
“கேள்விப்பட்டிருக்கியா நித்திலா! சிகப்பு காரை மனசுல நெனச்சுட்டே இருந்தா ரோட்ல போறது பூராவும் சிவப்புக் காரா தெரியுமாம். அது மாதிரி அந்தப் பெருசு உன் மனசுல நங்கூரமடிச்சிருச்சுது போல. அதான் பார்க்குற தெசைலல்லாம் தெரியுது உனக்கு,” என்று சிரித்தான்.
அன்று அதிசயமாய் வழக்கத்தைவிடக் கொஞ்சம் கூடுதல் மேஜைகள் நிரம்பியிருந்தன. அங்கிள் அவரின் பீடத்தில். நித்திலன் அவரின் இருக்கையையொட்டி அடுத்த மேஜையில் அமர்ந்தான். அவர்களின் முதுகுகள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன. அவன் சிக்கன் ரைஸை வயிற்றுக்கும், கொரியன் நெடுந்தொடரை காதுக்கும், கண்ணுக்கும் வழங்கிக்கொண்டிருந்தான்.
“இப்பல்லாம் ரொம்ப புழுக்கம் அதிமாயிட்டு... சாயங்காலம்கூட எப்படியிருக்கு பாரு..”
மெல்லிய குரல் கேட்டது. மென்மை என்றால் அருகழைத்து அடுத்தவர்க்குக் கேட்காமல் காதில் ரகசியம் சொல்வதுபோல.
“மனப்பிரம்மையாக இருக்கும்” உணவில் கவனம் செலுத்தினான்.
மீண்டும் எதோ கேட்டது. உற்றுக் கேட்டதில் குரல் இடது பக்கத்திலிருந்து வந்தது. மெல்ல இயல்பாகத் திரும்புவது போல தலையை சுற்றும் முற்றும் திருப்பினான். சிக்கன் ரைஸ் கடை ஆண்ட்டி வெங்காயத்தாள்களை நறுக்கிக்கொண்டிருந்தார்.
காப்பிக்கடை அங்கிள் குளிர்பான ‘டின்’களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த ‘எகனாமிக் ரைஸ்’ கடையில் ஆட்கள் இல்லை. இன்னொரு கடை சில மாதங்களாகவே இயங்குவதில்லை. தொலைக்காட்சியில் யாரோ யாரையோ சீனத்தில் கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தார். முதியவர், அவர் முன் வட்டமேஜையில் வழக்கம்போல ‘கோபி ஓ கோசோங்’. தட்டில் ‘எகனாமிக் ரைஸ்.’ சோறு, ஒரு காய், ஒரு இறைச்சி. மூன்று காலி நாற்காலிகள். அவ்வளவுதான்.
“இதென்னடா வம்பு. கணேசன் சொன்னது சரிதானோ. இப்ப அவர் பேசுற மாதிரியெல்லாம் கற்பனை பண்ணிக்கறேனோ?” என எண்ணம் நித்திலனுக்கு ஏற்பட்டது.
மீண்டும் குரல் கேட்டது போல இருந்தது. சதை தொங்கியிருந்த அவரின் கழுத்து எதையோ ஆமோதிப்பது போல மெல்ல ஆடியது. எதிரிலிருக்கும் யாரோ ஒருவரின் பேச்சுக்கு ஆமோதிப்பது போல. மனநலம் பிழன்றவரோ எனும் ஐயத்தோடே கிளம்பிவிட்டான்.
மறுநாள் அவர் அதே இருக்கையில் அதேபோல அமர்ந்திருந்தார். நித்திலனுக்கு சின்ன ஆர்வம் ஏற்பட்டது. உணவை வாங்கிக்கொண்டு நேராக அவர் முன் சென்றான்.
“அங்கிள்! கேன் ஐ சிட் ஹியர்?”
அவருக்குப் புரியவில்லை. தன்னிடம் தானா எனக் கேட்பதுபோல சைகை செய்தார். சில வினாடிகளுக்குப் பிறகு ஆமோதித்து தலையசைத்தார். பின் வழக்கம்போல அவர் யோசனையில் மூழ்கினார்.
அவர் வாய்க்குள்ளேயே முனகுவது தெரிந்தது. யாரோ நெருக்கமானவரிடம் பகிர்வது போல எதையோ ரகசியமாக சொல்லிக் கொண்டிருந்தார். பதில்களுக்கான இடைவெளிகள், ஆமோதிப்புகள், மிக மெல்லிய தலையசைப்புகள், நீண்ட அமைதி என மாறி மாறித் தொடர்ந்தது.
அவனுக்கு அங்கு அமர்ந்து உணவருந்த அசவுகரியமாக இருந்தது. யாரோ இரண்டு பேருக்கு இடையில் அமர்ந்திருப்பது போல. ஆனாலும் மனத்தினுள் சற்று அச்சமாக இருந்தது.
“ஃபிஷ் கரி ஹியர் குட், ரைட் அங்கிள்” அவனாகவே முன் வந்து பேச்சைத் தொடங்கினான்.
“யா லா! பட் பிஃபோர் ஒன் வெரி நைஸ் ஆங்.. மை வைஃப் டெல்ஸ் ஆல்வேஸ்,” என்று மீண்டும் அமைதியானார்.
அவரின் அமைதியைக் கெடுக்க விரும்பாமல் சாப்பிட்டுக் கிளம்பிவிட்டான் நித்திலன்.
அன்றிலிருந்து தொடங்கியது காலையில் பார்க்கும் போதெல்லாம் சின்ன சிரிப்பு, ஹலோ, குட் மார்னிங் அங்கிள் எனத் தொடர்ந்தான். அவரிடமிருந்து பதிலாய் முழுவதும் சுருக்கம் படர்ந்திருந்த இதழ்களிலிருந்து சின்ன முறுவல் மட்டுமே வெளிப்படும்.
எப்போதாவது பேசுவார். அதுவும் மிகக் குறைவாகவே. பொதுவான விஷயங்கள் தான்.
“இப்பெல்லாம் ரொம்ப புழுக்கம் அதிமாயிட்டு... சாயங்காலம் கூட எப்படியிருக்கு பாரு”
“ஆமா அங்கிள்… இப்பல்லாம் எப்ப வெயில் அடிக்கும் மழை பெய்யும்ன்னு கணிக்கவே முடியல.”
“ஆமா! பெரு நகரத்து வளர்ச்சில சில விஷயங்கள் அப்படித்தான் மாறிட்டேயிருக்கும். இப்போ அவென்யூ 3 ரோட்டைப் பார்த்தல்ல... எப்படி மாத்திக்கிட்டேயிருக்காங்க”
“ஆமா அங்கிள்... கிராஸ் ஐலேண்ட் லைனுக்காக திடீர் திடீர்ன்னு ரோடு, பஸ் ஸ்டாப், சிகன்ல் எல்லாம் மாத்திட்டேயிருக்காங்க. அங்க மலை மாதிரியிருந்த பூங்காவையே மறைச்சுட்டாங்க”
“நான் இந்த வீடுங்க கட்டி முதன்முதல்ல வந்தவங்கல்ல ஒருத்தன். கம்போங், ரப்பர் தோட்டம் எல்லாம் பார்த்தவன். இப்போ எல்லாமே மாறிடுச்சு. இந்த புளோக்கெல்லாம்கூட என்பிளாக் பண்ணிட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல இதுவும் மாறிடும். அப்புறம் மறைஞ்சிடும்.”
அவ்வளவுதான். அதிகமாகப் பேசிவிட்டதால் மிக நீண்ட பெருமூச்சுடன் மௌனத்தில் மூழ்கினார்.
அந்தப் பகுதியில் எப்போதும் நிலவும் அமைதியைக் குலைக்காதவாறு அப்பகுதிக்கு மட்டும் இயங்கும் துணைப்பேருந்து, அலுவலகம் முடிந்து வீடு திரும்புபவர்களை நிறுத்தத்தில் இறக்கிவிட்டு நகர்ந்தது.
“பாய லேபாருல ஏறுமே அந்தப் பொண்ணுக்கு என்ன குழந்தைன்னு தெரியல.” அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாரா அல்லது யாரிடமாவது சொல்கிறாரா என்பது புரியாமல் விழித்தான்.
“என்ன அங்கிள்?”
அவன் குரல் திடீரென்று அவர் சிந்தனையைக் கலைத்தது.
“30 வருஷம் டிரைவரா இருந்தேன். 22 ரூட். இப்போ பஸ் பார்த்ததும் ஞாபகத்துக்கு வந்துடுச்சு. அப்போ ஒரு பொண்ணு வருவா.. ஒரே நேரம், அதே ஸ்டாப்... காலைலயும் சாயங்காலமும்... மாசமா இருந்தா... அப்புறம் திடீர்ன்னு வரல... அது நெனவுக்கு வந்திடுச்சு”
“நீங்க அப்பவே கேட்கலியா?”
“அப்போ இருந்த பரபரப்புல அதெல்லாம் தோணியிருக்கான்னு கூட தெரியல. பல முகங்கள் அப்படித்தான் திடீர்ன்னு நம்ம வாழ்க்கைல வரும். அப்புறம் காணாமப் போயிடும். அப்புறம் மறந்தே போயிடும். இப்போ முழு நேரமும் சும்மா இருக்கும் போது மூளை பழசையெல்லாம் தோண்டி எடுக்குது”
மீண்டும் தொடுவானத்தை நோக்கிய தன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவரைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லை. எதோ இப்போதுதான் சில நாள்களாக விலக்கம் குறைந்து இணக்கம் கூடியிருக்கிறது. இரண்டு வரிகள் கூடுதலாகப் பேசுகிறார்.
“இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பியிருக்கான் பேரன்.”
“அப்படியா... உங்க பிறந்த நாளா? வாழ்த்துகள் அங்கிள்”
“தெரியலை... நினைவில்லை...” அந்தக் குரலிலிருந்து எவ்வித உணர்ச்சியையும் அவனால் கண்டறிய முடியவில்லை.
“உங்க பேரன், குழந்தைகள் எல்லாம் எங்கிருக்காங்க?”
“இங்கதான் இருக்காங்க... திடீரென்று இதுபோல எப்பயாவது அவங்களுக்கு என் ஞாபகம் வரும்போது பேசுவாங்க”
“என்னது... எப்பயாவது பேசுவாங்களா?” ஆச்சரியமாக இருந்தது. தினமும் ஒருமுறையாவது பேசவில்லையென்றால் பிலாக்கணம் வைக்கும் அம்மா நினைவுக்கு வந்தாள்.
“நான் வேலை, வீடு, குடும்பம்ன்னு பரபரப்பா இருந்தப்ப என் பெத்தவங்களைப் பார்க்க முடியல. இப்ப அவங்களோட முறை. எனக்கு வருத்தமில்லை...”
அவரின் தனிப்பட்ட விஷயங்களை அறியும் ஆர்வம் இருந்தாலும் அதற்குமேல் மூக்கை நுழைப்பது நாகரிகமற்றது என அமைதிகாத்தான்.
மாலையின் மஞ்சள் வெயில் கவியத்தொடங்கியிருந்தது. வண்ணம் வெளுத்துப் போயிருந்த பழைய புளோக்குகளின் சுவர்களுக்கு அந்த வெயில் பழைய திரைப்படங்களில் வரும் ஈஸ்ட்மென் நிறத்தை அளித்தது.
‘சிக்கன் ரைஸ்’ கடை ‘ஆண்ட்டி’ வெங்காயத்தாள்களை நறுக்கிக்கொண்டிருந்தார். காப்பிக்கடை அங்கிள் குளிர்பான ‘டின்’களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த ‘எகனாமிக் ரைஸ்’ கடையில் ஆட்கள் இல்லை. இன்னொரு கடை சில மாதங்களாகவே இயங்குவதில்லை. தொலைக்காட்சியில் யாரோ யாரையோ சீனத்தில் கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இன்றுடன் நான்கு நாள்களாகிவிட்டது அங்கிளைப் பார்த்து. அவனும் தினமும் வருவதும், கூடுதலாய் காத்திருப்பதுமாக இருந்தான். அவருக்கு என்னவானது? எங்கு போனார் எனப் பதற்றம் அதிகரித்தது.
“அங்கிள்! இங்க ஒருத்தர் தினமும் வருவாரே? அவர் எங்க காணோம்?” காப்பிக்கடை அங்கிளைக் கேட்டான்.
“இங்க தினமும் நிறைய பேர் வர்றாங்க... யாரைக் கேட்கறீங்க?”
“அந்த இடது பக்க டேபிளில் இருப்பாரே எப்பவும்... நீங்க காப்பி ஓ கோசோங் குடுப்பீங்களே? அவரை சில நாளாக் காணோமே. அதான் கேட்டேன்”
“ஓ... அவரா... தெரியலையே” மிகச் சாதாரணமாகச் சொன்னார்.
“அவரப் பத்தி எதாவது தெரியுமா? பேரு? எங்கருக்காருன்னு ஏதாச்சும்”
“பேரெல்லாம் நினைவில்ல... இதே புளோக்தான் 11 மாடியோ 12வது மாடிலயோ இருக்கறதா நினைக்கிறேன். சரியா தெரியல,” எனச் சொல்லிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தார்.
இத்தனை நாள் பேசியதில் அவர் பெயரைத் தன்னிடம் சொல்லியிருக்கிறாரா என யோசித்தான். தானும் ஒருமுறைகூடத் தன் பெயரைச் சொன்னதில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. அவனுக்கு அவர் அங்கிள். அவ்வளவுதான்.
என்னென்னவோ யோசித்தபடி 11ஆம் மாடிக்குச் சென்றுவிட்டான். அந்த நீண்ட தாழ்வாரத்தில் ஒவ்வொரு வீட்டின் முன்னும் சில வினாடிகள் தயங்கித் தயங்கி நின்றான். சில வீடுகள் திறந்திருந்தன. வாசலில் நிறைய செருப்புகள், சைக்கிள், விளையாட்டுப் பொருட்கள் இருந்த வீடுகளைத் தவிர்த்தான். அனைத்து வீடுகளையும் ஒருமுறை நோட்டமிட்ட பின், குருட்டுத் துணிவில் மின்தூக்கியில் இருந்து வலதுபுறமாக மூன்றாவது வீட்டின் முன் நின்றான். வாசலில் ஒரு ஜோடி செருப்பு. அந்தக் கதவும் ஜன்னலும் இவ்வீடு கட்டப்பட்ட காலத்திலேயே உறைந்திருந்தது. உள்ளே மிகச் சன்னமான விளக்கொளி வழிந்துகொண்டிருந்தது ஜன்னல் இடைவெளி வழியே தெரிந்தது. அழைப்புமணியில்லை. அந்தக் கதவினைத் தட்டி ஓசையெழுப்பினான். உள்ளிருந்து மெல்லிய காலடி சத்தம் கேட்டது. அறைக்கதவு திறந்து அவனைப் பார்த்த வியப்பு அவர் முகத்தில் தெரிந்தது.
என்ன என வினவுவது போல புருவத்தை உயர்த்தினார்.
“உங்களை சில நாள்களாகப் பார்க்கலியே... அதான் தேடி வந்தேன் அங்கிள்” என்று நித்திலன் சிரித்தான்.
“என்னைப் பார்க்கவா?... எதற்கு” அவருக்கு இன்னும் நம்பமுடியவில்லை.
“உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ள...”
இருவரும் புன்னகைத்தனர்.
(சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் “முத்தமிழ் விழா 2026“ சிறுகதைப் போட்டி - பொதுப்பிரிவில் முதல் பரிசு பெற்ற கதை)
ப்ரியதர்ஷினி கஜேந்திரன்
