சாளரச் சங்கதிகள்

சாளரச் சங்கதிகள்

தேன்மொழி அசோக்

11 Oct 2026 - 7:01 am

9 mins read

சென்ற வாரத்தின் மிச்ச வேலைகள் மேஜையில் அங்குமிங்கும் கலைந்து கிடக்கும் கோப்புகளிலிருந்து எட்டிப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தன. வாரயிறுதியில் அனுபவித்த உறக்கம் கண்களைவிட்டு நீங்க மறுத்து காதல் பார்வை பார்த்தது மறுபக்கம். அதனைப் புறந்தள்ளிவிட்டு வேலைதான் முதல் மனைவிபோல் என்பதனை நெஞ்சில் ஏற்றிக்கொண்டு ஆயத்தமாக வேண்டியிருந்தது.

திங்கட்கிழமை கலவரத்தால் அலுவலகமே தலைகீழாய் இருந்தது. முதல் ஆளாய் உள்ளே நுழைந்ததால் விளக்குகளால் இருளை விரட்டிவிட்டுக் காற்றை உள்ளே நிரப்ப சாளரங்களைத் திறப்பதும் கடமையாகிவிட்டது.

ஒரு பக்கம் தொலைபேசி ஓயாமல் ஒலித்துக்கொண்டேயிருந்தது. மறுபக்கம் ஆர்டர்களுக்கு பதிலளிக்காமல் புலனத்தில் ஏராளமான குறுஞ்செய்திகள் முன்வரிசையில் நின்றன. வந்திருக்கும் குறுஞ்செய்திகளைக் கீழிருந்து மேலாகத் திறப்பதா இல்லை மேலிருந்து கீழாகத் திறப்பதாயெனப் புரியாமல் விட்ட பெருமூச்சால் மேஜையிலுள்ள காகிதங்கள் சிறகடித்தன.

அறையின் கதவு திறக்கும்போதெல்லாம் மனம் படபடத்தது லிபியனுக்கு மட்டும்தான் கேட்டது.

“மேலாளர் வருவதற்குள் ஓரளவிற்காவது கலைந்து கிடக்கும் கோப்புகளை சீர் செய்தாக வேண்டும்”. அப்போதுதான் வேலைகளின் நிலையைக் கேட்கும்போது தத்துபித்தென்று உளறாமல் கூற முடியும்.

வாடிக்கையாளர்கள் கதவைத் திறப்பதும் மூடுவதுமாக இயங்கிக்கொண்டே இருந்தனர். வரும் அவர்களுக்கு வேண்டியவற்றைச் சரியாகப் பார்த்து வெட்டிக் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். அவர்களைப் புரிந்து அவரவர் தேவைக்கேற்றவாறு அவர்களைக் கையாளுவதே மிகப் பெரிய வேலை. விண்டோ ஃபிலிம்தான் அவர்களின் முதன்மையான வியாபாரம்.

இரு வெவ்வேறு முறையில் விநியோகம்.

ஒன்று ஃபிலிமாக மட்டும் விநியோகம் செய்யலாம். மற்றொன்று அவர்கள் கேட்குமிடத்திற்குச் சென்று அவர்கள் தேவைக்கேற்ப பொருத்தித்தரும் முறை.

முதலாவதாகக் கூறியதில், வாடிக்கையாளர்கள் வந்தால் தேவையான அளவை வெட்டிக்கொடுத்து அனுப்பி விடலாம். அதே இரண்டாவதாகக் கூறியதில் முதலில் அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு ஆட்கள் சென்று அவர்களது கண்ணாடிகளை அளந்து வரவேண்டும். பிறகு அவர்களுக்குத் தேவையான ஃபிலிம்களோடு சென்று ஒட்டிக் கொடுத்து வர வேண்டும். இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்வது பெரும் சவாலாக இருக்கும்.

அன்று மூன்று இடங்களுக்கு வேலையாட்கள் சென்றிருந்தனர். பத்து மணியானதும் தேநீர் அருந்த லிபியன் கிளம்பினான். யாரோ அவனது கையைப் பிடித்து இழுப்பதுபோல் தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்தபடி நாற்காலியில் அமர்ந்தான்.

“மனதிற்குள் தேநீர் குடித்தது மாதிரிதான். அதை அருந்தியாவது தூக்கப் பிசாசை விரட்டலாமென்றால் அதற்கும் ஆப்பு” என்று நினைத்துக் கொண்டான். என்னதான் காதல் பார்வையாக இருந்தாலும் நேரங்கெட்ட நேரத்தில் வந்தால் அது பிசாசு மாதிரித்தான்.

“ஹலோ..” என்றான்.

அந்த முனையிலிருந்து வணக்கம்கூட இல்லாமல், பற்றியெரியும் நெருப்பு விடாமல் வெடிப்பதுபோல “என்னவாயிற்று? ஏன்? இன்னும் உங்கள் ஆட்கள் வேலைக்கு வரவில்லை?” என்று கத்தினார் ஒரு சீனர்.

உணர்ச்சிவசப்பட்டு பதிலுக்கு நாமும் கத்தினால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. அவர்கள் கத்தும் இடத்தில் இருக்கின்றனர். நாம் பதில் சொல்லும் இடத்தில் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டே, யார்? என்ன? என்று கேட்டபோதுதான் லிபியனுக்குப் புரிந்தது அவர் குறிப்பிட்ட இடத்திற்குப் பதிலாக வேறு இடத்திற்கு வேலையாட்களை அனுப்பியது.

பதற்றத்துடன் “மன்னித்துவிடுங்கள், எங்கள் வேலையாட்கள் வேறு ஓர் இடத்தில் உள்ளனர். இப்போது அங்கு வர இயலாது. வேண்டுமானால் நாளை இதே நேரத்திற்கு அங்கு அனுப்புகிறேன்,” என்று சமாளித்தார் லிபியன்.

எதிர் முனையிலிருந்த அந்த வாடிக்கையாளர் அதற்கு உடன்படவேயில்லை.

“உடனே மைக்கேலை அனுப்புங்கள். இன்றே அந்த வேலையை முடிக்கச் சொல்லுங்கள்” என்றவுடன் மயான அமைதியாகிவிட்டது.

“என்ன இந்த ஆள் சொன்னதையே சொல்கிறார்”.

இவர் மூலம் மாதத்திற்கு ஒரு வேலை கிடைக்கிறதே என்று பார்த்தால் பொறுமைக்கு அளவேயில்லாமல் செய்துவிடுவார்போல.

‘இன்றே முடிக்காவிட்டால், என்ன இவர் செய்யும் கள்ளக்கடத்தல் தொழில் ஊருக்கே தெரிந்துவிடுமோ?’

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுத்தானே ஆவான். எல்லா வேலையும் என்றைக்கோ ஒரு நாள் வெளிச்சமாகத்தானே போகிறது?

“அதென்ன எல்லா மாதமும் மைக்கேல்தான் வரவேண்டும் என்கிறார். மைக்கேல் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?”

“நிர்வாகம் செய்வதே நான்தான். யாரை எங்கு அனுப்ப வேண்டுமென்று எனக்குத் தெரியாதா என்ன? இவர் என்னவோ எனக்கு அதிகாரம் செய்கிறாரே” என்று புலம்பியபடி மைக்கேலுக்குக் கூப்பிட்டார்.

மறுமுனையில் மைக்கேல் பேசியதும், “கொஞ்சம் குழைந்தபடி..மைக்கேல்… திடீரென ஒரு வேலை..அது ரொம்பச் சிறிய வேலைதான்.. உன் திறமைக்கு அதெல்லாம் தூசிமாதிரி”..

சரி சரி என்னனு சொல்லுங்க முதலில்.

இல்லை, நீ மட்டும் அந்த வேலையை முடித்துவிட்டு வந்துவிடு, மற்ற இருவரும் இப்போது செய்துகொண்டிருக்கும் வேலையை முடிக்கட்டும் என்றதும்

மைக்கேல் வேலையிடத்தில் ஒரு காலண்டரின் காகிதங்கள் பறந்து கொண்டிருந்தன. அதில் பதினைந்து என்றிருந்தது அதைப் பார்த்தபடிதான் பேசிக் கொண்டிருந்தான்.

“சரி முகவரியைக் குறித்துக்கொள்” என்றதும்

“எங்கே புக்கிட் பஞ்சாங் செல்ல வேண்டுமா?”

“ஆமாம்”

“எது அந்த லீ என்பவர் வீட்டுக்கா?”

“அதெப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரியும்” என்று லிபியன் ஆச்சரியமாய்க் கேட்டார்.

“அதுவா எல்லாம் ஒரு கணிப்புதான்”

“நீ ரொம்ப புத்திசாலி மைக்கேல். கற்பூரம் மாதிரி பற்றிக்கொள்கிறாய். சரி நான் ஆர்டரை அனுப்புகிறேன். தேவையான விண்டோ ஷீட்டை கத்தரித்து எடுத்துக்கொள்.”

அதெல்லாம் தெரியும். நானே எடுத்துக்கொள்கிறேன் என்றான். “நான் என்ன முதல் முறையா போகிறேன்? புதிதாக அளவையெல்லாம் பார்க்க!”… என்று கைப்பேசியைத் துண்டித்தான் மைக்கேல்.

“ஒரு வேலை ஆவதற்கு இவனையெல்லாம் எப்படிப் புகழ வேண்டியிருக்கிறது.

கழுதைக்கு வாக்கப்பட்டால் உதை வாங்கித்தானே தீர வேண்டும் வேறு வழியில்லையே”

“சரி தூக்கப் பிசாசை விரட்ட ஓடிவிடுவோம்” இல்லையெனில், அது நம்மைக் கொன்று தின்று வேடிக்கை பார்த்துவிடும் என்று மின்னல் வேகத்தில் படிக்கட்டில் இறங்கி கடைக்கு ஓடினான் லிபியன்.

மைக்கேல் உடனே கிளம்பி தன் வண்டியைப் புக்கிட் பஞ்சாங்கில் அந்த வீட்டில் நிறுத்தினான்.

வீட்டு மணியை அடித்தபோது எப்பொழுதும்போல் அதே மூதாட்டி கதவைத் திறந்தார்.

“அவருக்கு சிரிக்கவும் தெரியாது, பேசவும் தெரியாது. ஒரு இயந்திரத்தைப்போல் இயங்குவார்.”

ஆனால்…

காலணியை சரியாக விடாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போட்டால் கோபத்தில் கொந்தளிப்பார். வேலையை முடித்துக் கிளம்பும்வரை சீன மொழியில் ஏதோ வசை பாடுவார்.

“இன்று அவரின் வசையிலிருந்து தப்பித்தாயிற்று.”

அந்த மூதாட்டி கழுத்தை ஒட்டகச்சிவிங்கிபோல நீட்டி அவனது காலணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். மைக்கேல் உள்ளே வந்ததும் கதவு பூட்டும் சத்தம் கேட்டது. பிறகு பாட்டி தன் அறைக்குள் சென்று விட்டார்.

வேறு ஓர் ஆடவர் கூன் முதுகோடு இரண்டு கால்களில் நடந்து வந்து பாட்டியை வெளியே வரச் சொன்னார்.

பாட்டி எதுவும் பேசாமல் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை நிறுத்திவிட்டு அங்கிருந்த தண்ணீர் போத்தலை எடுத்துக்கொண்டு இரண்டு கால்களால் நடந்து நிமிர்ந்த நடையுடன் வெளியேறினார். பாட்டி இந்த வயதிலும் திடகார்த்தமாக இருப்பது மைக்கேலுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.

ஆடவர் வந்து அதே அறையில் அதே சாளரத்தைக் காட்டுவார் என்று மனதிற்குள்ளேயே காட்சியை ஓட விட்டான் மைக்கேல். அதில் கொஞ்சம்கூட பிசிறு இல்லாமல் அப்படியே நடந்தது.

“என்னதான் இவங்க பிரச்சனையா இருக்கும்? எல்லா மாதமும் இதே சாளரத்தில் வந்து ஸ்க்ரீன் ஒட்டுறோம். அதுவும் பிளேக் அவுட் எனப்படும் கருப்பு ஸ்க்ரீன். இது உள்ளேயிருந்து வெளியே எதையும் பார்க்க முடியாது அதேபோல வெளியே இருந்தும் எதுவும் தெரியாது. “

இதைப் ‘பிரைவசி விண்டோ’ என்றும் கூறுவர்.

அதோடு “இதை யாரோ கத்தி வைத்து சுரண்டி சுரண்டி வைத்திருப்பதுபோல் உள்ளது. அதுவும் கீழ்ப் பகுதி மட்டும்தான். எத்தனை முறை வந்துவிட்டோம் இது மட்டும் புரியவேயில்லையே!”

“என்னவாவோ இருந்துவிட்டுப் போகட்டும். நாம் நம் வேலையை முடிப்போம்,” என்று வேலை செய்யத் தொடங்கினான்.

வெளியே விளையாட்டு மைதானத்தில் ஒரே இரைச்சலாக இருந்தது. கோபத்தில் சடாரென இழுத்து சாளரத்தை மூடினான். அருகில் மேசையில் வைத்திருந்த புகைப்படம் ஒன்று கீழே விழுந்தது. பதற்றத்தில் இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்த சிலிகானை விட்டுவிட்டு விரைவாக அதை எடுத்து மேஜையில் வைத்தான்.

இப்படித்தான் “முதல் முறை வந்தபோது தாகத்திற்கு தண்ணீர் கேட்டான். அந்தப் பாட்டிதான் கொண்டுவந்து கொடுத்தார். தண்ணீரை அருந்திவிட்டு கை தவறி கோப்பையைக் கீழே போட்டுவிட்டான். பாட்டி படபடவென வெடிக்க ஆரம்பித்துவிட்டார். தெரியாமல் செய்துவிட்டேன் என்று சொல்வதையும் அவர் காதிலேயே வாங்கவில்லை. அதுதான் முதலும் கடைசியுமாக அந்த வீட்டில் அவன் நீர் அருந்தியது.”

“அதனால் உள்ளே நுழைந்ததிலிருந்து அவனுக்கு ஒரே படபடப்பாகவே இருக்கும்”.

அந்தப் புகைப்படம் அறைக்குள்ளேயே விழாமல் வெளியே விழுந்திருந்தால் சில்லுச்சில்லாய் சிதறியிருக்கும்.

“பின்ன பத்தாவது மாடியிலிருந்து விழுந்தால் என்ன மிஞ்சும்?”

உண்மையிலேயே அந்த அறை முதியவருடைய அறைபோலக் காட்சியளிக்காது. ஒரே நேர்த்தியும் ஒழுங்கும் இருக்கும். வைத்த பொருள் வைத்த இடத்திலேயே ‘அருங்காட்சியகம்போல்’ இருக்கும்.

பலமுறை அந்த அறைக்குள் சென்றதால் மைக்கேலுக்கு அந்தப் பாட்டி மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.

கீழே விழுந்த புகைப்படத்தில் ஒரு பெண் ஏதோவொரு விருது வாங்குகிறார். அவர் ஏதோவொரு பயிற்றுவிப்பாளர்போல தெரிந்தார். அவருடைய முகத்தில் ஆயிரம் புன்னகை மலர்கள் மலர்ந்திருந்தன.

அந்நேரம் பார்த்து அந்த ஆடவர் உள்ளே நுழைந்து “என்ன சத்தம்? வேலை முடிந்துவிட்டதா” என்றார் ஆங்கிலத்தில்.

“இன்னுமொரு ஐந்து நிமிடங்கள்” என்று கூறிவிட்டு,

அப்படியே கேட்டான்.

அது “ஏன் எல்லா மாதமும் ஒரே இடத்தில வேலை?”

“இதை யாரோ கிழித்து வைத்திருப்பதுபோல இருக்கிறதே” என்றான் மைக்கேல்.

‘முன்பே தயாரித்து வைத்த உணவை மேஜையில் பார்வைக்கு வைப்பதுபோல’ அதுவா…அவங்க என் அம்மா.

ஓ..

அவருக்கு ‘அல்சைமர்’ எனும் நோய்.

அடப் பாவமே..

“மறந்துவிட்டு இப்படித்தான் எதாவது செய்வார். வீட்டிற்குள்ளேயே வைத்து அவரைப் பாதுகாப்பதற்குள் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போல இருக்கிறது.

என்ன செய்வது பொறுத்துத்தான் போ வேண்டும் இல்லையா? என்றார்.

இப்போது மைக்கேலின் நினைவுப்பறவை கடற்கரை ஓரத்தில் கிடக்கும் மீனைக் கொத்திக்கொண்டு பறப்பதைப்போல முன்பு ஒரு நாள் நிகழ்ந்ததைக் கொத்திக் கொண்டிருந்தது.

ஒருமுறை வேலையை முடித்துவிட்டு செல்லும்போது, எதிர் வீட்டுக்காரரும் மின்தூக்கியில் அவனோடு வந்திருக்கிறார். அவனை ஒரு மாதிரியாகவே பார்த்தவர், ஆமா “அந்த வீட்டில் அப்படி என்னதான் இருக்கிறது?”

“யாரையும் உள்ளே சேர்க்கவே மாட்டார்களே?”

“நீ எதற்காக வந்தாய்?”

“நீ என்ன வேலை செய்கிறாய்?” என்று மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார். இது என்ன இவர் காவலர்களைவிட துருவித்துருவி விசாரிக்கிறார் “என்று நினைத்தபோது, தற்செயலாக அவனுடைய கைப்பேசி ஒலித்திருக்கிறது. அவரிடமிருந்து தப்பிப்பதற்காக வந்த மோசடி அழைப்பிடம் ஆழ்ந்த உரையாடலில் ஈடுபட்டுத் தப்பித்தது நினைவிற்கு வந்தது.

இருந்தாலும் “அதுவும் சரிதான் வேறு வழியில்லையே” என்று லீக்கு ஆறுதல் கூறினான்.

என்றபோதிலும் உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள்.

“அது எப்படி எல்லா மாதமும் பதினைந்தாம் தேதியே?,

மறதி என்று இவர் கூறுகிறார். இவர் கூறுவதற்கும் அவர் செயல்களுக்கும் கொஞ்சமும் பொருந்தவேயில்லையே,

அம்மா என்கிறார் இருவரும் பேசிக்கொண்டே பார்க்கவில்லையே?, அதோடு அந்தப் பாட்டி இவரை ஒரு ஆளாகக்கூட நினைப்பவர் மாதிரி தெரியவில்லை.”

இவ்வளவிற்கும் நடுவே அந்த ஆடவர் வந்து, “இனி எதாவது வேலை இருந்தால் உங்கள் ஆட்கள் வேறு யாரும் வரவேண்டாம். நீயே வா” என்கிறார்.

இது எல்லாமே இவனுக்கு குழப்பமாகவும் சந்தேகமாகவும் இருந்தது.

‘ஒரு வேளை இந்த இரண்டு பைத்தியங்களுக்கும் ஏற்ற பைத்தியமாக நான் தெரிகிறேனோ?’ என தன் மனசாட்சியிடம் கேட்டுக்கொண்டான்.

“இதுதான் சமயமென்று உண்மையைச் சொல்லிவிடத் துடித்தது அவன் மனசாட்சி.”

அதைப் பேச அனுமதிக்காமல், “நமக்கு இருக்கும் வேலையில் இதெல்லாம் நமக்கெதற்கு என்று நினைத்தபடி”

“ஓகே சார் இட்ஸ் டன்” என்று கூறிவிட்டு வெளியேறினான்.

ஆனால், அத்தனை கேள்விகளும் ஒன்றன் பின் ஒன்றாக பின் தொடர்ந்தன.

மின்தூக்கியில் நுழைந்தபோது அம்முறைதான் எதார்த்தமாக விளம்பரம் ஒன்று அவன் கண்ணில் தென்பட்டது.

“மாதந்தோறும் பதினான்காம் தேதி அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் நிகழும் ஸும்பா பயிற்சியைப் பற்றிய விளம்பரம். “உடனே மைக்கேல் கண் முன் சில காட்சிகள் விரிந்தன.

சட்டென தவறி விழுந்த புகைப்படம்.. விளையாட்டு மைதானத்தைப் பார்க்கும்படியான சாளரம்

இவன் வேலைக்கு வரும் தேதி.. அனைத்தையும் இணைத்து “எதோ கொஞ்சம் கொஞ்சம் புதிருக்கான விடையைக் கண்டுபிடித்ததுபோல் இருந்தது.”

ஆனாலும் “அந்த ஆடவரும் பாட்டியும் மட்டும் எதிலும் ஒட்டாமல் தனியாக மாபெரும் புதிராய் நின்றனர்.” மூதாட்டி ஸும்பா பயிற்றுவிப்பாளர் தோற்றத்தில் கையைக் காலை அசைத்தபடி நின்றிருந்தார் அரூபமாய்.

“ஒவ்வொருவருக்கும் ஒரு ரகசியம். அதனால்தானே அது ரகசியம்” என்றபடி வண்டியில் மீதமிருந்த விண்டோ ஷீட்டை பத்திரப்படுத்தினான் மைக்கேல். வண்டி மின்னல் வேகத்தில் பாய்ந்தது.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் “முத்தமிழ் விழா 2026“ சிறுகதைப் போட்டி - பொதுப்பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற கதை.

தேன்மொழி அசோக்

குறிப்புச் சொற்கள்
கதைகவிதைமுத்தமிழ்ஞாயிறு முரசு

தொடர்புடைய செய்திகள்