- சித்ரா ரமேஷ்
அஞ்சலை நீண்ட விடுமுறையின் போது அந்த புதன்கிழமை அதிகாலை இறந்து போனாள். அந்த வாரம் நீண்ட விடுமுறை வாரம். சீனப்புத்தாண்டுடன் நோன்புப் பெருநாளும் சேர்ந்து வர தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையாக அமைந்தது அந்த ஆண்டின் அதிர்ஷ்டம் என்று அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் பெருமகிழ்ச்சி. முதல் வார சனி. ஞாயிறையும் இணைத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட எட்டு நாட்கள் விடுமுறை. குதிரை ஆண்டு பிறக்கும் போதே அதிர்ஷ்டத்தை வாரிக் கொண்டு வருகிறது என்று நினைத்தார்கள்.
திருமதி அஞ்சலை ராமசாமி மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் ஈரறை வீட்டில் தனிமையில் இறந்துபோனாள்.
திருமதி அஞ்சலைக்கு லேசாக இடது காது கேட்காது. வலது கண்ணில் புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது அந்த அறுவை சிகிச்சையில் வலது கண் பார்வை குறைவு ஏற்பட்டது. நாள்பட்ட நீரிழிவு நோய் பாதிப்பு. தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். கண் பார்வைக் குறைபாட்டுக்கு சத்து மாத்திரைகள், நீரிழிவு நோய்க்கு மூன்று மாத்திரைகள் என்று கணக்கு வைத்துக் கொண்டு சாப்பிட்டுப் பழகிக் கொண்டாள். அஞ்சலைக்கு மற்ற பிரச்சினைகள் இருந்தாலும் மறதி மட்டும் வரவில்லை.
1972ஆம் ஆண்டுத் தீபாவளிக்கு வாங்கிய புடவையின் நிறம் (மயில் கழுத்து நிற பட்டுப்புடவை, கரு நீல பார்டர்) செய்த பலகாரங்கள்! எல்லாம் நினைவில் இருந்தன. நார்த் பிரிட்ஜ் சாலையில் இருந்த டயமண்ட் சினிமா தியேட்டரில் போய் ‘வசந்த மாளிகை’ படம் பார்த்ததுகூட நினைவில் இருந்தது.
எதற்கு இத்தனைத் தகவல்கள் தனக்குள் புதைந்து கிடக்கின்றன என்று தன்னைத் தானே திட்டிக் கொள்வாள். நினைவுகள் சில சமயம் இன்பத்தைத் தரும். பல சமயங்களில் துக்கத்தைத் தருகின்றன.
அவள் மகள் மணிமேகலை தெம்பனிசில் இருக்கிறாள். மகன் சிவா சைனா டவுன் வட்டாரத்தில் வசிக்கிறான். மார்சிலிங் வந்து அம்மாவைப் பார்ப்பது என்பது அவர்கள் இருவருக்கும் மலேசியா போவது போல். அஞ்சலைக்கு அவர்கள்தான் பிள்ளைகள். ஆனால் அவர்களுக்கு அஞ்சலை அம்மா இல்லை.
அஞ்சலைக்குப் பழகிய இடத்தை விட்டு வேறு எங்கும் போக விரும்பவில்லை. மார்சிலிங் கிராமமாக இருந்ததிலிருந்து அங்கே தான் அவள் வாழ்க்கை. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியுடன் ஜோகூரிலிருந்து வந்தாள். பன்னிரெண்டு வயதில் தன்னைவிட பதினைந்து வயது மூத்த ராமசாமியுடன் திருமணம். சின்ன புறாக்குஞ்சு போல் ராமசாமி பக்கத்தில் பட்டுப்புடவை, நெற்றிச் சுட்டி, கழுத்தில் அட்டிகையுடன் எடுத்துக்கொண்ட திருமணப்புகைப்படம் அவள் வீட்டு ஹாலில் பழுப்பேறி தொங்கிக் கொண்டிருக்கிறது.
ராமசாமிக்கு சரியான திருமண வயது. அதனால் அந்தப் புகைப்படத்தில் அவர் பார்ப்பதற்கு அந்தக்கால சினிமா நடிகர் போல் அங்கவஸ்திரம், பட்டு வேட்டியுடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். பன்னிரெண்டு வயதுக் குழந்தையை யாராவது திருமணம் செய்து அனுப்புவார்களா? அவளுக்கு ஒன்றும் புரியாத வயது. வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தாள்.
மாட்டுக்கொட்டாய் பள்ளிக்கூடம் என்று அந்தப் பள்ளியைச் சொல்வார்கள். ஐந்து வகுப்புகள் வரை தான் இருந்தன. இரண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள். பள்ளியைச் சுற்றி புல்வெளிகளும் பெரிய மைதானமும் இருந்தன. வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத போது எல்லாரும் புல்வெளியில் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள். அஞ்சலை அவ்வளவு வேகமாக ஓடுவாள். அவளை யாராலும் பிடிக்க முடியாது. எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டதும் அவள் பாட்டி வீராயி சும்மா இல்லாமல் “எங்க வீட்ல பொண்ணு இருக்கு! நல்ல மாப்பிள்ளையா இருந்தாச் சொல்லுங்க. இருவது பவுன் நகை செஞ்சு வெச்சிருக்கு. மத்தபடி மாப்பிள்ளைக்கு மோதிரம், காப்பு எல்லாம் போடறோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அஞ்சலை அந்த ஏற்பாடுகள் தனக்கு என்பது கூடப் புரியவில்லை. செம்பவாங்கில் வேலை செய்து கொண்டிருந்த ராமசாமி இரண்டு நண்பர்களுடன் சைக்கிளில் வந்தான். இரண்டு பைகளில் பூ, பழம், இனிப்புப் பலகாரங்களுடன் வந்து பெண் கேட்டான்.
“அம்மா, அப்பா சிதம்பரத்துல இருக்காங்க. விவசாயக் குடும்பம். நா பிழைப்பத் தேடி இங்க வந்துட்டேன். இங்கியே பொண்ணு கெடச்சா சரிதான் வந்தேன்” என்றான். பாட்டியும் அம்மாவும் எதோ ரகசியமாகப் பேசிக் கொண்டனர்.
பாட்டி தான் முதலில் பேசினாள்.” தம்பி வீடு தேடி வந்து பொண்ணு கேக்கறீங்க. ஆனா பொண்ணுக்கு ரொம்ப சின்ன வயசு. அதான் யோசனையா இருக்கு” என்றாள். ராமசாமிக்கு ஒன்றும் புரியவில்லை.
“பொண்ணு இன்னும் புஷ்பவதி ஆகலை. கல்யாணம் செஞ்சி வெச்சாலும் கொஞ்ச நாள் கழிச்சுதான் அனுப்ப முடியும்” என்றாள். ராமசாமிக்கு விவரம் புரியும் வயதுதான். தயங்கியபடி “பொண்ண நா பாக்கலாமா?” என்று கேட்டான். பாவாடை சட்டையுடன் வந்து நின்றவளை ஏற இறங்கப் பார்த்தான்.
பிறகு “ஆத்தா உங்க மனசுக்கு என்ன தோணுதோ அப்படிச் செய்யுங்க. எனக்குப் பொண்ண பிடிச்சிருக்கு! இப்ப உடனே இல்லாட்டாலும் ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வீங்க இல்ல. நா அப்ப வந்து சம்பந்தம் பேசறேன்” என்றான்.
அதைக்கேட்டு விட்டு பாட்டி “ஏன் தம்பி நீங்க ஏன் மூணு வருஷம் காக்கணும்? பிடிச்சுருக்கு இல்ல, இப்பவே கட்டிக் கொடுத்துடறோம். அப்புறம் கொஞ்ச நாளாகட்டும் உங்க வீட்டுக்கு அனுப்பற வேளை வந்துடும். அப்ப அனுப்பறோம்,” என்றாள்.
பதினான்கு வயதில் புஷ்பவதி ஆன பிறகுதான் செம்பவாங்கில் வாழத் தொடங்கினார்கள். ராமசாமி சின்னப் பெண் என்ற அனுசரணையுடன் நடந்து கொண்டான். அவளுக்கு சமைக்கத் தெரியவில்லை என்றதும் பக்கத்து வீட்டு மரியாளை வேலைக்கு வைத்தான். அவளுடன் சேர்ந்து சமைக்கக் கற்றுக் கொண்டாள். ஆனால் அவன் உடல் தேவைகளுக்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை.
அம்மாவும் அவ்வப்போது வருவாள். “சின்னப் புள்ளைக்கு ஊர்ல செய்யற மாரி சீக்கிரம் கட்டிக் கொடுத்துட்டேன். எல்லாம் எம் மாமியா செஞ்ச ஏற்பாடு! மாப்பிள்ளையப் பாரு! அய்யனார் கணக்கா வளந்து நிக்கறார். எம் புள்ளையப் பாரு சின்ன சொப்பு மாதிரி இருக்கா!” என்று புலம்பி விட்டு மரியாள் நன்றாகச் சமைத்து வைத்திருப்பதை வயிறு நிறைய சாப்பிட்டு விட்டுப் போவாள். அம்மாவும் அப்போது பிள்ளை உண்டாகி இருந்தாள். அஞ்சலைக்கும் மூன்று மாதம். ராமசாமி தானே அஞ்சலைக்குப் பிரசவம் பார்ப்பதாகச் சொல்லி விட்டான்.
பிரசவ நேரம். மரியாளை துணைக்கு வைத்துக்கொண்டு வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த மருத்துவச்சியிடம் கூட்டிக்கொண்டு போனான். அவள் பிரசவம் பார்க்கும் செவிலி. அவள் அஞ்சலை நிலைமையைப் பார்த்துவிட்டு கேகே ஆசுபத்திரி அழைத்துக் கொண்டு போகச் சொல்லி விட்டாள். அஞ்சலை வலியில் துவண்டு தலை சாய ஆசுபத்திரி போனாள். வயிற்றைப் பிடித்து இழுத்து அமுக்கி வயிற்றிலேயே இறந்த பெண் குழந்தையை எடுத்தார்கள். வலியில் கத்தக்கூட தெம்பில்லாமல் ஆசுபத்திரியில் சுருண்டு கிடந்தாள். ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு அனுப்பினார்கள். வீட்டில் எழுந்து நடக்கக் கூட தெம்பில்லாமல் இருந்தாள். அம்மாவுக்குப் பெண் பிறந்திருப்பதாக அப்பா வந்து சொன்னார். ராமசாமி தன் வீட்டிலேயே அஞ்சலையை வைத்துப் பார்த்துக் கொள்வதாகச் சொன்னதும் அப்பா கிளம்பினார்.
இரண்டு மாதங்கள் ஆகியும் அஞ்சலையால் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. ராமசாமி பக்கத்தில் வந்தாலே உடல் நடுங்கி மயங்கி விழுந்து விடுவாள்.
உடல் தேறியும் மனது தேறவில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு மதியம் தூங்கிக் கொண்டிருக்கும் போது எதோ கிசுசிகிசுப்பாய் குரல் கேட்டது. எழுந்து பார்த்தாள். ராமசாமி மடியில் மரியாள்.
அன்றோடு அவள் மண வாழ்க்கை முடிந்தது. பதினைந்து வயதில் அம்மா வீட்டுக்கு வந்தாள். அம்மா பெற்றெடுத்த மூன்று குழந்தைகளையும் தன் குழந்தைகள் போல் வளர்த்தாள். திருமண பந்தம் இல்லை என்று ஆனபிறகு தான் அஞ்சலை பருவக்குமரியானாள். நல்ல உயரம். அதற்கேற்ற உடல்கட்டு. பார்ப்பவர்களைக் கவரும் வகையில் அப்போதுதான் அவள் வளர்ந்தாள். உடலில் வலிமை இருக்கும் வரை ஒரு நாளில் எத்தனை வேலைகள் அவள் செய்திருப்பாள்? அப்பா இறந்ததும் மூத்த பெண்ணாக குடும்பப் பொறுப்பு அத்தனையும் அஞ்சலை எடுத்துக் கொண்டாள். ஒரு நாள் கூட அவள் சலித்துக் கொண்டதில்லை.
தனக்கு இனி வேறு யாரும் இல்லை என்று கூட உணராமல் உண்மையான ஈடுபாட்டுடன் உழைத்தாள். பாட்டி துணையுடன் தோசைக்கடை நடத்தினாள். புக்கிட் தீமா ஆறாம் மைல் பத்து அன்னம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் காலை ஆறு மணிக்கு தோசை விற்க ஆரம்பித்தால் மதியம் இரண்டு மணி வரை ஓயாது வேலை இருக்கும். பள்ளிப் பிள்ளைகள், வேலைக்குப் போகும் தொழிலாளிகள், காலைப் பலகாரம் செய்ய நேரமில்லாமல் வேலைக்கு ஓடும் பெண்கள் என்று எல்லாருக்கும் வீராயி தோசைக்கடையில் அஞ்சலை சுடும் தோசைகள் பெருவிருப்பமாக இருந்தன.
மதியம் வீட்டுக்கு வந்த பிறகு மறுநாள் கடைக்குச் செல்வதற்கு முன்னெடுப்புகள் இருக்கும். ஓய்வு எடுக்காத இயந்திரம் போல் முப்பது வருடங்கள் உழைத்ததில் அவள் இளமை கரைந்து போனது. கண்ணாடியில் பார்த்தபோது முன் நெற்றியில் முடி கொட்டி அங்கும் இங்குமாய் நரை முடிகள். தம்பி தங்கை இருவரையும் வளர்த்து திருமணம் செய்து கொடுத்தாள். அம்மாவும் பாட்டியும் இல்லாமல் போக தனியே வாழ்ந்தாள். தனியாக கடை போட முடியவில்லை. உணவகங்களில் சின்ன வேலைகள் செய்து தனக்கு வேண்டிய வருமானத்தைத் தேடிக் கொண்டாள். தங்கை திடீரென்று இறந்துபோக அவள் இரண்டு பிள்ளைகளும் அஞ்சலைக்குப் பிள்ளையானார்கள். இப்போது அவர்களும் வளர்ந்து விட்டார்கள். அவரவர் வாழ்க்கையை அவரவர்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர அஞ்சலைக்கு எத்தனை வருடங்கள் வேண்டியிருந்தது!
மணிமேகலை வீட்டிலும் சிவா வீட்டிலும் போய் இருந்தாள். ஆனால் அஞ்சலையின் இருப்பு அவர்களுக்குத் தேவையில்லை என்று உணர்ந்த பின் மீண்டும் தனிமை வாழ்க்கை.
ஊடானின் மேல் தோலை அவள் உரிப்பதுபோல் யாரும் உரிக்க முடியாது. சிவப்பு மிளகாய் சம்பாலை அவளைப் போல் பக்குவமாக யாரும் செய்ய முடியாது. அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கும் மனிதர்கள் தெரிந்த மனிதர்கள் மட்டுமல்லாமல் நாங்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருந்தனர். ரோஸ்னா தரும் குவே லிப்பிஸ், மெய்லின் செய்து எடுத்து வரும் எலுமிச்சை மணம் வீசும் ஸ்பான்ஜ் கேக், ராஜன் கொண்டு வரும் ரொட்டி ஜான் என்று கலவையான உணவுகளுடன் அவர்கள் மதிய ஒன்று கூடல்கள் அவ்வப்போது நடைபெறும். அஞ்சலை செய்யும் ஆப்பம் தேங்காய்ப் பாலுடன் விருந்து முடியும்.
அஞ்சலை ஒவ்வொரு காலையும் எழுந்து முருகன் படத்தின் கீழ் வைக்கும் வாழைப்பழங்கள் இல்லை. காற்று வீட்டுக்குள் வரட்டும் என்று ஜன்னல்களைத் திறந்து வைப்பாள். ஜன்னல்கள் மூடியே கிடந்தன.
எல்லோரும் விடுமுறையைக் கொண்டாட ஒவ்வொரு மூலைக்குச் சென்றுவிட அஞ்சலை வெளியே வரவில்லை. அவள் இல்லை என்று உணர யாருமில்லை அங்கே!
இனி ஞாயிறு இரவு அல்லது திங்கள் கிழமைக் காலை அஞ்சலையை யாரேனும் தேடக்கூடும். அல்லது அவள் வீட்டிலிருந்து வீசும் துர்நாற்றம் உண்மையை உணர வைக்கும். ஆம்புலன்ஸ் வந்து அவள் மரணத்தை உறுதிப்படுத்தும். தொலைபேசி அழைப்புகள்! தமிழ் நாளிதழில் மரண அறிவிப்பு! விடுமுறையில் மரணம் நிகழ்ந்தால் அதற்குப் பின் எத்தனை ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கிறது?
திங்கள் மதியம் வீட்டின் கீழ்த்தளத்தில் அவள் உடல் கிடத்தப்பட்டு இருக்கும். மூடிய கதவுக்குள் நடந்த அவள் மரணத்தை இப்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்டு லில்லிப் பூக்களுக்கும் சூரியகாந்திப் பூக்களுக்கு நடுவே கண்ணாடிப் பெட்டிக்குள் அவள் புன்னகையுடன் படுத்திருப்பதை அனைவருக்கும் அந்த அடுக்கு மாடியின் கீழ்த்தளம் அறிவிக்கும்.
மாண்டாய் மயானத்தில் மின்சார எரிப்பில் ஒரு ஸ்விட்ச் போட்டதும் அவள் உடல் ஒரு நிமிடத்தில் பஸ்பமாகி விடும். வெறும் சாம்பலில் அஞ்சலை கதை முடிந்து விடும். யாரும் பிடிக்க முடியாமல் வேகமாக ஓடும் அஞ்சலை இப்போது காற்றில் வேகமாகக் புகையாகக் கரைந்து கொண்டிருக்கிறாள்.
அவள் மரணம் ஒரு சாதாரணனின் மரணம். சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு அடுக்கு மாடி வீடுகளிலும் இருக்கும் ஒரு பாட்டி போல! உங்களுக்கும் அப்படிப்பட்ட பாட்டி இருந்தால் நீங்கள் ஏற்கெனவே அவளை அறிந்திருக்கலாம்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் “முத்தமிழ் விழா 2026“ சிறுகதைப் போட்டி - பொதுப்பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கதை.
சித்ரா ரமேஷ்
