புகை

புகை

fallback-0

22 Nov 2026 - 6:01 am

1 mins read

ஆயிரம் அவதாரங்கள்

எடுக்கும் உனக்கு

அங்கீகரிக்கப்பட்ட

அவதாரம் உண்டா?

அக்கினியில் சூல் கொண்ட

கணத்திலேயே

அவதரிக்கும் நீ

அதன் உடனேயே இருப்பது

எவ்வாறு?

மணமக்கள் சிலர் உன்முன்

கொண்ட உறவை

ஆங்காங்கே கழற்றிவிடும்போது

நீ மட்டும் இறுதிவரை

இணைந்திருப்பது எவ்வாறு?

நீ குறைந்தால் தீயானவள் தாவுகிறாள்

அவள் குறைந்தால் நீ தாவுகிறாய்

நீங்கள் விட்டுக்கொடுத்து

வாழ்வதால்தான் உங்களைச்

சாட்சி வைத்து உறவுகளைச்

சேர்க்கிறார்களோ?

பார்வைக்கு லேசான நீ

இந்தோனீசியாவிலிருந்து

படையெடுக்கும்போது

ஆசியக் கண்டத்தையே

ஆட்டிப்படைக்கிறாய்.

அடிவயிறு எரியும்போது

மறைந்தும் செயலாற்ற

வல்லவன் என்பதை

உணர்த்துகிறாயோ?

மங்கள அவதாரத்தில்

விளங்கச் செய்யும் நீ

மாற்று அவதாரத்தில்

மங்கச்செய்வது ஏனோ?

மங்களமாகச் சிலபொழுதே

வரும் நீ

மங்கச்செய்யப் பல உருவங்களில்

வருவது எதனால்?

வெண்சுருட்டின் உதட்டில்

பிறக்கும் நீ

விரும்பியவரை மட்டும் அல்ல

அருகில் இருப்பவரையும் அணைத்து

அணைத்துவிடுவதேன்?

ஆக்க வழியில்

பயன்படுத்துவோர்க்கு

அற்புதங்கள் காட்டும் நீ

அட்டகாசம் செய்யும்போது

நினைவுபடுத்துவது

சாது மிரண்டால் காடு கொள்ளாது

என்பதையா?

பல்லாயிரம் வடிவங்களில் விளக்கும் நீ

பல நிறங்களில் காட்சி கொடுத்து

எதை நினைவுபடுத்துகிறாய்?

நீ

வழிபடும் இடங்களில்

காணும் உருவமாக;

அடிவயிற்றில் அருவமாக;

மன சஞ்சலத்தில் அருஉருவமாக;

எல்லா உருவங்களிலும் இருக்கும்

உன்னை நினைக்கையில்

அந்த ஆத்திகன் சொன்னானே

அதுதான் நினைவுக்கு வருகிறது.

- சிவா

குறிப்புச் சொற்கள்
கதைகவிதைசிங்கப்பூர்

தொடர்புடைய செய்திகள்