- எம். சேகர்
மதிய வெயிலில் யுவான் சிங் சாலையில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியின் இரண்டாம் மாடியில் லேசான தென்றல் வீசிக்கொண்டிருந்தது.
“டேய் கவின்! இன்னைக்கு தமிழ் ‘ஓரல்’ பயிற்சி இருக்குல்ல, ரெடியா?” என்று கவினின் தோள்பட்டையில் தட்டினான் ஆகாஷ்.
கவின் தன் கையில் இருந்த வாசிப்புப் பகுதிகளை வேகவேகமாகப் புரட்டிக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் அப்பட்டமான பதற்றம் தெரிந்தது. “என்னவோ தெரியலடா, தமிழ் கிளாஸ்னாலே எனக்கு வயித்தைக் கலக்குது. மனசுக்குள்ள எல்லாம் இங்கிலீஸ்லதான் யோசிக்கிறேன். ஆனா அதை வாய்திறந்து தமிழில் பேசுறப்போ, வார்த்தைங்க வந்து தொண்டையிலயே மாட்டிக்கிது. ‘ஐ மீன், ஐ லைக், சோ, ஸ்கூல், ஃபிரண்ட்ஸ், கிளாஸ்மேட்.’ அப்படின்னு ஏதேதோ இங்கிலீஷ் கலந்துதான் வருது!”
ஆகாஷ் சிரித்தான். “உன் நிலைமை பரவாயில்லைடா! கார்த்திக்கைக் கேள். அவன் ‘ஐம்புலன்கள்’ என்பதற்குப் பதிலாக ‘ஜம்புலன்கள்’ அப்படின்னு சொல்லி, போன வாரம் தமிழாசிரியரிடம் வாங்கிக் கட்டிக்கிட்டான்.”
இருவரும் சிரித்தாலும் அந்தச் சிரிப்பின் பின்னால் ஒரு மெல்லிய பயமும் ஏக்கமும் கலந்தே இருந்தன. சிங்கப்பூரின் நவீன உயர்நிலைப் பள்ளிச் சூழலில், அன்றாடம் அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றுதான் தமிழ் மொழி.
வகுப்பறைக்குள் நுழைந்த தமிழாசிரியர் இளங்கோவன், வெண்பலகையில்,
“இன்றைய விவாதம்: இளையோர் பயன்பாட்டில் சமூக ஊடகங்கள்” என்று அழகிய வட்டெழுத்தில் எழுதினார்.
இளங்கோவன் சார் முப்பது ஆண்டுகளாகத் தமிழ்க் கற்பிக்கும் அனுபவம் மிக்கவர். சிங்கப்பூர் தமிழ்ப் பாடத்திட்டத்தின் மாற்றங்களை அருகிலிருந்து பார்த்தவர்.
மொழி என்பது வெறும் தேர்ச்சிக்கான கருவி மட்டுமல்ல, அது ஓர் இனத்தின் அடையாளம் என்பதில் தீவிர நம்பிக்கைக் கொண்டவர்.
“சரி மாணவர்களே! நாம் இன்றைய விவாதத்தைத் தொடங்கலாம். கவின், நீ தொடங்குகிறாயா?” என்றார் தமிழாசிரியர் புன்னகையோடு.
கவின் மெதுவாக எழுந்து நின்றான். வகுப்பறையில் இருந்த முப்பது ஜோடி கண்கள் அவனைப் பார்த்தன. அவன் தொண்டையைச் செருமிக் கொண்டான்.
“ஆசிரியர், சமூக ஊடகங்கள்...ம்..சோசியல் மீடியா இளைஞர்களுக்கு ரொம்ப... ஹெல்பா இருக்கு. ஆனால்... சோ மேனி புராப்ளமும் வருது. லைக் சைபர் பூலியிங்” கவின் திணறினான்.
வகுப்பின் கடைசி வரிசையில் இருந்த சில மாணவர்கள் மெல்ல நகைத்தனர். கவினின் முகம் சிவந்தது. அவன் உடனடியாகத் தன் பேச்சை ஆங்கிலத்திற்கு மாற்றிக்கொள்ளத் துடித்தான். ஏனெனில், பள்ளி வளாகத்தில் நண்பர்களுடன் பேசும்போதும் கணினியில் விளையாடும்போதும் ஏன் வீட்டில் கூட அவனுக்கு ஆங்கிலமே இயல்பான மொழியாகிப்போயிருந்தது.
தமிழாசிரியர் கையை உயர்த்திச் சிரிப்பைக் கட்டுப்படுத்தினார். “கவின், அமைதியாக யோசி. இணைய அச்சுறுத்தல், எதிர்மறை எண்ணங்கள்... இந்த வார்த்தைகளைப் பயன்படுத்திப் பார். இங்க இருக்குற பெரும்பாலான மாணவர்களுக்கு உன்னுடைய சிக்கல் இருக்கு. ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து, உன் சொந்த நடையில் சொல்.”
கவின் முயற்சி செய்தான். ஆனால், அவனது சொற்களஞ்சியம் மிகவும் சுருங்கியிருந்தது. மனதிற்குள் பிரம்மாண்டமாகத் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்த அவனிடம் போதிய தமிழ் வார்த்தைகள் இல்லை. பிழையின்றிப் பேச வேண்டும் என்ற பயம், அவனை இன்னும் முடக்கியது.
அன்று மாலை கவின் வீட்டிற்குத் திரும்பியபோது, அவன் மனம் அமைதியின்றி இருந்தது. வீட்டில் அம்மா சுசித்ராவும், அப்பா அரவிந்தனும் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
“ஹாய் கவின், அவ் வாஸ் ஸ்கூல்?” என்று வரவேற்றார் அம்மா.
“ஃபைன் மா... தமிழ் கிளாஸ் தான் கொஞ்சம் சொதப்பல்,” என்று சோஃபா மேல் சாய்ந்தான் கவின்.
அப்பா அரவிந்தன் நிமிர்ந்து பார்த்தார். “ஏன் கவின்? தமிழ் ஓ லெவல் தேர்வு பக்கத்துல வருது. நீ நல்ல கிரேடு எடுத்தாதான் நல்ல ஜே.சி அல்லது பாலிடெக்னிக் கிடைக்க உதவி செய்யும். தமிழ்ல ‘ஏ’ எடுப்பது ரொம்ப சுலபம்டா, கொஞ்சம் மனப்பாடம் பண்ணா போதாதா?”
கவின் பெருமூச்சு விட்டான். “அப்பா! அது வெறும் மனப்பாடம் பண்ற விஷயம் இல்லைப்பா. என்னால இயல்பா தமிழ்ல பேசவே முடியல. ஸ்கூல்ல பிரண்ட்ஸ் யாருமே தமிழ்ல பேசுறதே இல்ல. எல்லாரும் இங்கிலீஷ்லதான் பேசுறோம். அப்புறம் எப்படி எனக்கு தமிழ் வார்த்தைங்க உடனே வரும்?”
அம்மா சுசித்ரா சிறிது தயங்கினார். உண்மைதான், வீட்டில் கூட அவர்கள் கவினிடம் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். ‘சீக்கிரம் சாப்பிடு’ என்பதற்குப் பதிலாக ‘ காம் ஆன் கவின், ஃபினிஸ் யுவர் டின்னர் க்யூக்லி’ என்று சொல்வதே வழக்கமாகியிருந்தது. தாத்தா, பாட்டி மலேசியாவிலிருந்து வரும் நாள்களில் மட்டுமே வீட்டில் தமிழ் ஒலிக்கும்.
“நாங்களும் உன்கிட்ட தமிழ்ல பேசி பழகியிருக்கணும் கவின்... அது எங்களோட தவறுதான்,” என்று ஒப்புக்கொண்டார் அம்மா.
அடுத்த நாள், தமிழ் வகுப்பிற்குப் பிறகு தமிழாசிரியர் கவினையும் அவனது நண்பர்கள் ஆகாஷ், திவ்யா ஆகியோரையும் தடுத்து நிறுத்தினார்.
“ஐந்து நிமிடம் அமருங்கள்,” என்றார் தமிழாசிரியர்.
மூவரும் பயத்துடன் அமர்ந்தனர். மார்க் குறைவாகப் போட்டிருப்பாரோ என்ற பயம்.
“உங்களுக்குத் தமிழ்ல பேசுவதில் என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியும்,” என்று மென்மையாக ஆரம்பித்தார்.
“உங்களுக்குத் தமிழ் பிடிக்காது என்று இல்லை. ஆனால், தமிழை ஒரு பாடமாக மட்டுமே பார்க்கிறீர்கள். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் படிக்கும்போது, மொழி சுமையாக மாறுகிறது. அதை உணர்வாகப் பார்க்க வேண்டும்.” என்றார்.
திவ்யா மெதுவாக வாய்திறந்தாள், “ஆசிரியர், எங்களுக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியுது. ஆனா, பேசுறப்போ கிரம்மர் மிஸ்தேக் வந்துடுமோன்னு பயமா இருக்கு. இங்கிலீஷ் பேசும்போது நாங்க தப்பு பண்ணா யாரும் சிரிக்க மாட்டாங்க. ஆனா தமிழ்ல ஒரு வார்த்தை தப்பா சொன்னா உடனே எல்லாரும் சிரிக்கிறாங்க. அதான் நாங்க தமிழ்ல பேசவே பயப்படுறோம்.”
“ஆமாம் ஆசிரியர். எங்கள் வகுப்பு மாணவர்களான லீயும் தோமஸும் கதிஜாவும்கூட இப்படித்தான் சொல்றாங்க. அவுங்க அவுங்க தாய்மொழியில பேச முயற்சி செய்யும்போது கொஞ்சம் தடுமாறினாலும் மத்த மாணவர்கள் எல்லாம் கேலி செய்றாங்கலாம்”
இளங்கோவன் தலையசைத்தார்.
“நீ சொல்வது உண்மைதான் திவ்யா. அந்தப் பயம்தான் உங்களின் முதல் எதிரி. மொழி என்பது பிழையின்றிப் பேசுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. எண்ணங்களைப் பகிர்வதற்காக உருவாக்கப்பட்டது. பிழை செய்தால் என்ன? திருத்திக்கொள்ளலாம். சிங்கப்பூரில் தாய்மொழி என்பது நம் முகவரி. அதை தொலைத்துவிட்டால் உலகமயமாக்கப்பட்ட இந்தச் சூழலில் நம் அடையாளம் என்ன?”
தமிழாசிரியரின் வார்த்தைகள் கவினின் மனதைத் தொட்டன.
“நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன்,” என்றார் ஆசிரியர்.
“அடுத்த வாரம் பள்ளித் தாய்மொழி வார விழா வருவது உங்களுக்குத் தெரியும். அதில் நீங்கள் மூவரும் சேர்ந்து ஒரு குறும்பட நாடகம் மேடையேற்ற வேண்டும். வசனங்கள் அனைத்தும் எளிய, இயல்பான தமிழில் இருக்க வேண்டும். மனப்பாடம் செய்யக் கூடாது. உணர்ந்து பேச வேண்டும். செய்கிறீர்களா?”
மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். சவாலை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.
அடுத்த ஒரு வாரம் கவினின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது.
நாடகப் பயிற்சித் தொடங்கியது. அவர்கள் தேர்வு செய்த தலைப்பு: “சிங்கப்பூர் இளைஞர்களும் தமிழ் மொழியும்”. தங்களின் சொந்தப் பிரச்சனைகளையே நாடகத்தின் கதையாக மாற்றினர்.
பயிற்சியின் போது பல தடங்கல்கள் வந்தன.
“கவின், ‘நம்பிக்கை’ங்குற வார்த்தையை அழுத்திச் சொல்லு, ‘நம்பிக்கி’ன்னு அலட்சியமா சொல்லாத,” என்று திருத்தினாள் திவ்யா.
அவர்கள் கூகல் மொழிபெயர்ப்பையும் சாட் ஜீபிட்டையும் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டு, தங்களுக்குள் தமிழில் உரையாடத் தொடங்கினர். கவின் தனது வீட்டில் ஒரு புதிய விதியை உருவாக்கினான்.
“இனிமேல் இரவு உணவின் போது அனைவரும் தமிழில் மட்டுமே பேச வேண்டும்!”
ஆரம்பத்தில் அப்பா அரவிந்தன் தடுமாறினார். “கவின் பாஸ் தெ கறி “ என்பதற்குப் பதிலாக “கவின், அந்தப் பருப்புக் குழம்பைக் கொஞ்சம் எடு” என்று சொல்வதற்கு அவர் சில நொடிகள் யோசிக்க வேண்டியிருந்தது. ஆனால், அந்தச் சிறிய முயற்சி வீட்டின் சூழலையே மாற்றியது. சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்தது. கவின் நாளிதழ்களில் உள்ள தமிழ்ச் செய்திகளைச் சத்தமாக வாசித்துப் பழகினான். தமிழ்ப் பாடல்கள் கேட்கத் தொடங்கினான்.
தமிழ் என்பது வெறும் தேர்வுக்கான பாடம் அல்ல. அது தன் தாத்தாவின் கதை, தன் அம்மாவின் அன்பு, தன் முன்னோர்களின் பாரம்பரியம் என்பதை அவன் உணரத் தொடங்கினான்.
விழா நாள் வந்தது. பள்ளியின் மிகப்பெரிய ஆடிட்டோரியம் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் நிரம்பி வழிந்தது.
மேடைக்குப் பின்னால் கவின் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தான். அவனது கைகள் குளிர்ந்திருந்தன.
தமிழாசிரியர் அவனருகே வந்து, அவனது தோளைத் தட்டினார்.
“கவின், இலக்கண பிழையைப் பற்றிக் கவலைப்படாதே. உன் மனதில் உள்ள தமிழின் நேசிப்பை மட்டும் மேடையில் வெளிப்படுத்து. வெற்றி உன்னுடையது.”
திரை உயர்ந்தது. மேடையில் வெளிச்சம் பாய்ந்தது.
நாடகம் தொடங்கியது. கவின் மேடையின் மையத்திற்கு வந்தான். அவனது கதாபாத்திரம், தமிழை விரும்பாத ஒரு நவீன சிங்கப்பூர் மாணவன். ஆகாஷும் திவ்யாவும் அவனது நண்பர்களாக நடித்தனர்.
ஆரம்பத்தில் சில வசனங்களில் லேசான தடுமாற்றம் இருந்தாலும், கவின் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு வந்தான். நாடகத்தின் இறுதிக்காட்சியில், கவின் பேச வேண்டிய அந்த முக்கிய வசனம் வந்தது. அது வெறும் நாடக வசனம் அல்ல. அவனது இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த குரல்.
கவின் பார்வையாளர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினான்:
“நாங்கள் ஆங்கிலத்தில் பேசுகிறோம், ஏனெனில் அது உலகத்தை எங்களோடு இணைக்கிறது. ஆனால், நாங்கள் தமிழில் பேச வேண்டும், ஏனெனில் அதுதான் எங்களை எங்களோடு இணைக்கிறது!
சிங்கப்பூரின் அதிநவீன தொழில்நுட்ப உலகத்திற்குள் ஓடிக் கொண்டிருக்கும் எங்களுக்கு, எங்கள் வேர்கள் மறந்து போகும் அபாயம் இருக்கிறது. வகுப்பறையில் அதிகப் புள்ளிகள் வாங்குவதற்காக மட்டும் தமிழ் படிக்கவில்லை. ‘அம்மா’ என்ற சொல்லில் இருக்கும் மென்மையையும் ‘அறம்’ என்ற சொல்லில் இருக்கும் கம்பீரத்தையும் உணரத்தான் தமிழ் படிக்கிறோம்.
நாங்கள் பிழையாகப் பேசலாம். சில நேரம் ஆங்கிலக் கலப்போடு பேசலாம். ஆனால் எங்களைச் கேலி செய்யாதீர்கள். எங்கள் முயற்சியை ஊக்குவியுங்கள். தாய்மொழி என்பது பழமையான பொக்கிஷம் மட்டுமல்ல அது எங்களின் எதிர்கால நம்பிக்கை”
கவினின் குரல் அந்தக் கூடம் முழுவதும் எதிரொலித்தது. அவனது பேச்சில் இருந்த உண்மையும் உணர்ச்சியும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
நாடகம் முடிந்து திரை விழுந்தபோது, ஒரு நொடி அமைதிக்குப் பிறகு, கேட்போர் கூடம் முழுவதிலிருந்தும் பலத்த கரவொலி எழுந்தது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.
மேடைக்குப் பின்னால் வந்த தமிழாசிரியரின் கண்கள் கலங்கியிருந்தன. அவர் கவினைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.
“பிரமாதம் கவின். இன்று நீ பேச்சில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஜெயித்துவிட்டாய்.”
சில மாதங்களுக்குப் பிறகு,
ஓ லெவல் தமிழ் வாய்மொழித் தேர்வு முடிந்து கவின் வெளியே வந்தான். அவனது முகத்தில் மலர்ச்சி இருந்தது. ஆகாஷும் திவ்யாவும் அவனுக்காகக் காத்திருந்தனர்.
“எப்படி இருந்ததுடா கவின்?” என்று ஆர்வமாகக் கேட்டான் ஆகாஷ்.
கவின் புன்னகைத்தான்.
“இந்தத் தடவை நான் பயப்படல. தேர்வு அதிகாரி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும், என் மனசுல தோன்றதை எந்தத் தயக்கமும் இல்லாம, தெளிவா, அழகான தமிழ்ல சொன்னேன். ‘ஏ’ கிரேடு வருதோ இல்லையோ, ஆனா என் தாய்மொழியை என்னால தன்னம்பிக்கையோட பேச முடியுதுங்கற சந்தோஷம் எனக்கு இருக்கு!”
மூவரும் சிரித்தபடியே நடந்தனர்.
