திரைச் சீலையை
நகர்த்துகிறாய்
கோபமாய் தேடுகிறது
வெயில்
சட்டென புகுந்து
மஞ்சளும் பச்சையுமாய்
இலைகள் - கருநீல மொட்டுகளென
நிறமாடுகிறது மரம்
புறா வந்தமரும் கிளைக்கு
நீர் தெளித்துக்கொண்டிருந்தது
வானம்
மென்தூரலாய்
மழை மறைத்த நிலவு
ஒளியைப் பிழிந்து
பூமிக்குள் இறக்கும்
மாய வேள்வியின்
சிறுபுகையாய் மணல் வாசம்
ஞாபக உடையை
தரித்து
கொட்டுகிறது
கோடை மழை
அடைமழையென
மாயத்தும்மல்
வாராது படுத்தும்
காலையில்,
முடிவுகட்டிவிடுகிறாய்
நான் மழையில் நனைக்கும்
ரசித்த இரவை!
உன் சாபமேந்தி
முடிகிறது மழை
ரிஷி சேது

