புதுடெல்லி: அதானி பவர் நிறுவனம், பீகாரில் 2,400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை நிறுவப்போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பீகார் மாநிலத்திற்கு 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காகப் பீகார் மாநில மின் உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன்படி ரூ.26,482 கோடி மதிப்பில் பாகல்பூர் மாவட்டத்தில் 800 மெகா வாட் திறன் கொண்ட மூன்று ஆலைகள் நிறுவப்படும்.
மின் உற்பத்தி ஆலை கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படும். ஐந்தாண்டுகளில் உற்பத்தி தொடங்கப்படும். மேலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பீகார் மாநிலத்திற்கு யூனிட்டுக்கு ரூ.6.075 என்ற விலையில் விற்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய அனல் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அதானி பவர், 18,110 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தில் நிறுவப்படும் தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வந்ததும் ஏறக்குறைய மூவாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வீடுகளுக்கு 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன் சூரிய சக்தி மின்சாரப் பயன்பாட்டையும் பீகார் அரசு ஊக்குவித்து வருகிறது.
கடந்த மாதம், பீகாரில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இவற்றில் எரிசக்தி, சுகாதாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு தொடர்பான பல முக்கிய திட்டங்கள் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் (2025-2030) 10 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அண்மையில் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அங்கு மத்திய அரசும், மாநில அரசும் பல மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்து வருகின்றன.