இதைக் கேட்டவுடன் அன்பழகன் கலவரப்பட்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. சென்ற வாரம்தான் தன் நெருங்கிய நண்பரின் அப்பாவுக்கு இதேமாதிரி வலது கன்னம் மரத்துப் போனதாம். உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றாராம். அந்த மரமரப்பு பக்கவாதத்தின் அறிகுறி என்று அந்த மருத்துவர் சொன்னதை ஞாபகப்படுத்திக்கொண்டுதான் அன்பழகன் கலவரப்பட்டார்.
‘எத்தனை நாள்களாய் இப்படி சாந்தி?’
‘நாலைந்து நாள்களாய்.’
‘ஏன் முதல்நாளே சொல்லவில்லை?’
‘சரியாகிவிடும் என்றிருந்தேன்.’
‘ம். பரவாயில்லை. நாம் உடனே மருத்துவமனைக்குச் செல்லவேண்டும்.’
அன்பழகன் அடைந்த பதற்றத்தில் சாந்தி தடுமாறிப்போனார். அவருக்குத் தெரியாது. அவர் நண்பரின் அப்பாவுக்கு ஏற்பட்ட இதே மாதிரியான மரமரப்பு.
அன்பழகனும் சாந்தியும் உடன் மருத்துவமனைக்கு விரைந்தார்கள். வரிசை எண்ணை எடுத்துக்கொண்டு காத்திருந்தார்கள். அவர்களின் முறைவர இரண்டுமணி நேரம் ஆகிவிட்டது. மருத்துவரைச் சந்தித்தபோது, சாந்தியை முந்திக்கொண்டு அன்பழகன்தான் பேசினார். மருத்துவர் புருவம் உயர்த்தினார். ஒரு சின்ன மரப்பட்டையை நாக்கின் வலது ஓரத்தில் தொட்டபோது, தொட்டது உணர்வில்லை என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“இதை உடனே பார்க்கவேண்டும். இதற்கான சிறப்புப் பிரிவு இருக்கிறது. அது 3வது கட்டடத் தொகுப்பில் இருக்கிறது. அந்தப் பிரிவுக்கு ஒரு கடிதம் தருகிறேன். அவசரம் என்ற குறிப்புடனேயே தருகிறேன். உடனே சென்று அந்தப் பிரிவின் மருத்துவரைப் பாருங்கள். வெளியே காத்திருங்கள். கடிதம் தயாரானதும் அழைக்கிறேன்,” என்றார்.
அடுத்த சில நிமிடங்களில் கடிதம் கிடைத்தது. வாங்கிக்கொண்டு அந்தக் கட்டடத் தொகுப்புக்குச் சென்றார்கள். அந்தப் பிரிவை அணுகி கடிதத்தைக் காட்டியபோது, அங்கும் ஒரு காத்திருப்பு. காத்திருந்து மருத்துவரைப் பார்த்தார்கள். சில தொடு சோதனைகளை அவரும் செய்தார். மருத்துவர்கள் கேட்கும் அதே கேள்வி
“எத்தனை நாள்கள் இப்படி? ஏன் உடனே வரவில்லை?”
சாந்தியின் வழக்கமான பதிலை அந்த மருத்துவர் கவனிக்கவில்லை.
“உடனே எம்ஆர்ஐ ஊடுகதிர்ச் சோதனை செய்யவேண்டும். அது எக்ஸ் கதிர் சோதனையைவிட நூறு மடங்கு துல்லியம். அது எலும்புகளைச் சரியாகச் சொல்லும். எம்ஆர்ஐ தசைகளில் ஏற்பட்டிருக்கும் சின்னச்சின்ன முரண்களையும் துல்லியமாகச் சொல்லும். எம்ஆர்ஐ இல்லாமல் அடுத்த சிகிச்சையை நிர்ணயிக்கமுடியாது. 800 வெள்ளியாகும். உடனே அந்தப் பிரிவுக்குச் செல்லுங்கள். இப்போது அந்தப் பிரிவுக்கு ஒரு கடிதம் தந்துவிடுகிறேன். எம்ஆர்ஐ கிடைக்க ஒரு வாரம் ஆகலாம். சில மாத்திரைகள் தருகிறேன். மரமரப்பு அதிகமாகாவிட்டால் சாப்பிடவேண்டாம். கொஞ்சம் அதிகரித்தால் சாப்பிடுங்கள். பயப்படும்படி அதிகரித்தால் உடனே வந்துவிடுங்கள். அதற்குமுன் இரத்த அழுத்தம் பார்த்துவிடுகிறேன். இரத்தத்தில் சர்க்கரை அளவும் தெரியவேண்டும். சர்க்கரை இருக்கிறதென்று அவரின் மருத்துவக் குறிப்புகள் சொல்கிறது. அதெல்லாம் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
“நிம்மதி. எல்லாம் சரியாகவே இருக்கிறது. சர்க்கரை, இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு நீங்கள் எடுக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். இப்போது எம்ஆர்ஐக்குப் போங்கள். அந்த முடிவு மிகவும் முக்கியம். முடிவு வரும்வரை தைரியமாக இருங்கள்,” என்றார் மருத்துவர்.
எம்ஆர்ஐக்கான கடிதம் தரப்பட்டது. அதை எடுத்துக்கொண்டு அந்தப் பிரிவுக்கு விரைந்தார்கள். ஒரு சின்ன விமானம் போல இருந்தது அந்தக்கருவி. அதற்குள் படுக்கவேண்டுமாம். சாந்தியை உள்ளே விட்டுவிட்டு அன்பழகன் வெளியே காத்திருந்தார்.
“சந்திரனுக்கு அனுப்புவதுபோல் அனுப்பி, நல்லவேளை கொண்டுவந்து பத்திரமாக விட்டுவிட்டார்கள்,” என்று சிரித்துக்கொண்டே சாந்தி வெளியே வந்தார்.
இருவரும் வீடு திரும்பினர். அன்பழகனுக்கு அதுவரை இருந்த எல்லாப் பிரச்சினைகளும் எங்கு போனதென்றே தெரியவில்லை. இப்போது ஒரே பிரச்சினை என்னவென்றால், ‘எப்போது எம்ஆர்ஐ முடிவு தெரியும்?’ என்பது மட்டுமே.
அன்பழகனின் தம்பி குறிப்பிடத்தக்க பெரிய மருத்துவர். தமிழ்நாட்டில் பேராவூரணியில் பலருக்கு நம்பிக்கை ஒளியாக இருக்கிறார். அவரோடு கைப்பேசியில் முகம் பார்த்துப் பேசினார் அன்பழகன். ஏற்கெனவே எடுக்கப்பட்ட எல்லா மருத்துவக் குறிப்புகளையும் அன்பழகன் அனுப்பியிருந்தார். அவற்றைப் பார்த்த அன்பழகனின் தம்பி, “இதயத்துடிப்பு வரைபடம் சரியாகவே இருக்கிறது. சர்க்கரை, இரத்த அழுத்தம் எல்லாம் கட்டுக்குள் இருக்கிறது. இது என்ன புதிர்? உணவு ஒவ்வாமையோ? ஏதும் வித்தியாசமாகச் சாப்பிட்டாரா?” எனக் கேட்டார்.
“இல்லை”
“யோசித்துச் சொல்லுங்கள். ஒரு மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட்டதுகூட நமக்கு ஞாபகமிருப்பதில்லை.”
“இதே கேள்வியை எல்லாரும் கேட்டதால் உறுதியாகத் தெரியும். வித்தியாசமாக எதுவுமே சாப்பிடவில்லை.”
“சரி. எம்ஆர்ஐக்கு காத்திருப்போம். கடவுள் நம்மைக் காப்பாற்றுவார். கேட்கிறேன் என்று பயந்துவிடாதீர்கள். வலது பக்கம் தலைமுடி கொட்டுகிறதா?”
சாந்தியிடம் கேட்டுவிட்டு, இல்லையென்றார்.
“நிம்மதி. புற்றுநோய்க்கட்டி இருந்தாலும் இப்படி ஆக வாய்ப்பிருக்கிறது. தலைமுடி கொட்டவில்லையென்றால் வாய்ப்பில்லை. கடவுள் காப்பாற்றுவார். நம்புவோம். அப்படியெல்லாம் இருக்காது.”
இந்த மருத்துவர்களுக்கே இது பொதுவான குணம். பற்றவைத்துவிட்டு போய்விடுவார்கள். எங்கெங்கெல்லாம் எப்படிஎப்படியெல்லாம் அது எரியும் என்ற கவலையே அவர்களுக்கு இருப்பதில்லை.
அன்பழகன் மேலும் கலவரப்பட்டார். சாந்தி அமைதியாகவே இருந்தார். ‘மரமரப்பு வலது பக்கம்தானே. இடதுபக்கம்தான் சாப்பிட முடிகிறதே. ருசியும் இருக்கிறதே’ ஹ..ஹ..ஹா.
நாள்களை எண்ணிக்கொண்டிருந்தார் அன்பழகன். ஒரு வாரம் ஒரு ஆண்டுபோல் தெரிகிறது. அதற்கிடையே அன்பழகனின் இன்னொரு நண்பர் உட்லண்ட்சில் வீடு வாங்கி பால் காய்ச்சுகிறாராம். அழைத்திருந்தார். சாந்தியும் அன்பழகனும் அந்த நிகழ்ச்சிக்குச் சென்றார்கள்.
சில புதிய முகங்கள் பிரச்சினையை மறக்க உதவலாம். யாரிடமும் அன்பழகன் இதுபற்றிப் பேசவில்லை. சாந்தி, அந்த நண்பரின் மனைவியிடம் இதுபற்றி எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். மனைவி, நண்பரிடம் சொல்ல, நண்பர் அன்பழகனைக் கேட்க இப்போது இது பொதுப் பிரச்சினை ஆகிவிட்டது. நண்பர் சொன்னார்
“இங்கு அடுத்த கட்டடத் தொகுப்பில் ஒரு மருத்துவர் இருக்கிறார். மணிகண்டன். 90 வயது. எனக்குக் குடும்ப மருத்துவர் அவர்தான். நான் இந்தப் பகுதியில் வீடு வாங்கியதற்கு அவரும் ஒரு காரணம். புதிதாக யாரும் அவரிடம் வருவதில்லை. வழக்கமாக வருபவர்களுக்கு வைத்தியம் செய்தாலே அவருக்குப் போதுமானது. நான் உங்களை அழைத்துச் செல்கிறேன். அவர் கருத்தையும் கேட்டுவைப்போம். எம்ஆர்ஐ வந்தபிறகு அதன் அடிப்படையில் சிகிச்சையை மேற்கொள்ளலாம்,” என்றார்
யோசனை சரியாகவே பட்டது. வயது 90. திறமை இருக்கிறதோ இல்லையோ அனுபவம் இருக்குமே.
அடுத்தநாள் காலை 11 மணி. மணிகண்டன் வீடு. சாந்தியின் நாக்குப் பகுதியைப் பார்த்தார். வலது பக்கத்து ஓரத்தையும் இடது பக்க ஓரத்தையும் உற்றுக் கவனித்தார். ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.
“ஆரம்பத்தில் இருப்பதுபோல்தான் இருக்கிறதா? இல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதா?”
“ஆரம்பத்தில் இருப்பதுபோல்தான் இருக்கிறது.”
“அந்தப் பகுதியில் ஏதும் கொப்புளங்கள் வந்ததா?
இப்போதுதான் ஒரு புதுக் கேள்வியை சாந்தி எதிர்கொள்கிறார்.
“இல்லை”
“இது அம்மையாகக்கூட இருக்கலாம். ஆனால், எதுவுமே பாதிக்கப்படவில்லை. எல்லாம் கட்டுக்குள் இருப்பதாகச் சொல்கிறீர்கள். சரி, சர்க்கரை அல்லது ரத்த அழுத்தத்திற்கான மாத்திரை எதையும் சமீபத்தில் மாற்றினீர்களா?’
“இல்லை”
“வேறு ஏதும் புதிதாக மாத்திரை சாப்பிட்டீர்களா?”
“இல்லை”
“பல்வலி வந்திருக்கா? சொத்தைப் பல் ஏதும் இருக்கா?”
“இல்லை”
“பல் பிடுங்கினீர்களா?”
“இல்லை”
“பற்பசை, துலக்கி மாற்றினீர்களா?”
“இல்லை”
“படுக்குமுன் வாய் கொப்பளிப்பீர்களா?”
“ஆம்”
அப்பாடா முதல்முறையாக ‘ஆம்’ என்று ஒரு பதிலை அந்த மருத்துவர் சொல்லவைத்துவிட்டார்.
“சரி. கொப்பளிக்க ஏதும் கொப்பளிப்பான் பயன்படுத்துகிறீர்களா?”
“ஆம்”
“அது என்ன கொப்பளிப்பான்?”
சாந்தி அதன் பெயரைச் சொன்னார்.
“சரி. அதையேதான் கொப்பளிக்கிறீர்களா? அதை மாற்றினீர்களா?”
சாந்தி கொஞ்சம் யோசித்தார். எதையோ ஞாபகப்படுத்திக்கொண்டு மீண்டும் தன் நிலைக்கு வந்தார்.
“ஆம். அதே நிறுவனம்தான். ஆனால் ஏதோ ‘ஆயுர்வேத மூலிகையுடன் புதிய வடிவில்’ என்று எழுதப்பட்டிருந்தது.”
“அதைப் பயன்படுத்தியபின்தான் இந்த மரமரப்பா? அதற்கு முன்னேயே இருந்ததா?”
ஒவ்வொரு கேள்வியிலும் மருத்துவரின் அனுபவம் பேசியது. சாந்தி யோசித்தார்.
“சரியாக ஞாபகமில்லை ஐயா”
“சரி. பரவாயில்லை. பரவாயில்லை என்கிறீர்கள். நிம்மதி. மரமரப்பு வந்தபின்னும் வாய் கொப்பளிக்கிறீர்களா?”
“ஆம்”
“அதில் உங்களுக்கு சந்தேகம் வரவில்லையா?”
“இல்லை”
“நேற்று இரவு கொப்பளித்தீர்களா?”
“ஆம்”
“தொடர்ந்து கொப்பளிக்கிறீர்கள். சரியா?”
“ஆம்”
“சரி. இன்றிரவு அதை நிறுத்துங்கள். தொடர்ந்து நிறுத்துங்கள். முற்றிலுமாகச் சரியாகும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டாம். மரமரப்பு கொஞ்சம் குறைகிறதா என்று கவனியுங்கள். எக்காரணம் கொண்டும் அதை மீண்டும் பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், புதிதாக நீங்கள் செய்வது அது ஒன்றுதான். அது காரணமாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதை ஒதுக்கிவையுங்கள்.”
“சரி”
“ஐந்து நாள்கள் பாருங்கள். முற்றிலும் சரியாக வேண்டும். அப்படிச் சரியாகிவிட்டால் நீங்கள் வரவேண்டாம். மற்ற எந்த சிகிச்சையும் செய்யாதீர்கள்.”
அன்பழகனும் சாந்தியும் வீட்டுக்கு வந்தார்கள்.
அன்று இரவு கொப்பளிக்கவில்லை. இதற்கிடையே 800 வெள்ளியைத் தின்றுவிட்ட எம்ஆர்ஐ முடிவும் வந்துவிட்டது. அதிலும் எந்தக் குறையும் தெரியவில்லை. அடுத்த நாள் மரமரப்பு கொஞ்சம் குறைவதுபோல் உணர்ந்தார் சாந்தி. ஒரு வாரம்தான். முற்றிலுமாக நாக்கு பழைய நிலைக்கு வந்துவிட்டது.
“இனி இரண்டு பக்கமும் மெல்லலாம்,” என்று அதிர்ந்து சிரித்தார் சாந்தி.
என்ன கொடுமை இது? எங்கிருந்து வந்தது இந்தக் கொப்பளிப்பான்? இது என் வீட்டுக்கு ஏன் வந்தது?
சே! எத்தனை மன உளைச்சல்! எத்தனை எத்தனை கலவரங்கள்!! அதை அப்படியே அருவருப்பானதைத் தொடுவதுபோல் தூக்கித் தோம்புக்குள் தள்ளினார் அன்பழகன். லேசாகச் சிரித்துக் கொண்டார்.
ஒரு ரப்பர் பாம்பு எவ்வளவு தத்ரூபமாகப் படமெடுத்துப் பாடாய்ப் படுத்திவிட்டது. ஒரு கேள்வி மட்டும் விஸ்வரூபம் எடுத்து நின்றது. இந்தச் சம்பவம் என் குடும்பத்தில் ஏன் ஏற்படவேண்டும். ஏன்? ஏன்? ஏன்?
யூசுப் ராவுத்தர் ரஜித்

